பழந்தமிழ் இலக்கியங்களைப் பதம் பிரித்துப் படிக்கவே தடுமாறும் இந்தக் காலத்தில் பாடபேதங்கள், உரை விளக்கங்களின் வேறுபாடுகள், பதிப்பு மாறுபாடுகள் என்று ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்து, அவற்றை உடனுக்குடன் விவாதிக்கும் அரிதான தமிழறிஞர்களில் ஒருவர் பொ.வேல்சாமி. வாசிப்பையே உயிர்மூச்சாகக் கொண்டு இயங்குபவர். ஆய்வாளர்கள், மாணவர்கள், செயல்பாட்டாளர்கள் எனப் பலருக்கும் அவர்களுக்குத் தொடர்புடைய புத்தகங்களையும் விவரங்களையும் அளித்து உதவுபவர். சமீபத்தில், தன்னுடைய தனிச் சேகரிப்பிலிருந்த 3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்னூலாக்கத் திட்டத்துக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார். அவருடனான விரிவான பேட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்…
பதிப்பு வரலாறு என்பது ஆய்வுலகில் ஒரு புதிய துறையாக வளர ஆரம்பித்திருக்கிறது. இவ்வகை ஆய்வுகளின் சமூக அரசியல் முக்கியத்துவம் என்ன?
நூல் பதிப்புகள் குறித்த சிந்தனைகளை எல்லா மொழிகளிலும் எதிர்பார்க்க முடியாது. தமிழைப் போன்ற உலகின் மிகப் பழமையான மொழிகளில் மட்டுமே அதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழின் வரலாறு என்பது மிகக் குறைவாகச் சொன்னாலும் சுமார் 2,300 ஆண்டுகளுக்குக் குறையாததாக இருக்கிறது. உலகில் நீண்ட காலம் வாழும் மொழிகளில் ஒன்றாகவும், பழைய படைப்புகளைக் கொண்டுள்ள மொழியாகவும் தமிழ் உள்ளதால் இந்த மொழியின் ஆக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சரியாகக் கணக்கில்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் தற்கால மக்களுக்குச் சரியான முறையில் கிடைக்காது. இவற்றை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களைத் தவறான திசையிலும் செலுத்திவிட வாய்ப்புண்டு. எனவே, தமிழில் பதிப்பு வரலாறு என்பது தவிர்க்க முடியாதது.
தமிழ்ப் பதிப்பு வரலாறு எப்போதிருந்து தொடங்குகிறது?
வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள்தான் தமிழின் சிறப்பையும் பெருமையையும் தொன்மையையும் இந்த மொழியின் பரந்துபட்ட இலக்கிய இலக்கண வளங்களையும் கண்டு சமகால மாணவர்களுக்குப் பாடங்களாகவும் பாடத்திட்டங்களாகவும் ஆக்கினார்கள். தமிழைச் சமகாலத்துக்கு இயைபுடையதாக மாற்ற வேண்டும் என்று அதற்கான வேலைகளைச் செய்தார்கள். இதன் விளைவாக, ஒருசில தமிழர்களும் பழமையான நூல்களைச் சரியான முறையில் அச்சிட வேண்டும் என்று ஆவல்கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்தார்கள். அந்த ஆவலைத் தூண்டியவர்களில் முதன்மையானவர்களாக வீரமாமுனிவர், எல்லீஸ் போன்ற வெளிநாட்டவர்களைச் சொல்ல வேண்டும். இவர்களை அடுத்து ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, உவேசா போன்றவர்களையும் குறிப்பிட வேண்டும். இவர்கள் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியம் சார்ந்த நூல்களையும் அச்சிடுவதில் கவனம் செலுத்தியவர்கள். அதே நேரத்தில், சைவ சித்தாந்த நூல்கள், வைணவ நூல்கள், சிற்றிலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பித்தவர்களும் உண்டு. ஆனால், அன்றைய காலகட்டத்தில் சங்க இலக்கியங்களுக்கும் தொல்காப்பியத்துக்கும் இருந்த பதிப்பு வரலாறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கும் மற்றைய நூல்களுக்கும் அமையவில்லை.
