திரிணாமுல் காங்கிரஸின் துணைத்தலைவரும் மேனாள் பாஜகவின் தலைவர்களுள் ஒருவரும் ஒன்றிய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா மூன்று தினங்களுக்கு முன், “இந்த தேசம் உயிரற்ற ஜடங்களின் நாடாக இருக்கிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் எந்த நாட்டிலும் இப்படி மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 2014ல் பெட்ரோலிய பொருட்களில் ரூ75000 கோடியை வரியாக ஈட்டிய அரசு, இப்போது ரூ3,50,000 கோடியை பிடுங்கித் தின்கிறது. இது பகல் கொள்ளையில்லையா?” என்று கீச்சியிருக்கிறார். இப்படி அத்தியாவசிய பிரச்சினைகளில் கூட அரசியல் நீக்கம் செய்யப்பட்டு சுரணையற்று கிடக்கும் தேசத்தில் எந்த சலனமும் தென்பட்டுவிடக்கூடாதே என்ற அக்கறையில் செந்தமிழன் சீமான் போன்றவர்கள் மக்களைக் காயடிக்க அரும்பாடு படுகிறார்கள்.
தமிழினத்தின் அரசியல் மீட்புதான் சீமானின் லட்சியம் என்றால் இத்தனை வருடங்களில் எத்தனை மக்கள் பிரச்சினைகளில் அவர் தலையிட்டு களம் கண்டிருக்க வேண்டும். ஆனால் கடும் விலைவாசி உயர்வு, மாநில உரிமை பறிப்பு, போராடும் விவசாயிகள் மீது காரேற்றி கொல்லும் குரூரம், இந்த நாட்டின் வருங்கால சமூகத்தை நிர்மூலமாக்க ஒரு துறைமுகத்தில் பிடிபடும் 3000 கிலோ போதைப் பொருள், கூட்டு வன்புணர்வுகள் உள்ளிட்ட மக்களின் ஜீவாதாரத்தையே அசைத்துப் பார்க்கும் எந்த விசயம் பற்றியும் சீமானின் மூச்சு சப்தம் கூட எழுவதில்லை. மாறாக குருமூர்த்தி, பீலா ராஜேஷ், ராஜா, ராகவன் வகையறாக்களுக்கு வக்காலத்து வாங்க அவர் எப்போதும் தாமதிப்பதேயில்லை.
சமகால பிரச்சினைகளை நாசூக்காக ஓரங்கட்டிவிட்டு தமிழர்களின் உணர்வுகளை உசுப்பிவிடுவதை முழுநேர அரசியலாகக் அவர் கொண்டிருப்பதை நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது. சீமானின் வீரசைவ முழக்கமும் தாய்மதம் திரும்புவதற்கான சமீபத்திய அறைகூவலையும் அப்படித்தான் பார்க்க வேண்டி உள்ளது. ஆரம்பத்தில் தமிழர்களின் சமயம் தமிழம் என்று தொடங்கி, “தமிழர்கள் என்றால் வீர சைவர்கள் அல்லது வீர வைணவர்கள் என்று சொல்லுங்கள். அதுவே உங்கள் அடையாளம். தமிழன் என்பதோ, இந்து என்பதோ, முஸ்லிம் என்பதோ, கிருத்துவன் என்பதோ தமிழனின் அடையாளமல்ல” என்று சீமான் சீறிப் பாய்ந்ததே மதத்தை தனது ஆவேச அரசியலுக்கு துணைக்காலாக வைத்துக்கொள்ளும் உள்நோக்கத்தின் உந்துதல் தான்.
