நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் 1947ல் இருந்த அளவுக்குக் கீழிறங்கப் போகும் அபாயத்தை சுட்டிக்காட்டி இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி போட்டிருக்கும் குண்டோடு இன்றைய இருள் கவ்வத் தொடங்கியிருக்கும் வேளையில் இதை எழுதுகிறோம். குஜராத் இனஅழிப்பையே பேசிக் கொண்டு இன்னும் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா… அல்லது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுப் போகப்போகிறீர்களா என்று வாய்ப்பந்தல் போட்டே வாக்குத் தேன்மாரிப் பொழியச் செய்த கவர்ச்சி நாயகனிடம் இப்போது வாய்தவறிகூட யாரும் வளர்ச்சியை பற்றிக் கேட்பதில்லை. எழுபது ஆண்டுகள் நாம் சந்திக்காத அதலபாதாள வீழ்ச்சி நம் கண்முன்னே நிழலாடும் நெருக்கடியைப் பற்றியும் யாரும் பேசப் போவதில்லை.
நேரடியாக ஒத்துக் கொள்வது சிரமம் என்றாலும் திருவாளர் மோடி ஒரு காரியக்காரர் என்பதே இந்திய பொதுபுத்தியில் படிந்துவிட்ட சித்திரம். ஏனெனில் மோடி வகையறாக்கள் தங்கள் முதன்மை வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுகிறார்கள். அயோத்தியில் ராமர் கோவில், காஷ்மீர் சிறப்புரிமையை ரத்து செய்தல், பொது சிவில் சட்டம் போன்ற தங்கள் ஆதார நோக்கங்களில் அவர்கள் அசுரத்தனமான வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாகும் போதெல்லாம், “இதையெல்லாம் சொல்லித்தானே நாங்கள் வாக்குக் கேட்டோம்; இதற்காகத்தானே எங்கள் தேசபக்தர்கள் எங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள்.. இதில் என்ன தவறு இருக்க முடியும்” என்று வாயடைத்து விடுகிறார்கள். வளர்ச்சி மண்ணாங்கட்டிக் கெல்லாம் இங்கே யாரும் ஒட்டுப் போடவில்லை அல்லது மக்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை வழங்குவதில் நாம் சரியாக இருக்கிறோம் என்பதை அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.
அவர்களின் இராம ஜென்மபூமி இயக்கம் என்பதுகூட இராமனின் தெய்வாம்சத்தை ஏற்றிப் போற்றி சித்தி அடைவதற்கான பக்தி மார்க்கமல்ல. இந்து பேரினவாத அரசியலை நிறுவனப்படுத்திக் கொள்வதற்கான நீண்டகால அரசியல் மாதிரிக்கான மார்க்கம் அது. அதன் விளைவுகளை இந்திய பாசிச அமைப்புகள் தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றன. வெள்ளையாக இருக்கும் எந்த முகமும் ஓரிரவில் கருத்துப் போவதில்லை. தோல் ஒவ்வாமையின் காரணமாகவோ, இராசாயன மாற்றங்களின் காரணமாகவோ சிறிதுசிறிதாக தோலின் நிறமிகள் செயலிழப்பதைப் போல், தேச கட்டமைப்பில் சனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற வண்ண இழைகளின் சாயம் மறையும் அளவுக்கு மை அழுக்கேற்றி மங்க வைக்கும் திருப்பணியைச் செவ்வனே செய்கிறது காவி இயக்கம். “இரும்பு பெட்டியில் நெருப்பு; உன் முகமெல்லாம் கருப்பு” என்று ஒரு திரைப்பட வசனம் வருமே அதைப் போலவே, நாளெல்லாம் நெருப்பு; நம் நிலமெல்லாம் கருப்பு என்கிற வகையில் ஜென்மபூமி இயக்கம் கனகச்சிதமாக மக்களாட்சிக்குக் கருப்பு பூசி மங்கவைக்கும் வேலையை செய்து வருகிறது. இது வெறும் சங்பரிவாரங்கள் செய்யும் சம்பவமாக நாம் பார்க்க முடியாது. அவர்கள் விரித்த வலையில் சிக்காமல் தப்பிப் பிழைத்து தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் இங்கு ரொம்பவும் சொற்பம்.
இது ஒரு கெடுதிசார் அமைப்பு. அரசியலில் தகுதிசார் அமைப்பு என்றும் கெடுதி சார் அமைப்பு என்றும் இரண்டு மாதிரிகள் இருக்கின்றன. தேர்தல் வெற்றி என்கிற பெயரில் கெடுதிகளின் பலன்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் அமைப்பே கெடுதிசார் அமைப்பு (Spoils System) எனப்படுகிறது. 1829ல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஆன்ட்ரு ஜாக்ஸன் காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவரும் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டபோது கால்கோள் கொண்டது இந்த அமைப்புமுறை. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் வில்லியம் மார்சியின் “வெற்றி பெற்றவருக்கே எல்லா கெடுதல்(களின் பலன்)களும் போய்ச்சேருகிறது” (“to the victor belong the spoils“) என்ற புகழ்பெற்ற வாக்கியத்தில் இருந்து இந்த ‘கெடுதிசார் அமைப்பு’ என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வந்தது. இந்த அமைப்பில் வெற்றி பெற்றவர்கள் பணம், பதவி, அதிகாரம் என எல்லாவற்றையும் தங்கள் கண்ணசைவில் காரியமாற்றியவர்களுக்கு சந்தடியே இல்லாமல் கைமாற்றுகிறார்கள். இன்றைக்கும் ‘நான் ஒரு முஸ்லிம் விரோதி.. இந்து தர்மத்தைக் காக்க என்னை அர்ப்பணித்துக் கொண்டவன்’ என்று யார் யாரெல்லாம் பிரகடனப்படுத்துகிறார்களோ, அவர்கள் உயர்பீடங்களுக்கு வருவதை எளிதாக்குவது இந்து பேரினவாத அரசின் உன்னத நோக்கம்.
