தமிழக தேர்தலில் இறுதியாக திமுக வென்றுள்ளது. ஒருவழியாக நீண்டகால அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக முதல்வராகிவிட்டார் ஸ்டாலின். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை திமுக பெறாதது பொதுவாகவே பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் மிகவும் மோசமான ஆட்சியாக வெளிப்பட்ட எடப்பாடி தலைமையிலான அதிமுகவினாலேயே கணிசமான அளவு வாக்கைப் பெற முடிந்துள்ளது. குறிப்பாக, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடைப்பட்ட வாக்கு சதவீதம் என்பது சொற்பம்தான். அப்படியிருக்கையில், இந்த தேர்தல் இன்றைய தமிழக நிலை குறித்த பல பாடங்களைக் கற்பித்துள்ளது.
இத்தேர்தலில் திமுக வெல்வது ஏற்கனவே தீர்க்கமானதாக இருந்தது. ஆனால், அது 200 தொகுதிகளுக்கு மேலான பிரமாண்ட வெற்றி எனச் சாமானியனிலிருந்து திமுகவுக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த ஐபாக் நிறுவனம் வரை கூறி வந்தனர். ஆனால், தனிப்பெரும்பான்மை என்றாலும் எடப்பாடிக்கு எதிராகவே சராசரி வெற்றியைத்தான் திமுக பெற்றுள்ளது. இதன் முக்கிய காரணமாகக் கொங்கு மண்டலத்தில் பெருவாரியான வாக்குகள் அதிமுகவிற்குக் கிடைத்துள்ளது. கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடியின் ஆதிக்கம் கணிசமாகக் கைகொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. பொதுவாகவே, கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமான கட்சி என்றாலும், இத்தகைய சூழலிலும் தோல்வியடைந்தது பரிசீலனைக்குரியது. கொங்கு மக்களின் சாதி எண்ணம், படிப்பறிவின்மை, பண்ணையார் ஆதிக்கம் போன்ற ‘அனுமானங்களை’ கடந்து அந்நிலத்தின் மீதான அரசியலை தேர்ந்துகொள்ள வேண்டும். அதனை பின் விரிவாக காண்போம்.
கமல் அரசியல்;
கமல் அரசியல் மத்தியத்தர உயர்வர்க்க மக்களோடு மட்டுமே சுருங்கிவிடுவது என்பது நிரூபணமாகியிருக்கிறது. சென்னையில் கணிசமாக வாக்கைப் பெற்ற அவரது கட்சி மூன்றாம் இடத்தை தக்கவைத்தது. கோவை நகர்ப்பகுதியிலும் மய்யம் தன்னை பதிவு செய்திருக்கிறது. கோவை தெற்கு தொகுதியைப் பொறுத்தவரை மோசமான பெயர்பெற்ற மயூரா ஜெயக்குமார் பாஜகவின் வானதியை ஒப்பிடக் கமலை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக அவ்வளவு தூரம் முன்னேறியும் கமலால் வெல்ல முடியவில்லை. மேலும், வேண்டாத வேலையாகக் கமல் கூட்டிழுத்த ஐஜேகேவும், சமகவும் தொகுதிக்கு ஆயிரம் ஓட்டுகூட எடுக்காமல் அவமானப்படுத்தியதுதான் மிச்சம். அரசியலிலும் சிவாஜியின் வாரிசாக வெளியேறுகிறார் கமல். தமிழ் சினிமாவை தமிழக அரசியல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் காலமும், தனது திறமைக்கான இடமும் இதுவல்ல என்று கமல் உணர்வார் என நம்புவோம்.
நாம் தமிழர் அரசியல்;
தமிழகத்தின் 90% தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது நாம் தமிழர் கட்சி. அதுவும், சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்குவதை போன்ற நிலையல்லாமல் 6.8% வாக்கைப் பெற்றதெல்லாம் அதிர்ச்சியளிக்கும் விஷயம். தொகுதிக்கு குறைந்தது 10 ஆயிரம் வாக்குகள் என்பது நாம் தமிழருக்கு உறுதியாகியுள்ளது. 234 தொகுதிகளிலும் பொது நீரோட்டமாக இது இருப்பதுதான் குறிப்பிடவேண்டியது. அரசியலற்ற அல்லது குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட இளைஞர்கள் சீமானின் பின் அணிதிரள்வதன் மீது உடனடியாக அக்கறை கொள்வது அவசியம். இயங்கியல்படி அடுத்த தேர்தலில் 10% வாக்கைத் தாண்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேனிலைக் கல்வியிலிருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முறையான அரசியல் பாடத்தைத் தவிர்த்த திராவிட கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு. பள்ளி புத்தகங்கள் திராவிட வரலாற்றை விட இந்துத்துவ வரலாற்றைத் தாங்கி நிற்பதுதான் அதிகம். அதிலிருந்து எவ்வித நிலையுமில்லாத இளைஞர்கள் யூடுயூப் போன்ற அர்த்தமற்ற ஊடகங்களுக்கு உடன்படுகிறார்கள். இதன் போக்கில் கவனம் செலுத்தி இளைஞர்களை அரசியல்மயப்படுத்துவது இன்றைய தேவையாக உள்ளது.
