யஹ்யா எனும் நான்; நாடுகடத்தலை தற்காலிகத் தாயகமாகவும் கனவை நித்தியப் போராக மாற்றிக் கொண்ட ஒரு அகதியின் மகன். தெருக்களில் கழிந்த குழந்தைப் பருவம், நீண்ட காலச் சிறைவாசம், நித்தமும் இம்மண்ணில் சிந்தப்பட்ட ஒவ்வொரு ரத்தத் துளிகளென என் வாழ்வில் நான் கழித்த ஒவ்வொரு நொடியும் என் கண்களுக்கு முன்பாக ஒளிர்ந்து கொண்டிருக்க இவ்வார்த்தைகளை எழுதுகிறேன்.
நான் 1962இல் கான் யூனிஸ் முகாமில் பிறந்தேன். ‘ஃபலஸ்தீனம்’ என்பது ஒரு கந்தலான நினைவாகவும் அரசியல்வாதிகளின் மேசைகளில் உள்ள சில வரைபடங்களில் இருந்து மறைந்தும் இருந்த காலம் அது. எனது வாழ்க்கை நெருப்புக்கும், சாம்பலுக்கும் இடையில் கழித்தன. ஆக்கிரமிப்பாளர்களின் நிழலில் வாழ்வது நிரந்தரச் சிறையில் வாழ்வததற்குச் சமம் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன்!
இந்த மண்ணில் வாழ்வது சாதாரணமான ஒன்றல்ல என்பதை நான் எனது சிறு வயதிலிருந்தே புரிந்திருந்தேன். இங்கு பிறந்த எவரும் சுதந்திரத்திற்கான பாதை மிக நீண்டது என்பதைப் புரிந்தவர்களாயும், யாராலும் வெல்ல முடியாத ஆயுதங்களை இதயத்தில் சுமந்தவர்களாயும் இருக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்கள் மீது முதல் கல்லை எறிந்த சிறுவனிடமிருந்து, எங்கள் காயங்களை அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் உலகம், எமது குரல்கள் என கேட்கும் முதல் வார்த்தை ‘கற்கள்’ என்பதை கற்றுக்கொண்ட அந்தச் சிறுவனிடமிருந்து, உங்கள் அனைவருக்குமான எனது இறுதி உயிலைத் தொடங்குகின்றேன்.
ஒரு நபரின் மதிப்பானது அவரின் வயதைக் அடிப்படையாக கொண்டு அளவிடப்படுவதில்லை. மாறாக, அவர் தனது தாய்நாட்டிற்கு என்ன செய்தார் என்பதை அடிப்படையாக கொண்டுதான் கணக்கிடப்படுகிறது என்பதை நான் காஸாவின் தெருக்களில் இருந்து கற்றுக்கொண்டேன். சிறைவாசம், போர்கள், வலி, நம்பிக்கை ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டது எனது வாழ்க்கை. நான் முதன்முதலில் 1988இல் சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டேன், இருந்தும் ‘பயம்’ என்பதை என்னை நெருங்க நான் அனுமதிக்கவில்லை.
அந்த இருண்ட சிறைக்கூடத்தினுல் ஒவ்வொரு சுவரிலும் உள்ள ஜன்னல்களைப் பார்த்தேன். அவை தொலைதூரத்து அடிவானத்தைக் காட்டின. சுதந்திரத்திற்கான பாதை அதன் ஒவ்வொரு இரும்புக் கம்பியிலிருந்தும் ஒளிர்வதைக் கண்டேன். சிறையிலிருந்தபோது, பொறுமை என்பது வெறும் அறநெறி மட்டுமல்ல அது ஒரு பேராயுதம் என்பதையும்; கடலை துளித்துளியாக குடிப்பது போன்றதொரு கசப்பான அனுபவம் என்பதையும் உணர்ந்தேன்.
சிறைச்சாலைளுக்குப் பயப்படக்கூடாது என்பதே என் விருப்பம். சிறை என்பது நமது சுதந்திரத்திற்கான நீண்ட பாதையின் ஒரு பகுதி மட்டுமே. சுதந்திரம் என்பது பறிக்கப்பட்ட உரிமை மட்டுமல்ல அது வலியில் பிறந்து பொறுமையால் கூர்தீட்டப்பட்ட ஒரு சிந்தனை என்பதை சிறை எனக்குக் கற்றுக் கொடுத்தது. 2011இல் “பணயக்கைதிகள் பரிமாற்றம்” (Loyalty of the Free) ஒப்பந்தத்தின் கீழ் நான் விடுவிக்கப்பட்ட தருணத்தில், நான் முன்பு போல் அல்லாமல் ஒரு வலுவான ஆளுமையாக வெளியானேன். எங்கள் போராட்டம் தற்காலிகமானது அல்ல என்பதும்; அதன் முடிவு எங்களின் கடைசி இரத்தத் துளியால் தான் நிலைநிறுத்தப்படும் என்பதுமே எங்களின் விதி என்பதை உறுதியாக நம்பினேன்.
