அறியப்பட்ட வரலாற்றுச் சான்றுகளின்படியேகூட, தமிழகம் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு அந்நியமான பூமியல்ல! சமண – பௌத்த; சைவ – வைணவ மத மாற்றங்கள் தொடர்ந்து அரசியல் அதிகாரப் போட்டியோடு நடைபெற்ற மண் இது.
- பின்னை நாட்களில், கிறிஸ்தவமும், இஸ்லாமும் இப்பட்டியலில் சேர்ந்தன என்பதாலும்,
- இவை இரண்டும் வேறு புவியியல் பகுதியிலிருந்து இங்கு வந்தவை என்பதாலும்,
- இந்தியாவில் உதித்த (சனாதன இந்து அல்லாத) ஏனைய மதங்கள் இன்று ‘இந்து’ மதத்தால் உட்கொள்ளப்பட்டன என்பதாலும்,
இன்றைய “மதமாற்றம்” என்ற சொற்றொடர் அந்நியமாய் – வெளியே வைத்துப்பார்க்கப்படுவதையும், அது நேரடியாக “இந்து விரோத” காரியமாகப் பார்க்கப்படுவதையும் நாம் நேர்மையோடு உணர்ந்திட வேண்டும்.
இந்த வரலாற்றுப் பக்கங்களை கவனிக்காமலும், அல்லது வேண்டுமென்றே விலக்கியும் வைத்துதான் பலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். அந்த வகையில் தான் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ‘மதமாற்றம் ஒரு வன்கொடுமை’ என்ற நூல் மதமாற்றத்தை ஒரு பெரும் குற்றமாக – வன்முறையாக – பெரும்பாவமாக முதலில் இந்து மதத்திற்கும், பிறகு இந்திய நாட்டிற்கும் கட்டமைக்க முயற்சிக்கின்றது.
ஆனால் யதார்த்தத்தில் ஒரு மனிதனுக்கு உள்ள இயற்கை உணர்வுகளைப் போன்றதுதான் ஒருவனுக்கு தான் விரும்பும் கொள்கையை – வாழ்க்கை நெறியை ஏற்பதும், நடைமுறைப்படுத்துவதும். உண்மையில் மதமாற்றம் ஓர் அப்பழுக்கற்ற ‘தனிநபர் சுதந்திரம்’.
ஆகக்குறிப்பாக, இன்று ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த ஒருவர் நாத்திகராகவும், மார்க்சியவாதியாகவும், இருக்க முடியுமெனில் (இது முற்றாக சனாதன இந்து தர்மத்திற்கு எதிரான கொள்கைகள் எனும்போது) அதேபோல கொள்கையளவில் மாறுபட்டு ஒரு முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ மாறுகையில் ஏன் இத்தனை ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதற்கான உளவியல்தான் உண்மையில் நமது முதல் பேசுபொருள்!
இன்று குறிப்பாக ஒருவர் முஸ்லிம் ஆவதற்காக குதூகளிக்கும் நம்மில் பெரும்பாலானோர் தன்னை ‘முஸ்லிம்’ ஆக நிலை நிறுத்துவது இல்லை என்பதில் தொடங்கி, அழைப்பினை செவியேற்று தன்னை முஸ்லிமாக ஆக்கிக் கொண்டு வரும் எவருடைய அடுத்தடுத்த பிரச்சனைகளை, சவால்களை முஸ்லிம் சமூகம் உணரவோ – உதவவோ முன்வருவதில்லை என்பது வரை ‘அழைப்புப் பணி’ களத்தில் நமது பேசுபொருட்கள் பல.
இவை அனைத்தும் பேசப்படவேண்டும். அழைப்புப்பணியின் பரிமாணம், வீச்சும் ஆழப்பட வேண்டும் என்ற நன்னோக்கத்தின் சிறு முயற்சியே இது!!
(திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 1989ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின. அவர்கள் தங்களை அழுத்திக் கொண்டிருந்த சாதி எனும் அடிமைத்தளையை அறுத்தெறிந்து விடுதலையை ஈட்டிக் கொண்டதன் 38ஆவது நினைவு நாள் இன்று.)
#Conversion_Is_A_SocialChange
#பிப்ரவரி 19
#சாதி ஒழிப்பு தினம்
எழுதியவர்
ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V
(சமூக செயற்பாட்டாளர்)