மாணவர்களின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்த விஷயங்களைப் பல்வேறு கட்டங்களில் நாம் விவாதத்திற்கு உட்படுத்துவது உண்டு. வளரும் தலைமுறை அறிவுப் பெருக்கத்தில் சிந்தனை ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் எந்தவித சறுக்கலுக்கும் ஆட்பட்டுவிடக் கூடாது என்பதால் நாம் இப்படி சிந்திக்கிறோம்.
முந்தைய காலங்களைவிட தற்காலத்தில் இவை இன்னும் கூடுதலாக, அழுத்தமாக பேசப்படுவதன் காரணம், விரைவாக செயலாற்ற வைக்கும் தகவல் பரிமாற்றம், நவீன யுகம் சார்ந்த அச்சம், சமூகத்தில் அதிகரித்துள்ள விழிப்புநிலை என பலவாறாக இருக்கின்றன. இவை அனைத்தையும்விட தன் பிள்ளையின் மீது அதீத அன்பு கொண்டுள்ள பெற்றோரின் அக்கறையுணர்வே இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும்.
பொதுவாக பிறர் மீது வைக்கும் அன்பு அக்கறை, பொறுப்பு என்கிற இருமுனை விளைவுகளை ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம். அன்பு வைத்தல் என்பது பிறரின் மீதான இரக்கம், கருணை, காதல், ஈர்ப்பு என்பதோடு பொறுப்புகளையும் தலையில் ஏற்றுவது என்றுகூட புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டுக்காக, இவ்வளவு அன்பாக பார்த்துக்கொண்டும்கூட பொறுப்பில்லாமல் நடுத்தெருவில் விட்டுவிட்டானே என்று புலம்பும் பெற்றோரை நாம் கண்டுதானே இருக்கிறோம். ஒருவர் மீது நாம் கொண்டுள்ள அன்பு எனும் பொறுப்புசாட்டல் அதிகமாகும் போது, பல சமயங்களில் அவை அழுத்தமாகி வன்முறையாக மாறுவதற்கும் வழிகள் இருக்கின்றன.
புரிதலுக்காக “பெண் ஏன் அடிமையானாள்?” என்கிற கேள்விக்கான பதில் ஆணாதிக்க சிந்தனையின் ஒடுக்குமுறை என்பது மட்டுமல்ல. சமூகம் முழுதும் ஒழுங்குநிலையில் இருக்க பெண் இனம் மீது ஏவப்பட்ட அளவுகடந்த பொறுப்புகள், அந்த பாலினத்தின் மீது மட்டும் பொதுமைபடுத்தப்பட்டதன் விளைவு, இன்றைக்கும் வன்முறையாக மாறித்தானே இருக்கிறது. சமூகத்தை கட்டியெழுப்ப விதைக்கப்பட்ட சிலர் மீது இப்படியான பொறுப்புகள் சாட்டப்படுவது இயல்பே. ஆனால் அவை வன்முறையாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
மேற்சொன்ன பொறுப்புசாட்டால் என்கிற கருத்தின் அடிப்படையில், இந்த சமூகம் ஆசிரியர் பெருமக்கள் மீது தொடுத்து இருக்கும் பொறுப்புகள், விழுமிய எல்லைகள் எல்லாம் இன்றைக்கு ஆசிரியர்கள் மீதான, ஆசிரியர் பணியின் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவது இல்லை.
ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு மீறிய அதீத ஊதியம் பெற்று மகிழ்வாகத்தானே இருக்கிறார்கள் என நிதர்சனம் அறியா சில குற்றசாட்டுக்களும் இருக்கத்தான் செய்கின்றது. இங்கு நாம் பேசப்போகும் சிக்கல்கள் அரசு பணிசெய்யும் ஆசிரியர்களுக்கு இருப்பது குறைவுதான், ஆனால் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்களின் நிலையோ, அந்தோ பாவம் என்கிற நிலைதான்.
பல்வேறு முகங்களில் வளர்ந்து நிற்கும் முதலாளித்துவ சிந்தனைகள், கல்வித் துறையை வணிகத் துறையாக, கல்வி நிலையங்களை நிறுவனங்களாக மாற்றி இருக்கிறது.
அதன் விளைவு, மாணவர்களுக்கான கற்றல் சூழலை ஒழுங்குபடுத்தி சமூகப் புணரமைப்புக்கு தயார்படுத்தும் பொறுப்புதாரிகளாக கருதப்பட வேண்டிய ஆசிரியர்களை, தனியார் கல்வி நிறுவனங்கள் பணிகளைத் திணித்து ஊழியர்களாக மட்டுமே நடத்துகின்றன. எல்லா கல்வி நிறுவனங்களும் இப்படி இல்லை. ஆனால் பெரும்பாலான அமைப்புகள் இப்படித்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிரியர்கள் கற்பித்தல் பணியைத் தவிர வேறெந்த பணியிலும் ஈடுபடுத்தப்பட கூடாது என்பது அரசின் வழிகாட்டுதல். ஆனால் பெற்றோர்களுக்கு Systemized ஆகவும் குழந்தைகளுக்கு Customised ஆகவும் விவகாரங்களை இலகுபடுத்திக் கொடுக்க Data Oriented-ஆக மாறியுள்ள தற்கால பள்ளிகள் அந்தப் பணிகளையும் ஆசிரியர்களிடத்திலேயே விட்டுவிடுகின்றன.
