எழுதியவர் : அபூ ஷேக் முஹம்மது
2013ஆம் ஆண்டு சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் எல்லையில் உள்ள கிராமப் புறங்களில் ஏற்பட்ட புரட்சிகள் காரணமாக சிரியாவின் அசாத் அரசு முற்றுகை இட்டது. அப்போது அங்கிருந்த மக்கள் தொகை மொத்தம் 400,000 பேர் ஆகும்.இந்த முற்றுகையின் இறுதி முடிவு மிகப்பெரிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. அத்தியாவசிய உணவுகள் கூட விலை அதிகமாக இருந்தது. அது தற்போதைய 5 டாலருக்குச் சமமானது.
போதிய உணவு இல்லாமையால் ஊட்டச்சத்து பற்றாக்குறை என்பது எதிர்பாராத விதமாக அதிகமாக இருந்தது. அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் CHA அலுவலகத்தின் அறிக்கையின்படி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 11.9% பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் காணப்பட்டனர்.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரேயொரு மருத்துவ உதவி குழுவை நஷாபியா (Nashabieh) பகுதியில் சிரிய அரசு அனுமதித்தது. ஆனால், ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் அனுமதியளிக்கபபடவில்லை.நிஷ்மா அல் ஹத்ரி (Nishma al Hatri), அல் ஜஸீரா பத்திரிகையாளரிடம் அளித்த நேர்காணலில், எனது கணவரும், 10 வயது நிரம்பிய எனது குழந்தை சாராவும் போர் விமானங்களின் சப்தத்தை கேட்டு பயந்து எழுந்தார்கள்.
குண்டுவெடிப்புகளுக்கு நடுவிலும், எங்களுக்கு அருகில் நடந்த தாக்குதலில் தகர்க்கப்பட்ட கட்டிடங்களை சுத்தம் செய்வதிலும், உயிருக்கு பயந்து ஏதாவது ஒரு அறையில் பதுங்குவதும், வாழ்வையோ சாவையோ தினமும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் வாழ்கின்றோம்
“நானும் என் தோளில் சாய்ந்து தூங்கும் என் மகள் சாராவும் திடீரென எழுவோம்”. “இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு மத்தியில் தான் வாழ்கின்றோம்” என்கிறார் ஹத்ரி.
என்னால் ஏன் முடியவில்லை : விடை காண முடியா கேள்வி
நான் ஏன் வெளியே சென்று விளையாட முடியவில்லை?
நான் ஏன் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியவில்லை?
நான் ஏன் என் நண்பர்களை பார்க்க முடியவில்லை?
என்று என் மகள் ஒவ்வொரு முறையும் கேட்கிறாள்.
என்னிடம் எந்த பதிலும் இல்லை!”
32 வயது நிரம்பிய ஹத்ரி ஒரு ஆசிரியை. ஆனால், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் போரின் பாதிப்புகளால் மூடப்பட்டது. சில பள்ளிகள் சிதிலமடைந்தன. எதுவாயினும், மனம் தளராமல் தன்மகள் சாராவுக்கும் அருகில் வசிக்கும் குழந்தைகளுக்கும் பாடம் நடத்திக் கொண்டு தான் இருக்கிறார் சிரியாவின் சகோதரி ஹத்ரி.
ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அவரது கணவர் வெளியில் சென்றுவிட்டு, வரும்போது முடிந்த அளவு பார்லி வாங்கி வருவார். காலை மற்றும் இரவு உணவுக்காக அதை வைத்து ரொட்டிகளையும், அரிசிகளை சமைத்தும் வைத்து விடுகிறார். சில நேரங்களில் கணவர் வெறுங்கையுடன் தான் வீடு திரும்புவார்.
குறிவைக்கப்படும் மருத்துவமனைகள்
துருக்கியின் எல்லையோரத்தில் காஸியன்டெப் (Gaziantep) பகுதியிலிருந்து பேசிய அல் ஜஸீரா பத்திரிகையாளர் உஸாமா பின் ஜாவித் கூறுகையில், கிழக்கு ஃகூவ்தா பகுதியின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மருத்துவ மனைகளின் நிலையென்பது வார்த்தைகளால் “விவரிக்க முடியாத நிலை”ஆகும். தற்காலிக காப்பகங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் எதிர்நோக்குவது அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் சடலங்களே.
“இடைவிடாது சரமாரியாக தொடுக்கப்பட்ட ராக்கெட்டுகளும் குண்டுகளும் போர் விமானங்களின் ஏவுகணைகளும் ஏற்படுத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவி புரியவே அவர்கள் முயல்கின்றனர்.” என்கின்றார் ஜாவித்.
சிரியா-அமெரிக்கா மருத்துவ கூட்டுறவு, அவர்களிடம் போதிய மருத்துவ உதவியாளர்களும் இடமும் பற்றாக்குறையாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை பராமரிக்க குறைந்தப் பட்சம் ஒரு காப்பகத்திற்கு 22 ஆட்கள் தேவை என கடந்த வாரம் தகவல் தெரிவித்துள்ளது.
சிரியாவின் விடுதலை மருத்துவர்கள் யூனியனின் பிரதிநிதி அஹ்மத் அல் மஸ்ரி (Ahmedal Masri) அல் ஜஸீரா பத்திரிகையாளரிடம் கூறுகையில்,
“சிரிய அரசு ஒவ்வொரு சாமானியனின் வாழ்வை அழித்து கொண்டிருக்கிறது.மிக பயங்கரமான வெடிகுண்டு தாக்குதலை சிரியாவின் அரசு நடத்துகிறது.இதன் விளைவாக, கிழக்கு ஃகூவ்தா பகுதியின் பல மருத்துவமனைகள் தகர்க்கப்பட்டும் மருத்துவ வேலையாட்கள் கொல்லப்பட்டும் இருக்கின்றனர். எங்களின் மூன்று மருத்துவக் காப்பகங்களில் ஒன்றைத் தாக்குதல் தொடுத்து அழித்துவிட்டனர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார்; மூன்று பேர் காயமுற்றனர் என்றார்.
இது போன்ற இன்னும் பல சொல்லில் வடிக்கமுடியா சோகங்களை அனுதினமும் எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டே மரண வேதனையை அனுபவிக்கின்றனர் சிரியா மக்கள்
– அபூஷேக் முஹம்மத்.