சமூக விரோதிகளை அடையாளம் காண்பதற்கு குற்றவியல் மற்றும் தடயவியல் துறைகளில் பல்வேறு அணுகுமுறைகள், கோட்பாடுகள், செயல்பாட்டு உத்திகள், தொழில் நுட்பங்கள் உள்ளன. ஆனால் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான டெல்லி பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் கூலிப்படைகள் ஊடுருவி கலவரங்களை நடத்தியவுடன், இந்திய பிரதமர் “சமூக விரோதிகளை அவர்களின் ஆடையைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும்” என்று சொன்னதுதான் தாமதம். எல்லோரும் முன்பு நாம் குறிப்பிட்ட அறிவியல் தொழில்நுட்ப வழிமுறைகளைத் தள்ளிவைத்துவிட்டு அடையாளங்களைக் கொண்டே எளிதாக குற்றவாளி முத்திரைக் குத்த ஆரம்பித்தனர். கொஞ்சம் நாட்களுக்குள் நீதியரசர்களும் இந்த பாராபட்ச கண்ணாடியை அணிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர். ஷாஹின் பாக் போரட்டக் குழுவினர் மீது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அடிப்படை உரிமைக்காக போராடும் முழுமுதல் உரிமைகளெல்லாம் சிஏஏ போராட்டக்காரர்களுக்கு இல்லை என்றது நீதிமன்றம். அதே நீதிமன்றம் விவசாயிகள் போராடுவதற்கு எல்லா உரிமைகளும் உண்டு, அரசியல் சாசனம் வழங்கிய போராட்ட உரிமையை யாரும் தடுக்க முடியாது என்று சொல்வதற்கு சங்கடப்படவில்லை. முஸ்லிம் என்ற அடையாளம் தென்பட்டவுடன் கடுமை காட்டுவது நீண்டகாலமாகவே நமது அரச அமைவனங்களின் இயற்காட்சியாக அமைந்து வருகிறது. “கலவரக்காரர்கள் முஸ்லிமாக இருந்தால் விரைந்து செயல்பட்டு கைது செய்த காவல்துறை, அவர்கள் சிவசேனா ஆட்களாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிடத்தக்க தயக்கம் காட்டியது. பாதிக்கப்பட்ட மக்களின் – குறிப்பாக முஸ்லிம்களின் – புகார்களுக்கு காவல்துறையின் எதிர்நடவடிக்கைகள் பண்பாடற்றதாகவும், அலட்சியமானதாகவும் இருந்தன.. மனித கரங்களால் விளைந்த இந்த மாபெரும் அதிர்வை நேர்மையாக எதிர்கொள்வதில் இந்திய அரசும், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளும் தோல்வியடைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது” என்று மும்பை கலவரங்கள் குறித்த விசாரணை அறிக்கையில் நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிட்ட வரிகள் வளர்ந்து வழக்கமாகி விட்டது. ஆட்சிகள் மாறியிருக்கின்றன; காட்சிகளும் மாறியிருக்கின்றன; ஆனால் முஸ்லிம் மீது காட்டப்படுகிற துவேஷம், வெறுப்பு மட்டும் மாறவில்லை. வெகுகாலம் வரை இந்த பாராபட்சத்திற்கு அப்பாற்பட்டு நம் கடைசி நம்பிக்கையாக நின்ற நீதிமன்றங்களும் இப்போது சமயம் சார்ந்த வரைவாக்கத்திற்குள் (Religious Profiling) வந்து விட்டன.
டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, “ஷாஹின் பாக்கில் இப்போது அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைவார்கள். உங்கள் பெண்களைக் கற்பழிப்பார்கள். கொலை செய்வார்கள். அப்போது மோடி, அமித்ஷா உள்ளிட்ட நாங்கள் யாரும் உங்களைப் பாதுகாக்க வரமாட்டோம்” என்று பேசியதற்கு ஒரு வழக்குப் பதிவு செய்ய கூட கீழமை நீதிமன்றம் மறத்துவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்த பிருந்தா காரத் மனுவை விசாரித்த நீதிமன்றம், “தேர்தல் காலத்தில் சிரித்துக் கொண்டே பேசினால் வெறுப்பு பேச்சைக் குற்றமுடையதாக கருதமுடியாது” என்று சொல்லி அதிர்ச்சியளித்திருக்கிறது. இதே விவகாரத்தில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே மணி நேரத்தில் ஷாஹின் பாக் ஆட்களை விரட்டியடிப்போம்” என்றெல்லாம் வன்முறையை நன்முறையாக கையாண்ட ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூரையும் “தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிய எந்த பேச்சையும் குற்றம் காண முடியாது” என்று பொத்தினாற்போல் விடுவித்து விட்டார் நீதிமான். கபில் மிஸ்ரா உள்ளிட்ட இப்படிப்பட்ட பெரிய மனிதர்களின் பேச்சு 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிர்களைக் காவுவாங்கியதுடன் ஏராளமான முஸ்லிம்களை நடுத்தெருவில் நிறுத்தியது குறித்து நீதிபதிகள் உள்ளிட்ட யாருக்கும் கவலையில்லை. ஆனால் உவைஸி “எங்கள் மௌனத்தை சம்மதம் என்று கருதிவிடாதீர்கள்” என்று பேசினால் உவைசிக்கு ஒரு ஓட்டை அதிகாரம் கூட இல்லை எனத் தெரிந்தும் வெறுப்புப் பேச்சில் பிழைக்கும் இந்த மனுசனை சும்மா விடலாமா என்ற கூச்சல் ஓயாமல் கேட்கும்.
இசுலாமிய வெறுப்பு என்பது இங்கு ஒரு காலக் கண்ணியாக (Time Loop) இருக்கிறது. இந்த கண்ணியில் ஒருவர் மாற்றியொருவர் சிக்கிக் கொள்கின்றனர். அதன் அரசியலில் பாஜகவும் மதச்சார்பற்ற சக்திகளும் தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கின்றன. ஏதோவொரு தருணத்தில் இந்த கண்ணியில் சிக்கி, மீண்டும் மீண்டும் அந்த தருணத்தில் வாழ்ந்து பார்க்க இங்கே பலர் முடிவு செய்து விட்டார்கள். முஸ்லிம் வெறுப்பு, பாகிஸ்தான் பயங்கரவாதம் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு இன்னும் பத்து தேர்தலில் கண்ணை மூடிக்கொண்டு ஜெயிக்கலாம் எனும்போது கடைவாயின் ஓரம் எச்சில் ஒழுகுவது நிற்கப் போவதில்லை. ஒற்றைக் கலாச்சாரம், வைதீக பிராமணியம் வேத இதிகாச மரபுகள் என்ற தெரிவின் மீது ஒரு இந்து ராஷ்டிரத்தை ஏற்படுத்தி சனநாயகத்தையும் மதச்சார்பற்ற தன்மையையும் அதலபாதாளத்தில் தள்ளுவதில் இந்துத்துவம் நிதானமாகவும் உறுதியாகவும் முன்னேறுகிறது. மூன்று வழிகளில் இதற்கான முயற்சிகள் முஸ்லிம்களை குறிவைத்து முடுக்கி விடப்படுகின்றன. 1. இந்து அமைப்புகள், குறுங்குழுக்கள் மூலம் வன்முறையை ஏவுவது 2. வெறுப்பு பேச்சுகள், குற்றச் செயல்களின் ஊடாக மத அடையாளங்களை வலுப்படுத்தி வகுப்புவாரி அணி சேர்க்கையின் மூலம் சமுதாயத்தை செங்குத்தாக பிளந்து காழ்ப்புணர்வை நிரந்தரமாக்குவது 3. சட்ட, நீதி, நிர்வாக