இத்தகைய அமைப்பில் உள் நுழைவதற்கான பல்நோக்கு அடையாள அட்டைகளில் முதன்மையானதுதான் அயோத்தி. எந்த நொடியிலும் பரிவாரங்கள் இதைக் கையில் எடுத்துக் கொள்ள ஆவலோடு காத்திருந்தன என்பதுதான் நூறாண்டுக்கும் மேலான இந்திய அரசியல் வரலாறு. இந்துத்துவ அரசியல் தலைமை காலந்தோறும் ராமர் கோவில் சிக்கலை எப்படி தனது அதிகார நலன்களுக்கு ஏதுவாக கையாண்டது என்பதைப் பின்வரும் பத்திகளில் பார்க்கப் போகிறோம். ஆனால் பாஜக படுதோல்வி அடைந்த 1984 தேர்தலே இதன் திருப்புமுனை தருணம். அதற்கு பிறகுதான் ராம ஜென்மபூமி இயக்கத்தை ஒரு புதிய ஹிந்து சமுதாயத்தை தோற்றுவிப்பதற்கான வரைபடமாக சங்பரிவாரங்கள் கையாளத் தொடங்கினர். அந்த வரைபடம் அயோத்திக்கு பிறகு மதுரா, காசி, தாஜ்மஹால் என விடுவிக்கப்பட வேண்டிய மேலும் 3000 ஆலயங்கள் கொண்ட பெரும் பட்டியலை அடையாளப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான முடிவில்லாத போரை அறிவித்து படை திரட்டிப் புறப்பட்டது.
அதனால் இராமர் கோவில் கட்டும்வரை இந்த இயக்கத்திற்கு ஓய்வில்லை. அப்படியே கட்டி முடித்தாலும் அதற்குப் பிறகும் ஒழிச்சலில்லை என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். ஏனெனில் இராம ஜென்மபூமி இயக்கம், பெரும்பான்மை இனத்தின் சமய சார்ந்த நம்பிக்கைச் ஒன்றைக் குறியீடாக்கி, அதையே தமது நெடிய கலாச்சார பாரம்பரியத்தை பீடித்த இழிவு எனவும் அந்த இழிவுக்கு காரணமான எதிரி முஸ்லிம் எனவும் திறம்பட கட்டமைத்தது. இந்த கலாச்சார நோய்மை இந்திய வெகுசன அரசியலை முற்றிலும் பீடித்துவிட்டது. பெரும்பான்மையின் நம்பிக்கைகளை பாரதப் பண்பாடு, இந்து நாகரீகம், தேசிய உணர்வு, இறையாண்மை ஆகியவற்றோடு முடிச்சிட்டு அரசியல் படுத்தும்போது அதன் அச்சுறுத்தலில் சிறுபான்மை சமூகம் தடுமாறுவதும் தடம்மாறுவதும் இயற்கை. நோய் குணமானாலும் நோய் குறித்த இந்த அச்சம் நீடிக்கவே செய்யும். நோயைக் காட்டி காசு பறிப்பதைப் போல் இந்த நோய்மையை பிரஸ்தாபித்தே ஓட்டுக்களை அள்ளுவது நுட்பமான அரசியல் தந்திரமாகி விட்டது. .
ஐந்து ஆண்டுகள் பிரதமராக இருந்து ஆட்சியை நிறைவு செய்த வாஜ்பாய் 2004ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தை அயோத்தியில் இருந்துதான் தொடங்கினார். தேர்தலில் பாஜக வெளியிட்ட தொலைநோக்கு ஆவணம் முன்வைத்த முதல் அம்சமே ராமர் கோயில் கட்டுவதாகும். பிப்ரவரி 7ஆம் தேதி அயோத்தியில் அவர் பேசும் போது “ராமர் கோயில் கட்டுவது பாஜகவின் கொள்கை. இன்னும் முடிக்கப்படாத பணி அது. பாஜக ஆட்சிக்கு வந்தால் கோவில் கட்டுவதற்கான அனைத்துத் தடைகளும் நீக்கப்படும்” என்று முழங்கினார்.. அதாவது மசூதி இடிப்பு என்பது ஒரு அரைகுறை வேலை. கோவில் கட்டுவதே அதன் முழுமையான பணி என்பதை அவர் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. அவரை பின்தொடர்ந்த பாஜகவின் அனைத்து தலைவர்களும் மீண்டும் மீண்டும் இராமர் கோவில் கட்டுவதையே வலியுறுத்திப் பேசினார்களே ஒழிய, ‘இந்தியா ஒளிர்கிறது’ ’எல்லாம் சுகம்’ என்ற தங்களின் அன்றைய பிரச்சார வாசகங்களுக்கான சாதனைகளை ஒருத்தரும் பட்டியலிடவில்லை.
சரி… அதுதான் போகட்டும். சர்வ வல்லமைமிக்க மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, ஆா்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ராமர் கோயில் கட்ட மோடி அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்” என்ற வேண்டுகோளுடன் தான் களமிறங்கினார். விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப் பார்த்தாலும் வளர்ச்சி முகமூடியணிந்து வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் மக்களிடம் ஓட்டுக் கேட்க ஒரு வளர்ச்சித் திட்டம் கூட அகப்படவில்லை. ”ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தாக”த்தான் அயோத்தி மேல் இந்த முத்துமாலை இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. எனவே பாகவதர்கள் பாட ஆரம்பித்து விடுகிறார்கள். சனநாயக குழந்தைகள் விரலை சூப்பிவிட்டு அடுத்த தேர்தல் காலம்வரை நிம்மதியாக தூங்கப் போய் விடுகிறார்கள்.
