2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் இஸ்ரேலின் மீது நடத்திய “தூஃபாநுல் அக்ஸா” என்ற பெயரிட்ட தாக்குதல் ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக முக்கியமான நிமிடங்களில் ஒன்றாகும். அதைத்தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மனிதர்களை காஸாவிலும் மேற்கு கரையிலும் இப்போது லெபனானிலும் பாசிச இஸ்ரேல் படுகொலை செய்து கொண்டிருக்கிறது. போரில் அதிகமான ஆட்களையும் பொருளாதாரத்தையும் யார் இழக்கிறார்களோ அவர்கள்தான் தோல்வியடைந்தவர்கள் என பொதுவாக கருதப்படுவார்கள். அந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் ஃபலஸ்தீன் தோல்வியடைந்து கொண்டிருக்கிறது என வாதிடலாம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பாலஸ்தீனில் 41,000க்கும் அதிகமான மனிதர்கள் உயிர்த் தியாகிகளாகி உள்ளனர். ஆனால், புதிய காலகட்டத்தின் யுத்தங்களை, குறிப்பாக சுதந்திரப் போராட்டங்களின் வெற்றி தோல்விகளை அவ்வளவு எளிதாக எடை போட்டு கடந்து முடியாது.
இஸ்ரேலின் இனப்படுகொலை தொடரும். ஆனால்…
இஸ்ரேல் ஃபலஸ்தீனத்திலும் லெபனானிலும் சாதாரண மனிதர்களின் மீது ஒருதலைபட்சமாக நடத்தி வரும் இனப்படுகொலை திட்டம் இனியும் தொடர்கதையாகவே இருக்கும். ஆனால் அதன் மறுபக்கம் இஸ்ரேலின் அஸ்திவாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அக்டோபர் 7க்கு பிறகு இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை காலமாக அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்த பல நாடுகளும் தற்போது அவர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர். (தற்போது அந்தப் பட்டியலில் பிரான்சும் இணைந்துள்ளது. விரைவில் அவர்களை உருவாக்க துணை நின்ற இங்கிலாந்தும் இணைய உள்ளது)
அரசியல் தோல்வி
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் வீட்டுக்கு முன்னால் கடந்த ஒரு வருட காலமாக நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இஸ்ரேலிய குடிமக்களில் ஒரு பகுதியினர் போர் நிறுத்தத்தை விரும்பக் கூடியவர்கள் தான். அதற்குக் காரணம் ஃபலஸ்தீன மக்களோடு கொண்ட இரக்கம் ஒன்றும் அல்ல. (ஆக்கிரமிப்பின் மூலம் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த தங்கள் வாழ்க்கையில்) அக்டோபர் 7 முதல் ஆரம்பித்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்காகதான் போர் நிறுத்த முழக்கங்களை அவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் ஃபலஸ்தீன் சுயமே ஐநா பொதுச் சபையில் கொண்டு வந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது 124 நாடுகள் ஆகும். இதன் மூலம் சர்வதேச அளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சில தினங்களுக்கு முன்பு ஐநா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் பேசுவதற்காக எழுந்து நின்ற பொழுது சபை ஒட்டுமொத்தமாக அவரது உரையை புறக்கணித்ததை நாம் பார்த்தோம். சமீபகாலமாக ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகள் உட்பட ஏழு நாடுகள் 2024இல் ஃபலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது.
ஃபலஸ்தீனிலே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதம் என சர்வதேச நீதிமன்றம் ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இஸ்ரேலின் மனித இன படுகொலைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அளித்த புகார் இஸ்ரேலின் சியோனிச பயங்கரவாதத்தை உலகத்திற்கு முன்னால் தோலுரித்துக் காட்டியது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போர் குற்றவாளியாக தீர்ப்பளித்து அவருக்கு எதிராக பிடிவாரண்டு வெளியிட்டது.
அரபு மண்ணில் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்கும் விதமாக அரபு நாடுகளின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்ட “ஆப்ரகாம் அக்கார்ட்” என்ற ஒப்பந்த நிறைவேற்றத்தையும் தூஃபாநுல் அக்ஸா முறித்துப் போட்டது.
சுதந்திர ஃபஸ்தீன நாட்டை உருவாக்க உலக நாடுகளின் கூட்டமைப்பை நாங்கள் உருவாக்குவோம் என சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியா அறிவித்தது. சர்வதேச அளவிலும் குறிப்பாக அரபுலகிலும் எழுந்துள்ள ஃபலஸ்தீன் ஆதரவு உணர்வுகளின் வெளிப்பாடுதான் மேற்கண்ட சம்பவங்கள்.
பொருளாதார வீழ்ச்சி
இஸ்ரேல், அதனுடைய வரலாற்றிலேயே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளக்கூடிய விதத்தில் அதன் நிதி அமைச்சரின் அறிக்கை சில தினங்களுக்கு முன்னால் வெளியானது. கடந்த ஒரு வருட காலத்தில் அதன் உள்நாட்டு உற்பத்தி பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. போர் செலவுகள் அதிகரிக்கும் என்பதை கணித்த நெதன்யாகு அரசு அதன் உள்நாட்டு உற்பத்தி இந்த அளவு வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை.
