இந்தப் பதிவை எழுதும் அதே வேலையில், மனிதக் குல வரலாற்றில் மிக மோசமான ஒரு நிகழ்வு நடந்துகொண்டு இருக்கிறது, ஆம்.. இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மீது மிகப்பெறும் இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. அங்கு இதுவரை அக்டோபர் 7இல் இருந்து இதுவரை குறைந்தது 21,672 பேர் கொல்லப்பட்டனர், 56,165 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், மருத்துவர்கள், செவிலியர்களும் ஆவர். மேலும் இஸ்ரேல் கண்மூடித்தனமாக நடத்திய குண்டு வீச்சுகளில் 70% காஸாவின் ஃபலஸ்தீனர்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
இத்தகைய பாதிக்கப்பட்ட அப்பாவி ஃபலஸ்தீனர்களுக்கு உதவ வேண்டும் என நம்மில் பலரும் எண்ணுகின்றனர். இத்தகைய சூழலில் இஸ்ரேலிய அரசின் மீதும், அதன் கொள்கைகள் மீதும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்த BDS எனும் இயக்கம் உதவும் வகையில் உள்ளது. அதைக்குறித்து இக்கட்டுரையில் காண்போம். BDS என்பது புறக்கணிப்பு (Boycott), விலக்கல் (Divestment), பொருளாதாரத் தடைகளை (Sanctions) என்பதைக் குறிக்கும். இந்த இயக்கத்தில் பங்கெடுத்து சாதாரண மனிதர்களாகிய நம் அனைவராலும் ஃபலஸ்தீனிற்கு உதவுவது சாத்தியமானதே!
காஸா(Gaza) பகுதியில் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி வரும் இஸ்ரேலிய ராணுவத்திற்கு இஸ்ரேலில் உள்ள மேக் டொனல்ட்ஸ்(Mcdonalds), டோமினோ’ஸ் பிஸ்சா(Domino’s Pizza), பர்கர் கிங் (Burger King) போன்ற நிறுவனங்கள் இலவச உணவுகளை வழங்கியது மட்டும் அல்லாமல் ஃபலஸ்தீனர்களை ஆதரித்து அந்நிறுவனங்களின் தொழிலாளர்கள் தங்களது கூட்டைப்பின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக, அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து உள்ளது. இதையடுத்து BDS அமைப்பு மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானது. அதனை மக்கள் பெருமளவில் மீண்டும் கையில் எடுத்தனர். இதன் அகிம்சை இலக்குகளாக மேக்டொனல்டுசையும்(Mcdonalds) ஸ்டார்பக்க்சையும்(Starbucks) ஆக்கினர். உலகம் முழுவதும் இஸ்ரேலியப் படையெடுப்பைக் கண்டித்து உலக மக்களும் இந்த இயக்கத்தைச் சேர்ந்த குழுக்களும் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தி வருகின்றன.
அகிம்சை போராட்டம் அல்லது மக்கள் ஆர்ப்பாட்டங்கள் சமூக, அரசியல் மாற்றங்களை நிகழ்த்த வரலாற்று நெடுகிலும், ஆற்றல் மிக்க யுக்தியாக இருந்து வந்துள்ளது. அகிம்சை போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பலமிக்க சக்தியாக இருந்து வருகிறது. ஆயுதப் போராட்டத்தை விட அகிம்சை போராட்டங்கள் பல நீதி மிக்க சமூக அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன; உதாரணமாக, அமெரிக்கப் புரட்சி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அமெரிக்காவிற்கு விடுதலை பெற்றுத் தந்தது; இதேபோல ஹங்கேரி தேசியவாத அமைப்பின் அகிம்சைப்போராட்டம் ஆஸ்திரியாவிலிருந்து சுய ராஜ்யத்தைப் பெற்றுத் தந்தது.
மேலும், 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் காந்தியின் அகிம்சை போராட்டம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுதலைப் பெறச் செய்தது. இரண்டாம் உலகப் போரின் போது வைட் ரோஸ், கண்பெஷ்னல் சர்ச் இயக்கங்கள் அகிம்சை போராட்டங்களை நாஜிக்களின் ஜெர்மனியில் கையாண்டனர். அமெரிக்காவில், நிலவிக் கொண்டு இருந்த பாகுபாட்டையும், நிறவெறியையும் எதிர்க்க மக்கள் உரிமை இயக்க போராட்டங்கள், அகிம்சை போராட்டங்களை முன்னெடுத்தனர். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் jr போன்ற தலைவர்கள் இந்த அகிம்சை தத்துவங்களையே முன்மொழிந்து வெற்றி பெற்றுள்ளனர்.
