கி.ரா அப்பாவுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் கொடுப்பினை எனக்கில்லாமல் போனதை எண்ணி எண்ணி வருத்தமுறுகிறேன். அறுபது ஆண்டுகளாக எழுத்தையே வாழ்க்கையாக்கி வாழ்ந்த இம்மேதையின் படைப்புகளை பத்து கோடித்தமிழர்களில் எத்தனைப்பேர் உள்வாங்கினார்கள் என்பதுதான் முக்கியம். தமிழைப்பேச,எழுத,படிக்க விரும்பாத எப்படியாவது உயிர் வாழ்ந்தால் மட்டுமே போதும் என வாழும் இச்சமூகத்திற்கு கி.ரா மட்டுமல்ல எவருமே இனி தேவை இல்லை.
தமிழக அரசு இதுவரை எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இல்லாதபடி முதல் முறையாக அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்திருக்கிறது. அத்துடன் அவருக்கு உருவச்சிலையும் எழுப்ப இருக்கின்றது. இதனால் எல்லாம் இத்தலைமுறையும் எதிர்காலத்தலைமுறையும் கி.ராவின் படைப்புக்களையும், தீவிர இலக்கியத்தையும் தேடி ஓடப்போவதில்லை. பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்களும்,அரசாங்கமும் ஒரு தீவிர எழுத்தாளனை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? புதினங்களை, சிறுகதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை அனைத்தையும் அவர்கள் பணம் கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். அவர்களது படைப்புகளை உடனுக்குடன் உள்வாங்கி வாழ்வை பொருள் பொதிந்ததாக திருத்தி அமைத்துக்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் எழுத்தாளனின் நிலை குறித்து எவருக்காவது தெரியுமா. அது குறித்த அக்கறையும் பொறுப்பும் எவருக்காயினும் இருக்கின்றதா. பாரதியையும்,புதுமைப்பித்தனையும் வறுமையிலேயே வைத்திருந்து பட்டினிப்போட்டு நோயுடன் கொன்றதை அறிந்திருக்கவில்லையா. எழுத்தாளர்கள் அனைவரும் யாருக்காகவோ எழுதுகிறார்கள் என நினைப்பவர்களுக்கு எழுத்தாளனைப்பற்றி அறிய என்ன அக்கறை இருக்கிறது.
அறுபது ஆண்டுகள் வேறெந்த தொழிலும் செய்யாமல் மாதச்சம்பளம் பெறாமல் மாய்ந்து மாய்ந்து எழுதிய கி. ராஜநாராயணன் எனும் கி.ராவுக்கு வாழ்நாளில் அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்கும் சேர்த்து வருமானமாக எவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என எண்ணுகிறீர்கள். சொந்தமாக பெரிதாக நில புலன்களும் இல்லாமல் சிறிதளவு இருந்தும் அதிலிருந்து ஒரு ரூபாய்கூட வருமானம் இல்லாமல் புதுச்சேரி அரசாங்கம் குறைந்த வாடகைக்கு வழங்கிய 400 சதுர அடிகள் கொண்ட அரசு குடியிருப்பில் தான் கி.ரா 28 ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்தார்.
ஒரு மாபெரும் மேதையின் வாழ்வு இவ்வாறுதான் முடிந்திருக்கிறது. 100 ரூபாய் விலையுடைய ஒரு புத்தகம் விற்றால் அதை படைத்த எழுத்தாளனுக்கு 10% தான் உரிமைத்தொகையாக கிடைக்கும். அதுகூட அதைப்பதிப்பிக்கும் பதிப்பகம் நேர்மையான வழியில் கணக்கு காட்டினால் மட்டுமே கைக்கு வரும். நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்த தமிழினத்தில் ஒரு தீவிர எழுத்தாளனின் நூல் இரண்டாயிரம் படிகள் விற்றால் அது மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஒரு தரமான எழுத்தாளன் வாழ்நாள் முழுக்க எவ்வளவு எழுதினாலும் 25 நூல்களுக்கு மேல் வெளிக்கொண்டுவர முடியாது. அதில் கி.ரா தான் உச்சத்தை அடைந்தவர்.
ஒரு மூன்றாம் தரமான தமிழ் திரைப்படம் வெளியான அடுத்த நாளே எத்தனைக்கோடி வசூல் செய்தது எனும் கணக்கை முந்தித்தருவதற்கு அலையும் ஊடகங்களும்,அதைக்கேட்டு பெருமைப்பட்டுக்கொள்ளும் மக்கள் இருக்குமிடத்தில் இதையெல்லாம் பேசுவது பெருங்குற்றம்தான். கி.ரா எனும் எழுத்தாளன் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளிலோ வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் இன்று உலகம் அறியப்பட்ட எழுத்தாளன். அவரது படைப்புக்கள் உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் கொண்டாடியிருக்கும். டாலர்,யூரோ,பவுண்ட் கணக்கில் உரிமைதொகை கிடைத்திருக்கும். செல்வந்தனாக உலகின் சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் நிறுத்தி போற்றப்பட்டிருப்பார்.
