என்னதான் இருந்தாலும் அந்த 56 இஞ்சு விரிந்த நெஞ்சுக்குரியவர் நம் நாட்டின் பிரதமர் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களே, கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்.
உலகிலேயே நான்கு மணி நேரமே அவகாசம் கொடுத்து நாட்டின் 85 சதவீத பணத்தைச் செல்லாக்காசாக அறிவித்த சாதனையாளரும் அவர்தாம்…!
ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை குறையும் என்று சொல்லி, முறையான திட்டத்துடன் அமல்படுத்தாமல், சொதப்பி, விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து பாமரனின் வயிற்றின் அடித்த சிறப்புக்குரியவரும் அவர்தாம்..!
புனேயின் முஹ்சின் சாதிக், தாத்ரியின் முஹம்மத் அக்லாக், இராஜஸ்தானின் பெஹ்லு கான், ஹரியானாவின் ஹாஃபிஸ் ஜுனைத்கான் என்று வரிசையாக தொடர்ந்து மாட்டு வெறியர்களால் முஸ்லிம்கள் அடித்தே கொல்லப்பட்ட போது கள்ள மௌனத்துடன் குதூகலித்த தேசபக்தரும் அவர்தாம்..!
தலித்களும் விவசாயிகளும் நாள்தோறும் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளான போதும் ஒரு நாள் கூத்துக்கு பத்து இலட்சம் ரூபாய் செலவில் சொக்காய் போட்டு மகிழ்ந்த ‘பெரிய’ மனசுக்காரரும் அவர்தாம்..!
இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு ‘பக்கோடா கடை வைத்து பிழைச்சுக்கோ’ என்று கூசாமல் சொன்ன ‘சிறப்பான’ நிர்வாகியும் அவர்தாம்..!
கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவேன் என்று வாய்ச்சவடால் விட்டு ஆளுக்கு பதினைந்து இலட்சம் தருவேன் என்று பசப்பு வார்த்தை சொல்லி ஆட்சியைப் பிடித்த பிறகு ஆயிரக்கணக்கான கோடிகளுடன் மல்லையாக்களும் நீரவ் மோடிகளும் இன்ன பிறரும் நாட்டை விட்டு ஓடிப் போனதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ‘திறமையான’ சௌக்கிதாரும் அவர்தாம்…!
குட் கவர்னென்ஸ் – நல்லாட்சி தருவேன் என்று ஆசை காட்டி இன்று வரை அந்த நல்லாட்சியை தூரத்து வானவில்லாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கின்ற வித்தைக்கார மனிதரும் அவர்தாம்…!
‘அச்சே தின்’ நல்ல நாள்கள் வரும் என்று சொல்லி அதிகாரத்துக்கு வந்த பிறகு அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் வகையறாக்களுக்கும் மட்டும் நல்ல நாள்களைப் பெற்றுக் கொடுத்த விசுவாசம் மிக்க மனிதரும் அவர்தாம்…!
நாட்டில் தங்கியிருந்து நாட்டு மக்களின் பிரச்னைகளை அறிந்து தீர்க்க முயல்வதற்குப் பதிலாக எந்நேரமும் விமானங்களில் பறந்து கொண்டே இருக்கின்ற பெருமைக்குரியவரும் அவர்தாம்..!
எழுதியவர் : அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்