உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் சொன்னதென்ன..?
அன்பார்ந்த வாசகர்களே நமது நீதித்துறை அதன் விழுமியங்களை இழந்து அநீதிகளின் உறைவிடமாக ஆனபோது, அதனைதட்டிக்கேட்டார், பிரசாந்த் பூஷன்.
உச்ச நீதிமன்றம் நாட்டை பாசிசத்தின் பிணக்கமாக ஆக்கிடுமுன் அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என நினைத்தார். அத்தனையும் இந்த நாட்டின் மீது கொண்டப்பற்றால், பாசத்தால் இந்த நாட்டைக் காத்திட தலையெடுத்த தலை மகன்களில் ஒருவர் அவர்.
இன்றைய இம்சை அரசர்களின் ஆட்சி நிச்சயமாக ஒருநாளில் வீழும். அன்று இந்தியாவைக் காத்தவர்களின் பட்டியலில் நிச்சயமாக ஓர் இடத்தைப் பிடிப்பார் பிரசாந்த் பூஷன் அவர்கள் என்பது திண்ணம்.
நமது உச்ச நீதிமன்றத்தின் நீதி நழுவிய நெறிமுறையை இரண்டு டிவிட்டர் பதிவுகளில் சுட்டிக் காட்டினார் வீரமகன் பிரசாந்த் பூஷன்.
ஒன்று, 27-06-2020இல் பதிவிடப்பட்டது.
பிரிதொன்று 29-06-2020 அன்று பதிவிடப்பட்டது.
இவை இரண்டையுமே சுற்றிவளைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக ஆக்கியது நமது உச்ச நீதிமன்றம். அந்த வகையில் அவர் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக அவருக்கு உச்ச நீதிமன்றம் 22-07-2020இல் ஓர் தாக்கீதை அனுப்பியது.
இந்த தாக்கீதுக்கு அவர் 02-08-2020 அன்று ஒரு பதிலை – உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்தப் பதில், நம் நாட்டில் பாசிஸ்ட்டுகள் என்னென்ன அநீதிகளைச் செய்தார்கள், அதற்கு உச்ச நீதிமன்றம் எப்படியெல்லாம் பக்கதாளம் போட்டது என்பதையெல்லாம் விரித்துரைக்கின்றது.
அத்தோடு நில்லாமல் நம் நாட்டில் நடந்த பயங்கரமான ஊழல்கள், அநீதிகள் ஆகியவற்றையும் பட்டியல் போடுகின்றது. இதனை இந்தியாவின் சமகால வரலாறு என்பதே சரி!
அதன் தமிழ் வடிவத்தை இங்கே சமர்ப்பிக்கின்றோம்…
அதற்கு முன் இந்த பிரசாந்த் பூஷனின் பின்னணியை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்…
யார் இந்த பிரசாந்த் பூஷன்:
பிரசாந்த் பூஷன் அவர்கள், உலகப் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் ஷாந்தி பூஷன் அவர்களின் மகன்.
ஷாந்தி பூஷன் அவர்களைப் பற்றி நிரம்ப எழுதலாம். விரிவஞ்சி மிகச் சுருக்கமாக சில வீர செயல்களை மட்டும் இங்கே பதிவு செய்கின்றோம்.
நம் நாட்டில் இருந்த பிரதமர்களில் ஜவஹர்லால் நேருவைப் போல் அவரது மகள் இந்திரா காந்தியும், நாட்டின் கொள்கைகளை வடிவமைப்பதில் பல சாகசங்களைச் செய்தவர்.
ஆனால், அவரும் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரியாகிட தலைப்பட்டார். அது அவருக்கு ஏற்பட்ட தோல்வியின்போதுதான்.
