தனித்தமிழ் வேர்கள்
பண்பாட்டுத் தளத்தில் தனித்தமிழ் இயக்கமும், அரசியல் தளத்தில் திராவிட இயக்கமும் கைகோத்துக்கொண்டுதான் பயணித்திருக்கின்றன. இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் தனித்தமிழ் இயக்கத்திலிருந்து கிளைத்தவர்களே. பெருஞ்சித்திரனாரின் முதன்மை மாணவர்களில் ஒருவரான மு.தமிழ்க்குடிமகன், திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளத் தயங்கவில்லை. பின்பு அதிமுகவிலும். ஆனால், ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’யைத் தொடங்கி நடத்திவரும் சுப.வீரபாண்டியன் இன்று தேர்தல் அரசியலில் கரைந்துவிடாமலும் அதேநேரத்தில் இடைவெளி அதிகமாகிவிடாமலும் மாறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்துவருகிறார்.
அழுத்தக் குழுக்கள் என்ற நிலையில், தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குத் தவிர்க்கவியலாத இடமுண்டு. ஆனால், அரசியல் கட்சிகளாக அவை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு என்பது தற்போதைக்கு இல்லவே இல்லை. இந்த எதார்த்த உண்மையை உணர்ந்ததன் விளைவாகத்தான் கல்யாணசுந்தரமும் ராஜீவ்காந்தியும் தங்களது அன்புக்குரிய அண்ணன் சீமானை விட்டுவிட்டு, திராவிடக் கட்சிகளில் சேர்ந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் பேசும் இவர்களுக்கு திமுக, அதிமுக என்று எந்தக் கட்சியில் சேர்ந்துகொள்வதிலும் தயக்கங்கள் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
கடைசியில், இந்தத் தமிழ் தேசியர்களை திமுகவும் அதிமுகவும் என்னவாகப் பயன்படுத்திக்கொள்ளப்போகின்றன என்றொரு கேள்வியும் எழுகிறது. வெறும் பேச்சாளர்களாக மட்டும்தான் இவர்கள் மேடையேறுவார்கள் என்றால் திண்டுக்கல் லியோனிக்கும் இவர்களுக்கும் என்னதான் வித்தியாசம்? தமிழகம் முழுவதும் தமுஎகச கலை இரவு மேடைகளில் பட்டுக்கோட்டையார் பாடல்களைப் பாடிப் பொதுவுடைமைப் பிரச்சாரம் செய்த லியோனி, இன்று வெறும் நட்சத்திரப் பேச்சாளராக மட்டுமே எஞ்சியது கவனிக்க வேண்டிய விஷயமல்லவா!
அழுத்தக் குழுக்கள் என்ற நிலையில் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குத் தவிர்க்கவியலாத இடமுண்டு. ஆனால், அரசியல் கட்சிகளாக அவை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு என்பது தற்போதைக்கு இல்லவே இல்லை!
தமிழ் தேசியத்தின் வரலாற்றுப்பயணம்
தமிழ் தேசியம் என்னும் சிந்தனை தனக்கென ஒரு மெல்லிய வரலாற்று பதிவை கொண்டுள்ளது உண்மை என்றாலும், இந்திய அரசியல் வரலாற்றில் அது தெளிவான வரையறைகளை கொண்ட இயக்கமாக இருந்ததில்லை என்றே கூறமுடியும். இந்தியாவில் வடநாடு, தென்னாடு என்னும் மண் சார்ந்த அரசியல் கோட்பாடுகள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை அது ஏற்படுத்தியதில்லை என்பதே உண்மை. மேலும் இந்திய விடுதலை உணர்வலைகள் தோற்றுவித்த பல்வேறு ‘தேசியமய’ மாற்றங்களினாலும் தமிழ் பேசும் மக்களிடையே ஆரிய-திராவிட போராட்ட அரசியல் சிந்தனை மேலோங்கியதாலும் தமிழ் தேசியம் என்னும் கோட்பாடு ஒரு பண்பாட்டு விழிப்புச்சிந்தனையாகவே இருந்து வந்துள்ளது.