இதுபோன்ற உதாரணங்கள் அகிம்சைப் போராட்டங்களின் வலிமையை எடுத்துக்காட்டினாலும், ஃப்ரான்ட்ஸ் பானொன்(Frantz Fanon) மாதிரியான அறிஞர்கள் ‘ஒடுக்கப்படும் மக்கள் அரசியல் இயக்கமாகத் திரண்டு ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது ஒடுக்குபவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். மேலும் அவர்களை அரசியலில் இருந்து தூக்கி எரிய வேண்டும்’ என்று வாதிடுகிறார்கள்.
2005இல் ஃபலஸ்தீனிய சிவில் சமூக கூட்டமைப்பு, இஸ்ரேலின் மீது அகிம்சை அழுத்தத்தை ஏற்படுத்தப் புறக்கணிப்பு, விலக்கல், பொருளாதாரத் தடைகள் (Boycotts, Divestment, Sanctions) BDS இயக்கத்தைப் பிரச்சாரம் செய்தனர். BDS இயக்கத்தை 170 ஃபலஸ்தீனிய சிவில் சமூக கூட்டமைப்புகள் கூட்டாக முன்னெடுத்தனர்; இதில் தொழில்முறை சங்கங்கள், எதிர்ப்புக் குழுக்கள், பிற சிவில் சமூக அமைப்புகள், மேலும் அமெரிக்கா, கனடா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகள், மாணவர் குழுக்கள், தொழில்முறை அமைப்புகள், நகரச் சபைகள், தன்னார்வக் குழுக்கள், நிறுவனங்கள், உலகளவில் தனிநபர்கள் இந்த அழைப்புக்குச் செவிமடுத்தனர்.
இந்த இயக்கம் ஆப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்திலிருந்து ஈர்க்கப்பட்டது, உலகளாவிய இயக்கமாக உருவெடுத்த இது ஒன்றுக்கொன்று சார்ந்த தூண்டுதல் அழுத்தத்தைத் தர புறக்கணிப்பு, விலக்கல் மற்றும் பொருளாதாரத் தடைகள் எனும் தந்திரங்களைக் கையில் எடுத்தது. இதன் முக்கிய இலக்காக, சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு 1976ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த ஃபலஸ்தீன நிலங்களை விட்டு வெளியேறுவது, இஸ்ரேலில் குடிமக்களாக இருக்கக் கூடிய அரபு ஃபலஸ்தீனர்களுக்கான அடிப்படை உரிமைகள், அவர்கள் சமமாக நடத்தப் படுவதையும் உறுதி செய்வது. ஐநாவின் 194வது தீர்மானம் படி ஃபலஸ்தீனில் இருந்து வெளியேறிய அகதிகள் மீண்டும் ஃபலஸ்தீனில் குடியமர்த்த வேண்டும். ஆகியவை இந்த இயக்கத்தின் முக்கிய இலக்குகளாகும்.
நாமும் இந்த இயக்கத்தில் பங்கெடுப்பது எப்படி?
அண்மைய இஸ்ரேலின் கொடூரச் செயல்களால் நம் மக்கள் பலரும் ஃபலஸ்தீனுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யத் துடிக்கின்றனர். அதன் விளைவாக சில நூற்றுக்கணக்கான பிராண்டுகளின் பெயர்களை உள்ளடக்கிய பல புறக்கணிப்புப் பட்டியல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. அவற்றில் பல பட்டியல்கள் ஃபலஸ்தீன் பிரச்னைக்குச் சம்பந்தமே இல்லாத பிராண்டுகளை எல்லாம் உள்ளடக்கி இருக்கின்றது. இதுபோன்று தவறான பட்டியல்கள் பல வலம்வரும் நிலையில் உண்மையில் எந்தெந்த நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைக் குறித்த தெளிவு நம்மிடம் இருக்க வேண்டும்.