1971-இல் அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது ‘செல்லாது’ என 1975 ஜூன் 26 ஆம் தேதி அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எல்லா அதிகாரத்தையும் ஒருங்கே பெற்ற, இந்திரா காந்தி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என வழக்குத் தொடர்ந்தவர் ராஜ் நாராயணன் என்பவர். அந்த வழக்கில் வாதாடியவர் ஷாந்தி பூஷன்தான். இதில் இந்திரா காந்தியின் கெடுபிடிகளுக்குச் சற்றும் அஞ்சாமல், வழக்கில் நிலையாய் நின்று வாதாடி வென்றவர் இந்த ஷாந்தி பூஷன்.
தீர்ப்பு இந்திரா காந்தியை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்தது செல்லாது என்று மட்டும் வரவில்லை. அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும் வந்தது.
இதில் இந்திராகாந்திக்கு ஒரு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. அதை தேசிய நெருக்கடியாக அறிவித்தார். ஷாந்தி பூஷன் போன்றவர்களெல்லாம் சிறைபிடிக்கப்பட்டார்கள். எதற்கும் அஞ்சாமல் நிலையாய் நின்றார் ஷாந்தி பூஷன். பின்னர் 1977 முதல் 1979 வரை இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்தார்.
உச்ச நீதிமன்ற ஊழல்;
2009/2010 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தின் ஊழல்கள், ஒரு பேட்டியில் விவாதமானபோது, (The Week 2010) உச்ச நீதிமன்ற 16 நீதிபதிகளில் 8 பேர் நிச்சயமாக ஊழல் பேர்வழிகள், 4 பேர் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்கள் 4 பேர் பற்றி தெரியாது என அழுத்தந்திருத்தமாக கூறியவர். ஷாந்தி பூஷன், அப்போது இவருடைய மகன் பிரசாந்த் பூஷனும் உடனிருந்தார்.
உச்சநீதிமன்றம் இந்தக்கூற்றுக்கு நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியபோது, துணிச்சலோடு அதை எதிர்கொண்டு தன்னுடைய கூற்றை ஓர் அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர். தான் சொன்னதை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
ஆனால், உச்சநீதிமன்ற விவகாரத்தை விவாதமாக்கிட முனைந்திடவில்லை. மாறாக, ஷாந்தி பூஷன் அவர்களிடம் தனது அறிக்கையை பின் வாங்கிட வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும் என அச்சுறுத்தியது. அதற்கு ஷாந்தி பூஷன் அவர்கள் “இந்த நாட்டின் நீதி நிர்வாகம் நீதி-இன்பக்கம் திரும்பிட நான் சிறை செல்லவும் தயாராக இருக்கின்றேன்” என்றார். அத்தோடு உச்சநீதிமன்றம் அந்த வழக்கை அப்படியேவிட்டது. இதனை அப்போதே வைகறை வெளிச்சம் இதழில் வெளியிட்டோம்.
நாடாளுமன்றத் தாக்குதல் 13/12;
அதேபோல் இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் நமது இந்திய பெருநாட்டின் ஆட்சியைப் பிடிக்க நாடெங்கும் தொடர்ந்து குண்டுவெடிப்புகளை நடத்தி வந்தார்கள். இந்தக் குண்டு வெடிப்புகளுக்கான பழியை முஸ்லிம்கள் மேல் போட்டார்கள்.
முஸ்லிம்களைப் பேய்களாகவும், பிசாசுகளாகவும் காட்டினார்கள். நாட்டு மக்களை இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் ன்றும் பிரித்துக் காட்டினார்கள். ஆனால் நாட்டு மக்கள் முஸ்லிம்கள்மேல் போட்டப்பழியை அத்துணை எளிதாக நம்பிடவில்லை. அதனால் ஒரு பெரிய ஏற்பாட்டைச் செய்தார்கள். அதுதான் நாடாளுமன்றத் தாக்குதல் 13/12.