வரலாற்றுப்போக்கில் தமிழ்த் தேசியம்
தமிழ்த் தேசியத்தை வரையறுக்கப் படுவதில் சமகால வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக 19, 20 – ம் நூற்றாண்டு அரசியல் போக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயோத்திதாசப் பண்டிதர் தமிழ்த்தேசிய அடையாளங்களின் தொடக்கப்படிவுகளைக் கண்டடைந்தார். சாதியைக் கடக்காமல் தமிழர்கள் இன ஓர்மைகொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்த அவர் “ஒரு பைசாத் தமிழன்”, “தமிழன்” என இதழ்கள் தொடங்கி நடத்தினார். ‘தமிழன்’ என்ற தேசிய இனப்பெயரை அதன் அரசியல் சமூகப் பொருளோடு பயன்படுத்திய முதல் தமிழ்ச் சிந்தனையாளர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவர்.
அவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர்களைத் தமிழன் என்று பதிவுசெய்திடக் கோரிக்கை விடுத்தார். அதன்பின் வரதராசல நாயுடு தொடங்கிய தமிழ்நாடு இதழ், மொழிவாரியாகக் காங்கிரசு தன்னை அமைத்துக்கொண்டபோது உருவான தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி எனும் பெயர்தோன்றிய நிகழ்வு இவையனைத்தும் உருவாகிவந்த தமிழ்த் தேசியக் கருத்தியலின் முளைகளாகும். அதாவது
- தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என அடையாளப்படுத்துதல்,
- தனிநபர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துதல்,
- தமிழ் மொழியை தங்களின் இணைப்புக்குரிய கருவியாகப் பார்த்தல்
ஆகியவை தமிழ்த்தேசியத்தின் தொடக்ககாலக் கூறுகளாக இருந்தன. இவற்றுள் சாதி மதங்களைக் கடந்து இன ஓர்மை பெறுவதன் தேவையும் உணரப்பட்டிருந்தது.
கிழக்கிந்திய நிறுவனம் இந்தியப் பரப்பில் ஆதிக்கம் செலுத்த முனைந்த தொடக்க நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தன காலகட்டத்தில், அவற்றினூடாக எழுந்த இந்தியத்தேசியத்தையும், திராவிடத்தேசியத்தையும் மறுத்து தமிழ்த்தேசியம் வளர்ந்தது.
இந்தப் பின்னணியில் உருவான தமிழ் தேசியத்தை நாம் இரண்டாகப் பிரித்து அணுகலாம். அவை:
அ. திராவிட இயக்கம் முன்னெடுத்த தமிழ்த் தேசியம்,
ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்.
அ. திராவிட இயக்கம் முன்னெடுத்த தமிழ்த் தேசியம்
தமிழ்நாட்டில் 30 சதவீதம் மொழிச் சிறுபான்மையர் உள்ளனர்; ஒ 12 சதவீதம் மதச் சிறுபான்மையர் உள்ளனர்; 18 சத வீதம் பட்டியல் சாதியினர் உள்ளனர். இவர்கள் யாரையும் ஒதுக்கிவிடாமல் உள்ளடக்கியது திராவிட தேசியம். இரண்டரை சதவீத அளவு உள்ள பார்ப்பனர்களைத்தான் அது வெளியில் நிறுத்தியது.
திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சிக்கும், பெரியார் முன்வைத்த திராவிடக் கருத்தாக்கத்துக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உண்டு. நீதிக் கட்சியினர் பார்ப்பனர்களின் சமூக மேலாண்மையை (Social Hegemony) மட்டுமே எதிர்த்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான கல்வி வளர்ச்சி, அரசியல் நிர்வாகம், பதவிகள் ஆகிய எல்லாவற்றையும் அளவில் மிக மிகக் குறைவான பார்ப்பனர்களே கைப்பற்றிக் கொள்கிறார்களே என்கிற அடிப்படையிலேயே நீதிக்கட்சியின் அரசியல் இருந்தது.
ஆனால் பெரியார் இந்தச் சமூக மேலாண்மையோடு பார்ப்பனர்களின் சடங்கு மேலாண்மையையும் (Ritual Hegemony) கேள்விக்குட்படுத்தினார். பிறப்பு முதல் இறப்பு வறையிலான அனைத்துச் சடங்குகளிலும் அவர்களுக்கு இருந்த பூசாரி நிலையையும் ஒழிக்க வேண்டும் என்றார்.