பதிப்பு வரலாற்றுக்கான நோக்கத்தைத் தற்போதைய ஆய்வுகள் எட்டியிருக்கின்றனவா?
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘செந்தமிழ்’ பத்திரிகையின் வாயிலாகத்தான் பதிப்பு வரலாறு தொடங்குகிறது. இரா.இராகவைய்யங்கார், மு.இராகவைய்யங்கார், வையாபுரிப் பிள்ளை, இ.வை.அனந்தராமய்யர், நாராயண ஐயங்கார் எனப் பலரும் தங்களுக்கான பணிகளை வகுத்துக்கொண்டு பணியாற்றினர். இருந்தாலும், இந்த நூல்கள் முழுமையான வடிவைப் பற்றி வெளிவந்துள்ளனவா என்று இன்றும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பல உரையாசிரியர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், பதிப்புப் பணியில் ஈடுபடக்கூடியவர்களின் மதம் சார்ந்த கண்ணோட்டங்கள் இவையெல்லாம் அந்த நூல்களின் பதிப்பில் சில பிரச்சினைகளை உண்டாக்கியிருக்கின்றன. அவற்றில் ஒருசில தீர்க்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான நூல்கள் இன்றும் அதே நிலையில்தான் இருக்கின்றன. ஆகவே, தற்கால ஆய்வாளர்களுக்கு இது தொடர்பாகச் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் குவிந்துகிடக்கின்றன.
கரந்தைக் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர் நீங்கள். தீவிர வாசிப்பு, ஆய்வு என்று இருந்தாலும் கல்வித் துறையை விட்டு சுயதொழிலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது ஏன்?
புலவர் பட்டம் பெற்றவனாக இருந்தாலும் மற்றவர்களிடம் கைகட்டிச் சம்பளம் வாங்கக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஓரளவு இளமைப் பருவத்திலிருந்தே சிறு சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்ததால் தொழில் சார்ந்து சம்பாதிப்பது எனக்கு மிகவும் எளிமையாகவே இருந்தது. ஆகவே, வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. தொடர்ந்து வாசிக்க வேண்டும், வாசிப்புடன் சேர்ந்து நமது தொழிலையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவமே என்னிடம் இருந்தது. அவ்வகையில், நான் எல்லாவிதமான நூல்களையுமே படிக்க ஆரம்பித்தேன். ‘பொன்னியின் செல்வன்’, ‘குறிஞ்சிமலர்’, ‘ஒரு புளியமரத்தின் கதை’ இப்படியான பல்வேறு நூல்களை நான் வாசித்துவரும் நேரத்தில் கார்க்கி, செகாவ் போன்றவர்களின் நூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் வெளிவந்த ‘மஞ்சரி’ பத்திரிகையின் நடுப்பக்கத்தில் வெளியான உலகத்தின் சிறந்த படைப்புகளின் சுருக்கங்கள் போன்றவற்றையும் படித்துவந்தேன். படிப்பது என்பது எனக்குச் சுகமான அனுபவமாக இருந்தது. அந்தச் சுகமான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள நண்பர்களை நாடும்போதுதான் இன்னமும் பரந்துபட்ட தளத்தில் என்னுடைய வாசிப்பு விரிவடைந்தது. அத்தகைய நண்பர்களில் மிகவும் முக்கியமானவர்களாக மூவரைக் குறிப்பிடலாம். அவர்கள் ஜெயராஜ், அ.மார்க்ஸ், கே.எம்.தியாகராஜ். வாசிப்பின் அடிப்படையில் அவர்களுடன் ஏற்பட்ட பழக்கம் பின்பு நட்பாக மலர்ந்தது.
பரபரப்பான தொழில் பணிகளுக்கு இடையிலும் படிப்பதற்கு நேரம் ஒதுக்க முடிவது எப்படி?
