ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக (Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.
இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது.
1.முதல் கட்டம் மரபு இனம் (Race)
2. அடுத்த கட்டம் தேசிய இனம் (Nationality)
ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம். எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம். ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது. தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களின் மனக்கோணல், இந்தப் பொதுவரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.
ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் வினை பொருள். அது ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் உருவாகிவிடக் கூடிய அல்லது உருவாக்கிவிடக் கூடிய ஒன்றல்ல, ஒரு பொதுவான மொழியைப் பேசக்கூடிய தொடர்ச்சியான வரயறுக்கப்பட்ட நிலப் பகுதியைக் கொண்ட ஒரு பொதுப் பொருளாதார வாழ்வைக் கொண்ட தாங்கள் ஓரினம் என்ற உளவியல் உருவாக்கத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு நிலையான மக்கள் சமூகம் வரலாற்றுப் போக்கிலே உருவாகி ஒரு ‘தேசம்’ என்ற நிலையை எட்டுகிறது. இந்தத் தேவைகளை மக்கள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவு செய்து தேசத்தின் உரிமைக் குரலை எழுப்புகிறார்கள்.தேசங்களுக்கான தேவைகளை நிறைவு செய்திருந்தாலும் பல தேசிய இனங்கள் வெவ்வேறு கால கட்டங்களிலேயே கண் விழிக்கின்றன.
1789 முதல் 1871 வரையிலான கால கட்டத்தில் அய்ரோப்பாவில் பல தேசங்கள் கண் விழித்தன. 1871 இல் 14 தேசங்கள் விடுதலை பெற்றவையாக இருந்த அய்ரோப்பாவில் 1924 இல் 26 தேசங்களாகவும் விடுதலை பெற்ற தேசங்கள் உலகப் போர் காலகட்டத்தில் 35 ஆகவும் மாறின. இன்று கிட்டத்தட்ட அனைத்து தேசிய இனங்களும் விடுதலை பெற்று விட்ட கண்டமாக அய்ரோப்பா திகழுகிறது. ஆசியாவைப் பொறுத்தவரை 20 ஆம் நூற்றாண்டில் தான் தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக் கோரிக்கையை நோக்கி நகரத் துவங்கின. ‘இந்தியத் தேசியம்’ என்ற பொய்மை தேசியத்தை முன் வைத்த போது, அதை எதிர்த்து தங்கள் அடையாளங்களைக் காத்துக்கொள்ளவும் இந்தியத் தேசியம் என்ற பெயரில் நிரந்தரமாக நிலை கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியத்தை தகர்க்கவும் இந்தியாவின் சில பகுதிகளிலேயே தேசிய இனங்கள் தங்கள் குரலை எழுப்பின.
இந்திய உபகண்டத்தில் 1909 க்குப் பிறகு தேசிய இனங்களின் இயற்கையான வளர்ச்சி தெளிவாகத் தெரியத்துவங்கின. 1909 இல் ‘பீகார் பீகாரிகளுக்கே’ என்ற தனி மானிலக் கோரிக்கை எழுந்தது.1920 இல் காங்கிரஸ் கட்சி இதை ஏற்றுக் கொண்டது.இக்கால கட்டத்தில் சென்னை மாகாணத்திலும் இவ்வுணர்வு வளர்ந்து வந்தது. எந்த தேசிய இனத்தை விடவும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்திற்கான தேவைகளை நிறைவு செய்திருந்தாலும் அதைப்பற்றிய முழுமையான உளவியல் உருவாக்கம் இன்றி உறங்கிக் கிடந்தார்கள்.
மொழியும், தேசிய இனமும்:
இந்தியா பல மொழிகளின் தேசம். மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்துக்குப் பின், ஒவ்வொரு மாநிலமுமே ஒரு மொழிவழித் தேசிய இனத்துக்குச் சொந்தமானது என்று பொதுவாகக் கூறலாம். தமிழ்நாட்டில் தமிழர், கேரளத்தில் மலையாளி, ஆந்திரத்திலும் தெலங்கானாவிலும் தெலுங்கர், கர்நாடகத்தில் கன்னடர், வங்கத்தில் வங்கர், மகாராட்டிரத்தில் மராட்டியர், குஜராத்தில் குஜராத்தியர், பெரும்பாலான மத்திய மாநிலங்களில் இந்தி பேசுவோர் என்று அனைவருமே அவரவர் மொழிவழித் தேசியரே என்று எளிதில் கூறிவிடலாம். ஆனால் நிதர்சனத்தில் அது உண்மை இல்லை.