எந்தெந்த படைப்புகள் மக்களிடத்தில் சேர வேண்டுமோ அவ்வாறான நூல்கள் அரசு பொது நூலகங்களில் சென்று சேர்வதில்லை. அவ்வாறு பெறப்படும் நூல்களைக்கூட அடுக்கி வைப்பதற்கு அலமாரி இன்றி செல்லரித்துக்கிடக்கின்றன. 24 மணி நேரமும் செய்திகளை போட்டிபோட்டுக்கொண்டு எல்லாவற்றையும் செய்திகளாக்க அலையும் தொலைக்காட்சிகளில் ஒன்றாவது மனதிருந்தால் இதையெல்லாம் காண்பிக்கலாமே. அரசு மதுபானக்கடைகளில் செய்து தரப்படும் வசதிகளில் பத்தில் ஒரு பகுதிகூட ஒரு நூலகத்திற்கு செய்து தருவதில்லை. அரசு நூலகங்கள் பதிப்பாளர்களிடமிருந்து வாங்கும் முறைகளில் இப்போதுள்ள இந்தப்புதிய அரசாவது நேர்மையாக இலக்கியத்தரமான அணுகுமுறையுடன் கூடிய முறையை கையாள வேண்டும் என எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
வாழ்ந்தவரைக்கும் மற்றவர்களிடத்தில் கையேந்தாமல் கி.ரா தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்தார். அவருடைய பிள்ளைகளுக்கு,பேரப்பிள்ளைகளுக்கு பெரிய சொத்துக்கள் எதையும் சேர்த்து வைத்துவிட்டுச் செல்லவில்லை. இன்று ஒருநாள் அவருக்கு அரசு மரியாதை கிடைத்தது,இணைய தளங்களிளும்,நாளிதழ்களிலும் புகழ்ந்து எழுதினார்கள்,இறுதிச் சடங்கை நேரலையில் தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு காண்பித்தார்கள் என அவரது குடும்பம் மகிழ்ச்சி அடைந்திருக்கும். அத்துடன் எதிர்காலத்தில் இடைச்செவல் கிராமத்திலிருந்து கோவில்பட்டி வரும்பொழுது வாய்ப்பிருந்தால் அவருக்காக எழுப்பவிருக்கும் சிலையை வேண்டுமானால் அவர்கள் கண்டு ஆறுதல்பட்டுக்கொள்ளலாம் அவ்வளவுதான். தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் இருந்தும் ஒன்றுகூட அவர் வாழும் காலத்தில் அவருடைய எண்ணங்களை பதிவு செய்யவில்லை. நானே சிலரிடம் நேர்காணல் செய்யச்சொல்லி கேட்ட பொழுது வேண்டுமானால் சென்னைக்கு அழைத்து வந்தால் செய்யலாம் என்றார்கள்.
இறுதிச்சடங்கில் ஒரு எழுத்தாளனுக்கு அரசு மரியாதை கிடைப்பதாலோ,இறந்த பின் அவனுக்கு உருவச்சிலை எழுப்புவதாலோ அவனது எண்ணங்கள் நிறைவேறுவதில்லை. அவனது படைப்புகள் அவன் நினைத்தப்படி மக்களிடத்தில் சென்று சேர்ந்து விட வேண்டும் என்றே ஒவ்வொரு அசல் எழுத்தாளனும் விரும்புவான். மற்றபடி வாழும்போது தரப்படும் விருதுகளின் பெருமையெல்லாம் சில நாட்களுக்கு மட்டும் தான்.