வகுப்புக்கு தயார்ப்படுத்துதல், விடைத்தாள் திருத்துதல், புத்தகம் திருத்துதல், மாணவர்கள் மீதான தனி கவனம் என ஏற்கனவே முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவர்கள் மீது இவை அத்தனையையும் இ-தரவுகளாக மாற்றும் சுமையும் திணிக்கப்படுகிறது. இத்தனையையும் கடந்துதான் ஒரு ஆசிரியர் எனும் தனிநபருக்கு குடும்ப பொறுப்பு, தன் பிள்ளை படிப்பின் மீதான கவனம் என இதர முக்கிய பொறுப்புகளும் விழுகிறது.
நவீன கல்விப் பாதையானது, தேர்வுகளைக் குறைக்கவில்லை, மாறாக இலகுபடுத்துதல் என்கிற பெயரில் வார, மாத, இடை, மீள்கற்றல் என இன்னும் கற்கும் மாணவர்களுக்கும், திருத்தும் ஆசிரியர்களுக்கும் பணியை அதிகப்படுத்திதான் இருக்கின்றன.
இதெல்லாம் போக, மாணவர்களை சிறந்த முறையில் கவனித்துக் கொள்ள மாணவர்கள் கூடவே ஆசிரியர்களும் பயணிக்க வேண்டும் எனும் கருத்தை சொல்லி, பெரும்பாலான So Called நல்ல பள்ளிகளில் ஆசிரியர் அறைகளே இருப்பது இல்லை. குறைந்த பட்சம் 8 மணி நேர பணி சமயத்தில் ஆசிரியர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான இடம் பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான் உண்மை. ஏன் உணவருந்தும் போதுகூட வகுப்பறையில்தான் கழிக்க வேண்டி இருக்கிறது.
இப்படி செய்வதற்கு பல காரணங்களை கல்வி நிறுவன முதலாளிகள் கதையளக்கலாம். ஆனால், பணி நேரம் முழுதும் சகாக்களின் சந்திப்பில்லாமல் செக்கிழுக்கும் போதுதான், தன்னை சுற்றி இருக்கும் சூழலை பற்றி பேசாமல் விமர்சிக்காமல் இருப்பார்கள் என்கிற எண்ணத்தில் தான் இப்படி செய்கிறார்களோ?! பணி செய்யும் ஊழியர்களின் பேச்சுக்களை வீண்பேச்சு என எளிதில் சொல்லிவிட முடியாது. விமர்சனங்களை கொஞ்சம்கூட அனுமதிக்க மனமில்லாத, உரிமை பறிப்புத்தான் இவை என்பதை அறிவுள்ளவர்கள் உணர்வார்கள்.
புதுவிதமாக செய்வதெல்லாம் நவீனயுக சிந்தனை என்கிற ரீதியில், அடிப்படை ஆதாரங்கள், ஆய்வுகள் ஏதுன்றி கல்வி சூழலுக்கு Systematic or Structure Oriented ஆக மாற்றம் கொடுத்ததே இது போன்று நடைபெற முக்கியக் காரணம் என்பேன். ஒரு நிலையம் அல்லது நிறுவனம் Structural அமைப்பு இல்லாமல் பணி செய்ய இயலாதுதான். ஒரு விவகாரத்தை நேர்த்தியாக செய்யவே Structure தேவைப்படுகிறது.
நேர்த்தியாக செய்வதெல்லாம் சரியானதாக அமைய வேண்டும் என்று அவசியமில்லை. கற்றல் அமைப்பு என்பது Humanitarian அல்லது Human Value cum Dignity – மனித விழுமியங்களுக்கு உடன்பட்டு, அங்கீகரித்து, அரவணைத்து செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். இவை அனைத்தையும் புறந்தள்ளிய எந்த உலகளாவிய சிந்தனையும் நிச்சயம் உழைக்கும் வர்க்கத்திற்கு ஆபத்தையே விளைவிக்கும்.
மனித மன, உயிர்களோடு தொடர்புகொண்டு இருக்கும் மருத்துவம் போன்ற கல்வி அமைப்பும் மிக கவனமாக, கண்காணிப்பில் இருக்க வேண்டி உள்ளது. இல்லையெனில் திரைப்படங்களில் காட்டுவது போல பிணத்தை வைத்து மருத்துவ வியாபாரம் நடப்பது போன்று, கல்வியும் வியாபாரச் சந்தையில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
மாணவர்கள் எனும் மனித இனத்தின் ஒரு முக்கிய பிரிவினருக்கு கற்றல் திறனை விரிவுபடுத்திக்கொடுப்பதன் மூலம் பல்வேறு மாற்றங்களை காண முடியும் என நாம் நம்புகிறோம். அப்படியானால், அவர்களை தயார்படுத்தும் பணியில் இருக்கும் ஆசிரியர் சமூகத்தை கண்காணித்து, அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் கடமை. ஆசிரியர் பணிக்கு பின்னால் உள்ள சுமை, பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பல்வேறு ஆய்வுகளுக்குபின் முடிவு செய்யப்பட வேண்டியவை. ஆனால், பொறுப்பு என்கிற பெயரில் ஆசிரியர்கள் மீது வன்முறைகள் நடக்காமல் அவர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவது விரைந்து எடுக்கப்பட வேண்டிய செயலாகும்.