பல்வேறு மாநிலங்களில் வலுவான ஒரு மொழிவாரி தேசியப் பார்வையே கிடையாது. மலையாளிகள் தங்களை இந்தியாவிலிருந்து வேறாகப் பார்ப்பதில்லை. இத்தனைக்கும் ஒரு மாநிலமாக அது, அரசியல், சமூக அமைப்பில் இந்தியாவின் மையத்திலிருந்து வெகுவாக விலகியே உள்ளது. மதச் சிறுபான்மையினரான கிறித்தவர்களும் முஸ்லிம்களும் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் உள்ள மாநிலம் அது. முதல்முதலில் காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றை ஆட்சிக்குக் கொண்டுவந்த மாநிலம் அது. இன்றும் கம்யூனிஸ்டுகள் ஓரளவுக்குப் பலம் பொருந்தியவர்களாக இருக்கும் மாநிலம் கேரளம். படிப்பறிவில் முதலிடத்தில் உள்ள மாநிலம். ஆண்களைவிடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஒரே இந்திய மாநிலம். சிசு இறப்பு விகிதம், பிள்ளை பெற்ற தாய் இறப்பு விகிதம் ஆகியவை இந்தியாவிலேயே மிகக் குறைந்த இடத்தில் இருக்கும் மாநிலம். ஆனால் இந்த மாநிலத்தில் மொழி சார்ந்த அரசியல் என்பது கிடையாது. தென்னிந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த மொழிவாரி அரசியல் கிடையாது.
”மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது. உதாரணமாக, அல்ஜீரியாவில் இருந்து இந்தோனேஷியா வரை உள்ள முஸ்லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம். உருது மொழி பேசுபவர்கள் பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். வங்கதேசத்து முஸ்லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல. ஆகவே, திராவிடம் என்பதை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக்கொள்ள முடியாது. ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத் தேசிய இனம். கன்னடர்கள் கன்னடத் தேசிய இனம். தமிழர்கள் தமிழ்த் தேசிய இனம்தான்.
மங்கோலியன் மரபினப் பகுதியில் சீனா, கொரியா, ரஷ்யா, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், ஜப்பானியர்கள் ஜப்பான் தேசிய இனம், சீனர்கள் சீனத் தேசிய இனம், கொரியர்கள் கொரியத் தேசிய இனம். இவை அனைத்தும் ஒரே மங்கோலியத் தேசிய இனமாக உருவெடுத்து விடவில்லை. உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் மண், தங்களுடைய பேச்சுவழக்கு என்ற நிலையில் அமைப்பு ரீதியான இனப்பாகுபாடு என்ற இயற்கையான வரையறைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டனர். மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நாடும் கொண்டிருந்தால், ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர்நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால், அது தேசிய இனமாகிறது. ஒரு நாட்டில் நிலையாக வாழும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதும் விவாதத்திற்குட்பட்டது. தேசிய இனத்துக்கு மொழி, மரபு ரீதியான பழக்க வழக்கங்கள், கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பதே கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய மண், ஒரு நாடாக (ஸ்டேட்) அழைக்கப்படுகிறது. நாடு (ஸ்டேட்) என்பது அரசு, அது இறையாண்மை கொண்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் சமுதாயத்தை குறிப்பிடுவதாகும். அது எத்தனை மொழிகள் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தேசம் என்பது மரபு வழியாக ஒரு மொழி, கலாசாரம் கொண்டதாக இயங்க வேண்டும்.
ஒரு தேசம் என்பது ஒரு நாடாக இருக்கலாம். தனி நாடு சுயநிர்ணய உரிமையில் பிரியும்போது பன்னாட்டு அங்கீகாரமும் ஒரு முக்கியமான காரணியாகும். ஒவ்வொரு நாடும் ஒரு தேசமாக இருப்பதில்லை என ஜான்ஹட்சின் சன் மற்றும் ஆன்டனி டி. ஸ்மித் ஆகியோர் நேஷனலிசம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றனர். ஒரே மொழியும், கலாசாரமும் பழக்கத்தில் கொண்ட மக்களின் கூட்டமைப்பே ஒரு தேசிய இனம் (நேஷனாலிட்டி – நேஷன் – தேசம்) என்று அழைக்கப்படுகிறது. தமிழ் தேசியம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவெடுத்த ஒரு தொன்மையான மூத்த இனமாகவும், தமிழ் மொழி மூத்த மொழியாகவும் அறியப்பட்டது. ஒரு இனத்தை, தேசிய இனமாக வரையறுப்பதற்கான முன்நிபந்தனைகள்:
1) ஒரு பொதுமொழி,
2) ஒருங்கிணைந்த தட்பவெட்பம் கொண்ட எல்லை
3) பொதுவான நிர்வாக முறைமை
4) ஒரு தொடர்ச்சியான, வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு.
5) பொதுவான பொருளாதார உற்பத்தி முறைகள் மற்றும் பொருளாதார வாழ்வு
6) பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல்
இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ஒரு
தேசம் ஆகும்.
மேற்கூறியவை எந்த இனத்திற்கு இருந்தாலும் அது தேசிய இனமாக புரிந்து கொள்ளவேண்டும்.
- பக்ருதீன் அலி அஹமது – எழுத்தாளர்