இந்து தமிழ் நாளிதழில் திரு.பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்த கட்டுரை படித்தேன். அதில் நீட் – தேர்வு மையக் குளறுபடி பற்றி மத்திய அரசின் சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகளை ஆதரிப்பது போல எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
இரயில்வே தேர்வுகளின்போது தேர்வு மையங்களின் வெளியே எத்தனை வட இந்திய இளைஞர்கள், இளம்பெண்கள் இருக்கிறார்கள்.? முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இரண்டு நாட்கள் பயணம் செய்து வருகிறார்கள் என்கிறார் . (வட இந்தியர்கள் முன்பதிவு செய்யாவிட்டாலும் முன்பதிவு பெட்டிகளில்தான் வருவார்கள் என்பது வேறு விசயம்) உண்மைதான், நானும் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் குடும்பம் சகிதமாக தேர்வுக்கு வந்த வட இந்தியர்களை பார்த்திருக்கின்றேன். இங்கே வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். படித்து முடித்து வேலைக்காக மத்திய பணியாளர் தேர்வு வாரியம், இரயில்வே துறை போன்ற அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எழுத வருபவர்களை பள்ளிப்படிப்பு முடித்த சிறுவர், சிறுமியரோடு ஒப்பிடுவது பாரபட்சம் இல்லையா? அதிலும் பெரும்பாலானவர்கள் தங்களது ஊரைவிட்டு கூட வெளியில் சென்றிருக்காதவர்கள். இருவரும் ஒன்றாகிவிட முடியுமா? இருப்பினும் அப்படி தேர்வு மையங்களை ஒதுக்குவதும் கூட தவறு என்றுதான் இங்கே சொல்ல முடியும்.
தெருக்களில் தங்கி தேர்வெழுதுகிறார்கள் என்றால் வட இந்தியாவில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை நிலையே அப்படித்தான் இருக்கிறது. அங்கு போதிய வேலை வாயப்புகள் இல்லை, தரமான கல்வி நிறுவனங்கள் இல்லை. அதனால் அவர்கள் அவற்றை சகித்துக் கொள்கிறார்கள் என்பதற்காக தமிழக மாணவர்களும் மாநிலம் விட்டு மாநிலம் சென்று அப்படி சிரமப்பட வேண்டும் என்று கட்டுரையாளர் விரும்புகிறாரா? எங்கள் பிள்ளைகளை அப்படி எல்லாம் அலைக்கழிக்க விட்டுவிட முடியாது என்பதை இங்கே பதிய வைக்க விரும்புகிறேன்.
வேறு மாநிலத்திற்கு தேர்வெழுதச் செல்வது உறுதியாகிவிட்ட பின்பு அதற்கேற்ப திட்டமிட வேண்டியதுதானே என்று கேட்டுள்ளார். இப்படித்தான் போன வருடம் அனிதா தற்கொலைக்கு தள்ளப்பட்ட போது நீட் எழுத வேண்டும் என்பது உறுதியான பிறகு அதற்கு தயாராக வேண்டியது தானே என்று கேட்டார்கள். அடுத்த வருடம் மருத்துவம் படிக்க தமிழக மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிந்த பிறகு மாடு மேய்க்கத் தயாராக வேண்டியது தானே என்று கேட்பார்கள். இப்படியே ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு இழி(ழ)விற்கு தயாராகவா இவ்வளவு சமூகநீதி உரிமைகளைப் போராடி பெற்றது தமிழகம்.?
பரீட்சைக்காக செல்லும் பயணத்தை சித்ரவதையாக சித்தரிக்கிறார்கள் என்றால் சிரமப்பட்டு படித்து, நீட் தேர்விற்காக உயர்சாதியினர் பயில்வது போல இலட்சங்களை செலுத்தி பயிற்சி பெற முடியாத நிலையில் அரசு நடத்தும் இலவச பயிற்சியில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி, நுழைவுச் சீட்டை வாங்கிப் பார்த்தால், இருக்கும் இடத்தில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் தேர்வு மையத்தை அமைத்து மொழி புரியாத, வழி தெரியாத இடத்திற்கு சென்று தேர்வெழுத சொல்லி, இருக்கும் நம்பிக்கையை குலைப்பதற்கு சித்ரவதை என்பதைத் தவிர வேறு என்ன பெயர் வைப்பது.?என்னைக் கேட்டால் அதிகார வன்கொடுமை என்று கூட சொல்லுவேன்.
