ஒரு பள்ளிவாசல், பழைய இதிகாச நாயகன் அங்கேதான் பிறந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் நடத்தப்பட்ட மக்களை முட்டாளாக்கும் அரசியலை சங்பரிவாரங்கள் முன்னெடுத்தன. அதில் வெற்றியும் அடைந்தனர். பள்ளிவாசலை இடித்து, நாடெங்கும் கலவரத்தை நடத்தி, பல ஆயிரம் அப்பாவிகளைக் கொன்று கட்சியை வளர்த்தி அதிகாரத்தையும் தனதாக்கிக்கின. பிறகு அநீதியான தீர்ப்பையும் வழங்கி இந்த நாட்டின் இறையாண்மையை கேலிக்குறியதாக்கினர். படிப்பதற்கு ஏதோ பிரம்மாண்டமான திரைப்படத்தின் ஒன்லைன் என்பதுபோல உங்களுக்கு தோற்றமளிக்கலாம். ஆனால் இந்தியாவின் 70 ஆண்டுகால வரலாறும், சங்கபரிவாரங்கள் இந்த நாட்டில் செய்த அரசியலும் இதுதான். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பிரதான எதிரியாக முன்னிருத்தி இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம். புரோகிதர்களாக தங்களிடம் இருந்த கட்டற்ற அதிகாரத்தையும், மனுநீதியையும் மீண்டும் கொண்டு வரலாம் என திட்டமிட்டு அதில் வெற்றிகளையும் அடைந்திருக்கிறார்கள் என்பது கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லை என்பதுபோல அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒன்று.
அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்த்த அப்பாவி மக்களுக்கு கிடைத்தவை என்னவோ வறுமையும், அதிர்ச்சிகளும்தான். மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேலே உயர்ந்து கொண்டே செல்கிறது. பெட்ரோலை நம்மிடமிருந்து விலைக்கு வாங்கி விற்கும் பூடான், நேபாளத்தைவிட இருமடங்கு அதிக விலை கொடுத்து நாம் வாங்குகிறோம். பணவீக்கம் நாளுக்கு நாள் வீங்குகிறது. ஐந்து ஆண்டுகளாக நாட்டின் இருப்புத் தொகைகளில் ஊழல் செய்து பெருத்தவர்கள் இன்று ஊழல் செய்ய பணமில்லாமல் நாட்டின் சொத்துக்களை தனியாரிடம் விற்றுத் திண்கிறார்கள். வளர்ச்சி முகமூடி அணிந்து ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டைப் பாதுகாப்பதற்கும் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இந்த நேரத்தில்தான் நமக்கு வளர்ச்சிதான் வராது. கலவரம் செய்யவும், இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பவும் நன்றாக வருமே என நினைத்தார்களோ என்னவோ. ஒவ்வொரு மாதமும் முஸ்லிம்களைக் குறிவைத்து பிரச்னைகளையும், வெறுப்பையும் உருவாக்கி வருகிறார்கள்.
ஹிஜாப், ஹலால், லவ் ஜிஹாத், தாஜ்மஹால், குதுப்மினார், ஞானவாபி பள்ளிவாசல், மதுரா சாஹி அக்கா பள்ளிவாசல் என ஒவ்வொரு மாதமும் இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பி போலித்தகவல்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துகின்றனர். அதனால் இவை பேசுபொருள்களாக மாறுகின்றன. இந்தியாவின் பொருளாதார பிரச்னைகள், சாதீயப் பிரச்னைகள், பாதுகாப்புப் பிரச்னைகள் ஆகியவற்றைத் தாண்டி முக்கியமான பிரச்சினையாக இன்று மக்களிடையே பரப்பப்படும் வெறுப்புகள் உருவாகியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
குறிப்பாக தாஜ்மஹால் எனும் உலக அதிசயத்தின் மூடியிருக்கும் அறைகளில் என்ன இருக்கிறது என்றும். அது கோயில். அது இந்து அரசர் கட்டியது. அது இந்து அரசரின் நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டப்பட்டது என நீதிமன்றங்களில் வாதாடப்படுவதும். அதனை ஏற்று நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிக்கும் உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரும் தலைக்குனிவை இந்தியாவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது.
ஞானவாபி பள்ளிவாசல், மதுரா சாஹி அக்கா பள்ளிவாசல் வழக்குகளை வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 சட்டத்தின்படி எப்பொழுதோ தள்ளுபடி செய்திருக்க வேண்டும். எந்த அரசியலமைப்பின்படி பள்ளிவாசலின் உள்ளே ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது என்பதே மிகப்பெரிய கேள்வியாக இன்று இருக்கிறது.
முஸ்லிம்களின் மீது வெறுப்பினைப் பரப்பவும், அதன்மூலம் தொடர்ந்து மோசமான அரசியல் செய்திடவும் நாட்டின் நான்கு தூண்களும் துணை செல்வதை மிகவும் வேதனையோடு பார்க்க வேண்டிய இக்கட்டான சூழலில் நாம் இருக்கிறோம்.
வெறுப்புகளைக் களைந்து ஒற்றுமையாக, பரஸ்பர அன்போடு முன்னேறுவது தான் இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும். இல்லாவிட்டால் நம் கண்முன்னே அழிந்து கொண்டிருக்கும் அண்டை நாடான இலங்கையைப் பார்த்தாவது நாம் பாடம் பயின்றுகொள்ள வேண்டும்.
ஜனநாயகம் என்பதே மக்களின் சக்திதான். நாட்டில் உள்ள இந்த இந்திய திருநாட்டையும், மக்களையும் நேசிக்கக் கூடியவர்கள் ஒன்றுசேர்ந்து வெறுப்பை விதைப்பவர்களை நாட்டை விட்டே ஒதுக்கித் தள்ள போராடுவதே நம்முன் இருக்கும் ஒரே வழியாகும்.
இந்தியாவை ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து வளர்ச்சியின் பக்கமும், தேசத்தின் பக்கமும் ஒன்றாக முன்னேற்றுவோம்.
– சகோதரன்.