அது எண்பதுகளின் மத்தியப்பகுதி…
சர்வதேச பொது மன்னிப்பு இயக்கம் என்றழைக்கப்படும் அம்னஸ்டி இண்டர்நேஷனலில் (Amnesty International) தோழர்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம்.
.
உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறைப்பட்டிருக்கிற இரு கைதிகளின் விடுதலைக்காக ஒவ்வொரு குழுவும் பணியாற்ற வேண்டும்.
.
சிறை வைக்கப்பட்டிருப்பவர் தனது நிறத்தின் பொருட்டோ… இனத்தின் பொருட்டோ… தான் வைத்திருந்த சித்தாந்தத்தின் பொருட்டோ… கைது செய்யப்பட்டவராக இருப்பார். அப்படிப்பட்டவர்களை மனசாட்சிக் கைதிகள் என்றழைப்பார்கள் (Prisoner of Conscience). நாம் அவர்களது விடுதலைக்காக உழைக்க வேண்டும்.
.
ஆனால் அப்பணியின்போது நமது இனம், மதம், சித்தாந்தம் சார்ந்த கருத்துக்கள் ஒருபோதும் குறுக்கிடக் கூடாது. நாம் யாராயினும் மற்றொரு முனையில் கைது செய்யப்பட்டிருப்பவர் எதன் பொருட்டு சிறை வைக்கப்பட்டிருப்பினும் அவரது விடுதலையையே இலக்காகக் கொண்டு செயற்படவேண்டும்.
.
கொஞ்சம் புரியும்படி சொல்வதானால்…
நாம் நாத்திகராகவே இருப்பினும் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டிருப்பவர் கிருஸ்துவ மதப் பிரச்சாரகராகவோ அல்லது ஹரே ராமா பிரச்சாரகராகவோ இருந்தாலும் நாம் குரல் கொடுத்தாக வேண்டும்.
.
அல்லது மலேசியாவில் கம்யூனிசத்தைப் பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகி இருப்பின்
“அட நம்மாளுப்பா… உடனே ரிலீஸ் பண்ணுங்கப்பா…” என்று குரல் கொடுத்துவிடக் கூடாது.
.
ஒருவேளை விசாரணையில் அவர் தான் அப்படிப் பிரச்சாரம் செய்யவில்லை என்று துண்டுபோட்டுக் கூட தாண்டியிருப்பார். நமது சொந்தக் கருத்து அவருக்கு மேலும் சிக்கலைக் கொடுத்துவிடக் கூடும்.
.
ஆக… தங்கள் கருத்துக்களின் பொருட்டு எவர் கைது செய்யப்பட்டு இருப்பினும் அவரது விடுதலைதான் முக்கியமேயன்றி நாம் யார்… நாம் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறோம்… என்பதல்ல பிரதானம். கருத்துச் சுதந்திரமே முதன்மையானது.
.
அதுசரி….
இதற்கும் எழுத வந்த சமாச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பித்தான் போயிருப்பீர்கள் நீங்கள்.
.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்
1961 இல் ஆரம்பிக்கப்பட்ட அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அப்படிச் சொன்னது…
ஓகே.
.
ஏறக்குறைய எழுபதாண்டுகளுக்கு முன்னர்
இனம்… நிறம்… பால்… மொழி… சமயம்… பிறப்பு… உட்பட எதிலும் பாகுபாடு காட்டக்கூடாது என்று ஐ.நா வினது உலகளாவிய மனித உரிமைப் பிரகடனமும் 1948 இல் இதைத்தான் சொன்னது…
அதுவும் ஓகே தான்.
.
ஆனால் அதற்கும் கால்நூற்றாண்டு முன்னரே
இதை உணர்ந்து புரிந்து செயலில் காண்பித்தாரே
ஈ.வே. ராமசாமி என்கிற மானுடன்…..
அதுதான் நம் ஆச்சர்யத்தின் உச்சம்.
.
முதலில் இம்மானுடனைப் புரிந்து கொண்டால்தான் அவரை அடியொற்றி வந்த அவரது மாணவன்
தொ.ப. என்கிற தொ.பரமசிவனையும் புரிந்து கொள்ள முடியும்.