2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் நாள் இந்த நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தப் பெற்றது. இந்ததாக்குதலை கஷ்மீரில் உள்ள அரசு காவல்படையான “STF” Special Task Force – சிறப்பு அதிரடி காவல்துறையும் டெல்லியில் நமது சாத், சாத் அத்வானி அவர்களுக்கு வேண்டிய ராஜ்பீர் சிங் என்ற (Delhi Speical Police)-டெல்லி சிறப்புக் காவல் படையைச் சார்ந்தவரும் சேர்ந்து ஏற்பாடு செய்தார்கள்.
வழக்கம்போல் பழியை முஸ்லிம்கள் மேல் போட்டார்கள்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராக பணியாற்றி வந்த ‘இஃப்திகார் ஜீலானி என்ற கஷ்மீர் முஸ்லிம்தான், நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளை எனக் கூறினார்கள். ஊடகங்கள் அதனை பெரிதாக விளம்பரப்படுத்தின. இன்னும் பல அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து, சித்திரவதைச் செய்தார்கள். ஒப்புதல் வாக்குமூலங்களை வாங்கினார்கள். கீழ் நீதிமன்றத்தில் அதாவது சிறப்பு நீதிமன்றத்தில் மரண தண்டனையையும் பெற்றுத் தந்தார்கள்.
வழக்கு உயர் நீதிமன்றம் வந்தது. அங்கே ஷாந்திபூஷன் அவர்கள் சல்லிக்காசுகூட வாங்கிடாமல் வாதிட்டார் என்பது ஒருபெரும் செய்தி.
அவர்தான் நாடாளுமன்றத் தாக்குதலின் முக்கிய மூளை எனக் குற்றம் ஜோடிக்கப்பட்ட ‘இஃப்திகார் ஜீலானி’ அவர்களுக்காக வாதிட்டார். அத்தோடு சவ்கத் ஹூசைன் என்பவருக்காகவும் வாதிட்டார். அங்கே – உயர்நீதிமன்றத்தில் பொட்டில் அறைந்தாற்போல் இப்படிக் கூறினார்.
“வழக்கை விசாரித்த அதிகாரிகள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 194,195 ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனையை பெறும் குற்றங்களைச் செய்திருக்கின்றார்கள். இத்துணை, பார தூரமான குற்றங்களை, வழக்கை விசாரித்த அதிகாரிகள் செய்திருக்கும்போது, அவர்களைத் தண்டிக்க வேண்டும். அவர்களைத் தண்டிப்பதன் மூலமே, சாட்சியங்களைப் பொய்யாகத் தயாரிப்பதையும் போலி ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை உண்மையென நீதிமன்றத்தில் வாக்குறுதி தந்து சமர்ப்பிப்பதையும் தடுத்திட இயலும்.”
ஆக, தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அந்த அப்பாவி முஸ்லிம்களல்ல மாறாக வழக்கை விசாரித்தவர்கள் தான் என வாதாடினார்.
அத்தோடு கீழ் நீதிமன்றம் சாட்சியங்களை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு அப்பாவி முஸ்லிம்களைத் தண்டித்திருக்கின்றது. அந்த நீதிபதியை தண்டிக்காத வரை, இந்திய குற்றவியல் நீதித்துறையின் மேல் மக்களுக்கு நம்பிக்கை வராது என வாதாடினார்.
இதில் மூத்த வழக்கறிஞர் இராம்ஜெத் மாலினியும், இந்திரா ஜெய்சிங் அவர்களும் பங்கெடுத்து வாதிட்டார்கள்.
(ஆதாரம்: December-13, Terror Over Democracy ; Compited by PUDR, Page. 47-50)
(மேலும் தகவல்களுக்கு “நாடாளுமன்ற தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்” நூலைப் படிக்கவும் ஆசிரியர் மு. குலாம் முஹம்மத் “வேர்கள்” வெளியீடு பக்கங்கள் 24-27)
ஷாந்தி பூஷன் அவர்கள், நீதிபதிகள், நீதி மன்றங்கள் இவையெல்லாம் தங்களுடைய செயல்களுக்குப் பதில் சொல்லும் ஓர் ஆணையம் அல்லது ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றொரு முழக்கத்தை முன் வைத்து வருகின்றார்கள். இதற்காக CJA – Committee on Judical Accountability என்றொன்றை அதாவது, “நீதித் துறைதன் செயல்களுக்குப் பதில் சொல்வதற்கான குழுமம்” என்றொன்றை தொடங்கி நடத்தி வருகின்றார். இதில் அவருடைய மகன் பிரசாந்த் பூஷனும் இணைந்து செயல்படுகின்றார்.
