குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான போட்டி ஆரம்பமாகிவிட்டது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர், பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி மர்முவும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனதா தளம், பாஜக ஒன்றிய அரசுகளில் அமைச்சராக பதவி வகித்த யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக்கியமான அமைப்புச் சட்ட பதவிக்கான தேர்தலை நாடு எதிர்நோக்கி உள்ளது. அரசின் தலைவராக பிரதமரும், நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவரும் இருப்பார்கள் என்றுதான் நமது அமைப்பு சட்டம் வரையரை செய்துள்ளது. அதனால் குடியரசுத் தலைவர் என்பவர் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அமைப்புச் சட்ட கண்ணோட்டம். குடியரசுத் தலைவர் பதவிக்கு அனைவருடைய ஒப்புதலோடு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதுதான் சிறப்பானதாக இருக்கும். ஆனால் இம்முறையும் அதற்கான வாய்ப்பு இல்லை. இதற்கான முயற்சியை முன் நின்று கைமேற்கொள்ள வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சிக்குத்தான் உண்டு. ஆனால் பிரதமரோ ஆளும் பாஜக தலைமையோ அதற்கான முழுமையான முயற்சிகளை எடுக்கவில்லை.
நாடாளுமன்ற இரு அவைகளில் உள்ள உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற அவைகளின் உறுப்பினர்கள், யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்தான் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குரிமை பெற்றவர்கள். ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் வாக்கின் மதிப்பு என்பது அம்மாநில மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படும். தற்போதைய நிலையில் பாஜகவிற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க தேவையான வாக்குகள் இல்லை. அவர்களுக்கு 48 சதவீத வாக்குகள்தான் உள்ளது. ஆனால், அதே நேரத்தில் வெளியில் உள்ள 52 சதவீத வாக்குகள் அனைத்தும் அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பி.ஜெ.டி, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானாவில் டிஆர்எஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக முன்னணி அரசில் அங்கம் அல்ல. அதே நேரத்தில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டிய கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவோ ஆதரவு தெரிவிக்கவோ முன்வரவில்லை. ஒடிசாவில் ஆளும் கட்சியான பி.ஜெ.டி திரௌபதி மர்முவிற்கு ஆதரவு அளித்து விட்டது. தங்களது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தான் அவர்கள் அதற்கு சொல்லும் காரணம். ஆனால், திரைக்குப் பின்னால் பாஜகவுக்கும் பிஜெடிக்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது. கணக்குகளின் அடிப்படையில் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து நின்றால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், அவ்வாறு நடக்க வேண்டும் என்றால் மாபெரும் அதிசயம் ஏற்பட வேண்டும்.
குடியரசு தலைவர் என்பவர் வெறும் ஒரு ரப்பர் ஸ்டாம்புதான் என பொதுவாக கூறப்படுவதுண்டு. ஆனால் அவ்வாறு நடைபெறுவது அன்றாட அரசியல் நடவடிக்கைகளிலும் கொள்கை உருவாக்க நேரங்களிலும் மட்டுமே. அமைப்புச் சட்டத்தின் காப்பாளர் என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு மிகப்பெரும் பொறுப்புகள் உண்டு. நமது ஜனநாயகமும் அமைப்பு சட்டமும் மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இக்காலகட்டத்தில் அந்தப் பதவிக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் உள்ளது. சங்பரிவார்கள் பெரும் எழுச்சியோடு உரிமை கொண்டாடும் ஒரு விஷயம் உள்ளது. பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், சபாநாயகர் ஆகிய பதவிகளில் அனைத்திலும் ஆர்எஸ்எஸ்காரர்கள்தான் உள்ளார்கள் என்பதுதான் அது. அந்த அமைப்பை பொறுத்தவரை இது பெருமைபடக்கூடிய விஷயம் தான். ஆனால், இந்த நாட்டைப் பொறுத்தவரை அது கவலைப்படக்கூடிய விஷயம். பதவிகள் அனைத்தும் ஒரு சாரார் வசமே இருப்பது என்பது ஒருபோதும் நன்மை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது. அவ்வாறு அமையுமானால் ஒரு குழுவினருக்கு எது வேண்டுமானாலும் செய்து கொண்டு முன் செல்லலாம் என்பதற்கான லைசென்ஸ் அளித்தது போல் ஆகிவிடும். அதனடிப்படையில் நடைபெறவுள்ள குடியரசு தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலை பொருத்தளவில் எதிர்க்கட்சிகள் சற்று முன்கூட்டியே செயல்பட ஆரம்பித்தது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கைமேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆரோக்கியமான முறையில் ஆதரவு அளித்தது வரவேற்புக்குரிய ஒன்றாகும். மம்தாவின் கடும் பகைவர்களாக இருந்த போதிலும் அவர் ஒருங்கிணைத்த கூட்டத்தில் சிபிஐயும் சிபிஎம்மும் பங்கெடுத்தது சிறப்பானதாகும். ஆனால், தேசிய ஜனநாயக முன்னணிக்கு வெளியே உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள். ஆதிக்கம் செலுத்தக்கூடிய, ஆளுமைமிக்க ஒரு தலைவர் எதிர்க்கட்சிகள் இடத்தில் இல்லை என்பது பெரும் பலவீனமாகும். அதுமட்டுமின்றி, இக்கட்சிகளில் பெரும்பாலானவையும் அவர்தம் மாநிலங்களில் ஒருவருக்கொருவர் எதிராக செயல்படுபவர்கள்தான்.
அவர்களது மாநிலத்தில் அவர்களது அதிகாரத்தை தக்க வைப்பதில் மட்டுமே அவர்களுக்கு அதிக கவனமும் முக்கியத்துவமும் உள்ளது. ஆளும் ஒன்றிய அரசு என்ற அடிப்படையில் பாஜகவால் அளிக்கப்படும் ஆஃபர்களைப் போல் எதிர்க்கட்சிகளால் அளிப்பது என்பது இயலாத ஒன்றாகும். என்.டி.ஏவில் இல்லாத கட்சிகளை ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் வழிக்குக் கொண்டுவர பாஜகவால் முடியும். எனவே, சங்பரிவாரின் பிரதிநிதிதான் குடியரசு தலைவர் பதவியில் அடுத்து அமரப் போகும் நபர் என்பதை நாம் இப்போதே தீர்மானித்து விட இயலும்.
காங்கிரஸின் தலைவரான ராகுல் காந்தியைக் கூட அமலாக்கத் துறை சுற்றி வளைத்து தாக்கிக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வரைமுறையற்ற அதிகாரம், பாசிசம் போன்றவையெல்லாம் தங்களை வேட்டையாடும் சக்திகள் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது. இதுபோன்ற காலகட்டங்களில் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் எதிர்கால நலன் கருதி ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.
அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்