விஜயின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. வழக்கம் போல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியாக முஸ்லீம்களை சித்தரித்து தனது திரைக்கடமையை செம்மையாக நிறைவேற்றியுள்ளார் இயக்குனர் நெல்சன். இந்திய சூழலில் முஸ்லீம்களின் உயிரும் , உடமைகளும் பல வித அசச்சுறுத்தலுக்கு ஆளாகி, மிகப்பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நேரத்தில், தொடர்ந்து முஸ்லீம்களை கொடூரமானவர்களாக, நாகரீகமற்றவர்களாக சமீபத்தில் வெளி வந்த ஆன்டி இந்தியன், பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் மீண்டும் ஒருமுறை காட்சிப்படுத்தி இருப்பது இயக்குனர் மற்றும் நடிகரின் அரசியல் அறியாமையே. , இதை எடுத்த இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும் எவ்வளவு கொடூரமான மனநிலை உடையவர்கள் என்பதையே நமக்கு காட்டுகிறது.
தன்னை பெரும்பான்மை சமூகத்தின் அங்கத்தவராக காட்டிக்கொள்வதாலும் வெறுப்பு மனோநிலைக்கு தீனி போடுவதின் மூலமும் வசூல் அறுவடை செய்யலாம் எனும் மனக்கணக்கில் இது போன்ற திரைப்படங்கள் எடுப்பவர்கள் பாஸிட்களை விட மோசமானவர்கள்.
இன்னும் சமூக நலன் அரசியல் பற்றி அடிக்கடி பேசும் விஜயின் அரசியல் அறியாமையும் , உறுதியான நிலைப்பாடின்மையும் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
விமர்சனரீதியாக படம் பத்து பைசாவுக்கு செல்லாது என விஜயின் ரசிகர்களே காறித்துப்பி இருப்பதும், இது போன்ற கதைகளுக்கு மக்களிடம் போதிய வரவேற்பில்லை என்பதும் ஒரு ஆறுதலான செய்தி. சமூக ஊடகத்தின் வளர்ச்சியால் தமிழக மக்கள் ஓரளவு அரசியல் விழிப்போடு இருக்கிறார்கள் என்பதால் பழைய பருப்பு இங்கே வேகாது என்பதை சினிமாக்காரர்கள் இனியாவது புரிந்துக்கொள்ள வேண்டும்.
காஜா காதர் – எழுத்தாளர்