சர்வமும் அயோத்’தீ’!
எப்போதும் மனிதர்களை அணிதிரட்ட சமய உணர்வுகள் பெரிதும் துணை புரிந்துள்ளன. திலகர் 1893 ஆம் ஆண்டு முதல் கணபதி உற்சவங்களை இந்து சமய உணர்வுகளை உசுப்பி தேசியமாக கட்டமைப்பதற்கான கருவியாக்கிக் கொண்டார். பூரண இஸ்லாமியமும் தேசியமும் இணைந்து செயலாற்ற முடியும் என்ற மௌலானா அலியின் அறைகூவல் தான் கிலாபத் இயக்கத்தை நோக்கி காந்தியை ஈர்த்தது. ‘முஸ்லிம்களின் கிலாபத் கோரிக்கையில் தருமத்திற்கு விரோதமான எதுவும் இல்லை’ என்றார் காந்தி (முஷிருல் ஹசன்). இவை இந்த தேசத்தை அடிமைத்தனத்தை விட்டு விடுவிக்கும் கருவியாக இருந்தவரை எந்த ஆபத்துமில்லை. வாக்கு அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக இந்த தேசிய உணர்வு மாறிய மறுகணமே விளைந்தது சனி. மன்னராட்சியிலும் அந்நிய ஆட்சியிலும் மத உணர்வுகளை அரசியல் அணிதிரட்டலுக்கான அநுகூலங்களாக பார்த்ததை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் சனநாயக, மதச்சார்பற்ற ஆட்சி இவற்றை முளையிலேயே அகற்றி இருக்க வேண்டாமா? இதை பொதுவில் பேசாமல் வெறுமனே காரியமற்ற காரணங்களை வரிசைபடுத்தி நம் கவனத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக ராமாயணம் என்பது பிற புராணத் தொன்மைகளைப் போலவே தெய்வீகம், பிசாசியம் எனும் இருதுருவ ஏற்பாட்டின் படி தேவர் – அசுரர் (நல்லவர் – தீயவர்)களின் அடிப்படையில் மோதல் சூழல்களை உருவாக்கும் கதையாடல்களைக் கொண்ட ஒரு இதிகாசம் தான். அதனை நடப்பு அரசியல் புலங்களுக்குள் இழுத்துவிட்டு ஒரு தரப்பை அசுரர்களாகக் காட்டி, உணர்ச்சிகளைத் தூண்டி மக்களை அசல் பிரச்சினைகளை விட்டு தூரமாக்குவது எளிதாகி விடுகிறது. இந்தியாவில் ராமன் யுகங்களைக் கடந்த கடவுளாக வர்ணிக்கப்பட்டாலும் பதினோறாம் நூற்றாண்டின் இறுதிவரை தெற்காசியாவில் ராமர் வழிபாடு என்பது எங்கும் தென்படவில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டு தொடங்கி இராமாயண, மகாபாரத கதைகள், நாடக பாணியில் தெருக்கூத்துகளாக அரங்கேற்றப்பட்டன. பலவித பௌராணீக கதைகள் இருந்தாலும் இராமாயணமும் மகாபாரதமும் மட்டும் ஏன் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த பேரறிஞர் அண்ணா அவர்களும் இந்த கூத்து அம்சத்தையே பிரபல்யத்திற்கான காரணமாக குறிப்பிட்டார்.
விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமன் மட்டுமே தேச எல்லைகளை கடந்து, கால – இடச் சூழலுக்கு ஏற்ற கலாச்சார அம்சங்களுடன் பின்னிப் பிணைந்த பிம்பமாக புகழ்பெற்றுள்ளார். அவ்வாறு பிரசித்திப் பெற்ற பல்வேறு இராமாயண காதைகள் ஒன்றொடொன்று தொடர்பின்றி வெவ்வேறு கதையம்சங்களோடும் கதை மாந்தர்களோடும் குறி இலக்குகளோடும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வழக்கில் உள்ள இராமாயணங்களன்றி, தாய்லாந்தில் ராமாகின் என்றும், மலாயாவில் ஹிகாயத் செரி ராமா என்றும் வழங்கப்படுகின்றன. பர்மாவின் இராமவஸ்துவும் மகாஇராமாவும் புத்த மரபுச் சாயல்களுடன் தென்படுகிறது. இந்தோனேஷியாவில் ராமன் இஸ்லாமிய வாடையுடன் வலம் வருகிறார். இராமாயணத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியம் இவ்வாறிருக்க, இவையனைத்தையும் ஒரே குப்பிக்குள் அடைக்கும் இந்துத்துவ வேலைத்திட்டம் அரசியல் லாபத்திற்காக நிரல்பட்டதேயன்றி வேறு ஏதுமில்லை.
சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் இந்த கொதிநிலையை சரியாக கணித்து, இந்து – முஸ்லிம் உறவுகளில் அமிலம் ஊற்றுவதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். இந்த அரசியல் ரசாயனத்திற்கான தக்க குடுவைகளையும் அவர்கள் உடனடியாகத் தயாரிக்கத் தொடங்கினர். முதன்முதலாக 1813ல் ஜான் லைடன் என்பவர், பாபர் சுயசரிதையின் காணாமல் போன பக்கங்கள் என்று சிலவற்றை வெளியிட்டு அதற்கான புதிய வரலாற்று வர்ணனையையும் வழங்கினார். தொடர்ந்து 1834ல் மான்டாகோ மரி மார்ட்டின் பாபர் மசூதியில் இஸ்லாத்திற்கு புறம்பான விஷயங்கள் உள்ளதாக தன் பங்குக்கு சொல்லி வைத்தார். 1528 இல் பாபர் அயோத்திக்கு விஜயம் செய்தார் என்று 1854ல் தெரிவித்தார் வில்லியம் ஹெர்ஸ்கின். முத்தாய்ப்பாக பாபர் ராமர் கோயிலை இடித்தார் எனும் நேரடி குறிப்பை 1860ல் பைசாபாத் அரசிதழில் இடம்பெறச் செய்து நிரந்தர நெருப்புக்குத் தூபம் போட்டனர். அன்றிலிருந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்சினையை பெரும் எரிவாயுக் கிடங்காக மாற்றி மக்களை ஆக்ரோஷமாக அணிதிரட்டி வருகின்றன இந்துத்துவ பாசிச சக்திகள்.
கடவுளின் அவதாரமாகிய இராமர் அயோத்தியில் பிறந்தாரா என்ற நம்பிக்கை சார்ந்த விசயங்களைத் தள்ளிவைத்துவிட்டு இந்து சமய கோட்பாடுகளை முன்வைத்தே பேசினாலும் இதில் நிறைய சாம்பல் படிந்த பக்கங்கள் நம்கண்முன் விரியும். கடவுளுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்பதே இந்து மரபு. ஆயினும் ராமஜென்மபூமி விவகாரத்தில் கடவுள் பிறப்பை ஆதாரமாக வைத்து நடக்கும் சர்ச்சைக்கு இக்கோட்பாடு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. இன்னும் கேட்டால் நாடுதழுவிய அளவில் எதிர்கேள்வி கேட்காமல் ஒரு சித்தாந்த அமைப்புக்கான ஆதரவை வெகுமக்களிடம் திரட்ட இராமபிரான் பெரும் அநுகூலமாக இருந்தார் என்பதே எதார்த்தம். மற்றபடி இந்து கலாச்சார தேசிய மேலாதிக்கத்திற்காக அரசியல் சித்தாந்தமாக வடிவமைக்கப்பட்ட இராமபக்திக்கு சமய ஆதார கோட்பாடுகள் எதுவும் குறுக்கே நிற்கவில்லை. இந்துத்துவத்தைப் பொறுத்தவரை வரலாற்று விசாரணையோ ஆன்மீக வியாக்ஞானமோ அநாவசியமான சமாச்சாரங்களாகிப் போனது. வெகுசன பக்தி (public piety) ஆக்ரோஷமாக (Frenzy) வெளிப்படுவதை மட்டுமே விஇப திட்டமிட்டு அறுதி செய்து கொண்டது. இந்த திட்டம் ஆட்சி அதிகாரத்தை குறிஇலக்காக கொண்டே இயங்கியதால் தேவைக்கும் அதிகமான அழுத்தத்தை அந்தந்த கால ஆட்சிகளின் மீது செலுத்துவதில் வெற்றி பெறவும் முடிந்தது. அரசின் அதிகாரப் பதவிகளில் நாசூக்காக ஊடுருவவும் அவற்றில் வகுப்புவாத சிந்தனைகளைப் புகுத்தவும் இந்த திட்டங்கள் கச்சிதமாக வேலை செய்தன. எந்த முகமும் ஒரே நாளில் இங்கே கரி (காவி) பூசிக் கொள்ளவில்லை.
“ஹம் சப் அயோத்தியா” (அனைவரும் அயோத்தியா) போன்ற நயமிக்க சொற்றொடர்கள் இந்த பணியை எளிதாக்கியதால் இந்துத்துவம் கூடிக் குளிர் காய்ந்தது. “ராமர் எல்லோரிலும் இருக்கிறார்; எல்லோரும் ராமரில் இருக்கிறோம். அயோத்தி நம்மிடம் உள்ளது; நாம் அனைவரும் அயோத்தியில் இருக்கிறோம்” எனும் ஊக்கொலிகள் அனைவரையும் பரவச நிலைக்குக் கொண்டு செலுத்தியது. இத்தகைய சுருக்கத் திரட்டு (reductionalism) இந்துத்துவத்தின் இயக்கவியலாகவே மாறிப்போனது. காந்தியார் கொலைக்குப் பின் ஆர்எஸ்எஸ்க்கும் இந்துத்துவ தலைமைகளுக்கும் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க கையெடுக்கப்பட்ட வில்லங்கம் இது. இந்த கண்ணிவெடிகளை அகற்ற முடியாமல் மிகப் பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த நேருவால் கூட கையைத் தான் பிசைந்து கொண்டிருக்க முடிந்தது.