விலைப்பேச முடியா கண்ணியத்துடன், மரணத்தை சந்திக்காத கனவோடு, ஆயுதத்தை உறுதியாகப் பிடிப்பதே என் விருப்பமாக இருந்தது. நமது எதிர்ப்பை கைவிட்டு விட்டு, நமது நியாயங்களை முடிவிலா பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என எதிரி விரும்புகின்றான். எனவே நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன்: “உங்கள் உரிமைகளை பேச்சுவார்த்தைக்கு உள்ளாக்காதீர்கள். அவர்கள் உங்கள் ஆயுதங்களை விட உங்கள் வலிமைக்கு பயப்படுகிறார்கள். எதிர்ப்பு என்பது நாம் தாங்கும் ஆயுதங்கள் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மூச்சிலும் புதுப்பிக்கப்படுகிற ஃபலஸ்தீனத்தின் மீதான நமது அன்பு. முற்றுகை மற்றும் ஒடுக்குமுறைக்கு மத்தியில் உயிர்வாழ்வதற்கான நமது உறுதி”.
தியாகிகளின் இரத்தத்திற்கு எப்போதும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த முட்பாதையை நமக்காக விட்டுவிட்டு அவர்கள் கடந்து சென்றவிட்டனர். அவர்கள் தங்களது இரத்ததால் சுதந்திரத்திற்கான பாதையை வகுத்தனர். அரசியல் ஆதாயங்களுக்காகவோ அல்லது யாருடைய ராஜதந்திர விளையாட்டுகளுக்காகவோ அவர்களின் தியாகங்கள் வீணடிக்கப்படக் கூடாது. நமது முன்னோர்கள் ஆரம்பித்ததை செய்து முடிப்பதே நமது பணியாகும். அதற்கான விலை எவ்வளவு ஆனாலும் இந்தப் பாதையை விட்டு விலகாமல் நாம் இருக்க வேண்டும். இந்த பரந்த நிலம் நமக்கு எவ்வளவு குறுகலாக இருந்தாலும்; ஃபலஸ்தீனத்தின் வலிமையின் மையமாகவும், துடிக்கும் இதயமாகவும் காஸா எப்போதும் இருந்து வருகிறது, எப்போதும் இருக்கும்…
2017இல் காஸாவில் ஹமாஸின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டபோது, அது தலைமை மாற்றமாக மட்டுமல்லாது “கற்களால் தொடங்கி துப்பாக்கிகளால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற எதிர்ப்பின் தொடர்ச்சியாக இருந்தது”. முற்றுகைக்கு உள்ளான எனது தேசத்தின் காயங்கள் என்னை தினமும் வேதனைக்குள் ஆழ்த்தின. சுதந்திரத்தை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு விலை உள்ளது என்பதை நான் அறிந்தேன். எனவே நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன்: “சரணடைவதற்கான விலை இதைவிட மிக அதிகம். எனவே, வேர்கள் மண்ணைக் இறுகப்பிடித்திருப்பதை போல நீங்கள் இந்த நிலத்தை இறுகப்பிடித்துக்கொள்ளுங்கள். வாழ முடிவெடுத்திருக்கும் தேசத்தை எந்தப் புயலாலும் வேரோடு பிடுங்கி எறிய முடியாது!”.
அல் அக்ஸா புயலின் (Al-Aqsa Strom) போது நான் ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் தலைவனாக இருக்கவில்லை. மாறாக, சுதந்திரக் கனவு காணும் ஒவ்வொரு ஃபலஸ்தீனியரின் குரலாக மட்டுமே இருந்தேன். எதிர்ப்பு என்பது தேர்வுசெய்யபடக் கூடிய ஒரு பாதையல்ல, அது ஒரு கடமை என்பதை என் நம்பிக்கை எனக்குக் காட்டியது. ஃபலஸ்தீனியப் போராட்டத்தின் புத்தகத்தில் இந்தப் போர் ஒரு புதிய அத்தியாயமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இங்கு அனைத்து எதிர்ப்புக் குழுக்களும் ஒன்றிணைந்து, அனைவரும் ஒரே அகழியின் தோழர்களாய் குழந்தைகள், முதியவர்கள், கற்கள் அல்லது மரங்களைக் கூட விட்டுவைக்காத எதிரியை எதிர்கொள்வதற்காக.