“அவ்வாறு மதத்தையும் அரசியலையும் ஒன்றாக்கிய பின்னர் இந்து தர்மம்தான் இங்கே மேலோங்கும். அப்போது இஸ்லாமியர்கள் எங்கே செல்வார்கள்” என்று அறிஞர் அண்ணா 1958 ஆம் ஆண்டு சிகாகோ டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கேட்டிருக்கிறார். தாய்மதம் திரும்புதல் பற்றிய சீமானின் தற்கால பேட்டியைக் கண்டவுடன் இதே சந்தேகம் வலுவாக எழுப்பப்பட்டதால், முழுமையாக அம்பலப்பட்டுப் போன நிலையில் நான் மதம் பரப்ப வந்தவனல்ல.. இனம் பரப்ப வந்தவன் என்று பசப்புகிறார். உண்மையில் இனம் தான் தனது அடையாளம் என்பதில் உறுதியாக இருக்கும் ஒருவர் தமிழன் என்பது உனது அடையாளமல்ல என்று எப்படி கூற முடியும்? அவரது மிரட்டல் பாணி தமிழ் தேசிய அலப்பறைகளின் பிடரி சிலிர்ப்பையும், சங்க நாதத்தையும் கண்டு மதி மயங்கி நிற்கும் கும்பலுக்காக அவர் எதை வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பேசலாம்.
ராமர் கோவில் விவகாரத்தில் வெகுசன பக்தியை பரவசத்தோடு வெளிக் கொண்டு வர விஇப இதே பாணியைத் தான் கையாண்டது என்பதை நாம் மறந்துவிடலாகாது. “ஹம் சப் அயோத்தியா” “ராமர் எல்லோரிலும் இருக்கிறார். எல்லோரும் ராமரில் இருக்கிறோம். அயோத்தி நம்மிடம் உள்ளது.. நாம் அயோத்தியில் உள்ளோம்” எனும் பூடகமான ஊக்கொலிகளில் இந்துத்துவ சங்பரிவாரங்கள் குளிர் காய்ந்து கொண்டன. என்ன சொல்கிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது. கேட்கிறவர்களுக்கும் புரியாது. ஆனால் பெரும்பான்மை மக்களை வசீகரிப்பதாய் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்துவதாய் இருந்தது. இதே பாணியைத்தான் சீமான் தனக்கென வகுத்துக் கொண்டுவிட்டார். நாம் எல்லோரும் சைவத்தில் இருக்கிறோம். சைவம் நம்மிடையே இருக்கிறது என்ற சுருக்கத் திரட்டை நோக்கி காய் நகர்த்துகிறார். இதை தவிர அவரிடம் பேசுவதற்கு எந்த உயர் அரசியல் விழுமியங்களும் இல்லை என்பது பெரும் சோகம்.
மேலும் தான் கிருத்துவர் – முஸ்லிம்களை மதம் மாற சொல்லவில்லை. இந்துக்களைத் தான் சைவ – வைணவத்திற்கு திரும்புமாறு கேட்டேன் என்று தத்துப்பித்தென்று உளறுகிறார். இப்போது அவர் இறக்கி ஆடும் சைவ அடையாள அட்டை எந்த கட்டுக்குள் இருந்தது? அப்படி சைவத்துக்கு திரும்பும் தமிழனை இந்து எனும் பெருங்கடலில் இருந்து மீட்டு அவனது மெய்யியல் பாரம்பரியத்தில் கொண்டு போய் நிறுத்தப் போகிறதா? தமிழனின் ஆதிச்சமூகத்தில் அறவியல் கூறுகளே தமிழர் மெய்ப்பொருளாக இருந்தது என்பதை “ஆர்க்கும் இடுமின் அவர்இவர் என்னன்மின்” எனும் திருமந்திரப் பாடல் விளக்கிச் சொல்கிறது. மனிதம் தான் தமிழனின் முதன்மை மெய்ப்பொருளாய் அமைந்திருந்ததை புறநானுாற்று புலவர் பக்குடுக்கை நன்கணியார், இன்னாதம்ம இவ்வுலகம்; இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே” என்ற வரிகளின் மூலம் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
