21 ஆம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கோர விபத்தாக மாறிவிட்டது சமீபத்தில் நடந்த ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து. ரயிலில் பயணித்தவர்களில் குறைந்தபட்சமாக 270 இறந்திருக்கின்றனர் 1100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். உள்ளூர் வாசிகள் முதல் உலக மக்கள் வரை நாடு மொழி இன மத பேதமின்றி அனைத்து விதமான மக்களும் தங்களது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் தெரிவித்து வருகிறார்கள். தன்னார்வமாக ஏறக்குறைய இளைஞர்கள் 2000 பேர் ரத்ததானம் வழங்கி இருக்கின்றனர். உள்ளூர் மக்களில் பலரும் தங்களது புறத்திலிருந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர்.
உலகமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும், ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்திய அவ்வேளையிளும் இந்துத்துவாதிகள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? வேரென்ன இந்த விபத்தைச் சாதமாகக் கொண்டு வழக்கம் போல தங்களது விஷமத்தனமான கருத்துகளை மக்களின் மத்தியில் பரப்ப முயன்றிருக்கின்றார்கள். இந்திய நாட்டில் எங்கு எந்த தவறு நடந்தாலும், அதனை வாய்ப்பாகக் கொண்டு இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்பு பிரச்சாரத்தை எப்படிப் பரப்புவது என்று காத்துக் கொண்டிருப்பார்கள் போலும்.
ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒரு பள்ளிவாசல் இருப்பதாகப் பொய்யாகக் குறிப்பிட்டு, இஸ்லாமியர்கள் தான் விபத்திற்குக் காரணம் என இந்துத்துவ வாதிகள் தங்களது வெறுப்புக் கருத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இதற்கு ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தின் ட்ரோன் படத்தைப் பகிர்ந்து, அந்த புகைப்படத்தில் ஓர் ஓரத்தில் சிறிய கட்டிட அமைப்பைச் சுட்டி, அது ஒரு மசூதி என்றும், சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது என்றும் கூறி முடிச்சு போட முயன்றனர். இருப்பினும், உண்மைச் சரிபார்ப்பு இணையதளங்கள், அந்த கட்டிடம் மசூதி இல்லை கோயில் என்பதை உறுதிப்படுத்தின.
கடந்த சனிக்கிழமை மதியம், @randomsena என்ற இந்துத்துவாதிகள் மேற்பார்வையில் இயங்கக்கூடிய ட்விட்டர் கணக்கு, விபத்து நடந்த இடத்தின் புகைப்படத்தில் குவி மாடங்களுடன் கூடிய வெள்ளை நிற கட்டிட அமைப்பைச் சுட்டிக்காட்டி அம்புக்குறியுடன் “நேற்று வெள்ளிக்கிழமை” என்று தனது இடுகையில் பதிவிட்டிருந்தது. இந்த ட்வீட் நான்கு மில்லியன் பார்வைகளைப் பெற்றுக் கிட்டத்தட்ட 4,500 ரீட்வீட்களைப் பெற்றிருக்கிறது. அதில் அவர்கள் ரயில் விபத்து முஸ்லிம்களின் திட்டமிட்ட தாக்குதலால் ஏற்பட்ட விளைவு என்று நிறுவ முயன்றனர். இந்த ட்வீட் ஒரு சிறிய உதாரணம் தான், இதுபோல பலவிதமான போலியான ட்வீட்கள் முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் பல ஹிந்துத்துவவாதிகளால் பரப்பப்பட்டிருக்கிறது.
ஆனால் உண்மை இதற்கு நேர் மாறாக இருந்தது. அவர்கள் மசூதி என்று பொய் செய்திகளை வெளியிட்ட அந்த வெள்ளை நிற கட்டிடம் ஒரு கோவில்.
உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான AltNews இந்த கட்டிடம், இஸ்கான் எனப்படும் ‘the International Society for Krishna Consciousness’ ஆல் நடத்தப்படும் கோயில் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
“இந்தியன் ரயில்வே இத்தகைய கோர விபத்தின் விளைவாக புதிய ரயில்கள் வெளியிடுவதைக் காட்டிலும் பாதுகாப்பின் பக்கம் கவனம் செலுத்தட்டும்” என்ற தலைப்பில் ராய்ட்டர்ஸ் அறிக்கையில் தான் அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது..
இதுகுறித்து ஒடிசா காவல்துறை ட்விட்டரில் “பாலசோரில் நடந்த ரயில் விபத்துக்கு சில சமூக ஊடகங்கள் வேடிக்கையாக வகுப்புவாத கருத்துகளைத் தெரிவிப்பது தெரிய வந்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கக்கூடிய விஷயமாகும். இதுபோன்ற தவறான மற்றும் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் இடுகைகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். வதந்திகளைப் பரப்பி மத நல்லிணக்கத்தில் குந்தகத்தை ஏற்படுத்த முயல்வோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.
இவ்வகையாக வேண்டுமென்றே மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துகின்ற, முஸ்லிம் சமுக மக்களை இழிநிலைக்கு உள்ளாக்கும் கருத்துக்களை வெளியிடுபவர்களைக் கடுமையாகத் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் காவல்துறையோ வழக்கம் போல எச்சரிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டது.
உலகமே இத்தகைய விபத்தைக் கண்டு வருத்தம் தெரிவித்த அவ்வளவு துயரமான வேளையிலும் கூட அத்தருணத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களது கீழ்த்தரமான கருத்துக்களைப் பரப்பிவிடும் இத்தகைய இந்துத்துவ வாதிகள் வெறுக்கத்தக்கவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. மேலும் இது போன்ற வெறுப்பு பிரட்ச்சாரங்களைத் தடுக்க கண்டிப்பாக ‘இஸ்லாமிய வெறுப்புத் தடை சட்டம்’ இயற்றப்பட வேண்டும்.