அமைக்குட்பட்டே உயர்சாதிக்கு உறுதுணையாக நிற்கும் ஒரு அதிகார அமைவனத்தை நிறுவி முஸ்லிம்களை ஓரங்கட்டுவது என மும்முனை தாக்குதல் நடைபெறுகிறது. இந்துத்துவ சித்தாந்தம் யாரை அந்நியமாக கருதுகிறதோ அந்த முஸ்லிம்களை அச்சுறுத்தி சுத்திகரிக்கும் வேலைத்திட்டத்தில் இந்த மூன்றும் ஒத்திசைவோடு தினசரி நடவடிக்கையாக தொடர்கின்றன. இவ்வாண்டு ஜனவரி 19 ஆம் தேதி கரண்தப்பாருக்கு பேட்டியளித்த Genocide Watch நிறுவனத்தின் தலைவர் கிரெகரி ஸ்டேன்டன், “ஒரு இன அழித்தொழிப்பிற்கான ஆரம்ப அறிகுறிகள் இந்தியாவில் தென்படுகிறது” என்று கூறியிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகாலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாகவே தாம் இந்த எச்சரிக்கையை விடுப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இது குறித்த தன் கவலைகளை அமெரிக்க காங்கிரஸில் அவர் பகிர்ந்து கொண்டபோது, “வெறுப்புப் பேச்சைக் கண்டித்துத் தடை செய்ய வேண்டிய தார்மீக கடமை பிரதமர் மோடிக்கு இருக்கிறது” என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பன்மைத்துவ கலாச்சாரத்தில் முள்ளாக உறுத்தும் இந்த வெறுப்புணர்வை வாய்மூடி வேடிக்கைப் பார்க்கும் பிரதமரின் இந்த கள்ள மௌனத்தைக் குறிப்பிட்டு பெங்களுரு, அகமதாபாத் ஐஐஎம் மாணவர்கள் 180 பேர்களும் கடந்த ஜனவரியில் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். தலைமை அமைச்சரான தங்களின் மௌனம் தான் வெறுப்பு பேச்சுக்கான காரணம், அதுவே முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதலாக நீட்சியடைகிறது என்றும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை. ஐஐஎம் மாணவர்கள் மேலாண்மை வகுப்பை சரியாக நடத்தியிருக்கிறார்கள். அரசு என்கிற நிறுவனத்தின் ஆதார நோக்கமே மக்களை ஒழுங்குப் படுத்துவதுதான். வாயாலும் கையாலும் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உறுதிப்படுவதைத் தடுத்து எளிய மனிதர்களின் கண்ணியமான வாழ்க்கையை உத்திரவாதப்படுத்துகிறது அரசு எனும் அமைவனம். குறைந்தபட்சம் சனநாயக அரசின் அடிப்படை கடமையும் பண்பும் இதுவாகும். ஆனால் பிண அரசியலின் பலனை அனுபவிப்பவர்கள் யாருக்கும் தான் ஆள்வதைத் தவிர்த்து யார் மாள்வதிலும் எந்த கவலையும் இருந்ததில்லை என்பதே வரலாறு. இந்த வெறுப்புத் தொழிலின் அசுர வளர்ச்சியைக் கேள்விப் பட்டால் ஜெய்ஷா கூட வாய்பிளந்து நின்றுவிடுவார். கடந்த 2016 – 20 ஐந்தாண்டுகளில் மட்டும் தேசத்தில் நடந்த வகுப்பு மோதல்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் மேல் என்று அரசு ராஜ்ய சபாவில் தெரிவித்திருக்கிறது. இந்த தொழில் அன்றாடம் அமோகமாக நடைபெறுவதால் மற்ற வியாபாரங்கள் கொஞ்சம் படுத்துத் தான் கிடக்கிறது என்பதே நாட்டின் இன்றைய நிலை. இதனை சுட்டும் விதமாக “கர்நாடகா எப்போதும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்து வந்திருக்கிறது. வகுப்பு ரீதியான புறந்தள்ளுதலை நாம் அனுமதிக்கக் கூடாது” என்று பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் தற்போது தெரிவித்துள்ளார்.