சைவம் மட்டும்தான் தமிழனின் தாய்மதம் என்று சத்தியம் செய்து சீமான் இதையெல்லாம் மறுதலிக்கப் போகிறாரா? தனது சகோதர இனங்களை உள்ளிழுத்துக் கொண்டு ஒட்டுமொத்த உரிமைக்காக போராடுவதும் குரல் கொடுப்பதும் தானே மொழிவாரி தேசிய இனத்தின் பண்பாக இருக்க முடியும்? புவிசார் தேசிய இனத்தை மதம் – சாதி ரீதியாக கூறுபோட்டுவிட்டு, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் மேல் கருத்தியல் வன்முறைகளை மேற்கொள்ளும் ஓர் இயக்கம், ஒட்டுமொத்த இனத்துக்காகப் போராடும் தார்மீக அடிப்படையை இழக்கிறது என்பது விளங்க வேண்டாமா? மொழி அடையாளத்தை மதங்கடந்த ஒன்றாக அவர் கருதவே மாட்டாரா? இந்த மாநிலத்தில் வாழும் மக்களிடமே பிளவுகளைக் கட்டமைத்து சகமக்களை சந்தேக வளையத்துக்குள் வைத்திருக்கும் அவர்தான் தனது கட்சியை 63 நாடுகளில் கிளைபரப்பியுள்ள அகில உலக கட்சி என்கிறார். நாம் தமிழருக்கு மட்டும் இத்தனை நாட்டில் இடங் கொடுக்கிறானுங்களே.. அவர்களுக்கெல்லாம் இன உணர்வே இருக்காதா?
இங்கே வாழும் தெலுங்கனை, கன்னடனை, உருது முஸ்லிமைத் தள்ளிவைக்கும் சீமான் பார்வையில் வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் வங்காளிகள் இல்லையா? கிருத்துவம், இஸ்லாம் என்ற சமயங்களைக் கூட ஐரோப்பிய, அரேபிய மதங்களென விட்டு விடுவோம். இந்த மண்ணிலேயே தோன்றி செழித்த – விடுதலை இறையியலைப் பேசி அடிதட்டு மக்களை மெய்வழியில் அரவணைத்த பெளத்த, சமண மரபுகளை என்ன செய்வதாக உத்தேசம்? இந்த மண் எப்போதும் ஒற்றை மரபை அடிப்படையாகக் கொண்டு இருந்ததில்லை; வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் சபை, வைகுண்டரின் அய்யாவழி உள்ளிட்ட ஆன்மீக நெறிகளுக்கும் தமிழன் இடமளிக்காமல் இருந்ததில்லை.
மொழி – இன அடிப்படையில் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களும் தமிழுக்கு – தமிழர் பண்பாட்டிற்கு வழங்கிய கொடைகளை ஆற்றிய பங்களிப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றையெல்லாம் கழித்துக் கட்டிவிட்டு தாய்மதமாம் சைவம், மாலியம் ஆகியவற்றிற்கு அனைவரையும் திருப்பி விடப் போகிறாரா? அப்படி திரும்பிவிட்டால் அவர்கள் இந்து என்ற அடையாளத்தை விட்டு வெளியேறிவிடுவார்களா? இந்து சமயமே ஆறு மதக் கொள்கைகளின் தொகுப்பாகத் தானே வரையறுக்கப்பட்டது. காலப் போக்கில் இந்தியாவில் நிலவிவந்த ஓராயிரம் சிறு தெய்வ வழிபாடுகளையும் ஞான மரபுகளையும் உள்ளிழுத்துக் கொண்டது தானே அதன் இயல்பு. இந்து மகா சமுத்திரத்தில் தன்னை கரைத்துக் கொள்ளாத தனித்த சமயமாக கருதும் லிங்காயத்துகள் கூட நீதி மன்றம் சென்றுதான் தங்களின் மத உரிமையை நிலை நாட்ட முடியும் என்ற நிலைதானே இங்கிருக்கிறது?
