என் குடும்பம் எனக்கு நடந்த அவலத்திற்காக யாரை குற்றம் பிடிக்கும்.
நீங்கள் தான் குற்ற்றவாளி; நீங்கள் தான் நீதியும்.”
கடந்த சில நாட்களுக்கு முன்பு மது என்கிற ஆதிவாசி ஒருவர் கொல்லப்பட்ட செய்தி சமூக வலைதளங்களிலும், செய்தி தொடர்களிலும் உலா வந்த வண்ணம் இருந்தது. கேரளத்தை சார்ந்த அந்த நபர் உணவுப்பொருட்களையும், சில மென்பொருள் சாதனங்களையும் திருடியதாக கூறி கண்மூடித்தனமாக தாக்கியதில், அவரை காவல்நிலையத்தில் ஒப்படைக்கும் போது அவர் இறந்து போனார். காணக்கிடைத்த சில புகைப்படங்களிலும், காணொளி காட்சிகளிலும் உங்களையும் என்னையும் போன்ற சில நபர்கள் வெளிப்படையாக மது கொல்லப்படுவதற்கு முன்பாக மலையாளத்தில் அவரிடம் கேளிக்கை கேள்வி கேட்பதும், சிரித்தபடி சுயமி எடுத்து வெளியிடுவதுமாக பல செய்திகள் செவியில் ஒலித்தது.
மது கேரளத்தை சார்ந்த ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர். ஆதிவாசி என்பது தெற்கு ஆசிய உள்நாட்டு மக்களை குறிக்கும் சொல். இவர்களுக்கு மலைவாழ் மக்கள் என்றும் அழைப்பதுண்டு. அவரை திருடர் என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பாக நாம் சில விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டி இருக்கிறது.
நாம்தான் காடுகளை எல்லாம் அழித்து மது போன்ற மக்களின் சொந்த நிலங்களையும் அபகரித்து மறைமுக திருடர்களாக வாழ்ந்து வருகிறோம். எந்த மனப்பான்மையின் அடிப்படையில் மதுவை கொன்றவர்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை.
மனிதம் உள்ள எந்த மானிடரும் மதுவை கொன்ற மனித மிருகங்களுக்காக வக்காலத்து பேசமாட்டார்கள். மதுவை திருடர் என முடிவு செய்யும் மனம் எங்கிருந்து வந்தது?
மாறாக அவர் உணவுகளை திருடவில்லை, நாம் பதுக்கி வைத்திருந்த அவருக்கு சேரவேண்டிய உரிமைப் பங்கினைத்தான் எடுத்துள்ளார். நலிந்து, கிழிந்த ஆடை அணிந்து ஊட்டச்சத்து குறைபாடுடன் தோற்றமளித்த அவரின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று விளக்க இங்கே யாருமில்லை. அவர் திருடராக இருந்திருப்பாரோ? என்ற சந்தேகம் நம் உள்ளத்தில் வராமல் போனது ஏனோ? அந்தளவுக்கு நம்மிடம் மனிதம் குறைந்துவிட்டதோ என்றுதான் எண்ண தோன்றுகிறது.
இந்தியாவில் சாதி எனும் சொல்லுக்கு வெறுப்பு எனும் அர்த்தம் வழங்குவதே உகந்ததாக அமையும். தாழ்ந்த சமூகத்தை சார்ந்த மக்களை இந்த சமூகத்தின் மிகப்பெரும் தொல்லைகளாக மக்களிடம் பறைசாற்றுவது போன்ற விசம கருத்துக்களை ஊடகங்கள் பரப்பி வருகின்றனர். இது போன்ற செய்திகளை நாம் தினமும் நாளேடுகளில் பார்த்தவண்ணம் தான் இருக்கின்றோம். ஆனால் நாமும் அதற்கு உடந்தையானவர்கள் தானோ என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் இதுவரை அனுபவிக்கும் சுகபோக வாழ்க்கை, பிடித்தமான உறவுகள், சமூக உரிமைகள் அனைத்தும்தான் மதுவை இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. நாம்தான் மது கொல்லப்பட்டதற்கு உடந்தை என்பதை ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் அதுதான் நிசப்தமான உண்மை.
இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்தை தடுப்பதற்கு இந்த சமூகத்தில் சில வேலைப்பாடுகளையும், மக்களிடம் சரியான புரிதல்களையும் வழங்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
-Mohamed Sharjun. S
To view original Article:
What Makes One Believe Madhu To Be A Thief And Not His Murderers?