அரசின் கடைக்கண் பார்வை படும் தொழில்கள் மட்டுமே அமோகமாக நடக்கும் என்பதை நாம் அறிவோம். அப்படி ஒரு தொழிலாக வெறுப்பு மட்டுமே நீடிக்கிறது. பரஸ்பரம் வெறுப்பை அணிந்துகொண்டு தான் வீதிகளில் மட்டுமல்ல நீதிமன்றங்களிலும் திரிய வேண்டும் என்பது விதியாகிவிட்டது. டெல்லி மத கலவர வழக்கில் தொடர்ந்து காவல்துறையினரின் பொய்களை அம்பலப்படுத்தி கொடூரமாக நடத்தப்பட்ட முஸ்லிம் கைதிகளுக்கு பிணை வழங்கியும் கடமை தவறிய, பாராபட்சமாக நடந்து கொண்ட காவல் அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தும் நீதியுடன் நடந்து கொண்ட நீதிபதி வினோத் யாதவ்களுக்கு இந்த அமைப்பில் இடமில்லை. அவர் இந்த வழக்குகளை விசாரிக்கும் பதவியிலிருந்து உடனடியாக மாற்றப்படுகிறார். நீதியரசர் பாப்டே, வினோத் யாதவ் உள்ளிட்ட கொஞ்சம் பேர் இன்னும் இருக்கிறார்கள் என்பதே இங்கு உறுத்தலாக இருக்கிறது. அவர்கள் குறித்த கவலைதான் அரசுக்கு பிரதானம். எனவே இந்த கவலையை அதிகரிப்பது தேசத்துக்கு நல்லதல்ல என்ற உயரிய எண்ணத்தில் நீதிபதிகளும் செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். சென்ற ஆண்டு சமூகத்தில் பிரபலமாக இருந்த 80க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களை “சல்லி டீல்ஸ்” என்ற செயலியின் மூலம் ஏலத்திற்கு விட்ட பிஷ்னோய், ஓம் கரேஷ்வர் தாக்கூர் என்கிற உயர்சாதி குற்றவாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பிணை வழங்கித் தீர்ப்பளிக்கிறார் ஒரு நீதிபதி. “மதச்சார்பின்மை என்பது இந்திய சனநாயகத்தின் தரக்குறியீடாக இருக்கையில், அதன் குடிமக்களின் எந்த பிரிவினருக்கும் அடிப்படை உரிமைகளை அணுகுவதில் எந்த தடையும் இருக்க முடியாது. மேலும் சமய சார்பற்ற சமூகத்தின் எப்பிரிவினரும், மத அடிப்படை நாடுகளில் வாழும் அவர்களின் இணைப் பிரிவைக் காட்டிலும் எந்த விதத்திலும் கூடுதல் சலுகை பெற்று மோசமாக நடக்கமுடியாது..” – பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த வாசகங்களை சொன்னதும் இதே அரசுதான். ‘தலாக்‘ பிரச்சினையில் நடுவண் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இடம் பெற்ற வரிகள் இவை. “சல்லி டீல்ஸ் குற்றவாளி ஒரு இளைஞன். அவனை நீண்ட காலம் ஜெயிலில் வைத்திருப்பது அவனது எதிர்காலத்திற்கு நல்லதல்ல” என்று கரிசனத்தோடு பேசும் நீதிபதிகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் ஆள்தூக்கி சட்டங்களில் கைது செய்யப்பட்டு விசாரணை ஏதுமின்றி சிறையில் வாடும் உமர்காலித், சா்ஜில் இஸ்லாம், குல்பிஷா பாத்திமா போன்றவர்கள் இளைஞர்களாகக் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். அவ்வளவு ஏன்? மூப்பினாலும் நோயினாலும் முடங்கிக் கிடந்த ஸ்டேன் பாதிரியாருக்குக் கூட இவர்களின் மனிதாபிமானம் கண் திறக்கவில்லை. இத்தகைய ஒருதலைபட்சமான நியாயத்தின் அடிப்படையில் தான் சிஏஏ போராட்டத்தில் டெல்லி ஜாமிஆவிலும் அலிகர் முஸ்லிம் பல்கலையிலும் போலீஸ் அடையாளம் தெரியாத சமூக விரோதிகளுடன் சேர்ந்து கட்டவிழ்த்த வன்முறையில் ஏராளமான மாணவர்கள் இரத்தம் சிந்திய போதும், அதனை விசாரிக்க வேண்டி நீதிமன்றத்தை நாடிய போது, போராட்டத்தைக் கைவிட்டால் தான் விசாரிப்போம் என்று அடம் பிடித்து மனிதாபிமானத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டது நீதிமன்றம். ஆக பீர்பாலைப் போல் கத்திரிக்காயிடம் தாங்கள் வேலை செய்யவில்லை என்பதை அறிவித்து சக்ரவர்த்திகளுக்கு சலாம் போடுவதில் சகலரும் தெளிவாக இருக்கிறார்கள்.