பிரசாந்த் பூஷன்;
இவர் தன் தந்தை ஷாந்தி பூஷன் அவர்களைப் போலவே போர்க்குணம் கொண்டவர்.
‘பிரசாந்த் பூஷன்’ அவர்கள் தந்தை இந்திரா காந்திக்கு எதிராக வழக்காடி வென்றபோது பிரசாந்த் பூஷன் ஓர் மாணவர் மட்டுமே! அப்போதே அந்த வழக்கைப் பற்றி ஒரு நூலை எழுதினார். அதன் பெயர் “The Case that Shook india” “இந்தியாவை உலுக்கிய வழக்கு.”
2009இல் இவர் நடத்திய வழக்கொன்றில் நீதித்துறையும், நீதிபதிகளும் (RTI) என்ற தகவலறியும் சட்டத்தின் கீழ் வந்திட வேண்டும் என வாதிட்டார். இவர் தொடர்ந்து எடுத்த முயற்சிகளின் முடிவாக நீதிபதிகள் தங்கள் சொத்துக்கள் பற்றிய விபரங்களை நீதித்துறையின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்ற நடைமுறை வழக்கில் வந்தது.
இனி அவர், தண்டிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் தந்த பதில் – அதாவது நாட்டின் சமகால வரலாற்றை-ஐ பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்திற்கு தந்த பதில்;
“பிரசாந்த் பூஷன் ஆகிய நான், உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்டே” ஒரு பைக்கில் பயணம் செய்வதைக் குத்திக்காட்டி ஒரு பதிவை டிவிட்டரில்29-6-2020 இல் போட்டிருந்தேன். இந்தப் பதிவு உச்ச நீதிமன்றம் ஒருவார காலமாக இயங்கிடவில்லை என்ற ஆதங்கத்தில் போடப்பட்டது. உச்ச நீதிமன்றம் இயங்கவில்லை. ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உல்லாசமாக பைக்கில் பவனிவந்தது என்னை அதிகமாக வருத்தியது.
இதனால் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட மக்கள் நீண்ட நாட்களாக சிறையில் கிடக்கும் மக்கள், இவர்களில் பலர் ஏழைகள் இவர்களின் வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அதேபோல் பலருடைய உயிரையும் வாழ்க்கையையும் முடிவு செய்யும் வழக்குகள், இவையெல்லாம் விசாரணைக்கு வராமலேயே நிலுவையில் கிடக்கின்றன. அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய வழக்குகளும் அப்படியே நிற்கின்றன. இப்படி அவருடைய கடமைகளை அப்படியே போட்டுவிட்டு, அவர் பலருடைய குழுமத்தில் ஒரு முகக் கவசம் கூட அணியாமல் நின்று கொண்டிருந்தது பொறுப்பற்றச் செயல். அந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் முடங்கிக் கிடந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்குகளில் நேரலையில் (Online) திருப்தி இல்லாமல் அரைகுறையாகவே நடந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற ராஜ்பவனில் BJP பாரதீய ஜனதா கட்சிக்காரர் ஒருவருக்குச் சொந்தமான பைக்-இல் அமர்ந்திருந்தார் என்பது, சமூக வலைத்தளங்களில் தகுந்த ஆதாரங்களோடு உலா வந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சி ஊடகங்களும் இதனை ஆதாரத்தோடு வெளியிட்டன.
உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த செயல்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்காமல் என் ஆதங்கத்தை பதிவு செய்தது நீதிமன்ற அவமதிப்பில் எப்படி வரும்? இதனை நீதிமன்ற அவமதிப்பு என எடுத்துக்கொண்டால், அது பேச்சுரிமையின், கருத்துச் சுதந்திரத்தின், கழுத்தை நெறிப்பதாகும். அது நமது அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 19(1)(a)இன் மீது தேவையற்ற ஓர்கட்டுப்பாட்டை விதித்ததாகவும் ஆகும்.
என்னுடைய இரண்டாவது டிவிட்-ஐ 27-6-2020 பொறுத்தவரை, அதில் மூன்று முக்கிய கூறுகள். அவை ஒவ்வொன்றும் இந்த நாட்டின் நிலைமையைப் பற்றிய என்னுடைய கருத்துக்கள். குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக என்னென்ன நீதித்துறையில் நடந்தன என்பதைப் பற்றியும் அவற்றில் உச்ச நீதிமன்றத்தின் பங்கென்ன? அதிலும் கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் நிலையும் நிலைபாடும் என்னென்ன? என்பன பற்றியவை.
என்னுடைய ‘டிவிட் ‘இன் முதல் பகுதி என்னவெனில், நம் நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் மக்களாட்சி பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது.
எனது டிவிட்-இன் இரண்டாம் பகுதி என்னவெனில் நமது உச்ச நீதிமன்றம், இந்த மக்களாட்சி அழிக்கப்படுவதற்கு மிகப்பெரிய பங்களிப்பை நல்கியது. உண்மை என்னவெனில் மக்களாட்சியை மண்மூடிப்போக செய்ததில் ஒரு பெரும் பங்கு உச்ச நீதிமன்றத்தையே சாரும்.
என்னுடைய பதிவின் மூன்றாம் பகுதி என்னவெனில், கடந்த காலத்தில் நான்கு தலைமை நீதிபதிகள், நம் மக்களாட்சியை மாய்த்தலில் ஆற்றிய பங்கு பற்றியது.
இந்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாமலிருக்கலாம், கசப்பாகவுமிருக்கலாம். ஆனால், நிச்சயமாக அவை நீதிமன்ற அவமதிப்பின் கீழ்வராது, என்பதை நம் நாட்டில் வழங்கப்பெற்ற பல தீர்ப்புகள் உறுதி செய்கின்றன.
அதேபோல, பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வழங்கப்பெற்ற தீர்ப்புகளும் உறுதி செய்கின்றன.
நீதித்துறை உள்ளிட்ட எல்லா அமைப்புகளும் நீதியோடும் நேர்மையோடும் இயங்கிட வேண்டும் என்பது, ஜனநாயகத்தின் உயிர் நாடி. இவையெல்லாம் குடிமக்களின் நலன் காக்க, உரிமைகளைக் காக்க இயங்கிட வேண்டும். அவர்கள் (குடிமக்கள்) இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி தாராளமாகக் கருத்துகளைப் பறிமாறாலாம். அவற்றை சீர்செய்யும் அளவில் மக்கள் கருத்துக்களை உருவாக்கலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.
நான் இங்கே ஒன்றை சமர்ப்பிக்க விரும்புகின்றேன். அது என்னுடைய விமர்சனங்கள் வெளிப்படையானவை. ஆனாலும், மிகவும் கவனமாகக் கணித்துக் கூறப்பட்டவை. அவை மிகவும் பொறுப்புடனும் கவலையுடனும் கூறப்பட்டவை.
நான் “டிவிட்” பண்ணியவை கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் எப்படி இயங்கியது என்பதன் உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை. விருப்பு வெறுப்புகளற்று எனக்கு யதார்த்தமாகப் பட்டவை.
