ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்
ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானம் இங்குள்ள மொழிச் சிறுபான்மையரை வெளியே நிறுத்தி Exclusive Nationalism ஒன்றை முன்வைத்தார். பதிலாக அவர் பார்ப்பனர்களை உள்ளடக்கினார். இந்து என்கிற அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்.
1946ல், இந்திய விடுதலை போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், ம. பொ. சிவஞானம் அவர்கள் தொடங்கிய இலக்கிய அமைப்பான தமிழரசுக் கழகத்தில் உருவான தத்துவம் தான் தமிழ் தேசியம்.
1946 முதல் 1954 வரை காங்கிரசு கட்சிக்குள் கலை, இலக்கிய, கலாச்சார இயக்கமாக இயங்கி வந்த தமிழரசுக் கழகம், 1954ல் (தமிழரசுக் கழகத்தை கலைக்க காங்கிரசு உத்தரவிட்டதால்) தனி அரசியல் இயக்கமானது.
அந்த காலகட்டங்களில் வடவர்கள், இந்தியாவை ஒன்றிணைத்திட இந்தி வழிவகிக்கும் என்ற காந்தியின் கூற்றின் படி, இந்தியை இந்தியாவின் மொழியாக முன்னிறுத்த முயன்று கொண்டிருந்தனர். சாதி சமய வேறுபாடு, தீண்டாமைக்கெதிராக போராடிக்கொண்டிருந்த தென்னவர்களோ, இந்துக்களின் மொழியான இந்தியை எதிர்த்தனர். இந்தி திணிப்பு, அடிமைத்தனத்தையும், சாதி கட்டமைப்பையும் ஊக்குவிப்பதாக கருதிய அவர்கள், இந்தித் திணிப்பை அனுமதித்தால், திராவிட மொழிகள் ஒருநாள் அழியும் என்றும், ஆங்கில கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் இந்தி இடையூறாக நிற்கும் என்றும் கருதினர். அன்று வரை மொழிக்குடும்பமாக மட்டுமே இருந்த திராவிடம் (ராபர்ட் கால்டுவெல் என்பவர் வழங்கிய பெயர்), அரசியல் தத்துவமாக உருவெடுத்தது, அரசியல் இயக்கமாகவும் மாறியது. அன்று தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பொருளாதார சமத்துவத்திற்க்காக போராடியவர்கள் இந்த அரசியல் தத்துவத்தை ஏற்றுக்கொண்டதால், தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை திராவிடத்தின் அடையாளங்கள் ஆயின.
இந்திய தேசியம், திராவிடம் என்று இரண்டு தத்துவங்களும் தமிழர்க்கு உதவாது என்று எண்ணிய ம. பொ. சிவஞானம் அவர்களும் தமிழரசுக் கழகமும் முன்னெடுத்த தத்துவம் தான் தமிழ் தேசியம். இந்திய தேசியத்தின் ஒரு மொழிக் கொள்கைக்கும், திராவிடத்தின் தனி திராவிடநாடு கோரிக்கைக்கும் மாற்று நிலைப்பாட்டை கொண்டது தான் இந்த தமிழ் தேசிய தத்துவம். தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, தமிழர் அறம், தமிழர் இலக்கியம், தமிழர் வாழ்க்கை முறை, தமிழர் உரிமையை முன்னிருந்தி, “மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற தத்துவமே தமிழ் தேசியம்.
தமிழுணர்வு என்பது நாலரை கோடி தமிழ் மக்களுடன் மட்டுமே தன்னை இணைக்கிறது எனவும் இந்து என்கிற அடையாளம் தன்னை ஐம்பது கோடி மக்களுடன் இணைக்கிறது எனவும் காஞ்சி சங்கராசாரியார் ஏற்பாடு செய்த உலக இந்து மாநாட்டில் அவர் முழங்கியது குறிப்பிடத் தக்கது (மார்ச் 3,1976). மதச் சிறுபான்மையைப் பற்றி அவர் ஒன்றும் பேசவில்லையாயினும் அவரது பார்ப்பனீய ஆதரவு, இந்து மத அடையாளத்திற்கான அழுத்தம் என்பன இயல்பாகவே மதச் சிறுபான்மையினரை ஒதுக்கின.