அதற்காகத்தான் இந்தப் பீடிகை.
.
பழுத்த நாத்திகரான பெரியார்
ஆன்மீகத்தையே சுவாசித்து வாழ்ந்த
மறைமலை அடிகளாரோடு
எத்தகைய நேசபூர்வமான உறவைப் பேணினார்…?
.
இறை நம்பிக்கையில் திளைத்த மடாதிபதியான குன்றக்குடி அடிகளாருடனான
அவரது தோழமை எப்பேர்ப்பட்டது…?
.
1938 இல் இந்தி திணிப்புக்கு எதிரான போரில்
பரவஸ்து ராஜாகோபாலாச்சாரியார்
போர்ப்படைத் தளபதியாக பெரியாரால் முன்நிறுத்தப்பட்டது எவ்விதம் சாத்தியமாயிற்று…? என்கிற வினாக்களுக்கு விடை தெரிந்தவர்களுக்கு தொ.ப. குறித்தும் புரிந்திருக்கும்தான்.
.
சாமியே இல்லேங்கிற நமக்கு
சிறு தெய்வமாவது…. பெருந்தெய்வமாவது…
எது எக்கேடு கெட்டா நமக்கென்ன…. என்று விட்டேத்தியாகத்தான் இருந்தேன் நானும்.
தொ.ப.வை வாசிக்கும் வரை.
.
தொ.ப. என்கிற நமது பரமசிவனைப் பற்றிப் புரிய வைத்த ”பெருமை”க்குச் சொந்தக்காரர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான்.
அந்த வகையில் நான் உண்மையிலேயே நன்றிக் கடன் பட்டவன்தான் அவருக்கு.
.
”தமிழக கோயில்களில் ஆடு கோழிகள் பலியிடக் கூடாது” என்கிற தடைச் சட்டம் கொண்டு வந்தபோது ராமகோபாலன் மட்டுமல்ல…
”விடுதலை” ஆசிரியரும் அதை ஆதரித்த அரசியல் அதிசயம் அரங்கேறியது.
.
இந்த இரண்டு முனைகளும் ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணையும் சாத்தியமேயில்லையே….
இதில் ஏதோ சிக்கல் இருக்கிறது… என்று மனதுக்குப் பட்டது அப்போதுதான்.
.
(பிற்பாடு ஆசிரியருக்கும் அவருக்குமான சந்திப்பு… தொ.ப மறைவுக்கு ”விடுதலை” வெளியிட்ட 12 பக்க சிறப்பு மலர் போன்றவையெல்லாம் பின்னர் நிகழ்ந்த மகிழ்ச்சியும்… நெகிழ்ச்சியும்… கலந்த மாற்றங்கள்…)
.
சங்கரமடத்தில் கிடாய் வெட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்தவும் முடியாது…
சங்கிலிக் கருப்பராயன் கோயிலில் சர்க்கரைப் பொங்கல்தான் வைக்க வேண்டும் என்று சண்டித்தனம் செய்யவும் கூடாது…
என்கிற நெத்தியடி உண்மையைப் புரிய வைத்தது தொ.ப.வினது கருத்துக்கள்தான்.
.
எந்தவொரு விஷயத்தையும்
ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முயல்வது எவ்வளவு அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டது அப்போதுதான்.
.
“பெரியார் இன்னைக்கு இருந்திருந்தார்ன்னா… ’மொதல்ல… கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள்ள போறதுக்கு எல்லாருக்கும் கோயிலத் திறந்துவிடு…. அதுக்கப்புறம் யார் யார் எதை எதைச் சாப்பிடலாம்கிறத பார்க்கலாம்…’ன்னு சொல்லீருப்பாரு” என்று நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையில் இருக்கும் நுண் அதிகாரத்தைத் தோலுரித்தார் தொ.ப.
.
நாட்டார் வழக்காற்றியல்… பண்பாட்டுப் பிரச்சனைகள்… சிறுதெய்வ வழிபாடு… என்பவற்றோடு மட்டும் நின்றுவிட்டவரல்ல தொ.ப.