குறிப்பாக அவை கடந்த கால நான்கு தலைமை நீதிபதிகளைப் பற்றியவை. அவர்கள், அதிகாரத்தை நீதிநெறிகளின்படி கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்தி வைத்திட வேண்டிய தங்களது தார்மீகக் கடமையிலிருந்து தவறினார்கள். உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மைக் கொண்டனவாகவும், பாமர குடிமக்களுக்கும் மற்றவர்களுக்கும் பதில் சொல்லிடும் அளவில் பொறுப்போடும் கடமை உணர்வோடும் இருந்திட வேண்டும். நீதிபதிகளும் அவ்வாறே நடந்தி வேண்டும். ஆனால், அவர்கள் ஜனநாயகத்தை மக்களாட்சி தத்துவத்தை வீழ்த்திடும் வகையிலேயே வாடிக்கையாகச் செயல்பட்டார்கள்.
நான் இன்னும் சமர்ப்பிக்கின்றேன். தலைமை நீதிபதி நீதிமன்றம் அல்ல. ஆனால் தலைமை நீதிபதி எப்படி நடந்துகொள்கின்றார், அவர் எப்படி தனது ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துகின்றார் என்பவையெல்லாம் நீதிபரிபாலனத்தின்மேல், தாக்கங்களை ஏற்படுத்தும்.
கடந்த நான்கு தலைமை நீதிபதிகளும், தங்களை ‘ரோஸ்டரின் மாஸ்டர்கள்’ (நீதிபரிபாலனத்தின் தலைவர்கள்) என்ற பெயரில், அதிகார வர்க்கத்தின் ஆட்டங்கள் அனைத்தையும் ஆமோதித்துக் கொண்டிருந்தார்கள். இந்த அதிகாரவர்க்கத்தின் ஆட்டங்கள், பரவிக் கொண்டே இருந்தன. எல்லாத் துறைகளிலும் தலைவிரித்தாடின. இவற்றைத் தலைமை நீதிபதிகள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் கும்பலாட்சியை செயல்படுத்தினார்கள். எதிர்க் கருத்துக்களைச் சொன்னவர்களை, அடக்கினார்கள். அவர்கள் மூச்சுவிட முடியாத அளவுக்கு அடக்கினார்கள். நாடெங்கும் எதிர்க்கருத்தைச் சொன்ன அரசியல் வாதிகளையும், சமூக ஆர்வலர்களையும் சிறைபிடித்தார்கள். சித்திரவதைச் செய்தார்கள். அநீதிகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தவர்களின் கவனத்தை அந்த அநீதிகளின் பக்கம் திருப்புவது, நீதித்துறையை அவமதிப்பதாகவோ, நீதித்துறையை மோசமான விவாதத்திற்குள்ளாக்குவதோ ஆகாது. அதேபோல் இது நீதித்துறையின் கீர்த்தியை குறைத்துக் கூறுவதாகவும் ஆகாது.
இங்கே உச்ச நீதிமன்றம், ஓர் நிறுவனம் அது 31 நீதிபதிகளைக் கொண்டது. அதற்கென நீண்டதொரு பாரம்பரியமிருக்கின்றது. அதேபோல் பாரம்பரியமிக்க நடைமுறைகளையும், நெறிமுறைகளையும் கொண்டது. இந்த உச்ச நீதிமன்றத்தை ஒரு நீதிபதியோடு ஒப்பிட்டுவிட முடியாது. அதேபோல் அடுத்தடுத்துவரும் நான்கு நீதிபதிகளோடும் ஒப்பிட்டு விட முடியாது. அக்கறையுடன் ஒரு நீதிபதியை, அல்லது நான்கு நீதிபதிகளை குறை கூறுவது, நீதிமன்றத்தை மோசமான விவாதத்திற்குள்ளாக்குவதாகாது. அதேபோல் இது நீதிமன்றத்தை, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்துக் காட்டுவதுமாகாது. தலைமை நீதிபதிதான் உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்தான் தலைமை நீதிபதி என எடுத்துக்கொள்வதுதான் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்துக் காட்டுவதாகும்.
- பிரசாந்த் பூஷனின் எதிர்வாதம் தொடரும்.
- மு.குலாம் முஹம்மது
வைகறை வெளிச்சம் ஆசிரியர்