நீதிக்கட்சி பெயர்மாற்றக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியம் தீவிரமாக வெளிப்பட்டது. நீதிக்கட்சி தமிழர் கழகம் எனப் பெயர்மாற்றப்பவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தலைவர்கள் தமிழ்த்தேசியத்தை உட்கிடையாகத் தம் கண்ணோட்டத்தில் கொண்டிருந்தனர். இதுகுறித்த எழுந்த உரையாடலே தமிழகத்தில் திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே நடந்த முதன்மையான உரையாடல்களுள் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றது.
பல நூற்றாண்டுகாலமாக தமிழர்களுக்கான உரிமைகள், தமிழுக்கான முதலுரிமை ஆகியன பற்றிய விழிப்புணர்வு மிக்க தலைவர்கள் செயல்பட்டுவந்தனர். அவர்களின் தொடர்ச்சியாக பிரிட்டிசு எதிர்ப்புக் காலத்தின் விளைவாகத் தமிழ்த்தேசியம் தேசிய அறிந்துணர்வோடு (பிரக்ஞையோடு) தன்னை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தன்னை வெளிப்படுத்தியது. இராசாசி சென்னை மாகாணத் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்று இந்தித்திணிப்பில் ஈடுபட்டதும், அதற்கெதிராகத் தமிழறிஞர்களும் பெரியாரும் 1938இல் அறப்போர் தொடுத்ததும் இந்தியத்தேசியத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்குமான முதல் அரசியல் மோதலைக் குறித்தது.
20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிதொடங்கி முனைப்பாகத் தமிழத்தேசிய உரையாடல்களை, செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களுள் கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, ம.பொ.சி ஆகியோர் அடங்குவர். ம.பொ.சி 1946 மே 1 ஆம் நாள் தமிழ் முரசு எனும் மாத இதழைத் தொடங்கி நடத்தினார். அதே ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் தமிழரசுக் கழகம் அமைப்பினை ம.பொ.சி தொடங்கினார். அந்த அமைப்பின் குறிக்கோளாக 1950களுக்குப்பிறகு பாவலரேறு பெருஞ்சித்திரனார், சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்களில் பெருஞ்சித்திரனார் இறுதிவரை தமிழ் தேசியத்தின் அத்தனை கூறுகளிலும் நின்று களம் அமைத்தார். ஆதலால் தமிழ்த்தேசியத் தந்தை என்ற அடைமொழியை பெற்றார்.
அயோத்தி தாச பண்டிதர்
30/10/1912 தனது தமிழன் இதழில் முதன் முதலில் தமிழ் தேசிய கருத்துக்களை பேசுகிறார் அயோத்தி தாச பண்டிதர்.
“விடுதலை அளித்தால் இம்மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே அளிக்க வேண்டும்… தமிழ் மொழியில் பிறந்து தமிழ் மொழியில் வளர்ந்து தமிழ் மொழிக்கு சொந்தமான பூர்வ குடிகளான சுதேசிகளுக்கே வழங்க வேண்டும்”
“கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வ குடிகளுக்கு அளிப்பது கருணையாகும் நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என்று கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால் நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்”
நேற்று குடியேறி வந்தவர்களிடம் (அதாவது வடுக வந்தேறிகள்) தராதீர்கள் என்கிறார், முன்னர் குடியேறி வந்தவர்களிடமும் (பிராமணர்களிடம்) தராதீர்கள் என்கிறார். தமிழர்களுக்கான விடுதலையை தமிழர்களிடமே தாருங்கள் என்கிறார்,
இதை தாண்டி ஏன் திராவிடத்தையும் ஆரியத்தையும் தமிழ் தேசியம் எதிர்க்கிறது என்று யாரும் சுருங்க சொல்லிவிட முடியாது.