வெறுப்பு இவ்வாறாக அல்லும் பகலும் – நாளொரு வண்ணமும் பொழுதொரு எண்ணமுமாக பிரதியெடுத்துக் கொண்டே இருந்தால் மதம் சார்ந்த துவேஷம் யாரையும் பீடிக்கத்தான் செய்யும். அப்போது அதை நியாயப்படுத்த ஆளாளுக்கு ஒரு கதையாடலை அவிழ்க்க ஆசைப்படுவார்கள். இப்படியொரு வெறுப்பு வணிகத்தில் எல்லோரும் தங்கள் தகுதிக்கேற்ப ஆதாயம் அடைய முயற்சிப்பதில் ஆச்சரியமில்லை. எல்லாவற்றையும் முடக்கி வைத்திருந்த போதுகூட வெறுப்பு தொழில் ஓய்வும் இல்லாமல் ஒழிச்சலும் இல்லாமல் விறுவிறுப்பாக நடந்ததை நாம் பார்த்தோம். ஊடகங்கள் இந்த நேரத்தில் எல்லா பந்துகளையும் முஸ்லிம்கள் பக்கம் அடித்து விளாசிக் கொண்டிருந்தன. கொரானாவால் பாதிக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்தினர், பெண்களும் பணிபுரியும் மருத்துவ மனையில் நிர்வாணமாக நடந்தார்கள்.. முகத்தில் எச்சில் துப்புகிறார்கள் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு எழுதியது தினமலர் உள்ளிட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள். தப்லீக் ஜமாஅத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்த ஜமாஅத் பணியில் செல்ல விரும்பும் புதியவர்களுக்கு அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நுட்பமான ஒழுக்கவிதிகளைக் கேட்டிருக்கிறேன். பிள்ளைகள் தூங்கப் போவதற்கு முன் அவர்கள் அணிந்திருக்கும் லுங்கியின் முன்பின் கீழ் ஓரங்களை ஒன்றாக இணைத்து முடிச்சுட்டு உறங்கச் செல்ல சொல்வார்கள்.. தூக்கத்தில் கூட ஆடைவிலகக் கூடாது என்பதில் அவ்வளவு கவனம் கொண்ட அவர்களைப் போய்… ச்சே என்ன ஜென்மமடா நீங்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.
வெளிநாட்டில் இருந்து வந்த தப்லீக் ஜமாஅத்தினரை கைது செய்த வழக்கில் ஆகஸ்ட் 2020ல் தீர்ப்புரைத்த மும்பை உயர்நீதிமன்றம், //கட்சி அரசியல்வயப்பட்ட அரசுக்கு ஒரு கொள்ளை நோய்க்குக் கூட பலிகிடாக்கள் தேவைப்படுகின்றன. தப்லீக் ஜமாஅத்தை அப்படியானதொரு பலிகடாவாக ஆக்கிக் கொண்டு விட்டனர். அதீதி தேவோ பவா என்பது நமது பண்பாடு. அதாவது விருந்தினர் தெய்வத்துக்கு சமமானவர் என்பதைப் புறக்கணித்து நாம் வெளிநாட்டு விருந்தினரை சிறையில் தள்ளி சந்தோஷம் கொண்டாடியிருக்கிறோம். எனவே இந்த பலிவாங்கும் நடவடிக்கையை மேலும் அனுமதிக்க முடியாது என்பதால் இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்கிறோம்// என்றது. இதன் மூலம் இந்தியாவில் கொரானா பரவுவதற்கு தப்லீகினர் காரணமில்லை என்பதை நீதிமன்றமே தெளிவாக சொல்லிய பிறகும் வெறுப்புப் பிரச்சாரம் ஓயவில்லை. //கோவிட் நோய் குறித்த அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியப் படுத்திவிட்டு டெல்லியில் கூடிய தப்லீக் ஜமாஅத் தான் இந்தியாவில் கொரானாத் தொற்று நோய்ப் பரவலுக்கான காரணம்// என்று செப்டம்பர் 2020லும் ராஜ்ய சபாவில் அறிவித்தது இந்திய அரசு. எதுவாக இருந்தாலும் நீதிமன்றம் தான் இறுதி முடிவெடுக்கும்… நீதியை நிலைநாட்டும்… அது சொல்வதுதான் வேதவாக்கு. நாம் அத்தனைப் பேரும் அதைத்தான் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லும் இவர்கள்தான், அதையெல்லாம் மசூதியை இடித்து கோவில் கட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். கொஞ்சங்கூட அசூசையே இல்லாம எந்த நீதிமன்றம் என்ன சொன்னால் எங்களுக்கென்ன என்று குட்டிக்கரணம் அடித்து வித்தை காட்டுவதைப் பார்க்கும் போது, நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் இவர்கள் ஏற்பதில்லை., ஏதுவாக இருந்தால் தான் ஏற்கிறார்கள் என்பது புரிகிறது.