1949ல் டிசம்பர் 22/23 நள்ளிரவில் பாபர் மசூதி அபகரிக்கப்பட்டதற்குப் பிறகு 1949 டிசம்பர் 26 அன்று பிரதமர் நேரு, உபி முதல்வர் கோவிந்த வல்லப பந்த்துக்கு தந்தி கொடுகத்தார். அதில் இருந்த வாசகங்கள் இவைதான்: “அயோத்தியில் நிகழ்ந்துள்ளமையால் நான் மிகவும் அமைதி குலைந்துள்ளேன். இப்பிரச்சினையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்திக் கவனிப்பீர்கள் என மெய்யாக நான் நம்புகிறேன். மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான முன் உதாரணம் ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது”. வெறுப்பு அரசியலுக்கு சாமரம் வீசும் ஆதிக்கம் தான் அன்றும் அவரை உறுத்து வந்து வாட்டியது. நாளடைவில் சர்வமும் அயோத்தீ என்றாகி, அதுவே அரசியல் வகைமாதிரி (pattern) ஆக நிலைபெற்றுவிட்ட தேசத்தில், முஸ்லிம்களை சாந்தப்படுத்தும் போர்வையில் ஷாபானு வழக்கு, சல்மான் ருஷ்டி விவகாரம் போன்றவை குச்சி மிட்டாய்களாக வழங்கப்பட்டன. உண்மையில் அவை அனைத்தும் அவர்கள் முகத்தில் ஈ மொய்க்க வைப்பதற்கே வழங்கப்பட்டன என்பதைக்கூட விளங்க முடியாத முஸ்லிம் தலைமைகளும் அவற்றையே பெருஞ்சாதனைகளாக பீற்றித் திரிந்து தடுமாறின. உண்மையில் இந்த அமைப்பை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்யும் ஏற்பாடுகள்தான் திட்டமிட்டு நடத்தப்பட்டனே ஒழிய, இந்தியர்களை ஒன்றிணைத்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல கவலைபட்ட தலைவர்களை சல்லடை போட்டுத் தான் சலித்தெடுக்க முடிகிறது. குறுகிய நலன்களுக்காக நீதி, நிர்வாகம், சட்டம் என்று சனநாயகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கடத்திவைத்து தேசத்தின் மீது கரிபூசியவர்களே இங்கு அதிகம்.
கரிபூசிக் கொண்ட தலைமைகள்
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதச் செயல் நடந்து முடிந்தபோது, அதில் ஏதோ ஒருவகையில் சிக்கிக் கொண்ட காரணத்தால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சர்தார் பட்டேல் 1948 பிப்ரவரி 4ஆம் தேதி தடை செய்து அறிவித்தார். அவர் வெளியிட்ட குறிப்பாணையில் “சங்பரிவார்களின் ஆட்சேபகரமான மற்றும் தீங்கு பயக்கும் நடவடிக்கைகள் குறையாது தொடர்கின்றன. சங்பரிவாரம் பின்பற்றும் வன்முறை கலாச்சாரம் பல உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. இதில் மிகவும் சமீபத்திய விலை மதிக்க முடியாத இறப்பு காந்திஜியும் மரணமாகும்” என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த தடை வெறும் 17 மாதங்கள்தான் நீடித்தது. தடை இருந்த காலத்தில் கூட இளம் சுயம்சேவகர்கள் தொடர்ந்து ஒன்றுகூடி ஆலோசித்து செயல்பட்டுக் கொண்டே இருந்தனர் என்று வால்டர் ஆன்டர்சன் “ஆரம்பகால ஆர்எஸ்எஸ்” என்ற தனது புத்தகத்தில் தெரிவிக்கிறார்.
யோசித்துப் பாருங்கள்.. தேசத்தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு இயக்கம் சொற்ப காலத்தில் (சு)தந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்பை தேசத்தின் தலைவர்களே ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்சின் மீதான இந்த தடையை நீக்க வேண்டுமானால் இனிவரும் காலத்தில் எழுதி வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் இயக்கமாகவும், அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்ட வெறும் கலாச்சார அமைப்பாகவும் செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழி பெறப்பட்டதாகவும், இந்த ஷரத்துகளை உள்ளடக்கிய புதிய அமைப்பு சாசனத்தை இயற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வாக்கர் அரசிடம் 1949 மார்ச் மாதத்தில் வழங்கியதாகவும் 12.7.1949 அரசு வெளியிட்ட செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. (The Hindu dated 14.07.1949). இப்படி ஆர்எஸ்எஸ் முன்மொழிந்த புதிய சாசனத்தின்படி நடக்கிறதா என்று கண்காணிக்கக் கூட இந்த தேசத்தின் கட்டமைப்புகள் மெனக்கெடவில்லை.
இந்த தடை தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோப்புகளை பார்வையிட வெங்கடேஷ் நாயக் என்கிற சமூக செயற்பாட்டாளர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூலை 2018ல் கோரியதற்கு, அவை தேசிய ஆவணக் காப்பகத்தில் இல்லை என்று பதில் வந்தது. இப்படியாக “காணாமல் போன ஆவணங்கள்” அளிக்கும் தெம்பில் தான் அதே இந்து பத்திரிகையில் எந்த நிபந்தனையும் இன்றியே ஆர்எஸ்எஸின் தடை நீக்கப்பட்டதாக எஸ்.குருமூர்த்தியால் கட்டுரை எழுத முடிகிறது (The Hindu dated 16.10.2013). “சர்வாதிகார கண்ணோட்டமுடைய வகுப்புவாத அமைப்பே ஆர்எஸ்எஸ்” (காக்கி உடையும் காவிக் கொடியும் – தபன்பாசு) என்று காந்தியாரால் வர்ணிக்கப்பட்டு அவரது கொலையிலும் குற்றம்சாட்டப்பட்ட அமைப்பின் மீதான தடையை நீக்க அன்று அரசிடமும் உள்துறை அமைச்சர் சர்தாரிடமும் பல தலைவர்கள் பரிந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த சமரச தூதர்களில் முக்கியமானவர் மாபெரும் தொழில் அதிபர் ஜீ.