ஏற்கனவே ஷன்மதம் (ஷன் – ஆறு) என்று சைவம் (சிவனைக் கடவுளாகக் கொண்ட சமயம்) வைணவம் (விஷ்ணுவையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயம்) சாக்தம் (பெண் தெய்வங்களை வணங்கும் சமயம்) கௌமாரம் (முருகன் எனும் குமரனை வணங்கும் சமயம்), சௌரம் (சூரியனை வழிபடும் பிரிவு), கணாபத்தியம் (கணபதியை கடவுளாகக் கொண்ட சமயம்) என ஆறு சமயக் கொள்கைகளின் தொகுப்புகளை பின்பற்றிக் கொண்டிருக்கும் இந்துக்களை சைவ – வைணவ மதத்திற்கு திருப்பிவிட அரும்பாடு படுகிறார் சீமான். கலாச்சார ரீதியாகவே தனித்த அடையாளத்துடன் காணப்படும் லிங்காயத்துகளை கர்நாடக அரசு தனி மதமாக அங்கீகரித்தப் பிறகும் அதை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலையில், இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவத்தை தனி மதமாக – தாய்மதமாக மண்டகஷாயங்களுக்கு காட்டுகிறார் சீமான். இதற்கு பருத்தி மூட்டைகள் குடோனிலேயே இருந்திருக்கலாம். ஏனெனில் சைவ – வைணவ மத மோதல்கள் குறைந்து போனதற்கு இந்து சமய உள்ளிழுப்பு முக்கிய காரணமாகும். உண்மையில் சீமான் இந்து சமயத்தின் உள் முரண்களை மீண்டும் சந்திக்கு இழுத்துவிடுகிறோரோ என்றுதான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
நடைமுறையில் மாபெரும் பெருக்க அணிதிரட்டலாக கட்டமைக்கப்பட்டுவிட்ட இந்து சமயத்தை சீமான் மீண்டும் சுருக்கத் தொகுதிகளாக (Reduction) குறுக்க எத்தனிக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் இந்து மதம் குறித்து பேசும்போது, “வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.” (தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-267) என்கிறார். இது போன்ற மகாப் பெரியவாக்கள் கட்டிவைத்த குளத்தில் தான் கல்லெறிகிறார் சீமான்.
சங்கராச்சாரியர் வாயாலேயே சொல்ல வேண்டுமெனில், “தானும் கெட்டு சந்திர புஷ்கரணியையும் கெடுத்த” நிலைமைதான். இந்துத்துவ பெரும்பான்மைவாதம் இந்தியனை இந்துமதத்திற்குள் தேடிக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் தமிழரின் இனவாதம் தமிழனை சைவ சமயத்திற்குள் தேடுகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் இயக்கங்கள் ‘கர் வாப்ஸி’ தாய் மதம் திரும்புதல் எனும் செயல்திட்டத்தை 2014ல் முன்னெடுத்த போது, தமிழகத்தில் அந்த செயல்திட்டம் பெரும்பயன் அளிக்கவில்லை. அந்த கட்டத்தில் இருந்தே சீமான் சிறிது சிறிதாக தமிழின அடையாளத்தின் மீது மதமுலாம் பூசத்தொடங்கியதும் நடைபெற்றது. முப்பாட்டன் முருகன், ஆதிபாட்டன் சிவன் என்றெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். இதுதான் சாக்கென்று நா.த.க இயக்க முஸ்லீம் தம்பிகளும் சிவனும், முருகனும் நபிமார்களாக இருக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்கத் துவங்கினர். அவர்கள் தாம் இன்றைக்கு ஈமானையும் இழக்க மாட்டோம்.. சீமானையும் இழக்க மாட்டோம் என்ற இடத்தில் வந்து நிற்கிறார்கள். இவர்கள் சீமானோடு ஒப்பிடும் ஈமானின் சுவை எத்தகையது தெரியுமா? இப்ராஹிம் இப்னு அத்ஹம் கூறுகிறார்: ஈமானின் சுவையை உணர்ந்த நாங்கள் பேரின்பத்தில் திளைக்கிறோம். அது எத்தகையது என்பதை அரசர்கள் உணர்வார்களாயின் அதனை எம்மிடம் இருந்து பறித்துக் கொள்ள வாள் கொண்டு மோதுவார்கள். அத்தகைய ஈமானைத்தான் சீமானை விட்டும் விடுவிக்க இயலாமல் திணறுகிறார்கள் நம் இளவல்கள்.