நண்பர்கள் பலரும் அவ்வப்போது வாசிப்பு அனுபவங்களைப் பற்றிக் கேட்கிறார்கள். எனக்கு அது வியப்பாகத்தான் இருக்கிறது. உடல் வலுவாகவும் அழகாகவும் நோய் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் உடற்பயிற்சி நிலையம் சென்று பயிற்சி எடுக்கிறோம். நமது மூளைக்கும் அப்படியொரு பயிற்சி எடுக்க வேண்டுமா இல்லையா? உலகளவில் மக்கள் எங்கு அடிமைகளாக இருந்தார்கள் என்றால், எங்கே வாசிப்பு குறைவான சமூகம் இருந்ததோ அங்குதான். வாசிப்பு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு அடிமைகள் இருக்க மாட்டார்கள். அங்கு, பணக்காரர்கள் ஏழைகள்கூட இருக்கலாம். ஆனால், யாரும் அடிமைகளாக இருக்க மாட்டார்கள். வாசிப்பு என்பது ஒருவரைச் சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கிறது. எனவே, அந்தச் சமூகமே சிந்தனையாளர்களைக் கொண்டதாக மாறுகிறது. அவ்வகையில், அடிமைத்தனத்துக்கு எதிரானதாக வாசிப்பு செயலாற்றுகிறது.
நூல்கள் என்பவை வெறுமனே எழுத்துகளால் நிறைந்தவை அல்ல. அறிஞர்களின் பல்வேறு விதமான அனுபவங்களைத் தொகுத்துக் கொடுப்பவை. வாசிப்பு என்பது மகிழ்ச்சியை அளிப்பதற்கு மட்டுமே அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் சுதந்திரமானவர்களாக இருப்பதற்கும் ஆளுமை மிக்க மனிதர்களாக இருப்பதற்கும் உதவியாகவும் பயன்படக்கூடியதாகவும் அவை இருக்கின்றன. டால்ஸ்டாயை எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு புத்தகங்களை அவர் படித்திருக்கிறார். சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எவ்வளவு புத்தகங்களைப் படித்திருக்கிறார்கள். சமீப கால அரசியலர்கள்கூட ‘மெயின் காம்ப்’ படித்தோம், ‘பிரின்ஸ்’ படித்தோம் என்கிறார்கள். இந்தப் புத்தகங்கள் எல்லாம் தமிழிலேயே கிடைக்கின்றன. மனித மனங்களையும் அதிகாரத்தையும் பற்றிய ஆராய்ச்சியாக அந்த நூல்கள் அமைந்திருக்கின்றன.
நூல்கள் என்பவை ஒவ்வொரு காலகட்டத்திலேயும் மனிதர்களை மேம்படுத்தி அவர்களின் கருத்துகளை இன்னும் வலிவுடையதாக மாற்றி, தம் காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்த புரிதலை அந்த மனிதர்களுக்கும் அந்தச் சமூகத்துக்கும் அளித்து அவர்களைச் சுதந்திரமானவர்களாகவும் யாருடைய அடக்குமுறைக்கும் கட்டுப்படாத மனிதர்களாகவும் ஆக்குகின்றன. நூல்களாலும் அவற்றால் உருவாகிற சிந்தனைகளாலும் அந்தச் சிந்தனைகளை ஒருங்கிணைக்கக்கூடிய மனிதர்களாலுமே உலகில் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. நூல்கள் எழுதுவது, வாசிப்பது, அவற்றை விவாதிப்பது என்ற விஷயங்கள் மனித அறிவின் மேன்மைக்கும் மனித நாகரிகத்தின் மேன்மைக்கும் வழியமைப்பதோடு அடிமைத்தனத்துக்கு எதிரானதாகவும் செயலாற்றுகின்றன. எதேச்சாதிகார சக்திகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கவும் ஆற்றலைக் கொடுக்கக்கூடியவை புத்தகங்கள். அப்படியொரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
நன்றி. இந்து தமிழ் திசை