எழுதியவர் – அபூஷேக் முஹம்மத்.
வாழ்வும் சாவும் ஒருங்கே நிகழும் சிரியா
கடந்த சில வாரங்களில் ரஷ்ய போர் விமானங்கள் மூலம் சிரியா அரசு தொடர்ந்து நடத்திய வான்வழிதாக்குதலில், கிழக்கு ஃகூவ்தா பகுதியில் உள்ள 400 க்கும் மேற்பட்ட சிரியாவின் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அல்ஜஸீரா ஊடகம் செய்திகள் அளிக்கின்றது.
சிரியாவின் மனித உரிமை மீறல்களை கவனிக்கும் SOHR குழு கடந்த வியாழன் அன்று தெரிவித்த தகவலில் கிழக்கு ஃகூவ்தா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 403 குடி மக்கள்கொல்லப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது, இந்த தாக்குதலில், 150 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 2120 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறை கூட்டத்தில் சிரியாவின் அமெரிக்க தூதுவர் ஸ்டஃவ்ரன் டீ மிஸ்ரா கலந்து கொண்டு போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் ரஷ்யா போரைத் தொடர்வதாக கூறியுள்ளது கவனிக்க வேண்டியது.
“சிரியாவில் மனிதநேயமற்ற இந்த தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிரியாவில் நடைபெற்று வரும் போர் மற்றும் அங்கு நிகழ்த்தப்படும் கண்மூடித்தனமான மோட்டார் ஷெல் வகை குண்டு வீச்சு தாக்குதல்களையும் உடனே நிறுத்த வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு முன் அலப்போவில் நடைபெற்ற துயரச் சம்பவங்களை போல, கிழக்கு ஃகூவ்தா பகுதியில் மனிதநேயமற்ற தாக்குதல்களும், மக்கள் வெளியேறும் அவலமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
தற்போதைய சமீபத்திய செய்திகளின் படி, அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை 30 நாட்களுக்கு சிரியாவில் போரை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. இது வரை கிழக்கு ஃகூவ்தா பகுதியில் இறப்பு ஏறக்குறைய 500 க்கும் அதிகம் என கணக்கிடப்படுகின்றது.
குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை
கிழக்கு ஃகூவ்தாவில் வாழும் அதிகமான மக்கள் பலரும் வெளியேறிக் கொண்டு இருக்கின்றார்கள். இருந்த போதிலும் அங்கு வசிக்கும் ஒரு சில மக்கள் பதுங்கிக் கொள்ள வழியின்றியும், வாழத் தெரிவு இன்றியும் இருக்கின்றார்கள். டௌமா (Douma) பகுதியில் வசிக்கும் ரஃபாத் அல் அப்ராம் மகிழ்வுந்து பழுதுகளை சரி செய்யும் தொழிலாளி ஆவார். கடந்த சில தினங்களில், தொடர்ந்து இரு முறை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களாலும் அவரது தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
“என்னிடம் இருக்கும் கருவிகளை கொண்டு போரில் சேதமான மகிழ்வுந்துகளை பழுது பார்க்கிறேன்” சில நேரங்களில் தொடர்ந்து பயன்படுத்துவதால் சேதமடையும் ஆம்புலன்ஸ் வாகனங்களை பழுது பார்க்கிறேன்” என்று அல் ஜஸீரா பத்திரிகையாளரிடம் உரையாடினார். அவரது மனைவியும் பதின்ம வயது அடைந்த இரு மகள்களும் போர்ச் சூழலில் வீட்டிலேயே இருக்கின்றனர். ஒவ்வொரு தினமும் , தங்களைச் சுற்றி நடக்கும் செய்திகளை சேகரித்து வீட்டிற்கு வரும்போது, அருகில் இருக்கும் நபர்களுடன் சேர்ந்து கூடிப் பேசுவதில் கழிகின்றது அப்ராம் போன்றோரின் வாழ்நாள்.
“சில நேரங்களில் நான் வேலை செய்யும் இடங்களில் குண்டு வெடிப்பு நடைபெறும்.உடனடியாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியாவதை தடுக்க, சிவில் டிஃபன்ஸ் அமைப்புகளுடன் சேர்ந்து உதவி செய்வேன்” என்கிறார் அப்ராம். வீட்டிற்கு வரும்போதெல்லாம், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை கண் கூடாக பார்ப்பதால் மனதளவில் பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“பெற்றோர்கள் தங்களின் இறந்த குழந்தைகளை சுமந்து அழுகையுடன் கதறிக் கொண்டே ஓடுவதையும், கால்களை இழந்த தன் மகனை தூக்கி கொண்டு ஓடும் தந்தையையும்,ஏதாவது ஒரு மூலையில், இடிபாடுகளில் சிக்கி கதறிக் கொண்டு இறைவனிடமும் மீட்புபணியினரிடமும் தங்களின் உறவினர்களைக் காப்பாற்றுங்கள் என்று துயரப்பட்டு கண்ணீர் வடிக்கும் தருணம் அவர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பேன். ஆனாலும், எங்களைச் சுற்றி நடக்கும் திகிலூட்டும் பயங்கரவாத செயல்களால் அவர்களுடன் அமர்ந்து நானும் அழுவேன்” என்றும் அவர் கூறினார்.
– அபூஷேக் முஹம்மத்.