மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை திருத்தச் சட்டம் எனும் ஜனநாயக படுகொலைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள் ஜனநாயக முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அமைதிப் போராட்டங்களில் மாணவர்களை தாக்குவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற தீவிரவாத செயல்களில் இந்துத்துவ அமைப்பினர் தொடந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களையும் இவர்களுக்கு ஆயுதம் வழங்கும் தீவிரவாதிகளையும் காவல்துறை கண்டுகொள்வதில்லை. அவர்களும் குடிமக்கள் மீது கடும் அடக்குமுறையை தொடர்ச்சியாக கட்டவிழ்த்து வருகின்றனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் “சுட்டுத் தள்ளுங்கள்” என்று வன்முறையை தூண்டிய பாஜக அமைச்சர்கள் மீது வழக்கு கூட பதிவு செய்யாமல், போராடும் மாணவர்களை குறிவைத்து வேட்டையாடி வருவது கண்டனத்துக்குரியது.
மாணவர் தலைவர்களின் பேச்சுகளை திரித்து சில மீடியாக்கள் செய்தி வெளியிடடுகின்றன. இதை ஆதாரமாக வைத்து காவல்துறை தனது கைது படலங்களை ஆரம்பித்து விடுகின்றன. இவர்களின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்திற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
SIO வின் மஹாராஷ்டிரா (தெற்கு) மாநில தலைவர் சல்மான் அஹமது CAA விற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர், அனல் பறக்கும் உரைகளுக்கு சொந்தக்காரர், இளம் மாணவர் தலைவர். கடந்த ஒன்றாம் தேதி அன்று நடைபெற்ற போராட்டத்தில் “பொறுமையோடு போராட்ட களத்தில் உறுதியாக நிற்பது” குறித்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் CAA சட்டத்தையும், பாசிசத்தையும் மண்ணில் புதைப்போம் எனும் உருது கவிதையை வாசித்தார், இதை மீடியாக்கள் திரித்து செய்தி வெளியிட்டன. இந்த பின்னணியில் மஹாராஷ்டிரா காவல்துறை அவரை கைது செய்துள்ளது. இதுவோர் அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும். சல்மானின் வார்த்தைகளை தான் நாங்களும் சொல்கிறோம் “போராடும் எங்களை நீங்கள் சிறையில் அடைக்கலாம்.. ஆனால் எங்களின் போராட்ட குணத்தை ஒருபோதும் உங்களால் சிறையில் அடைக்க முடியாது.”
எனவே மாணவ தலைவர் சல்மான் அஹமதை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் மாணவ போராட்டங்கள் நடைபெறும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
- மௌலவி.நாசர் புஹாரி,
மாநில தலைவர்,
SIO தமிழ்நாடு