ஆப்பிரிக்க தேசங்களில் கதைகளாய் வந்துகொண்டிருந்த நிகழ்வுகள் இதோ அண்டை நாடான இலங்கையில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது. இப்படியும் நடக்குமா என்று எண்ணி போகும் அளவிற்கு இலங்கையின் சூழல்கள் மாறிக்கொண்டிருக்கிறது. 1948 இல் சுதந்திரம் பெற்ற இலங்கை இன்றைக்கு அதன் வரலாற்றில் மிக மோசமான கால கட்டங்களின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்களின் வாழ்க்கை தாறுமாறாகிக் கொண்டிருக்கிறது. நீண்ட காலகட்டத்திற்குப் பிறகு இலங்கை தமிழ் மக்கள் அகதிகளாக இந்திய மண்ணிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் பெரும்பாலானோர் பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். பணம் இருப்பவர்களுக்கு பொருட்கள் கிடைக்க முடியாத நிலைமை. உணவுப் பொருள்கள், எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், மருந்து போன்றவைகளெல்லாம் கிட்டாக்கனியாக, எட்டாச் சரக்காக மாறியிருக்கிறது. கல்வி வளாகங்களில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு சொல்லப்பட்ட காரணம், வரலாற்றில் எங்கும் காணப்படாத காரணம். ஆம், தேர்வு எழுத காகிதங்கள் இல்லை.
பெரிதான சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்த இலங்கையில் இவ்வளவு நெருக்கடி ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மூலம் பெரும் மரணங்களும் உள்நாட்டு கலவரங்களும் இலங்கையில் ஏற்படாவண்ணம் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்த வேண்டும். இலங்கை மண்ணிலிருந்து மக்கள் அகதிகளாக அந்நிய தேசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிலைமை தொடரும் என்று சொன்னால் மனித சமூகம் காணப்போகும் மிகப்பெரும் அவலங்கள் இலங்கையில் அரங்கேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சுதந்திர தமிழ் ஈழம் கேட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு நடைபெற்றுக் கொண்டிருந்த சண்டைகள்தான் இலங்கையின் பெரும் பிரச்சினையாக முன்பு இருந்தது. 2009இல் நடைபெற்ற பெரும் ராணுவ தாக்குதலின் ஊடாக விடுதலைப்புலிகள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கப்பட்டார்கள். இலங்கையை பல்லாண்டுகளாக சிக்கலில் ஆழ்த்தியிருந்த ‘உள்நாட்டு எதிரிகள்’ இல்லாமல் ஆனபிறகு இலங்கை பெரும் முன்னேற்றத்தை அடையும் என்றே பலரும் கருதினார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பிறகும் இலங்கை மென்மேலும் பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பின்னோக்கிய பயணத்தில் இலங்கை இப்போது உச்சத்தில் இருக்கிறது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்குக் காரணங்கள் என்ன என்ற ஆய்வில் பலரும் பல காரணங்களை முன்வைக்கின்றனர். எளிமையாக சொல்வதென்றால், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததும் பணவீக்கம் அதிகரித்ததும்தான் மிக முக்கியமான காரணம். ஆனால், இது வெறும் ஒரு பொருளியல் சார்ந்த காரணம் மட்டுமே. அதற்கும் அப்பால் அரசியல் மற்றும் சமூகரீதியான காரணங்களும் உண்டு. அவைகள் சரி செய்யப்பட்டால் மட்டுமே இலங்கையால் தன் இயல்பான நிலைமைக்கு திரும்பி வர முடியும். ஆனால், அவ்வாறு திரும்பி பயணிப்பதற்கான காலகட்டம் கடந்து விட்டது என்பதுதான் இலங்கையின் பரிதாபகரமான சூழ்நிலை.
விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்டிய பிறகு, தமிழ் மக்களை அரசின், அரசியலின் அங்கமாக மாற்றுவதற்கும் மைய நீரோட்டத்தில் கொண்டுவருவதற்கும் எவ்வித முயற்சிகளையும் சிங்கள அரசாங்கம் செய்யவில்லை. அதற்கு மாறாக அவர்களை மேலும் மேலும் எதிரிகளாகக் கட்டமைப்பதுற்குண்டான வேலைகளைத்தான் அரசாங்கம் செய்தது. கும்பல் கொலைகளும் திட்டமிட்ட இனப்பாகுபாடும் தொடர்கதையானது. மக்கள்தொகையில் 9 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராகவும் அரசு பாகுபாடுகளும் இனவெறித் தாக்குதல்களும் அரங்கேறியது. 2019 இல் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் இவற்றை மேலும் அதிகரிக்கச் செய்தது.