இத்தகைய தடுமாற்றம் இவர்களுக்கு மட்டுமன்றி சமுதாயத் தலைவர்களுக்கும் இருந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பரப்புரை செய்து வந்த வீரத் தமிழர் முன்னணி, தமிழம் மதம் போன்றவை குறித்து பலரிடம் அச்சம் இருந்து வந்த நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் சிவன், முருகன் பெயர் கூறி திருமணம் நடத்தியது சாமான்ய முஸ்லிம்களிடையே பெரும் விவாதப் பொருளானது. இந்தப் பின்னணியில்தான் பல்வேறு இஸ்லாமிய அமைப்புப் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்டு சீமானை வீடு தேடிச் சென்று சந்தித்தனர். .இந்த பிரச்சினைக்கு முழுமுதற் காரணமான சீமானை சந்தித்து சமரசம் பேச எந்த நியாயமான காரணமும் இல்லை. ஏனெனில் இந்த மண்ணின் இணை சக்திகளைத் தொடர்ந்து குத்திக் கீறிக் கொண்டிருப்பவர் அவர்.
இது குறித்து யாருக்கு பிரக்ஞை இருக்கிறதோ இல்லையோ, நடப்பு அரசியல் சூழலில் இந்திய இஸ்லாமிய சமூகத்திற்கு – குறிப்பாக தமிழ் முஸ்லிம் தலைவர்களுக்குக் கட்டாயம் இருந்தாக வேண்டும். ஆனால் ”அரசியல் களத்திலும் சித்தாந்த ரீதியிலும் இஸ்லாமிய சமூகத்திற்கு சீமான் தோழமையாக இருந்ததையே நாம் காண முடிந்தது. எனவே பாசிச பரிவாரங்களால் குறிவைக்கப்பட்டு களமாடும் ஒருவர் இஸ்லாமிய சமூகத்தாலும் அலைக்கழிக்கப் படுவது எதிரிகளை அதிகப்படுத்தும் உத்தியாகவே அரசியல் பார்வையாளர்களால் உணரப்பட்டது.” என்று சொந்த சமூகத்தின் மீதே குற்றம் சுமத்தி முகாரி ராகம் பாட ஆரம்பித்தனர் முஸ்லிம் தலைவர்கள். பாஜக-வை விமர்சிப்பதாலேயே ஒருவர் சித்தாந்த அடிப்படையில் தோழமை ஆகிவிடுகிறார் என்று கருதுவது குச்சு மிட்டாய்க்கு குதூகலிக்கும் குழந்தைத்தனமாகும். அவர்களின் கவன ஈர்ப்பு அரசியலுக்கான காரணங்கள் ரொம்பவும் சப்பையாக நம் முகத்தில் அறைகின்றன..