அக்டோபர் 7 தாக்குதலுக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கும் முன்பு இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடம் 3.4% ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்திருந்தது. ஆனால் இப்போது பொருளாதார நிபுணர்கள் கணித்திருப்பதோ 1% முதல் 1.9% வரை மட்டுமே. அடுத்த வருடம் இந்த நிலை இன்னும் வீழ்ச்சியடையும் என கணித்துள்ளார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 60,000 சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. ஃபலஸ்தீன விவசாய தொழிலாளர்களுக்கான அனுமதியை நிறுத்திய பிறகு ஏராளமான விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகிவிட்டன. பழம் மற்றும் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வரவு நின்றதோடு சுற்றுலா துறையும் முழுவதுமாக முடங்கி விட்டது. இங்கிலாந்து போன்ற இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களுக்கு (Divestments Movement) பெரும் வரவேற்பு இவ்வருடம் கிடைத்துள்ளது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பு அழைப்புகள் பெரும் ஆதரவை பெற்றுள்ளன.
செங்கடலில் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களுக்கு எதிராக ஹுதிகள் நடத்திய தாக்குதலின் மூலம் சர்வதேச சரக்கு போக்குவரத்து பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. ஹுதிகளின் தாக்குதலின் காரணத்தால் இஸ்ரேலின் துறைமுகங்கள் ஆள் அரவமற்ற அனாதைகள் ஆகி விட்டன. சரக்கு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப் போய்விட்டது. இஸ்ரேலின் முதன்மையான துறைமுகங்களான ஹைஃபா, அஷ்டோத், ஐயாத் போன்றவற்றின் மூலம் கடந்த ஒரு வருடமாக 10 பைசா கூட வருமானம் வரவில்லை என ஐயாத் துறைமுகத்தின் சிஇஓ கூறியுள்ளார். அமெரிக்கா தனது ஒரு மாநிலத்திற்கு அளிப்பதைப் போன்ற பொருளாதார, ராணுவ உதவியை அளிப்பதின் மூலமாக மட்டுமே இஸ்ரேல் தற்போது தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.
உள்நாட்டு இடம்பெயர்வும் வெளிநாட்டு புலம் பெயர்தலும்
அக்டோபர் 7க்கு பிறகு ஆயிரக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். 2023 அக்டோபர் ஏழு முதல் 2024 ஜூன் வரை 12,300 இஸ்ரேல் குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் பலரும் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள். கடந்த காலங்களை ஒப்பீடு செய்கின்ற பொழுது இதில் 285% உயர்வு ஏற்பட்டுள்ளது என இஸ்ரேல் சென்ட்ரல் பீரோ ஆப் ஸ்டாடிக்ஸ் கூறியுள்ளது.
இஸ்ரேல் அதன் வரலாற்றில் முதல் முறையாக உள்நாட்டு இடம்பெயர்தல் என்ற நிகழ்வை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் இருந்து அகதிகளாக (IDPs- Internally Displaced Persons) இஸ்ரேலின் மற்ற பகுதிகளுக்கு சென்றது ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புலம் பெயர்ந்துள்ளனர். கடந்த கால பதிலடி குறித்து அனுபவங்கள் இருந்தும் கூட அவர்களது புனர்வாழ்வு உருவாக்கிய சிக்கல்கள்தான் லெபனானை ஆக்கிரமிப்பதற்காக ஹிஸ்புல்லாவின் மீது தாக்குதலை முன்னெடுக்க வைத்துள்ளது.
கலாச்சார புறக்கணிப்பு
சர்வதேச சமூகத்தின் முன்னால் இஸ்ரேலை தலைகுனிய வைத்த இயக்கம்தான் “கல்வி புறக்கணிப்பு (Academic exclusion )”. ஃபலஸ்தீன் கேம்பைன் ஃபார் அகாடமிக் அண்ட் கல்ச்சுரல் பாய்காட் (PACBI) என்ற இயக்கம் துவங்கி வைத்த இந்த முன்னெடுப்பு இஸ்ரேலின் கல்விச் சூழலை முழுமையாக ஒதுக்கியது.
உலகின் பல்வேறு இடங்களில் உள்ள ஏராளமான பல்கலைக்கழகங்கள் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டு வந்தன. தி ராயல் மல்பென் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, நார்வீஜியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஓஸ்லோவில் உள்ள ஓஸ்லோமெட் பல்கலைக்கழகம், பெர்கன் பல்கலைக்கழகம், சவுத் ஈஸ்ட் நார்வே பல்கலைக்கழகம் போன்றவை இந்த பட்டியலில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே.
ராணுவ பலத்தின் மூலமும் ஆயுத பலத்தின் மூலமும் மட்டுமே ஒரு நாடால் எல்லா காலமும் முன்னேற முடியாது. அரசியல், சமூக, கலாச்சார ரீதியாக ஒருங்கிணைந்த ஒரு சமநிலையான சமூக முறைமை இருந்தால் மட்டுமே ஒரு சமூகத்தால் முன்னே செல்ல முடியும். அக்டோபர் 7 இஸ்ரேலின் சமநிலையான சமூக முறைமையை தகர்த்துள்ளது.
இது இஸ்ரேலின் தோல்வி. ஃபலஸ்தீனத்தின் வெற்றி.
(தமிழாக்கம்: கே. எஸ். அப்துர் ரஹ்மான்)