ஒரு குறிப்பிட்ட துறையின் ஆய்வாளர் என்கிற புள்ளியோடு மட்டும் நிறுத்திவிட முடியாது அவரை.
.
தொ.பரமசிவன் என்பவர் தமிழாசிரியர்…
தமிழ்ப் பேராசிரியர்…
தமிழ்த் துறைத் தலைவர் என்பவற்றையெல்லாம் தாண்டி அவர் மானுடவியலில் எத்தகைய ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருந்தார் என்பது ஆதிச்சநல்லூருக்கு அவரோடு பயணித்து அருகில் இருந்து அவர் சொல்வதை அவதானித்தவர்களுக்கும் தெரியும்.
அது பற்றி அவரோடு அளவளாவியவர்களுக்கும் தெரியும்.
.
இன்றைக்கு கீழடி குறித்த நமது
அக்கறைக்கும் ஆதங்கங்களுக்கும் இடையே ஆதிச்சநல்லூரில் புதையுண்டு கிடக்கும் தமிழர்களது தொல் நாகரீகம் குறித்த வரலாறும்…
அது இன்னமும் வெளிவராமல் இருக்கும் மர்மமும் குறித்து தொ.ப.வைக் கேட்டால் மணிக்கணக்காக விளக்குவார்.
.
பத்தாண்டுகள் முன்பே ஆதிச்சநல்லூருக்கு எம்மை அழைத்துச் சென்ற தொ.ப. அதன் ஆதி வரலாறு குறித்துச் சொன்னது இதுதான் :
.
”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.
1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம்.
அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
.
ஜாகருக்குப் பின்பு வந்தவர்தான் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த ரியா. இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்” என்றார் தொ.ப.
.
இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என்றோம்
.
“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்ந்தார் தொ.ப.
.
”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்…..
அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்….
அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்….
அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.
.
இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால்
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது
என்றாகி விடுகிறது.
அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம்
இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை.
.
இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலைத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது.
.
2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.” என்றார் தொ.ப.
.
மானுடவியலின் மீது மகத்தான காதல் கொண்ட தொ.ப.வைப் போன்றோருக்கே
இத்தகைய புதையுண்டு கிடக்கிற நாகரீகத்தின் பின்னணியில் உள்ள அரசியல் புலப்படும்.
.
ஈழவிடுதலைப் போராட்டம் தொடங்கி உலகமயமாக்கல் வரைக்கும் துல்லியமான பார்வையைக் கொண்டவர்தான் தொ.ப.
.
இனப்படுகொலை தலைவிரித்தாடிய பொழுதில்….
”ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்கினோம்.
.
எத்தனை நாளைக்குத்தான் சாவை கேட்டுக் கொண்டே இருப்பது. நாளைக்கு சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும்?
.
இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.
.
தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை.
கலைஞர் கூப்பிட்டதினால் சிவத்தம்பி போகலாம்.
நான் போக மாட்டேன்.”
என்று சண்டே இந்தியன் வார இதழுக்கு அவர் அளித்த நேர்காணலை என்றும் மறக்க இயலாது.
அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் தமக்கு அறிமுகமானவர்கள்தான் என்றாலும்
அநீதிக்கு எதிராக அறச்சீற்றம் கொள்ளத் தயங்காத மனம் நம் அன்பிற்குரிய தொ.ப. வுடையது.
.
ஏறக்குறைய பத்தாண்டுகள் எண்ணற்ற சந்திப்புகள்… பயணங்கள் எனக் கழிந்தது எம் உறவு.
மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது சந்திக்காவிடில் நிறைவு கொள்ளாது மனம்.
”என்ன… இன்னும் காணோம்ங்குது பெருசு…. எப்ப வாறீங்க…?” என்று எங்களது பாளையங்கோட்டைத் தோழர்களிடம் இருந்து அலைபேசி அழைப்பு வரும்.
அல்லது அதற்கு முன்பே நாங்கள் போய் நிற்போம்.
.
”பெண்கள மாதிரி ஜனநாயக சக்திகளப் பார்க்கவே முடியாது. அவ்வளவு Democratic.