கி.ரா விற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த நேரம் அது. முப்பது ஆண்டுகளுக்கு முன் அப்பொழுது ஒரு சில படங்களில் நான் ஒளிப்பதிவாளனாக பணியாற்றிக்கொண்டிருந்தேன். சொந்தமாக வாகனம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பணவசதி இல்லை. சென்னைக்கு புதுச்சேரியிலிருந்து நேரடி பேருந்து கிடைக்காததால் இருவரும் திண்டிவனத்திற்கு பேருந்து பிடித்து வந்தோம். திருவள்ளுவர் பேருந்து நிறுத்தத்தில் நெடுநேரம் காத்திருந்த நிலையில் எந்தப்பேருந்திலும் அமர்ந்து பயணிக்கும் வகையில் இடம் கிடைக்கவில்லை. இனியும் நின்று கொண்டிருந்தால் நடுஇரவாகி விடும் என்பதால் நின்றுகொண்டே பயணிப்பதைத்தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்து ஒரு பேருந்தில் இருவரும் ஏறினோம். அப்பாவின் வயது எழுபதை நெருங்கிக்கொண்டிருந்தது என்பதால் அவர் நின்று கொண்டே பயணிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நடத்துநரின் இருக்கைத் தவிர அனைத்தும் நிரம்பியிருந்தன. நின்றபடி பயணச்சீட்டு வழங்கியவரிடம் சென்று கி.ரா வைப்பற்றி சுருக்கமாகக்கூறி நடத்துநருடைய இடத்தில் கி.ரா அமர்ந்து கொள்ள அனுமதி கேட்டேன். நடத்துநர் அதைப்பற்றி காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை. விருது பெற்றிருந்த நேரம் என்பதால் அதைக்குறிப்பிட்டு அமர்ந்து கொள்ள மறுபடியும் அனுமதி கேட்டேன். அப்பொழுதும் அவரிடமிருந்து பதிலில்லை. அவர் மரியாதைக்குரிய எழுத்தாளர் என்பதையும், சாகித்ய அகாடெமி விருது பெற்றிருக்கின்றார் என்பதையும் அழுத்தமாக சொன்னேன். அவருக்கு அப்படியென்றால் என்னவென்றே தெரியவில்லை. இடம் தருவதற்கு பதிலாக “இங்கப்பாருங்க. அவுரு யாரா வேணுன்னாலும் இருந்துட்டுப் போவட்டும். திருவள்ளுவரே வந்தாலும் என் சீட்ட யாருக்கும் தர முடியாது. கஷ்டமா இருந்தாச்சொல்லு. ஒடனே நெறுத்தறேன். எறங்கிக்கிங்க”. இந்த சமுதாயமும் அரசும் எவ்வாறு இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் உள்வாங்கியுள்ளதோ அப்படியேத்தான் நடத்துநரும் வெளிப்படுத்தினார்.
பக்கத்திலிருந்த அன்புள்ளம் கொண்ட மக்களும் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஒருவருக்கும் அந்த முதுமையடைந்த மாமேதைக்கு தங்களின் இருக்கையைத்தந்துவ மனசில்லை. ‘இப்படிப்பட்ட சமூகத்திற்காகவா எழுத்தாளன் விழுந்து விழுந்து எழுத வேண்டும். இந்த விருதுகளை வைத்து என்ன செய்வது. இதை எல்லாம் எதற்காகத்தருகிறார்கள்’ என மனம் நொந்து போனேன். அப்பா அந்த வலியை அப்போது காண்பித்துக்கொள்ளவேயில்லை. பின்பு ஒரு நாள் பேச்சுவாக்கின்போது “இவுங்கல்லாம் மரியாத குடுப்பாங்கண்ணா நெனச்சி எழுதறோம். இதெல்லாம் கேரளாவுல நடக்காது தெரியுமோ” என்றார்.
தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு எழுத்தாளனுக்கும் கிடைக்காத பெருமையை தமிழக அரசு செய்திருக்கிறது என்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தான். ஆனால், கி.ரா போன்ற அசல் எழுத்தாளர்களின் படைப்புகள் மக்களுக்கு சென்றடைய வேண்டுமானால் இனிவருங்காலங்களில் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதுதான் பக்கத்து மாநிலங்களில் உள்ளதுபோல் கட்டாய தாய்மொழி வழிக்கல்வி. ஆட்சியின் தொடக்கத்திலேயே தனது சிறப்பான திட்டங்களாலும்,செயல்பாடுகளாலும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் புதிய தமிழக அரசு இவ்வாண்டிலிருந்தே முதல் கட்டமாக பத்தாம் வகுப்பு வரைத் தமிழ்வழிக்கல்வியை உடனடியாக சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
இனிவரும் தலைமுறை தமிழில் கல்வி பயிலாமல் தமிழ் மொழிக்கோ எழுத்தாளனுக்கோ தமிழ் இலக்கியத்திற்கோ இங்கு இடமில்லை. இப்பொழுது உள்ளதுபோல் எதிலும் தமிழ் நடைமுறையில் இல்லாமல் பெயரளவிற்கு மட்டும் தமிழ்நாடு என எதிர்காலத்திலும் வழங்கப்படும். தமிழர்கள் என அழைத்துக்கொள்ளும் தமிழினம் ஆங்கில எழுத்துக்களின் மூலம் தமிழை எழுதுவார்கள் படிப்பார்கள். ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் மூலம் தமிழ் மொழியின் பெருமைப்பேசி தமிழ் மாநாடும் சிறப்பாக நடத்துவார்கள்.
தங்கர் பச்சான்