சுருக்கமாகச் சொல்வதென்றால் இலங்கையில் வாழும் இரண்டு முக்கியமான சிறுபான்மையினரை அன்னியப்படுத்தி, சிங்கள தேசியவாதத்தில் பெருமை கொண்டு, அதனடிப்படையில் ஆளும் அரசாங்கம்தான் கடந்த பல வருடங்களாக இலங்கையை ஆண்டு வழி நடத்திக் கொண்டிருக்கிறது. தீவிர சிங்கள தேசிய வாதத்தையும் ராஜபக்ச குடும்பத்தின் தேவைகளையும் மட்டும் ஒருங்கிணைத்துக் கொண்டு முன்னே செல்லும் குறுகிய அரசுதான் இலங்கையில் உள்ளது.
அத்தியாவசிய பொருள்களுக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ள நாடுதான் இலங்கை. சுற்றுலா தான் அதனது முக்கிய வருமானம். 2019 இல் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல்கள் அந்நாட்டின் சுற்றுலா வருமானத்தில் பெரும் இழப்பை உருவாக்கியது. அதனுடைய தாக்கம் குறைவதற்கு முன்பாக கோவிட் உலகை உலுக்கியது. ஒட்டுமொத்தமாக இலங்கையின் மைய வருமானம் இல்லாமல் போனது. இதற்கிடையில் சீனாவிடமிருந்து பில்லியன் கணக்கில் கடன் பெற்று பெரும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வருமானம் குறைந்து செலவு அதிகரித்தால் என்ன நடக்குமோ அதுதான் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருமானம் குறைந்தது மட்டுமல்லாமல் பெரும் கடன்களின் மூலம் உருவான வட்டியை கட்டமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது இலங்கை. அன்னியச் செலவாணி கையிருப்பு குறைந்து அதன் காரணத்தினால் இறக்குமதியும் செய்ய முடியவில்லை. விலை உயர்வு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் கிட்டா பொருட்கள் ஆகிவிட்டது.
எரி பொருள்கள் கிடைக்காத காரணத்தினால் வியாபாரங்களும் மின்சார உற்பத்தியும் பாதிப்பிற்கு ஆளாகியது. மின்சாரம் சில மணி நேரம் மட்டுமே வினியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் என்ன நடக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம். இப்போது பெட்ரோல் பங்குகளுக்கு முன்னால் கிலோ மீட்டர் கணக்கில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். ராணுவத்தை களத்தில் இறக்கி நிலைமையை சரி செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் வங்கிகளின் வாசலில் வரிசைகளில் நின்று மக்கள் செத்து விழுந்ததைப் போன்று இப்போது இலங்கையிலும் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். வட்டிக்கு கடன் கொடுத்து வட்டிக்கு மேல் வட்டி கொழுத்து இலங்கையை சிக்கலில் ஆழ்த்திய சீனா இப்போது திரும்பிப் பார்ப்பதில்லை. சீனாவின் ‘கடன் சிக்கல் தந்திரத்தின்’ இரைதான் இலங்கை என்றே நிபுணர்கள் கருதுகிறார்கள்.
வட்டி தனி நபர்களையும் குடும்பங்களையும் மட்டுமல்ல நாடுகளையும் சீர்குலைக்க வைக்கும் என்பதுதான் உண்மை. வருமானத்திற்கு ஏற்பவே செலவு இருக்க வேண்டும் என்பதுதான் இலங்கை தரும் மிக முக்கியமான பாடம். நாட்டு மக்கள் அனைவரையும் நம்பிக்கையோடு சேர்த்துக் கொண்டு முன்னே சென்றால் மட்டுமே ஒரு நாடால் முன்னேற முடியும் என்பதும் இலங்கை கற்றுத்தரும் மற்றொரு பாடம். இனவாதமும் இனப்பாகுபாடும் சர்வாதிகாரமும் ஒரு போதும் முன்னேற்றத்தை தராது.
இலங்கையின் சிக்கல் இந்தியாவிற்கும் பாடம் கற்றுத் தரும் என்றே நம்புகிறோம்.
- அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்