பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வேண்டுகோள் ‘தயவுசெய்து ஒதுங்கி விடுங்கள்!’
- அருந்ததி ராய்
நமக்கு ஒர் அரசு தேவை! ஏனெனில் அப்படி ஒன்று தற்போது இருப்பதாக எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. சுவாசிக்க ஆக்ஸிஜன் நம்மிடமில்லை. உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். நம்மை நோக்கி உதவிகள் வந்தாலும்கூட, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என அறியக் கூட நம்மிடம் கட்டமைப்புகள் இல்லை. இப்போது என்ன செய்ய முடியும்? 2024 வரை எங்களால் காத்திருக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடியிடம் இப்படி கெஞ்சிக் கேட்கும் நாள் வரும் என என்னைப் போன்றவர்கள் ஒருபோதும் கற்பனை-யில்-கூட நினைத்திருக்க மாட்டோம்.
நான் இவ்வாறு செய்வதை விட சிறைக்கு செல்லக்கூட தனிப்பட்ட முறையில் தயார் என்பேன். ஆனால் வீடுகளில், தெருக்களில், மருத்துவமனை வண்டி நிறுத்துமிடங்களில், பெரிய நகரங்களில், சிறிய ஊர்களில், கிராமங்களில், காடு-களில், வயல்களில் என அனைத்து இடங்களிலும் உயிர்கள் பலியாகும் போது, எனது கவுரவத்தை தூக்கிப்போட்டு ஒரு சாதாரண குடிமகனாக கோடிக்கணக்கான சக குடிமக்களுடன் இணைந்து நின்று கேட்கிறேன்: “ஐயா, தயவுசெய்து ஒதுங்கி விடுங்கள். குறைந்தபட்சம் தற்போதைக்காவது தயவுசெய்து ஒதுங்கி விடுங்கள்.” நான் உங்களை மன்றாடிஇத்தகைய நெருக்கடிநிலையே நீங்கள் உருவாக்கியதுதான். உங்களால் இதை தீர்க்க முடியாது. உங்களால் இதை மேலும் மோசமானதாக மாற்றத்தான் முடியும். அச்சம், வெறுப்பு, அறியாமை ஆகியன நிலவும் இடத்தில் அந்த (கொரோனா) வைரஸ் வளரும். பேசுபவர்களின் வாய்களை நீங்கள் அடைக்கும்போது அது வேகமாக வளரும்.
சர்வதேச ஊடகங்களில் மட்டுமே உண்மையை தெரிந்து கொள்ள முடியும் என்ற அளவிற்கு (தேசிய) ஊடகங்களை நீங்கள் கட்டுப்படுத்தும்போது, அது மேலும் வேகமாகப் பரவும். ஒரு பிரதமர் தனது பதவியில் இருந்த ஆண்டுகளில் இப்போதும் கூட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாதபோதும் கேள்விகளை எதிர்கொள்வதை தவிர்க்கும் போதும் அந்த வைரஸ் பரவிக் கொண்டே இருக்கும். நீங்கள் பதவி விலகாவிட்டால், தேவையில்லாமல் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள். எனவே, உங்கள் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொண்டு இப்போதே சென்று விடுங்கள்.
தியானம் மற்றும் தனிமையுடன் கூடிய ஒரு சிறந்த வாழ்க்கையை நீங்கள் பெற முடியும். நீங்கள் விரும்புவது அதுதான் என நீங்களே கூறியுள்ளீர்கள். மக்கள் இப்படி கொத்துக்கொத்தாக இறப்பதை தொடர நீங்கள் அனுமதித்தால், அத்தகைய வாழ்க்கை உங்களுக்கு கிடைக்க சாத்தியமே இல்லை. உங்கள் இடத்தைப் பிடிக்கக்கூடிய பலர் உங்கள் கட்சியில் தற்போது உள்ளன- ர். இந்த நெருக்கடியான நேரத்தில் அரசியல் எதிரிகளுடன் இணைந்து பணி செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் ஒப்புதலுடன் நியமி க்கப்படும் உங்கள் கட்சியைச் சேர்ந்த அந்த நபர் யாராக இருந்தாலும், அரசையும் நெருக்கடியை எதிர்கொள்ளும் குழுவையும் தலைமையற்றுச் செல்ல முடியும். மாநில முதலமைச்சர்கள் தங்கள் பிரதி நிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இதனால் அனைத்துக் கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
அக்குழுவில் ஒரு தேசிய கட்சியாக காங்கிரஸும் இருக்கலாம். பின்னர் அறிவியலாளர்கள், பொது சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளும் இருக்கலாம். இதையெல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சி இல்லாமல் ஜனநாயகத்தை நீங்கள் உருவாக்க முடியாது. அது ஒரு கொடுங்கோன்மை ஆட்சி என்று அழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ், கொடுங்கோன்மை ஆட்சியைத்தான் விரும்புகிறது. தற்போது நீங்கள் பதவி விலகாவிட்டால், இந்த நெருக்கடி பெரியதாகி ஒரு சர்வதேச பிரச்னையாகவும், உலகிற்கு ஓர் அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படும். உங்கள் திறமையின்மயால், நம் உள்விவகாரங்களில் தலை-யிடவும், அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவும் மற்ற நாடுகளுக்கு ஒரு நியாயமான காரணம் கிடைத்து விடும். நமது இறையாண்மையையே இது சிதைத்து விடும். நாம் மீண்டும் காலனியாதிக்கத்திற்குள் சென்று விடுவோம். அதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த எச்சரிக்கையைப் புறக்கணிக்காதீர்கள்! எனவே தயவுசெய்து சென்று விடுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய மிகவும் பொறுப்பான விஷயம். எங்கள் பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
தமிழில்: பேரா. அ. உமர் பாரூக்