தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சூழலியல் போராளியுமான முகிலனை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் காணவில்லை.
பிப்ரவரி 15 அன்று இரயில் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்றுகொண்டிருந்த முகிலன் காணாமல் போயுள்ளார். அவரை காவல் துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்திருக்கலாம் என மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் சூழலியல் ஆர்வலர்களும் சந்தேகிக்கின்றனர்.
பிப்ரவரி 15 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு காவல் துறையால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் காணோளி ஆவணமாக முகிலன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் காணாமல் போயிருப்பது காவல் துறையினர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டும், முன்னின்று நடத்தியும் வந்தவர் முகிலன். சுற்றுச்சூழலை பாதிக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்காகவும் போராடிய இவர் மீது தேச துரோகம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையிலிருந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பின்பும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்த முகிலன் தற்போது எங்கு உள்ளார் எனத் தெரியாத நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும் என மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஹென்றி திபென் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரும் 22ஆம் தேதிக்குள் உரிய பதிலளிக்குமாறு சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கும், விழுப்புரம், காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக எந்தவித சமரசமுமின்றி போராடி வரும் தோழர்.முகிலன் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள் மிகுந்த கவலை அளிக்கின்றன. இந்த அரசு மக்களுக்கானதாக இல்லாமல இயற்கை வளங்களைச் சுரண்டும் பெருநிறுவனங்களுக்கானதாக இருக்கிறதா எனும் கேள்வி தொடர்ந்து எழுந்த வண்ணமுள்ளது.
முகிலன் விவகாரத்தில் தமிழக அரசும், காவல்துறையும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். முகிலனுக்காகக் குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமை. அவரை உடனடியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். மக்களுக்காகப் போராடுபவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
எழுதியவர்
யாசர் அரபாத்
சமூக செயற்பாட்டாளர்