இந்த சாதி… சமயம் எல்லாம் ஆம்பளைகளுக்குத்தான்…
எந்தப் பெண்ணாவது தன் பேருக்குப் பின்னாடி சாதிப் பேரப் போட்டுக்கறாங்களா பாருங்க…
.
உண்மைல சாதீங்குறது பாதுகாப்பற்றவனின் கடைசி புகலிடம்… சாதி எல்லாம் ஆம்பிளைகளுக்குத்தான். பெண்களுக்குக் கிடையாது” என்பார் தொ.ப.
.
பல ஆய்வாளர்களோடு பழகியிருக்கிறேன் என்றாலும் தொ.ப வைப் போன்ற ஆய்வாளர்கள் அரிதினும் அரிதானவர்கள்.
.
இந்த ஆய்வாளர் அந்த ஆய்வாளருக்குத்
தெரியாமல் ”ஆய்ந்து” கொண்டிருப்பார்.
அந்த ஆய்வாளர் இந்த ஆய்வாளருக்குத்
தெரியாமல் ”ஆய்ந்து” கொண்டிருப்பார்.
”ப்ப்ப்ப்ராமணன்” தான் வேதங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதைப் போல
அம்புட்டு ”ரகசியம்” காப்பார்கள்.
.
ஆனால் தொ.ப.விடம்…
”அய்யா இந்த அன்னி பெசண்ட்… “ என்று
ஆரம்பித்தால் போதும்….
.
“Mrs Besant – Her Tricks and Dupes படிங்க….
டி.எம்.நாயர் அவரோட Anti Septic பத்திரிக்கைல
விரிவா எழுதீருப்பாரு….” என்பார்.
.
விவசாயிகள் நிலை…. வேளாண்மை… என்றாரம்பித்தால்….
”1900 லயே சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு “விவசாயம் அல்லது கிருஷி சாஸ்திர சாரசங்கிரகம்”ன்னு இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்துலயே புத்தகம் எழுதீருக்கார்…
அறிவியல் தமிழுக்கு வந்த முன்னோடி நூல் அது… ” எனத் தொடரும் அவர் பேச்சு.
.
மருதநாயகமாக இருந்து கான் சாகிப்பான
வீரனைப் பற்றி வினவினால்…
”அவரப் பத்தி Rebel Commandant ன்னு ஒரு புத்தகம் இருக்குங்க. வாசிச்சுப் பாருங்க…” என நமக்கு அடுத்த கட்ட வாசிப்புக்கு வழிகாட்டுவார்.
.
அவரை ”ஆய்வாளர்” என்பதற்குள் அடைத்துவிடுவதைக் காட்டிலும்…
அநேகம் பேர் ஆய்வுகளை நோக்கி அடியெடுத்து வைக்கத் துணை நின்ற உந்துசக்தி
என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
.
கடந்த ஆண்டு சந்திப்பின்போது கூட
“அய்யா…. நாம ஹம்பிக்கு எப்பப் போறது?” என்றேன்.
.
“சாகறதுக்குள்ள போகணும்ன்னுதான் நெனைக்கிறேன். முடியுமான்னு தெரியல….
ஆனா அங்க போறதுக்கு முன்னால
நீங்க அந்த Forgotten Empire படிச்சிருங்க…” என்றார்.
.
எப்படியாவது தலைவனைக் கடத்திக் கொண்டாவது போய்விட வேண்டும் என்கிற பேராசையில்…
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு கார்… அங்கிருந்து பெங்களூருக்கு விமானம்….
பெங்களூரில் இருந்து ஹம்பி பக்கத்துல உள்ள
ஊருக்கு விமானப் பயணம்…
அங்கிருந்து மறுபடியும் கார்…
என நண்பர்களும் நானும் திட்டங்கள்
எல்லாம் போட்டு வைத்திருந்தோம்.
.
ஆனால் அதற்குள்
அவரது ”பயணம்” வேறு பக்கம்
திசைமாறி விட்டது.
.
தெய்வ நம்பிக்கையற்ற அவரும் நானும்
சேரன்மாதேவி கோயில்…
உக்கிரன்கோட்டை கோயில்…
அம்பாசமுத்திரம்…
கழுகுமலை…
எனச் சுற்றி வந்த கோயில்கள் ஏராளம்.
