ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்துவர்களின் வெறுப்பிற்கு மற்றொரு காரணமாக மாறியுள்ளது. பாஜகவின் வெறுப்பரசியலுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் முதல் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூகவலைத்தள பிரபலங்கள் வரை இலக்காகியுள்ளனர். மேற்கத்திய ஆதரவு அரசை தாலிபன்கள் தூக்கி எறிந்த அடுத்த சில நிமிடங்களில், இந்தியச் சமூக வலைத்தளங்களில் #GoToAfghanistan, #GoToPakistan போன்ற கோஷங்களை இந்து அடிப்படைவாதிகள் பரப்பினர்.
தாலிபன், தாலிபனியம் என்ற வார்த்தை பாஜக ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரு குழுக்களிடையேயும் புதிய அர்த்தத்தை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார் கவிஞர் மற்றும் செயற்பாட்டாளர் உசைன் ஹைதிரி. ஜிகாதி, பாஸ்கிஸ்தானி, பயங்கரவாதி என்று முஸ்லீம் வெறுப்பை உமிழ்பவர்களின் மற்றொரு இலக்கணமாகவும் அது உருவாகியுள்ளது என்கிறார்.
இந்தியாவில் 1921ல் நடந்த மாப்பிளா கலகம் அப்பொழுதே தாலிபனிய சித்திரத்தைப் பிரதிபலித்தது. அதை தற்போதைய கேரள அரசு மூடிமறைக்கிறது என்று கூறியிருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த ராம் மஹதேவ். 100 ஆண்டுகளுக்கு முன் காலனியகால நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான விவசாயிகளின் எழுச்சியை தாலிபன்களுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். மற்றொரு நிகழ்வாக மத்தியப் பிரதேச முஸ்லிம்கள் சிலர் மொகரம் பண்டிகையின்போது பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதாகச் செய்தி பரப்பப்பட்டது. இதற்கு எதிர்வினை என்ற பெயரில் ‘தாலிபனிய மனநிலையை ஒருபோதும் ஏற்க முடியாது’ என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் கூறியிருந்தார். திரிக்கப்பட்ட செய்திக்கு அவர் பதிலளித்ததாக ‘ஆல்ட் நியூஸ்’ உண்மையை வெளியிட்டது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முஸ்லீம் அறிஞர், ஊடகவியலாளர், அரசியல்வாதி உள்ளிட்ட 15 பேர் சமூக வலைத்தளங்களில் தாலிபன்களை ஆதரித்தார்கள் என்று கூறி உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமான உபா கொடுஞ்சட்டம் முஸ்லிம்களையும் அரசை விமர்சிப்பவர்களையும் இலகுவாக கைது செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
இஸ்லாமிய வெறுப்பரசியலுக்கு எதிரான முஸ்லீம் செயற்பாட்டாளர்கள் பலரும் தாலிபனிய ஆதரவாளர்கள் (அவர்கள் தாலிபனுக்கு எதிராக உள்ளபோதும்) என்று குற்றச்சாட்டிக் குறிவைக்கப்பட்டு வருவதாக ஹைதிரி கூறுகிறார். லக்னோவைச் சேர்ந்த பிரபல கவிஞர் மனுவர் ரானா ராமாயணம் எழுதிய வால்மீகியையும் தாலிபன்களையும் ஒப்பிட்டு எழுதியதற்காக இந்துத்துவர்களின் ஆத்திரத்தைச் சம்பாதித்தார். ஒவ்வொரு காலத்திலும் ஒரு பாத்திரத்தின் மாறுதலை வெளிப்படுத்தவே அவ்வாறு குறிப்பிட்டேன். பண்டிட்டாக இருந்த வாலமீகி ராமாயணம் எழுதிய பிறகு கடவுளாக மாறிய கதையையே அதில் கூறினேன். நானொரு முஸ்லீம் என்ற அடையாளத்தை விட என்னைத் தாக்க வேறென்ன காரணம் இருக்க முடியும் என்கிறார். மேலும், உத்திர பிரதேச தேர்தலை ஒட்டி இந்து முஸ்லீம் பிரிவினை அரசியலைத் தூண்டும் பாஜக, உலகத்தில் இஸ்லாத்தின் பெயரில் நடக்கும் அணைத்து சம்பவங்களுக்கும் இந்திய முஸ்லிம்களைப் பொறுப்பாக்குகிறது என்றார்.