நான் தனிப்பட்ட மரபுத்தொடர்ச்சி எதையும் விட்டுச் செல்லவில்லை. மாறாக, சுதந்திரக் கனவு கண்ட ஒவ்வொரு ஃபலஸ்தீனியனுக்கும், தன் உயிர்த் தியாகியான மகனைத் தோளில் சுமக்கும் ஒவ்வொரு தாய்க்கும், எதிரியின் வஞ்சகத் தோட்டாக்களால் சிதைக்கப்பட்டு வேதனையில் துடிக்கும் தன் மகள் கதறி அழுததைப் பார்த்த ஒவ்வொரு தந்தைக்குமாய் சேர்த்து ஒரு கூட்டு மரபை விட்டுச் செல்கிறேன்.
‘எதிர்ப்பு வீண் போகாது!’ என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எனது இறுதி விருப்பம். இது வெறும் தோட்டாக்களின் தாக்குதல் அல்ல; இது கண்ணியத்துடனும், மரியாதையுடனும் வாழும் வாழ்க்கை. சிறையும் முற்றுகையும் ‘இந்தப் போர் நீண்டது, இந்தப் பாதை கடினமானது’ என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்ததுதான் என்றாலும், சரணடைய மறுக்கும் நாடுகள் தங்கள் கைகளால் அற்புதங்களை உருவாக்குகின்றன என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.
உலகம் உங்களுக்கு நீதி வழங்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். என் வாழ்நாள் முழுவதும் நாம் படும் துன்பங்களை இந்த உலகம் மிக அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். “நீதிக்காகக் காத்திருக்காதீர்கள்! நீங்களே நீதியாகுங்கள்!!” ஃபலஸ்தீனத்தின் கனவை உங்கள் இதயங்களில் வாழவையுங்கள். ஒவ்வொரு காயத்தையும் ஆயுதமாகவும், ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் நம்பிக்கையின் ஊற்றாகவும் மாற்றுங்கள்.
இதுவே எனது விருப்பம்: “உங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விடாதீர்கள், கற்களை கீழே போடாதீர்கள், உங்கள் தியாகிகளை மறக்காதீர்கள், உங்கள் கனவைப் விலைப் பேசாதீர்கள் அது உங்கள் ‘உரிமை’ ”.
நாம் இங்கேயே இருப்போம். நம் மண்ணிலும், நம் இதயங்களிலும், நம் குழந்தைகளின் எதிர்காலத்திலும் இருப்போம். நான் இறக்கும் வரை நேசித்த நிலத்தை, தலை குனியாத மலை போல் என் தோள்களில் நான் சுமந்த கனவான ஃபலஸ்தீனத்தைப் பாதுகாக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நான் விழுந்தால் என்னுடன் நீங்களும் விழ வேண்டாம்; மாறாக, தரையில் விழாத நம் கொடியை என் கையிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். நமது சாம்பலிலிருந்து எழும் வலிமையான தலைமுறைக்காக, எனது இரத்தத்திலிருந்து பாலம் கட்டுங்கள்.
மீண்டும் புயல் எழும் வேளையில் ஒருவேளை நான் உங்களிடையே இல்லாமல் போனால்; சுதந்திர அலையின் முதல் துளி நான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த பயணத்தை நீங்கள் முடிக்க வேண்டும் என்றே நான் உங்களுடன் வாழ்ந்தேன்.
அவர்களின் தொண்டையில் முள்ளாக இருங்கள், திசைத் திரும்பா புயலாக இருங்கள், ‘நீதிக்காக நிற்கிறோம்’ என்பதை இந்த உலகம் அறியும் வரை ஓயாதீர்கள். நாம் செய்திகள் பதிவு செய்யும் வெற்று எண்கள் மட்டுமல்ல!
(அரபு மூலத்திருந்து உருது மொழியாக்கம்: டாக்டர் முஹ்யுத்தீன் காஜி)
(உருதிலிருந்து ஆங்கில மொழியாக்கம்: The Companion)
(தமிழாக்கம்: ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V)