.
எதிரே இருப்பது அமைச்சராயினும் சரி….
தேநீர் கொண்டு வந்த சிறுவனாயினும் சரி…
எல்லாமே சமம்தான் அவருக்கு.
.
தான் கற்றதை அள்ள அள்ள கொடுத்துக் கொண்டே இருப்பார் தொ.ப.
அது மாற்றுக் கருத்து கொண்டோராயினும் சரி.
.
காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த…
தேசியத்தை முன் நிறுத்திய கே.பி.சுந்தராம்பாள் அன்றைய தமிழக ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டபோது….
.
”அவருக்கு இல்லாத ஆற்றலா…
அவருக்கு இல்லாத குரல் வளமா…?
கே.பி. சுந்தராம்பாள் ஒரு பார்ப்பணப் பெண்மணி அல்ல என்பதற்காகத்தானே நீங்கள் எல்லோரும் இருட்டடிப்பு செய்கிறீர்கள்….” என்று
தந்தை பெரியாரும் அவரது குடியரசு பத்திரிக்கையும் கடும் கண்டனம் தெரிவித்த பிறகே
“சுதேசமித்திரன்”, “இந்து” போன்ற பத்திரிக்கைகள் அவரைப் பற்றி எழுதத் தொடங்கின.
.
தனது அடிப்படை சித்தாந்திற்கே எதிரானவர் என்று தெரிந்தும்கூட பிறரது அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பக்குவமும் பண்பும் பெரியாருக்கு இருந்தது. பிறகு அவரது மாணாக்கரான தொ.பரமசிவனுக்கு இல்லாமலா போகும்?.
.
எப்படி தெய்வ நம்பிக்கையற்ற பெரியார்
கோயில் நுழைவுப் போராட்டம் தொடங்கி
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது வரைக்குமான ஆத்திகர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தாரோ….
அப்படி தொ.ப.வும் அவைதிக மரபைப் பின்பற்றியவர்களது வழிபாட்டு உரிமைகளில் பிறர் தலையிடுவதைக் கண்டித்தார்.
.
போலி ஆன்மீகவாதிகளுக்கு
உண்மையான அச்சுறுத்தல்
கோயிலைக் கைவிட்டு வெளியில் நிற்கும்
எம்மைப் போன்றவர்கள் அல்ல.
தொ.ப.வைப் போன்றவர்கள்தான்.
.
தொ.ப தான் வாழும் காலத்தில்
எப்படி சாதியத்திற்கு எதிராக நடை போட்டாரோ…
அப்படியே இம்மியளவும் சாதீயச் சடங்குகளோ…. சமயச் சடங்குகளோ இன்றி
தனது சுயமரியாதைமிக்க கண்ணியமான
இறுதிப் பயணத்தையும் மேற்கொண்டார்.
.
அதற்குத் துணை நின்றது அவரது குடும்பமும் தோழர்களும்தான்.
.
வாழும் காலத்திலேயே ஓராயிரம் சமரசம் செய்து கொள்வோர் மத்தியில்…
அந்த மனிதன் யாருக்காக வாழ்ந்தான்….
எதற்காக உழைத்தான்…
எதை பின்பற்றினான்…
எதை வலியுறுத்தினான்…
எதை நடைமுறைப்படுத்தினான்… என்பதற்கு
அந்த இறுதிப் பயணமே சாட்சியமாக நிற்கிறது.
.
முதலிலேயே குறிப்பிட்டதைப் போல…
நட்பு சக்தி எது? பகை சக்தி எது? என்பதை பெரியாரைப் போலவே துல்லியமாக அறிந்து வைத்திருந்தார் தொ.ப.
.
அதுதான்…
மொன்னை நாத்திகவாதிகளும்
மூடக் காவிகளும்
தொ.ப.விடம் தோற்றுப் போகும்
மகத்தான புள்ளி.
.
.
பாமரன்.
.
( நன்றி : “காக்கைச் சிறகினிலே” மாத இதழ்
- பிப்ரவரி 2021 )