டி. பிர்லாவும் ஒருவர். இந்திய லிபரல் கட்சியின் தலைவர் டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி ஆர்எஸ்எஸ்சின் புதிய சட்டதிட்டங்களை உருவாக்கி தடை நீக்கவும் கோல்வாக்கர் விடுதலைக்கும் பேருதவி புரிந்தார். அரசியல், தொழில்துறை, நீதித்துறை என்று சகல இடங்களிலும் ஆர்எஸ்எஸ்சை கரிசனத்தோடு பார்த்து ஆதரவளிக்க ஆட்கள் நிரம்பி இருந்தனர். அதுவே ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்த பலம். சமீபத்தில் கூட உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி கே. டி. தாமஸ் “இந்தியர்களைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டம், ராணுவம் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் மட்டுமே இருக்கிறது” என்று திருவாய் மலர்ந்தார். வீடு புகுந்து கழுத்தறுக்க அந்த வீட்டிலேயே கத்தியெடுத்துக் கொடுக்கும் ஆட்களைத் தயார் செய்வதெல்லாம் சாமான்யமான காரியமல்ல. அதே சுதந்திரத்திற்கு பின்னரான காலகட்டத்தில் கூடுதல் அடக்குமுறைக்கு ஆளான கம்யூனிஸ்டுகளுக்காக பரிந்து பேச ஒருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து நிறம் மாறிக் கொண்டிருப்பது காலம் முழுக்க நடந்து வந்தே இருக்கிறது. பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் மீது குற்றஞ் சுமத்தியவுடன் அந்த இயக்கத்தைத் தடை செய்யக் கோரும் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் பரபரப்பானது. உடனே காங்கிரஸின் அபிஷேக் சிங்வி அப்படியெல்லாம் ஆர்எஸ்எஸை தடைச் செய்ய சொல்வது அநியாயம் என்று குரல் கொடுத்தார். ஏற்கனவே ராகுல் காந்தி, மோடியையோ அல்லது சங்பரிவாரங்களையோ தான் எதிர்க்க தலைபட்ட போதெல்லாம் கட்சியில் தனித்து விடப்பட்டதாக என்று புலம்பிய கதையை இங்கே பொறுத்திப் பார்த்துக் கொள்ளலாம். இது தொன்று தொட்டு நடந்து வரும் சமாச்சாரம் தான்.
1950 ஆம் ஆண்டு நேரு தன் நண்பர் கிஷோரிலாலுக்கு எழுதிய கடிதத்திலேயே இதனை தெளிவாக குறிப்பிடுகிறார்: “காங்கிரஸ்காரர்களில் பலர் இன்று வகுப்புவாதிகளாகி விட்டனர். இந்திய முஸ்லிம்கள் மீதான அவர்களின் அணுகல் முறைகளிலும் இது பிரதிபலிக்கிறது. இந்த நாட்டில் நல்ல சூழலை உருவாக்குவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் கிளர்ச்ச்சியூட்டப் பட்டிருக்கும் நிலையில் வெறுமனே நல்லெண்ண உபதேசம் புரிவது அவர்களை எரிச்சலூட்டவே செய்யும்”. அயோத்தி விசயத்தில் காங்கிரஸாரின் உறுதியற்ற இந்த இரட்டை கண்ணோட்டத்திற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். 1948 உபி இடைத்தேர்தலில் பொதுவுடமைத் தலைவர் ஆசார்ய நரேந்திர தேவை எதிர்க்க அவரை மார்க்சியவாதி என்றும் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து, இந்து உணர்வையே உசுப்பிவிட்டது. முதலமைச்சர் கோவிந்த் வல்லப பந்த் “இப்புண்ணிய பூமியில் ராமனின் புனிதத்தில் ஆச்சார்யா நம்பிக்கை வைக்கவில்லை” என்று பேசி தனது தவத்திரு வேட்பாளரான பாபா ராகப்தாஸுக்கு பிரச்சாரம் செய்தது தான் நமது மதச் சார்பின்மை வரலாறு.
ராமஜென்மபூமி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்ட 1980களில், வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் குறுகிய நோக்கத்தில் தேசத்தலைவர்கள் ஆளுகையுடன் மதத்தை பின்னிப் பிணைத்து தங்கமுலாம் பூசத் தொடங்கினார். அதற்கு முன்புவரை காங்கிரஸ் வலுவாக இருந்த பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் லோக்தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியபோது, இந்திராகாந்தி இந்து கோவில்களை அடிக்கடி தரிசிக்கத் தொடங்கினார். ஆச்சாரியார்கள், யோகிகள் ஆகியோரை சந்தித்து அதன் மூலம் இந்து நலன்களின் பாதுகாவலராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். பொற்கோவில் நடவடிக்கைக்கு பின் கார்வாலில் பேசியபோது இந்து மதம் சிறுபான்மையினரால் ஆபத்துக்கு உள்ளாகி வருகிறது என்றார். மேலும் குருஷேத்திரத்தில் சிறுபான்மையினர் சவாலை சந்திக்க தர்ம யுத்தம் தொடங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டார். (Politics of Ayodhya Dispute by Pradeep Nayak).
காங்கிரஸின் மாபெரும் தலைவர்களே இப்படியென்றால், பாஜகவைப் பற்றி சொல்ல தேவையே இல்லை. இந்து எழுச்சியை ஏற்படுத்தத்தான் இந்த ரத யாத்திரை என்று விதவிதமாக பசப்பிவிட்டு நீதி, நிர்வாகத் துறைகளை நம்பவைத்த அத்வானி, “கரசேவை என்பது பஜனைபாடும் காரியமல்ல.. அது கடப்பாரைகளை வைத்து நடத்தும் காரியம்” என்று மசூதி இடிப்புக்கு முன்பே முழங்கினார். (the Hindu 25.4.2004). அதே போன்று மசூதி இடிப்புக்குப் பின் 2.77 ஏக்கர் நிலத்தில் கட்டுமானங்கள் ஏதும் நடக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணையிட, “நாம் அங்கு யாகங்கள் நடத்துவோம்.. அதற்கு பீடங்கள் தேவை.. அதேபோன்று பஜனைகள், பூஜைகள் போன்றவை நடைபெறும்போது அந்த இடத்தில் மக்கள் அமர்வதற்கு ஏற்றவாறு செப்பனிட்டு பந்தல் அமைக்கப்படும். இதெல்லாம் நீதிமன்ற உத்தரவை மீறுவது ஆகாது” என்று சொன்னவர் வாஜ்பாய். அதனையும் கண்டும் காணாமல் வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருந்தவை தான் நீதி அமைப்புகள்.
