முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு சூழ்ந்த தற்கால அரசியல் சூழலில் முஸ்லிம் கட்சிகளிடமும், பொதுவான கட்சிகள், அமைப்புகளிடமும் சில குரல்கள் எழுகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதை ஆளும் பாஜக அரசு அழிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூக்குரலிடுகின்றனர்.
ஆனால், இப்போது இருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அது உருவான வரலாற்றிலும் எவ்வாறு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளது வாஞ்சிநாதன் சித்ரா எழுதிய ‘இந்திய மக்களாகிய நாம்’ புத்தகம்.
1905 வங்காளப் பிரிவினை, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, பசுப் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் வேட்டையாடப்பட்ட முஸ்லிம்கள், இந்திய தேசியம் எப்படி இந்து தேசியமாக கட்டமைக்கப்பட்டது போன்ற பல முக்கியமான அம்சங்களை இந்நூல் விவாதிக்கிறது.
மேலும், இந்திய அரசியலமைப்பு ஏன் வலிமை குன்றிய மாநில அரசுகளையும், வலிமைமிக்க மத்திய அரசுகளையும் உருவாக்கியது? மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் போன்ற குரல்கள் மழுங்கடிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன? இதற்கும் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கும் என்ன தொடர்பு போன்ற கேள்விகளுக்கும் இந்நூல் பதில் அளிக்கிறது.
பிரிட்டீஷ் காலனித்துவ இந்தியாவில் காங்கிரசுக்கு எதிரான சக்திவாய்ந்த இயக்கமாக முஸ்லிம் லீக் எப்படி உருவானது? அது மாநில சுயாட்சி, மாநில உரிமைகள், சிறுபான்மையினருக்கு உரிய சட்டப் பாதுகாப்பு மற்றும் அரசியல், கல்வி, அரசு அதிகாரங்களில் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் முதலான விஷயங்களுக்கு முஸ்லிம் லீக் வலுவாகக் குரல் கொடுத்ததை இந்நூல் தெளிவாக விளக்கியிருக்கிறது.
இது மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் உண்மையான கோர முகங்களைக் கிழித்துக்காட்டி இருக்கின்றார் இந்நூலின் ஆசிரியர். உண்மையாக இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களுமே காரணம் என்றும் குறிப்பிடும் நூலாசிரியர், ஜின்னா காரணம் இல்லை என்றும், புதிய அரசியல் அமைப்பில் சிறுபான்மையினருக்கு உரிய சட்ட பாதுகாப்பையும் பிரதிநிதித்துவத்தையுமே முஸ்லிம் லீக் கோரியது என வாதிடுகிறார்.
முஸ்லிம் லீக்கின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் செவிசாய்க்கவில்லை. அதனாலேயே 1940ல் தனிநாடு கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள். இவ்விஷயத்தை தகுந்த ஆதாரங்களுடன் கூறி இருக்கின்றார் நூலாசிரியர் வாஞ்சிநாதன். அதே சமயம், 1937ல் சாவர்க்கர் இரு நாடு கொள்கையை முன்மொழிந்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புத்தகம் அரசியலமைப்பு, அதன் வரலாறு, அதன் உருவாக்கத்திலுள்ள இஸ்லாமிய வெறுப்பு, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை, வங்காளப் பிரிவினை, மாநில உரிமைகள், மாநில சுயாட்சி, கட்டாய மதமாற்றம் போன்ற அம்சங்களை விவாதிக்கிறது. இறுதியில் ‘சிதைவுக்கு உள்ளாக்கப்படும் இட ஒதுக்கீடு’ எனும் தலைப்பிலான ஒரு நீண்ட கட்டுரையுடன் புத்தகம் நிறைவடைகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகான அரசியலமைப்பில் சிறுபான்மையருக்கான சட்டப் பாதுகாப்பின்மை, பசுப் பாதுகாப்புச் சட்டம், பொது சிவில் சட்டம், UAPA போன்ற கறுப்புச் சட்டங்களும் எவ்வாறு முஸ்லிம்களை பாதிக்கிறது என்பது குறித்தும், சுதந்திர இந்தியாவில் நடந்த சட்டத்திருத்தங்கள் மூலம் எப்படி முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்படுகிறார்கள் என்பதையும் நூலாசிரியர் தனது அடுத்த ஆய்வில் எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
அரசமைப்பின் வரலாற்றிலும், சிறுபான்மை நலனிலும் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படித்தே ஆக வேண்டிய புத்தகம் ‘இந்திய மக்களாகிய நாம்’.