தேர்வு மையக் கட்டுப்பாட்டிற்கு வருவோம்..
மேல் சீலை அணிவதற்கான உரிமையைப் போராடிப் பெற்ற தமிழ்மண்ணில் என் சகோதரிகளின் மேலாடையை அவிழ்க்கச் சொல்வதற்கான அதிகாரத்தை இந்த கயவர்களுக்கு யார் வழங்கியது.? கணவனை இழந்த கைம்பெண்களுக்கு அடையாளமாக அணிகலன்களை துறந்து பழக்கப்பட்ட எம் இனப் பெண்களுக்கு தமது மகள்களின் அணிகலன்கள் தங்கள் கண்முண்ணே அவிழ்க்கப்படுவதைப் பார்க்கும்போது இரத்தம் கொதிக்கத்தானே செய்யும்?
மைக்ரோ அளவிலான சாதனங்கள் மூலம் விடையை வெளியில் இருந்து வாங்கிவிடுவதைத் தடுக்கவே என்று சப்பைக்கட்டு காரணம் தேடுகிறீர்களே, தேர்வுக்கு முன்னரே வினாத்தாளை வெளியிட்டீர்களே அதற்கு தேர்வாணையத்திற்கு என்ன தண்டனை? வட இந்தியர்களை ஒப்பீட்டுக்கு அழைக்கிறீர்களே, சன்னல் வழியாக ஏணி போட்டு முறைகேட்டிற்கு உதவினார்களே அந்த வடநாட்டில், அதுபோலவா இங்கே நடக்கிறது? சானிட்டரி நாப்கின்களைக் கூட அவிழ்க்கச் செய்து தேர்வறைக்குள் செல்லும் மாணவி தேர்வெழுதுவாளா, கசியும் இரத்தத்தைப் பற்றி சிந்திப்பாளா?
நீட் எழுத வேண்டும் என்றாகிப் போன பின் மாணவர்களை ஊக்கப்படுத்தியிருக்க வேண்டாமா என்று கேட்கிறார் கட்டுரையாளர். அதற்காகத்தான் கொள்கை அளவில் எதிர்த்தாலும் எம் தம்பி, தங்கைகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்காக வழிச் செலவாகவும், விமான, இரயில், பேருந்து கட்டணமாகவும், தங்குமிடமாகவும், சாதி, மத, பேதமின்றி உதவிக்கரங்கள் உலகெங்கிலும் இருந்து வந்து குவிந்தது.
வட இந்தியர்கள் அனைத்தையும் சகித்துக் கொள்கிறார்கள் என்றால் அவர்களுக்கு போராட்ட உணர்வு குறைவு. சூழலுக்கு ஏற்ப தகவமைந்து கொள்ளும் இயல்பிற்காக மட்டும் வெளிமாநிலத்தவர்கள் மதராசிகளை சிலாகிக்கவில்லை, மதராசிகளின் போராட்டகுணத்திற்காகவும்தான் மெச்சுகிறார்கள். மொழிப்போர், சுயாட்சி முழக்கம் தொடங்கி சமீபத்திய ‘திரும்பிப் போ மோடி’ வரை வரலாறு முழுவதும் உதாரணங்கள் விரவிக்கிடக்கின்றது. அன்று முதல் இன்று வரை தமிழகத்தின் போராட்டம் அனைவருக்குமானது தான்.
நீட்டைப் பொறுத்தமட்டில் இங்கு போராடுவது அரசியல்வாதிகள் அல்ல, அவர்கள் வெறும் கண்துடைப்பு போராட்டங்கள்தான் நடத்துகிறார்கள். தொடர்ச்சியான மெனக்கெடல்கள் கல்வியாளர்களாலும், மாணவர்களாலும், சமூகப் போராளிகளாலும் தான் மேற்கொள்ளப்படுகிறது. அரசியல் கருத்தாகப் பார்த்தாலும், சமுதாய நோக்கில் தீர்விற்காக சிந்தித்தாலும் நீட் தமிழகத்தைப் பொறுத்தவரை அநீதிதான், பெருங்குற்றம்தான், மனிதத்தன்மையற்ற செயல்தான். அரசியலைத் தாண்டி சிந்தித்துதான் நாங்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளோம்.
இந்து தமிழ் நாளிதழின் கட்டுரையைப் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்:
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article23798839.ece
.
அபுல் ஹசன்
9597739200