காந்தி கொல்லப்பட்ட போது நாட்டு மக்களுக்கு நேரு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் அல்ல என்பதே அது. இப்போது அதே போன்றதொரு அறிவிப்பை கமல் செய்திருக்கிறார், காந்தியைக் கொன்றது ஒரு இந்து என்று. ஆனால் இரண்டிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. நேரு சொன்னது நாட்டுக்காக. கமல் சொல்லியிருப்பது ஓட்டுக்காக. நேரு முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சொன்னார். கமல் முஸ்லிம்களை ஏமாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. ஒரு மனித உயிரைக் கொல்வதற்கு எந்த மதமும் போதிப்பதில்லை. மதத்தைக் காப்பாற்ற, மதத்தைப் பின்பற்றுபவர்களைக் காப்பாற்ற, மதத்தின் பெயரால் என யார் தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டாலும் அவர்கள் அந்த மதத்தின் எந்த அடிப்படையிலும் இல்லை என்பதே நிதர்சனம். அப்படியிருக்கையில் காந்தியைக் கொன்ற கோட்சேவை இந்து என்று விளித்திருப்பது நிச்சயம் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதுடன் கடுமையான கண்டனத்திற்கும் உரியது.
ஆனால் அதே நேரத்தில் கமல் பேசியிருப்பதன் மூலம் இரண்டு பலன்களும் ஏற்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்பதும், அவன் தற்போது நாட்டை ஆளும் பாஜகவினருக்கு ஆதர்ச நாயகன் என்பதும் மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தப்பட வேண்டிய வரலாற்று உண்மை. அந்த உண்மையை இப்போது பேசுபொருளாக்கியிருக்கிறது கமலின் பேச்சு. இது முதல் நன்மை.
இப்போது கமல் இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டார், இந்துக்களை புண்படுத்திவிட்டார், தீவிரவாதத்தை எப்படி மதத்துடன் தொடர்புபடுத்தலாம் என்று கூப்பாடு போடுபவர்களில் பலரும் முஸ்லிம்கள் மீது இதே போன்றதொரு பழி சுமத்தப்பட்டபோது, இன்றளவிலும் சுமத்தப்பட்டு வரும்போது அதை ஆமோதிப்பவர்கள், ரசிப்பவர்கள், தாங்களும் அதையே செய்பவர்களும் கூட. முஸ்லிம்கள் மீது தீவிரவாதப் பழி சுமத்தப்படும்போது அவர்கள் எப்படியெல்லாம் மனம் புழுங்குவார்கள் என்பதை இப்போது கமலை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது இரண்டாவது நன்மை.
பிரதமர் மோடி இந்துவாக இருப்பவன் தீவிரவாதியாக இருக்க முடியாது, எந்த தீவிரவாதியும் இந்து கிடையாது என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதையே தானே முஸ்லிம்களும் பல வருடங்களாக சொல்லி வருகின்றனர். அந்த சொற்கள் யார் காதிலும் புகவில்லையே. பிரதமரைப் பின்பற்றுபவர்களும், பிரதமர் பின்பற்றுபவர்களும் முஸ்லிம்களை அப்படி சொல்லும்போது பிரதமர் வாய்மூடி மௌனியாகத்தானே இருந்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதலே பாஜக ஆளாகவே மாறிவிட்டார்.அதன் எதிரொலிதான் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று எச்.ராஜா, சாத்வி, யோகி பாணியில் உளறியுள்ளார்.
கமலின் பேச்சு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. அவர் இல்லை என்று சொன்னாலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்ததால்தான் அவர் அப்படி பேசினார் என்பதே உண்மை.நாளை இன்னொரு இடத்தில் முஸ்லிமாக இருப்பது தவறில்லை, தேசதுரோகியாக இருக்கக்கூடாது என்று சொல்வார், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சொல்வார், ஏனென்றால் அவர் அப்படி சொல்லக்கூடியவர்தான்.
கமல் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்த வார்த்தைகளை பேசிய போதும் அங்கிருந்த முஸ்லிம்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்போ, ஆரவாரமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அந்த வலியை அனுபவித்து வருபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அந்த பேச்சை வெறுக்கவே செய்கிறார்கள். கமலின் வெறுப்பு பேச்சில் மயங்கி அவருக்கு வாக்களிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்தவர்கள் அல்ல முஸ்லிம்கள். என்னதான் மருதநாயகமாக மாற கமல் முயற்சித்தாலும் முஸ்லிம்களுக்கு அவர் எப்போதும் சாகேத்ராம்தான்.
தீவிர அரசியலில் இறங்கிவிட்ட பிறகு வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். மாற்று அரசியல், மக்கள் நலன் என்றெல்லாம் வீரவசனம் பேசிவிட்டு பிளவை ஏற்படுத்தும், பிரிவினையை ஏற்படுத்தும் பாஜக பாணி அரசியலில் ஈடுபட்டுவிடக் கூடாது கமல்.
அபுல் ஹசன்