ஆகையால் ஏதோ நாலாந்தர தலைவர்கள் வஞ்சகமாக நம்பவைத்து ஏய்த்து விட்டதாக யாரும் இங்கே சொல்ல முடியாது. மிகைப்படுத்தப்பட்ட இந்து உணர்வுகளை யார் அரசியலுக்கு பயன்படுத்துவதில் வெற்றி அடைகிறார்கள் என்பதுதான் இங்கு போட்டியே. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த கறுப்பு தினத்தில் கூட, “குற்றச் செயலின் பலன்களாக (fruits of crime) அந்த இடத்தில் அவசர அவசரமாக அமைக்கப்பட்ட கொட்டகையையும் சிலைகளையும் முதலில் உடைத்து எறியுங்கள்” என்று உள்ளத்தில் எந்தவித கபடத்திற்கும் இடங்கொடாமல் சொல்லும் துணிச்சலை பெற்றிருந்தார் ஒரு தலைவர். அவர் மேற்கு வங்க முதல்வர் தோழர் ஜோதிபாசு. 1992ல் தேசிய அவமானம், துக்கநாள் என்று அரிதாரம் பூசி ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள், இன்று அடிக்கல் நாட்டும் அரிய காட்சியின் பெருமை பேசி பூரித்து நிற்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், ஜோதிபாசு அளவுக்கு ஒளிவுமறைவு இல்லாமல் குற்றத்தைக் குற்றமென்று சுட்டிக் காட்டும் திராணியின்றி, சமரசம் செய்ய இயலாத இரண்டு தீவிர நிலைப்பாடுகளை வெறும் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கிவிட்டு அந்த புதைசேற்றில் சிக்கிக் காணாமல் போனவர்கள் தான் இந்திய தலைவர்கள். இதில் பரிதாபமாகவும் மோசமாகவும் தோற்றுப் போனவர்கள் காங்கிரஸ்காரர்களே என்றால் அது மிகையாகாது.
அரசியலின் கறுப்பு பிரதிகள்
இந்து ராஷ்ட்ரத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் இந்திய பாசிசம் அரசியலை தனக்கு தோதான வகையில் அவ்வப்போது மடைமாற்றிக் கொள்கிறது. இதற்கான ஆதரவை குடிமை சமூகத்திடமிருந்து மதத்தை முன்னிறுத்தியே அது பெற்றுக் கொள்கிறது. ஒற்றை தேசம், ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி என்று இந்த தேசத்தில் ஒருமைப்பாடு குறித்து வண்ணக்கோலங்கள் படைப்பவர்கள், வாஜ்பாய் பிரதமராக இருந்த ஆறாண்டு காலத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலை ஒருமுறைகூட கூட்டவே இல்லை. 2013ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடைபெற்ற போதும் வருங்கால பிரதமராக அப்போது வர்ணிக்கப்பட்ட மோடி கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில்தான் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சட்ட நிபுணர்களில் ஒருவரான ஃபாலி நரிமான் “இந்தியா ஒரு மதசார்பான நாடாக மாறிக் கொண்டிருக்கிறதா?” என்ற கேள்வியை எழுப்பினார். தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் சங்பரிவாரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் திரைமறைவு சித்து வேலைகள் வெளிவரும் என்பதாலும், அதில் சிக்கி அம்பலப்படுவதை தவிர்க்கலாம் என்பதாலும் கடந்த ஆறு வருடங்களாக கவுன்சிலைக் கிடப்பில் போடப்பட்டுள்ளது மோடி அரசு. மதவெறிப் பீடித்த பாசிச இந்துராஷ்டிரத்தில் பன்மைச் சமூக ஒருமைப்பாட்டிற்கு என்ன தேவை இருக்க முடியும் என்பதால் தான் மதச்சார்பின்மை குறித்த தேசிய விவாதத்தை நடத்த வேண்டும் என்று அடிக்கடி பேசி வருகின்றன ஆர்எஸ்எஸும் பாஜகவும்.
கலவரங்களுக்கான ஆயத்தங்களை போலவே அதற்கான காரணிகளும் மிக சாதுரியமாக பதனிடப்படுகின்றன. உள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு சங்பரிவாரம் பகிர்ந்து கொள்ளும் இந்துத்துவ மேடை அரசியல், சிறுபான்மையினரை கூடுமான அனைத்து வழிகளிலும் வெறுப்பேற்றுகிறது. எதிர் தாக்குதல்களை இயன்றளவு ஊக்குவிக்கிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளையும் அதற்கான உரிமைகளையும் முழுமையாக நியாயப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக அயோத்தியில் 30-10-90 அன்று நிகழ்ந்த அடையாள கரசேவையைத் தொடர்ந்து 2-11-90 அன்று நடைபெற்ற கலவரங்களில் சில கரசேவகர்கள் பலியாகினர் அவர்களின் அஸ்தி கலசங்களுடன் புறப்பட்ட பாஸ்மி யாத்திரை எதிர் நிலையான உணர்வுபூர்வ தேசிய ஒலி அலைகளை கிளப்பி விட்டது.
