அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பிற்கினிய சகோதரர்களே,
இந்த காணொளியும் கட்டுரையும் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு முக்கியமானவை என்று கருதுகிறேன். குறிப்பாக பள்ளி இறுதி ஆண்டில் இருப்பவர்களுக்கும், துறை சார் நிபுணத்துவம் பெற விரும்புவோருக்கும் பயனளிக்கும். மத்தியப் பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவம், கல்வி முறை, ஆய்வுக்கான வாய்ப்புகள் குறித்தும் இவை எப்படி நம் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன எனபன குறித்தும் இவற்றில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்?
எஸ்ஐஓ கடந்த சில ஆண்டுகளாகவே மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதன் முக்கியத்துவத்தை குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து செய்துவருகிறது. தமிழகம் கல்வியில் வளர்ந்த மாநிலமாக இருந்தாலும், மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிப்பதில் தமிழக மாணவர்களுக்கு தயக்கம் இருக்கவே செய்கிறது. அது கண்டிப்பாக களையப்பட வேண்டும்.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதன் சிறப்புகள்
- பன்முகத்தன்மை கொண்ட கற்றல் சூழல் – இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் வருகைத் தருவதால் பல்வேறுபட்ட பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இது நம்முடைய சமூகப் பார்வையை விரிவுபடுத்தும்.
- உயர்தரக் கல்வி – சிறப்பான உயர்தரக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
- ஆராய்ச்சி வாய்ப்புகள் – 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ள நூலகங்கள், ஆய்வு மையங்கள் உள்ளதால் ஆழ்ந்த கற்றலுக்கான சூழல் கிடைக்கிறது.
- ஆசிரியர்கள் – ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு இடையே ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் இருப்பதால் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
- பரந்த கல்விச் சூழல் & வளங்கள் – வகுப்பறைகளுக்கு உள்ளும் அதற்கு வெளியேவும் உள்ள விளையாட்டு மைதானங்கள், தாபாக்கள், புல்வெளிகள், பார்கிங் ஆகிய இடங்களில் நடைபெறும் விவாதங்கள், கலந்துரையாடல்கள், கல்வி சார் நிகழ்வுகள் மாணவர்களின் அறிவு சார் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
- மாணவர் அரசியல் & சமூக விவாதங்கள் – மாணவர் அரசியலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மாநில அரசியல், பண்பாடு, கலாச்சாரம், மொழிகள், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்த உரையாடல்கள் வழி அரசியல் சிந்தனைகளை மேம்படுத்திக்கொள்ளலாம்.
முஸ்லிம்களும் கல்வியும்
இஸ்லாம் கல்வியை ஒரு கடமையாக அறிவித்துள்ளது. அல்லாஹ்வின் வார்த்தைகளிலும் (குர்ஆன்), நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
“தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர்(மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெறமாட்டார்கள்.” (திருக்குர்ஆன் 2:269)
“என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக!” என்றும் இறைஞ்சுவீராக. (திருக்குர்ஆன் 20:114)
“யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.” (ஸஹீஹ் முஸ்லிம் : 5231)
பல்கலைக்கழகங்களில் முஸ்லிம்கள்
- கல்வி அல்லாஹ்வின் அருள், அதை அடைய நாம் முழுவதுமாக முயற்சிக்க வேண்டும்.
- மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதி மற்றும் துறை சார்ந்த நிபுணத்துவத்தை மேம்படுத்த வேண்டும்.
- பல்கலைக்கழகங்கள் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகள், ஒடுக்குமுறைகள், உலகளாவிய முஸ்லிம்களின் நிலை போன்றவற்றை விவாதிப்பதற்கும் கலந்துரையாடுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குகிறது. அதை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- பல்கலைக்கழகங்களில் சுதந்திரம் இருப்பினும், அதை ஆரோக்கியமாக பயன்படுத்த வேண்டும்.
- பல்கலைக்கழகங்களை சமூக சீர்திருத்த மேடையாக பயன்படுத்த வேண்டும்.
- இதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்நிலை கல்விக்கூடங்களில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.
- இதற்காக, எஸ்ஐஓ பல்கலைக்கழக கிளைகள் நடத்தும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் நமக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் விழிப்புணர்வுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
எஸ்ஐஓவின் பணிகள்
- கல்வியில் மட்டுமல்ல, வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு, சமூக பிரச்சனைகளைப் பற்றிய விவாதங்கள், நிகழ்வுகளை ஏற்ப்பாடு செய்தல்.
- நம்முடைய அறிவை, செயல்பாடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து எளிய முறையில் இஸ்லாத்தை கொண்டு செல்ல முயற்சித்தல்.
- விழிப்புணர்வுகள் மூலம் சமூக அக்கறை கொண்ட நபர்களை உருவாக்குதல்.
பொறுப்பாளர்களின் கடமை
- கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
- அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும்.
- இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்நிலை கல்விக்கூடங்களில் சேர்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
எஸ்ஐஓ முஸ்லிம் மாணவர்கள் கல்வியிலும், சமூக சேவையிலும் முன்னேறுவதற்கான ஒரு வழிகாட்டியாக செயல்படுகிறது. இந்த வழிகாட்டல்களை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட, கூட்டு, சமூக வாழ்விலும் தங்களை மெருகேற்றிக்கொள்ள வேண்டும்.
அப்துல் ஆரிஃப்,
ஆராய்ச்சி மாணவர்,
புதுவை பல்கலைக்கழகம்.