சீமான் சந்திப்பின் மூலம் நாதக தம்பிகள் கட்டுப்பட்டு விடுவார்கள் என்று நம்பும் அளவுக்கு நாம் அரசியல் கற்றுக்குட்டிகள் அல்ல. சீமானின் தமிழன் x தெலுங்கன், தமிழ் முஸ்லிம் x உருது முஸ்லிம் இனவாத பேச்சையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவரின் சுயரூபம் தெரியவில்லையா.. திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவே என்ற முழக்கம் ஒன்று போதும் சீமானை விட்டும் இஸ்லாமியர்கள் தள்ளி நிற்க.. முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பிற சமூகத்திற்கு மத்தியிலும் நாம் தமிழர் கட்சியின் கருத்தியல்நிலை மீது பல விமர்சனங்கள் உள்ளன. அவர் இனவாதம் பேசுகிறார் என்பதில் தொடங்கி, சாதி ரீதியில் மக்களைக் கூறுபோடும் தமிழ் ஃபாசிஸ்டாக உள்ளார் என்பது வரை பல்வேறு விரல்கள் அவரை நோக்கி நீள்கின்றன. ஆனால் அவை மற்ற சமுதாயங்களில் எழுப்பும் தாக்கத்தை விட முஸ்லிம் சமூகத்தில் கூடுதல் கவனத்தைப் பெறவேண்டும். அவை குறித்த எந்த கவலையும் இல்லாமல் கேள்வி எழுப்பும் தரப்பினரையும் கொச்சைப்படுத்தும் விதமாக இப்படியொரு கருத்தை முன் வைத்த முஸ்லிம் தலைவர்கள். நிர்பந்த நாயணத்தை ஊதிவிட்டு வந்திருக்கிறார்கள்.
ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைத் தாக்கும்போதெல்லாம், “அடித்துக்கொள்ளும் இருவருமே என் ரத்தம்தான்” என உணர்வுப் பூர்வமாகப் பேசி ஆதிக்க சாதிக் கொடுமைகளை பூசி மெழுகுபவர் சீமான். அவர் இனவாத – குறுங்குழுவாத வெறுப்பின் பிராந்திய வடிவத்தை முன்னெடுப்பவர். அது எந்த சமயத்திலும் முஸ்லிம்களை நோக்கித் திரும்ப எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஏற்கனவே மதராஸ் ராஜதானி காலம் தொடங்கி தமிழர்களோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தெலுங்கர்களை வடுக வந்தேறி என்று தட்டைப் பறித்து தெருவில் நிறுத்துபவர் அவர். முஸ்லிம் மக்களை எப்போதும் சந்தேகக் கண்ணுடன் பார்த்த பௌத்த சிங்கள வெறியர்களும் சைவ வெள்ளாள பற்றாளர்களும் தோற்றுவித்த பாசறையில் பயில்பவர். எனவே கொள்கை தெளிவில்லாமல் அவரோடு அரசியல் உறவாடுவதை தனது மிரட்டல் பாணி இனவாத வெறுப்பு அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே அவர் கருதும் எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன.. அப்படியொரு நிலையில் இந்த அரசியல் வகைமாதிரியைத் தொடரவே அவர் மறைமுகமாக தன் சேனைகளுக்குக் கட்டளையிடுவார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
முஸ்லிம் பிரச்சினைகள் குறித்து சீமான என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம் – தப்லீக் ஜமாஅத் என்ற சிவப்பு உதட்டுச் சாயத்தை அன்றாடம் பூசிக் கொண்டு ஊடகங்களில் தலை காட்டிய பீலா. ராஜேஷை திறன்மிக்க அதிகாரியாகவும் அவர் போன்றோரை விலக்கிவைப்பது ஆட்சி நலனுக்கு உகந்ததாக கருத முடியாது என்று அவர் கொடுத்த குரலின் ஊடாக விளங்க முடியும். இந்த சீமானைத்தான் இஸ்லாமியர்களும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய பெண்களும் அவர் கட்சியில் சீட் வாங்கி தேர்தலில் வெற்றி பெற்று ஒரு இணக்கமான சமதர்ம சமூகத்தை உண்டாக்கப் போகிறார்கள் பீலா போன்ற அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்று நமபச் சொல்கிறார்கள்… நம்பித் தொலைப்போம்.
சீமானின் இனவாதம் – அதிரடி அரசியல் – பொய்களால் கட்டமைக்கப்பட்ட நரம்பு புடைக்கும் பேச்சு இவை எது குறித்தும் நாம் அக்கறை கொள்ள ஏதுமில்லை. ஆனால் “இனம், மொழி, குழு உணர்வுகளைத் தூண்டி மக்களை திரட்டுகிறவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல என்ற நபிகள் பெருமானாரின் வழிப்பட்டவர்கள் அல்லவா நாம்? அதனால் இந்த வெறுப்பு அரசியலை அதிக எச்சரிக்கையுடன் அணுக வேண்டியவர்கள் ஆயிற்றே.. அதை எப்படி மறந்து போனோம்.