இதில் இணைந்துகொண்ட உதிர்ப்பிரதேசத்தின் சர்ச்சை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தாலிபன்கள் ஆதரவாகத் திரிக்கப்படும் முஸ்லிம்களின் வாதங்களை எடுத்துக்கொண்டு ‘இந்தியாவை தாலிபனியமாக்க’ முயல்கிறார்கள் என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான மிகக்கடுமையான அடக்குமுறைகள் நிகழ்த்துபவர்கள் தாலிபன்கள், அவர்களை இந்திய முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறார். இதனைத் தொடர்ந்து உபியின் தியோபந்தில் தீவிரவாதத்திற்கு எதிரான மையம் உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார். இஸ்லாமியக் கொள்கை விவாதங்களில் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது தியோபந்த் சிந்தனைப் பள்ளி. அதனை தாலிபனியத்தின் அன்றைய மென்மை வடிவம் என்று வன்மம் பரப்பும் யோகி ஆதரவாளர்கள் அங்கு தீவிரவாதத்திற்கு எதிரான மையம் அமைவதில் அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். இதன்மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை மட்டுமே செயற்படுத்தி எப்பொழுதும் வெறுப்பரசியல் செய்ய மட்டுமே தனது ஆட்சியைக் கழித்துள்ளார் யோகி ஆதித்யநாத்.
முஸ்லிம்களைத் தாக்குவது, கும்பல் படுகொலை செய்வது, அவர்கள் வியாபாரத்தைச் சிதைப்பது இன்று இந்தியாவில் அன்றாட வழக்கமாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனோ பரவலின் போது முஸ்லீம் தப்லீக் ஜமாஅத்தான் அதனைப் பரப்பியதாகத் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான கமிஷன் 2020ம் ஆண்டு இதற்கான அறிக்கையை வெளியிட்டபோது ‘இந்திய அரசு குறிப்பிட்ட அக்கறையில் மட்டும்’ செயல்படுவதாகக் குறிப்பிட்டது. மேலும், ‘சிறுபான்மையினரின் குடியிருப்பு, வழிபாட்டிடங்களைத் தாக்கும் தொடர் வன்முறையைக் குற்றம் செய்பவர்களுக்கு எந்த தண்டனையும் அளிக்காமல் தேசிய அரசு அனுமதித்து வருகிறது. அரசின் கவனமெல்லாம் வன்முறையைத் தூண்டும் வெறுப்பு பேச்சைக் கக்குவதில்தான் இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டது.
தாலிபனிய வெற்றியை இந்திய ஊடகங்கள் அணுகிய விதம் முஸ்லீம் வெறுப்பின் மற்றொரு வெளிப்பாடு. டிவி விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிமை தாலிபனின் செயலுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலேயே ஊடகங்கள் நடத்தினர். இங்குள்ள இஸ்லாமியர்களை தாலிபன்கள் என்று மீண்டும் மீண்டும் கூறி வந்த பாஜக செய்தி தொடர்பாளர்களை நெறியாளர்கள் அசட்டை செய்யவில்லை. சிரியாவில், ஏமனில் நடந்த பழைய நிகழ்வுகளையெல்லாம் ஆப்கன் என்று பரப்பி வந்தனர். மொத்த இந்திய முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வேலையை இந்திய ஊடகங்கள் தெளிவாகச் செய்து வந்தன. உலகில் இஸ்லாத்தின் பெயரில் எவர் ஒருவர் தவறு செய்தாலும் இந்திய முஸ்லிம்களைப் பொறுப்பாக்கும் இவர்கள், உலகில் முஸ்லீம் யாராவது நல்லது செய்தால் அதுகுறித்து கண்டுகொள்வதில்லை. ஏன், இந்திய முஸ்லிம்கள் செய்யும் நன்மைகளையே சில நொடிகளில் கடந்து செல்கிறார்கள்.
அல்ஜஸீரா கட்டுரையின் பகுதியளவு மொழிபெயர்ப்பு…
தமிழில் அஜ்மீ