அமமுக அரசியல்;
சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். அவரால் ஏதும் மாற்றம் உண்டாகும் என எதிர்பார்த்த தினகரன், கட்சி ஆரம்பித்தோம் என்ற காரணத்திற்காக மட்டுமே தேர்தலைச் சந்தித்தது போல் இருந்தது. பிரச்சாரம், களப்பணி என எதிலும் கவனம் செலுத்தவில்லை. மதுரை சுற்றுவட்டார தேவர் சமூக வாக்குகள் அங்கு அமமுகவை மூன்றாம் இடத்திற்கு வர உதவியவது. மற்றபடி தமிழகம் முழுவதும் அக்கட்சியின் நிலை பரிதாபமாக இருந்தது. திமுகவே முதன்மை எதிரி என்ற தினகரன் போட்டிப் போட்டதெல்லாம் ஐஜேகேவுடனும் சரத்குமாரின் சமகவுடனும்தான். சீமானோடு கூட அவரால் நெருங்க முடியவில்லை. மற்றபடி தஞ்சை உள்ளிட்ட சில பகுதிகளில் அதிமுகவின் வாக்குகளை உடைத்து திமுக கூட்டணியை வெற்றிபெற வைத்துள்ளார்கள் என்பதே அக்கட்சியின் மூலம் கிடைத்த ஆறுதல்.
இஸ்லாமியக் கட்சிகளின் அரசியல்!
இந்து பெரும்பான்மை மனோநிலை இந்த தேர்தலில் அதிகம் வெளிப்பட்டது. இரு பெரிய கட்சிகளும் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தைப் பொருட்டாக்கவில்லை. பெரும்பாலும் திமுகவுடன் கூட்டணி வைத்த முஸ்லீம் கட்சிகளுக்கும் வெகு சொற்பமாகவே சீட்டு ஒதுக்கப்பட்டது. திமுக இஸ்லாமியர்களுக்கு வழங்கிய 3.5% உள் இட ஒதுக்கீட்டை விட அது குறைவு. மனிதநேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளிலும் உதய சூரியனில் வெற்றிபெற்றது. ஆனால், சொந்த சின்னத்தில் நின்ற லீக் மூன்றிலும் வீழ்ந்தது. இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு இஸ்லாமியக் கட்சி அரசியலை குறைகூறுவதில் திமுக முஸ்லீம்கள் முதன்மையாக இருக்கிறார்கள். உவைசி ஓட்டைப் பிரித்துவிட்டார் என்று சில ஆயிரம் வாக்கு வாங்கியவர்களை குறைகூறி பெரும்பான்மை சாதியவாதிகளைக் காக்கும் தாராள வாதிகளின் குரலைத்தான் முற்போக்காளர்களும் திமுக முஸ்லிம்களும் வைக்கிறார்கள். இதை ஒரு காரணமாக வைத்து முஸ்லீம் அரசியலை மேலும் ஓரங்கட்டவே பெரிய கட்சிகள் நினைக்கும்.
இதனை உணர்ந்து இஸ்லாமிய இயக்கங்கள் வெகுஜன அரசியல் சார்ந்து தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தயாராவது அவசியம். முஸ்லீம் லீகின் தோல்விக்கு அவர்களும் ஒருபுறம் காரணமாக இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட கட்சியின் கட்டமைப்பு முழுக்க தகர்ந்துபோய் உள்ளது. சமூக பிரச்சனைகளிலும் வெகுஜன களப்பணிகளிலும் அதன் செயல்பாடு மிகக் குறைவு. இளைஞர்களின் ஆற்றலும் இல்லை. எஸ்டிபிஐ போன்ற இயக்கங்கள் மேற்கொள்ளும் கட்டமைப்பு உருவாக்கத்தைக் கூட லீக் அசட்டை செய்யவில்லை. கட்சி நிதிக்கும் கட்சிக்கும் சில முஸ்லீம் தொழிலதிபர்களின் தேவையும், பணக்கார முஸ்லீம் வீடுகளில் நடைபெறும் திருமணங்களில் கலந்துகொள்வதும் மட்டும் அரசியலல்ல என்பதை லீக் உணர வேண்டும். அதன்படி, தம் தோல்விகளிலிருந்து உடனடி பரிசோதனைகளை மேற்கொள்வதே அந்த பாரம்பரிய கட்சியைக் கரைசேர்க்கும்.
எஸ்டிபிஐ மண்ணைக் கவ்வியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. கமல், தினகரன் என அவர்கள் கூட்டணிக்குத் தேர்ந்தெடுத்தவர்களின் மூலமே அவரிகளின் தனிப்பட்ட பிழைப்புவாத அரசியலை உணரலாம். பாஜக ஆதரவாளரான தினகரனுடன் கூட்டுவைத்து பாசிசத்தை எதிர்க்கக் கிளம்பும் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்களின் அரசியல் சிந்தனையை மழுங்கடிக்கிறார்கள். நாம் தமிழரின் இஸ்லாமிய வெர்ஷனனான எஸ்டிபிஐ சீமானைப் போல் தனித்து நின்றிருந்தால் கூட ஓரளவு அவமானத்திலிருந்து மீண்டிருக்கலாம்.
லீக் போன்ற கட்சியின் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணம் பெரும்பான்மை மக்களின் உடன்பாடின்மை. திமுக வென்றாலும் அந்த இந்து பெரும்பான்மை உளவியல் இத்தேர்தலில் முக்கிய வினையாகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதுவே பெரியார் மண்ணில் தாமரை வெல்லவும், உதய சூரியன் சின்னத்தில் நின்றாலும் தலித் தலைவர் அதியமான் தோற்கவும், பெரும்பாலான தனித்தொகுதிகளில் அதிமுக வெல்லவும் காரணமாகியிருக்கிறது. முருகனின் வேல் யாத்திரை அரசியல் வரை திமுகவும் இதற்கு உடன்பட்டதை நோக்க வேண்டும். இந்த அரசியலுக்கு எதிரான தெளிவுக்கொள்ளல்தான் முன்னேறிவரும் இந்துத்துவ அபாயத்திலிருந்து தமிழகத்தைக் காக்க முடியும்… தொடருவோம்.
அப்துல்லா.மு