இனவாதம், இன உரிமை இரண்டிற்கும் நூலளவு இடைவெளிதான். இதில் தான் நல்ல மனிதர்களும் குழம்பி விடுகிறார்கள். சீமானை நல்ல தலைவர் என்று தூக்கிக் கொண்டாடும் இசுலாமிய மார்க்கத்தை சார்ந்த தமிழர்களும் அதிகம் உண்டு. அவர்களின் வாக்குகள் சனநாயக மதசார்பற்ற அணிகளின் பக்கம் செல்ல விடாமல் செய்வதே சீமானின் அரசியல். ஆனால்
நிறைய முஸ்லிம்கள் சிறுபான்மை நலம் பேசுகிறேன் என்று எண்ணி இனஉரிமை எல்லைக் கோடுகளைக் கடந்து தங்களை அறியாமலேயே இனவாதப் பிடியில் சிக்கிக் கிடக்கிறார்கள். அத்தகைய முஸ்லிம் விடலைகளுக்கு சீமானின் பேச்சு சக்கரைக் கட்டியாகத் தித்திக்கிறது. கணிசமான முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் இந்த ஆதரவை சீமான் தந்திரமாக தக்க வைத்துக் கொள்கிறார்.
இங்கே பேசப்படும் சொற்களுக்கும் பேசாமல் விடப்படும் சொற்களுக்கும் பின்னால் அரசியல் இருக்கிறது. சீமான் வெளிப்படையான சனநாயகத் தலைவர் அல்ல. அதிபர் ஆட்சிமுறை இந்தியாவில் ஏற்படவேண்டும் என்ற ஒற்றைத் தலைமையை ஓம்பும் சர்வாதிகாரப் போக்கிற்கு ஆரத்தியெடுத்து ஆராதிப்பவர். ஒரு தொண்டன் தன் தொகுதியில் நிறுத்தப்பட்ட ‘வேட்பாளர் சரியில்லே.. மாத்துங்க அண்ணே’ என்று கேட்கப் போய் , செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்ட கதையெல்லாம் அனைவரும் கேட்டு ரசித்த ஓரங்க நாடகங்கள் தான். எனவே சீமானின் ஒரு சொல் – ஒரு வாக்கியம் கூட பல்வேறு பொருள்களையும் நோக்கங்களையும் கொண்டிருக்கும். அதை புரிந்து கொண்டு காத்திரமாக தம்மை தற்காத்துக் கொள்ளாமல் சிறுபான்மையினருக்கு – ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் இல்லை. இதில் மீண்டும் மீண்டும் சறுக்கி விழுந்து தட்டுத்தடுமாறி எழுந்து, “நம்பி ஏமாந்து போனோர்” பட்டியலை நாம் நீட்டிக் கொண்டே போகும் காலமெல்லாம் இந்த மக்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் தேவையில்லாத ஆணியை தங்கள் சிலுவையில் அறைந்து கொள்ள தாங்களே சுத்தியலாகவும் இருக்கிறார்கள். இன்னும் வழிகிற குருதியை வண்ணக் கோலங்களாக நினைத்து பரவசத்தோடு பாவங்களை வாங்கிக் கொள்கிறார்கள். தேவனே.. இவர்களை மன்னித்து விடும் என்று அரற்றத் தான் முடியும். மற்றபடி தாய்மத ஆட்டோ கண்ணாடியைத் திருப்பி தங்கள் அரசியல் வாகனத்தை முடுக்குபவர்களுக்கு குறையேதும் இல்லை கண்ணா! .
– கோட்டை கலீம் – எழுத்தாளர்