இந்த பாணியைப் பின்பற்றித்தான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் பிரேதங்களை வைத்தும் அஸ்மிதா ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆகவே வன்முறை நெருப்பை ஊதிவிடும் எல்லா வித்தைகளையும் கற்றுத் தெளிந்ததுதான் காவிப்படை. சமூக உராய்வுகளின் சிறிய சிராய்ப்புகளிலும் சிரித்துக்கொண்டே தன் கொடுக்குகளை நுழைத்துக் கொள்ளும் காவிப்படை விஷத்தை பாய்ச்சும் வேலையை வீரியமாய்த் தொடங்கிவிடுகிறது. அமைதி திரும்புவதற்கான வாசல்களை சாமர்த்தியமாக அறைந்து சாத்திவிட்டு, இரை எடுக்க துடிக்கும் இந்துத்துவ வேங்கை குடிமையியல் சமூகத்தை வேட்டைக் காடாக்கி கொள்கிறது பசிக்கு தக்கவாறு வேட்டையின் எல்லைகள் விரிவுபடுத்திக் கொள்வதைத்தான் அயோத்தி அரசியலின் கருப்புப் பிரதிகள் நமக்கு விளக்கமாக படம்பிடித்துக் காட்டுகின்றன.
1980களில் மண்டல் பிரச்சனையில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் எதிர்ப்புக்கு ஆளாகிய இந்துத்துவம், பாஜகவின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள ராமஜென்ம பூமியை இந்து ஒற்றுமை மற்றும் ஓட்டு வங்கியின் நிரந்தர அரசியலாக்கிக் கொள்ள முனைந்தது. அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி என்பதைப் போல் அயோத்தி இயக்கத்திற்காக வெவ்வேறு பெயர்களில் கிளை பரப்பிய சங்பரிவார் அமைப்புகள் கலாச்சார போர்வையில் அரசியல் சூழலைத் தன்னியல் படுத்திக் கொண்டது. எதிர் அரசியலும் இந்த போர்வைக்குள்ளேயே புகுந்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தையும் உருவாக்கிவிட்டது. இதில் ராமர் கோவில் என்ற மைய நோக்கம் மட்டுமல்ல.. கிளைக் கதைகளையும் கூட விட்டுவிட இந்துத்தவ சக்திகள் தயாராக இல்லை. ஒரே ஒரு சான்றாக, 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் சேது கால்வாய் திட்டத்தை எதிர்த்து இராமர் பாலம் என்ற நம்பிக்கையை வைத்தே உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார் சுப்பிரமணியம்.சாமி. அதனை எதிர்த்து ‘இராமர் பாலம் என்பது இயற்கையாக உருவான மணற்திட்டு.. அது மனித முயற்சியில் கட்டப்பட்டதல்ல’ என்று தொல்லியல் துறை அறிக்கை அளிக்கிறது. உடனே களமிறங்குகிறார் அத்வானி.. ‘இது தெய்வ நிந்தனை. இந்தியா என்ற கருத்தாக்கத்தையே அது நிராகரிக்கிறது’ என்று ஒரு சமய தொன்மத்தை நாட்டின் இறையாண்மையோடு கோர்த்துவிட்டு மன்மோகன் சிங்கை சந்தித்து நெருக்கடி தருகிறார். மறுநாள் தொல்லியல் துறை தனது அறிக்கையையும் காங்கிரஸ் அரசு தனது வழக்கையும் வாபஸ் பெறுகிறது.
இந்துத்துவம் தனதாக்கிக் கொண்ட இந்த அரசியல் புலத்தில் சிறுபான்மையினர் காட்டும் எந்த சிறிய எதிர்வினையும் அவர்களை அமைப்பை விட்டே அந்நியமாக்குவதற்கு பயன்படுத்தப் படுகிறது. கற்பனைக் கெட்டாத ஒரு மாபெரும் இன அழிப்பை நடத்திவிட்ட பிறகும் இந்தியப் பிரதமர் ஒருவரால், இந்துக்களின் உள்ளார்ந்த மதச்சார்பின்மையை வியந்து போற்ற முடிகிறது. கூடவே “முஸ்லிம்கள் மற்றவர்களோடு இணைந்து வாழ மாட்டார்கள்” என்று அழுத்தந்திருத்தமாக கூற முடிகிறது. (வாஜ்பாய் – ஏப்ரல் 12, 2002). இதில் சிறுபான்மை மக்கள் அதிகபட்சமாக இன்று செய்யக் கூடியது எல்லா அநீதிகளையும் மௌனமாக வேடிக்கை பார்ப்பதே ஆகும். அப்போதுதான் நாட்டின் அமைதியை அனுசரித்து முஸ்லிம்கள் ஒத்துழைக்கும் அளவிற்கு திருந்திவிட்டார்கள் என்ற நல்லபெயர் கிடைக்கும். அதைத்தான் பாபர் மசூதி இடிப்பு, நீதிமன்ற இறுதித் தீர்ப்பு, ராமர் கோவில் அடிக்கல் நாட்டு என்று எல்லாமே எதிர்பார்க்கின்றன. மீறி தாங்கள் மனம் புண்பட்டுவிட்டதாக சிறு அசைவு தென்பட்டுவிட்டால் கூட போதும், அந்த எதிர்ப்பலைகளை பொது அமைதிக்கு பங்கமாகவும், இறையாண்மைக்கு விரோதமானதாகவும் பெரும் வன்முறை இயக்கமாகவும் கட்டமைக்கும் அரசியலும் எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சமீபத்திய டெல்லி, பெங்களூரு சம்பவங்கள் நமக்கு பாடம் பயிற்றுவிக்கின்றன.
- லியாக்கத் அலி – எழுத்தாளர்