நுகர்வு கலாச்சாரத்தில் இத்தகைய வெறுப்பு தயாரிப்புகளும் பண்டங்களே. அதனால் தான் பிரியாணி, தலைத்துணி, ஹலால் என்று எதையும் வெறுப்புக்கான பண்டங்களாக இவர்களால் மாற்ற முடிகிறது. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதோ, முஸ்லிம்கள் ஹலால் உணவை உட்கொள்வதோ யாரையும் வெறுப்பேற்ற அல்ல. ஆனால் அவர்களின் முன் காவித் துண்டணிந்து கூச்சலிட்டு அச்சுறுத்துவது ஏன் என்று எல்லோரும் அறிவார்கள். காஸியாபாதில் 72 வயது முஸ்லிம் ஒருவரின் தாடியை பிடித்திழுத்து சிரைத்து “ஜெய் ஸ்ரீராம்” முழங்கச் சொல்லி தாக்கப்பட்ட சம்பவம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “ராமரின் உண்மையான பக்தர்கள் யாரும் இப்படி செய்வார்கள் என்று நான் நம்பவில்லை. இத்தகைய குரூரம் மானுடத்திற்கு எதிரானது” என்று கண்டித்தார். ஆனால் வெறுப்பின் இந்த தயாரிப்புகள் ஒரு கட்டத்தில் பெரும்பான்மை எனும் போர்வையில் ஜனநாயக சக்திகள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள் என்று எல்லோரிடமும் விற்பனையாகும் என்ற அவர்களின் எண்ணத்தை, 2021ல் நடந்த திரிபுரா கலவரத்தில் கேட்பாரற்று அநாதையாக விடப்பட்ட முஸ்லிம்களின் நிலையை வைத்துத் தெளியலாம். “அன்றாட நிகழ்வுகளைப் போல் அரங்கேறிய அந்த கொடுமைகளை அநேகம் பேர்கள் கொண்டாடினார்கள். நடைபெற்ற அக்கிரமங்களைக் காணொளியாக எடுத்து தங்களுக்குள் பரப்பி மகிழ்ந்தார்கள்” என்று எழுதுகிறார் பத்திரிகையாளர் ரானா அய்யுப். வெறுப்பு தொழிற்சாலைக்கு ஏற்ற பனைகளாகத் தான் வெகுமக்கள் தயார் செய்து வைக்கப்படுகிள்றனர். பாமரர்கள் முதல் படித்த மேதாவிகள் வரை இதற்கு பெரும்பாலும் விதிவிலக்கில்லை. முத்தமிழ் வித்தகர்.. இலக்கிய பேரொளி என்றெல்லாம் போற்றப்படும் தமிழறிஞர் தி. இராசகோபாலன் மீனாட்சிபுரத்தில் தலித்கள் இஸ்லாத்திற்கு மத மாறியதற்கான காரணம் குறித்து பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதுகிறார். அதில் இஸ்லாமிய மதத்தில் நான்கு மனைவிகள் கட்டலாம். குடியானவன் வீட்டில் ஒருவனுக்கு இரண்டு – மூன்று மனைவி இருந்தால் அது அவனது வருமானத்தைப் பெருக்கும் வழியாக அமையும் என்பதால் இந்து மதத்திலிருந்து விலகினார்கள் என்று குறிப்பிட்டார். எழுதியிருந்தவர் மேனாள் கல்லூரி முதல்வரும் நாடறிந்த அறிஞரும் ஆவார். யார் யாரெல்லாம் இங்கு எப்படி எப்படியெல்லாம் செயலாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஐயா பேராசிரியரே! வீட்டிலுள்ள பெண் கூலி வேலைக்குப் போனால் அதில் பணம் என்ன கொட்டவாப் போகிறது? அதைவிட கூடுதலான மனைவி, கூடுதலான குடும்பம், குழந்தைகள், பொறுப்புகள் என்று சிண்டை பிய்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சினைகள் இருக்காதா? ஒரு சம்சாரிக்கு இது கூட தெரியாதெனில் அப்புறம் என்ன பெரும்புலவர், மேதமை எல்லாம். வெறுப்பு உற்பத்தி செய்யும் இந்த காழ்ப்புதான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜாமிஆ மாணவி சபூரா கர்ப்பவதி என்ற செய்தியை வைத்தே பலரை வன்மம் கக்க வைக்கிறது.