இந்து மதம், கடவுள் மறுப்பு ஆகியவை குறித்த கடும் விமர்சனங்களையும் இந்தப் பின்னணியிலிருந்தே முன் வைத்தார். சுயமரியதைத் திருமணம் போன்ற மாற்றுக்களையும் அவர் இதனூடாகவே நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.
அப்போது கூட அவர்கள் மீது வன்முறையையோ, அவர்களை முற்றாக ஒதுக்க வேண்டும் என்றோ, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றோ ,பெரியாரோ, வேறு எந்த திராவிட இயக்கத்தினரோ சொன்னதே இல்லை.
மொத்தத்தில் திராவிட தேசியம் என்பது தமிழர்கள் எல்லோரையும் உள்ளடக்குவதாக இருந்தது. எல்லாவகைச் சிறுபான்மை மக்களுடனும் அது மிகவும் நெருக்கமாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டாமையிலிருந்து விடுபட அவர்கள் இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என்றார் பெரியார். திராவிட சமயமும் இஸ்லாமும் ஒன்று என்றார்.
அண்ணாவோ தனது ‘ஆரிய மாயை’ நூலில் “முஸ்லிம்கள் திராவிட இனம்” என்றதோடு ஆரியத்திற்கெதிரான “திராவிட -இஸ்லாமிய கூட்டுப்படை” என்றெல்லாம் முழங்கினார். எனினும் தமிழகத்தை விட்டு ஆரியர்களை (அதாவது பார்ப்பனர்களை) வெளியேற்றுவது தம் நோக்கம் அல்ல என்றார். “திராவிடநாட்டிலிருந்து ஆரியரை ஓட்டுவதல்ல, ஆரிய பயத்தை ஓட்டுவதுதான் எங்கள் நோக்கம்” என்றார்.
மொத்தத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு Inclusive Nationalism. என்பதற்குப் பெரியார் வழி வந்த திராவிட இயக்கத்தினர் ஓர் எடுத்துக்காட்டாக இருந்தனர்.
திராவிட தேசியத்தின் இன்னும் இரண்டு அடிப்படைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். திராவிடப் பிரிவினை பேசியபோதெல்லாம் பெரியார் கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிப் பேசினார் என்பதில்லை. இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியாரின் நோக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை அரசியல், அரசுப் பணிகள், அன்றாட வாழ்விற்குரிய சடங்குகள் ஆகியவற்றில் ஒழிப்பதுதான். அதற்குத் தடையாக இருப்பது இந்தியக் கூட்டாட்சி. இந்தக் கூட்டாட்சிக்குள் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பது சாத்தியமில்லை.
எனவேதான் கூட்டாட்சியிலிருந்து பிரிய வேண்டும் எனக் கோருவதாக வெளிப்படையாகச் சொன்னார். சென்னை மாகாணம் தனித்தனி மாநிலங்களாகப் பிரிந்த பின்னர் அவர் தமிழ்நாடு பிரிவினையத்தான் பேசினார். அதை வெளிப்படையாகவும் சொன்னர்.1956 ஆகஸ்ட் 29 விடுதலை இதழில் இதை அவர் எழுதவும் செய்தார். 1938 தொடங்கியே பெரியார் ‘திராவிடமே தமிழ்’, ‘தமிழே திராவிடம்’ என எழுதியும் பேசியும் வந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது (விடுதலை, செப் 11, 1938).
இருந்தும் அரசியல் சொல்லாடல்களில் அவர் ஏன் தொடர்ந்து திராவிடநாடு எனச் சொல்லி வந்தார். அதற்கும் அவர் ஒரு விளக்கத்தைச் சொன்னார். தமிழன் என்று சொன்னால் பார்ப்பானும் வந்து ஒட்டிக் கொள்வானே, அதனால்தான் திராவிடன் எனச் சொல்ல வேண்டியதாகிறது என்றார்.
சுருக்கமாகச் சொல்வதானால் திராவிட இயக்கங்கள் பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்பட்ட எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு தமிழ்த் தேசியத்தை முன் வைத்தன.
ஃபக்ருதீன் – எழுத்தாளர்