ஆதித்தனாரும் ம.பொ.சி.யும்
‘நாம் தமிழர்’ என்ற பெயரில் ஏற்கெனவே சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனாரும் அமைப்பொன்றை நடத்தியிருக்கிறார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர் ஆதித்தனார். சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் ‘தமிழ் ராஜ்ஜியக் கட்சி’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். தொடங்கிய ஓராண்டு காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். காங்கிரஸிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அங்கிருந்து விலகி சோஷலிஸ்ட் கட்சி என்று பல்வேறு கட்சிகளுக்கு மாறிய பிறகு, 1958 பிப்ரவரி 9-ல் ‘நாம் தமிழர்’ இயக்கத்தைத் தொடங்கினார். தமிழர் நலனை முன்னிறுத்தி, பிறமொழி பேசுபவர்கள் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரத் துறைகளில் முதன்மை இடம்வகிப்பதைக் கண்டித்தார்.
ஆதித்தனாருக்கு முன்பே தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கான விதையை ஊன்றியவர் ம.பொ.சிவஞானம். அச்சுத் தொழிலாளியாகத் தனது வாழ்வைத் தொடங்கிய அவர், தனது தீவிர வாசிப்பாலும் எழுத்தாலும் சிலம்புச்செல்வர் எனக் கொண்டாடப்பட்டவர். 1946 நவம்பர் 21-ல் தமிழரசுக் கழகத்தைத் தொடங்கினார் ம.பொ.சி. தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியும் தெற்கெல்லைப் போராட்டத்துக்கு ஆதரவு தந்தும் தமிழக எல்லைகளைக் காத்தவர்.
சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி இருவருமே, 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததோடு உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வென்றனர். திமுக ஆட்சியில் சட்டமன்றத் தலைவராகவும் அமைச்சராகவும் பதவிவகித்த ஆதித்தனார் பின்பு எம்ஜிஆருடன் இணைந்தார். 1977-ல் சாத்தான்குளம் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடவும் செய்தார். திமுக ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ம.பொ.சி, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற மேலவைத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.
ஈ.வி.கே.சம்பத்
ஆதித்தனாரும், ம.பொ.சியும் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்தாலும் 1967 தேர்தலில் திராவிட இயக்கத்தில் ஏறக்குறைய தங்களைக் கரைத்துக்கொள்ளவே செய்தார்கள். இவர்களுக்கு எதிர்த் திசையில் திமுகவிலிருந்து விலகி 1962 ஏப்ரல் 19-ல் ‘தமிழ்த் தேசியக் கட்சி’யைத் தொடங்கிய ஈ.வி.கே.சம்பத், ஒரு கட்டத்தில் கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸிலேயே இணைந்து கொண்டார்.
தமிழ்த் தேசியக் கட்சியிலிருந்து சம்பத் தலைமையில் காங்கிரஸில் இணைந்த பழ.நெடுமாறன், 1979-ல் காங்கிரஸிலிருந்து விலகி, ‘தமிழர் தேசிய இயக்க’த்தைத் தொடங்கியது வரலாற்றின் ஒரு முரண்நகை. இலங்கைத் தமிழர் போராட்டங்களின் அதிர்வுகள் தமிழகத்தையும் பாதித்ததன் விளைவாக தமிழ்த் தேசிய அரசியல் தீவிரம்கொண்டது. பொதுவுடைமை இயக்கத்திலிருந்து விலகிய பெ.மணியரசன், இராசேந்திர சோழன் முதலானோர் ‘தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி’யைத் தொடங்கினர். பெ.மணியரசன் தலைமையிலான தற்போதைய கட்சி, பெயரில் பொதுவுடைமையைத் தவிர்த்துவிட்டு ‘தமிழ்த் தேசியப் பேரியக்க’மாகச் செயல்பட்டுவருகிறது.
பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தியாகு, தற்போது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்க’த்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். எழுவர் விடுதலையைப் பற்றி இன்று விவாதிக்கப்பட்டுவரும் சூழலில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் அத்தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இந்தத் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள்தாம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கு விழாவில் தமிழும் ஒலிப்பதற்கு பெ.மணியரசன் ஒருங்கிணைத்த போராட்டங்களும் ஒரு முக்கிய காரணம். தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் தமிழர் நலனை முன்னிட்டே செயல்பட்டாலும் மொழியுரிமை சார்ந்த சில அடிப்படையான கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கு தேர்தல் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ஓர் இயக்கம் அவசியமாக இருக்கிறது. அந்த இடத்தைச் சந்தேகமின்றித் தமிழ்த் தேசிய அமைப்புகள் வகிக்கின்றன.