இந்தக் குழப்பங்களைக் களைந்து, இஸ்ரேலுக்கு எதிரான தங்களது போராட்டத்தைப் பயனுள்ள வகையில் நடத்த BDS இயக்கம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில் பிரதானமாக எந்தெந்த நிறுவனங்கள், பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
புறக்கணிக்க வேண்டிய நிறுவனங்களை நான்கு வகையாக வகைப்படுத்தித் தந்திருக்கின்றது. அவை நுகர்வோர்கள் நேரடியாகப் புறக்கணிக்க வேண்டியவை, முதலீட்டாளர்கள் புறக்கணிக்க வேண்டியவை, கடுமையாகப் புறக்கணிக்க அழுத்தம் தரப்படவேண்டியவை, மக்கள் தன்னெழுச்சியாக புறக்கணித்துக் கொண்டிருப்பவை / வேண்டியவை (அண்மைய இஸ்ரேலின் இன அழிப்பிற்குப் பகிரங்க ஆதரவளித்த நிறுவனங்கள்). மேற்கூறப்பட்ட நிறுவனங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்; அதனால் எவ்வாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் ஏற்படும் என்பதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இணைக்கப்பட்டுள்ள வலைதளதிற்குச் சென்று பார்வையிடவும் https://bdsmovement.net/Act-Now-Against-These-Companies-Profiting-From-Genocide
இந்தியாவில் BDS
இந்திய மக்கள் வரலாற்று நெடுகிலும் ஃபலஸ்தீனர்களின் குரலுக்கு ஆதரவு அளித்து வந்துள்ளனர். நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி ஃபலஸ்தீன மக்கள் படும் அவஸ்தைகளைப் பரிவுடன் பார்த்து “எப்படி இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானதோ, பிரான்ஸ் பிரெஞ்சு மக்களுக்குச் சொந்தமானதோ அது போலவே ஃபலஸ்தீன் அரபிகளுக்குச் சொந்தமானது. ஃபலஸ்தீனில் யூதர்களின் கட்டாயக் குடியேற்றம் தவறானது மட்டுமல்லாமல் மனிதத்தன்மை அற்றது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக புது டெல்லியில் செப்டம்பர் 2010இல் ‘ஃபலஸ்தீனிற்கான நீதியும் சமாதானமும்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் (Boycotts, Divestment, Sanction) BDS இயக்கத்தின் மூலம் ஃபலஸ்தீனர்களுக்கு நீதி பெறச்செய்வோம் என்கிற வலுவான ஒப்புதலுடன் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வை Palestinian BDS National Committee (BNC), The Committee for Solidarity with Palestine, The All India Peace and Solidarity Organization, The newly formed Indian Campaign for the Academic and Cultural Boycott of Israel (INCACBI) போன்ற இயக்கங்கள் கூட்டாக ஏற்பாடு செய்தன. இந்த மாநாட்டில் அப்போதைய இந்திய அரசு இஸ்ரேல் உடனான இராணுவ உறவுகளைத் துண்டித்தது. முன்பு இருந்த அதே அர்ப்பணிப்போடு ஃபலஸ்தீன மக்களுக்கான நீதியின் குரலாக நிற்க உறுதிக்கொண்டது
BDS இயக்கத்தின் தாக்கம்
ஃபலஸ்தீனர்களுக்கான அகிம்சை போராட்டம், BDS இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, உலகளாவிய கொள்கைகளை ஆய்வு செய்யக் கூடிய குழு Rand Corporation 2015இல் சமர்ப்பித்த அறிக்கையின் படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 15 பில்லியன் டாலர்களை இஸ்ரேல் இழந்து உள்ளதாகத் தெரிவித்தது. மேலும், 2023 Bloombergயின் அறிக்கைப் படி, இஸ்ரேலில் அந்நிய நாட்டு முதலீடுகள் சரிவைச் சந்தித்து உள்ளதாகவும், இது இஸ்ரேலில் நிலவக் கூடிய அரசியல் சமூகம் சீரற்று இருப்பதே இதன் காரணம் என்றும் கூறுகிறது. இதன் விளைவாக BDS இயக்க நடவடிக்கை, பிரச்சாரங்களை ஒடுக்க இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, மேலும் 2017இல் இந்த இயக்கத்தை ஆதரிக்கும் நபர்கள் இஸ்ரேலுக்குள் வரத் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவின் 27 மாகாணங்கள் BDS இயக்கத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றியுள்ளது. மேலும் இதில் 5 மாகாண கவர்னர்கள் நிர்வாக ரீதியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். இவர்களைப் பின்பற்றி இதற்கு ஒத்த நடவடிக்கைகளை பிரான்ஸ், பிரிட்டன், பிற ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ளன. BDS இயக்கத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், இந்த இயக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்த்துகிறது.
இறுதியாக, BDS இயக்கம் யூத வெறுப்பு, இஸ்ரேல் நாட்டை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டாலும் மக்கள், பிரபலங்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவு இந்த இயக்கத்திற்கு இருக்கின்றது. இந்த இயக்கம் குறிப்பிடத்தக்க வேகத்தைப் பெற்றது மட்டுமல்லாமல் நிறவெறிப் பிடித்த குடியேற்றக் காலனித்துவ இஸ்ரேல் பெறக் கூடிய சர்வதேச ஆதரவை எதிர்க்க வல்லதாகவும் உள்ளது. ஃபலஸ்தீனர்களின் போராட்டம் பல கட்டங்களைக் கடந்து, தங்களது தாய்நாட்டை மீட்கும் கட்டத்தில் உள்ளது. தரவுகளின்படி, முக்கிய அரசியல் இலக்குகளை அடைய அகிம்சை முறையிலான இந்தப் போராட்டம், ஆயுத போராட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தையே மிஞ்சுகிறது. மேலும், காஸா போர் நீடித்தால் அரபு ஆட்சியாளர்களின் துரோகத்திற்கு மக்கள் மவுனம் காக்காமல் அரசுக்கு எதிராக மக்களின் கிளர்ச்சியும் போராட்டமும் வெடிக்கும். இது உடனடியாக நடக்கா விட்டாலும் கூடிய விரைவில் நிகழும். இஸ்ரேலின் அழிவு தவிர்க்க முடியாதது!