‘ஹேராம்‘ படம் எடுத்த கமல்ஹாசன், பகைவனுக்கு அருள்வாய் என்ற யேசு கிருஸ்துவின் குணபாவத்தை காந்தியின் பாத்திரப் படைப்பில் ஏற்றி அதையே வெற்றிகரமாக மக்களுக்குக் கடத்தியதை இந்த இடத்தில் நினைவில் கொள்ளவும். வன்மம், வெறுப்பு எந்தளவு கொடூரமாக இருந்தாலும் ஹேராம் என்று அதை ஏற்று கடந்து போய்விடலாம் என்கிற கோட்சே நியாயங்களைப் பேசவைப்பதும் ஒரு அரசியல் தான். அவர்களின் அரசியலுக்கு காந்தியின் தியாகம் ஊறுகாயாகவும் கோட்சேவின் கொடூரம் தயிர்சாதமாகவும் இருக்கிறது. எல்லோரையும் இருட்டில் தள்ளிவிட்டுத் தான் அவர்கள் டார்ச் லைட்டை லேசாக அடிக்கிறார்கள். சிரித்துக்கொண்டே பேசினால் வெறுப்புப் பேச்சு குற்றமாகாது என்ற புதிய வியாக்ஞானத்தைத் தந்த நீதிமன்றம் தான், நம்ம தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் சிரித்துக் கொண்டே சோலியை முடிப்பதைப் பற்றி பேசிய போது தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்தது. ஆக இது ஒரு வழிப்பாதை. தப்லீக் ஜமாஅத் விவகாரத்தில் ஊடகப் பொய் பிரச்சாரங்களைத் தடுக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்டபோது, “ஐயோ அபச்சாரம்.. பத்திரிகைகள் வாயை அடைக்கச் சொல்வது அநியாயம் இல்லையா” என்று கேட்ட கையோடு, நேராக உபியில் ஹத்ராஸ் வன்புணர்வு விவகாரம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரளா பத்திரிகையாளர்களை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டு ஒழுங்கு காட்டுவதிலிருந்து இந்த ஒரு வழிப் பாதையை காணலாம்.
வெறுப்பு தேசத்தின் ரத்தத்தில் ஊறிக் கொண்டிருக்கிறது. அது இல்லாவிட்டால் தின்கிற சோறு செமிக்காது. இல்லை.. உண்மையில் அவர்கள் வெறுப்பையே உணவாக உட்கொள்கிறார்கள். அந்த சோற்றில் தான் ஆட்சியாளர்கள் பன்னாட்டுக் கடன்சுமை பூசணிக்காயையும். அம்பானி, அதானி பரங்கிக்காய்களையும், விலைவாசி ஏற்ற புடலங்காயையும் மறைக்கிறார்கள். நாடி, நரம்பு, இரத்தம், புத்தி, அறிவு, ஆற்றல், கல்வி என்று அனைத்திலும் மத துவேஷம், வெறுப்பு ஆகியவை ஊட்டப்பட்டு துருவநிலைக்கு விரட்டிவிடப்படும் மக்கள், வளங்கள், உடமைகள், வாழ்வுரிமை இழந்து நடுத்தெருவில் நிறுத்தப்படுவார்கள். சந்தேகம் இருந்தால் இலங்கையைப் பார்த்துக் கொள்ளவும். தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று மக்களுக்கு விளங்கவைப்பதை விட அவர்களை ஏமாற்றவது எளிமையானது என்கிறார் மார்க் ட்வைன்.
· கோட்டை கலீம் – எழுத்தாளர்