இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கத் துடிக்கும் பாஜக அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) வன்மையாகக் கண்டிக்கிறது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாசிச பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் குடியுரிமைச் சட்டம் 1955ல் திருத்தத்தை ஏற்படுத்தி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் முஸ்லிமல்லாத மக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கி, முஸ்லிம்களை மட்டும் வஞ்சகமாக விலக்கி நிறுத்துகிறது. மேலும், பௌத்த பேரினவாதத்தால் மியான்மரிலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்த அகதிகளுக்கும் இடமில்லை என்கிறது.
NRC மூலமாக அஸ்ஸாமில் ஆயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய இந்த அரசு, இன்று அவர்களை நாடற்றவர்களாக மாற்றியுள்ளது.
ஒருவரது குடியுரிமையை அவரது மதத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமில்லாமல் அதன் அடிப்படை தத்துவத்தையே தகர்க்கும் செயலாகும். சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திற்கும் இது எதிரானதே.
இந்திய அரசியலமைப்பின் சரத்துகள் 5, 10, 14, 15 ஆகியவற்றுக்கு எதிரான இம்மசோதா பாசிச பாஜகவின் மிருகபலத்தால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் இது நிறைவேறினால் அது உலக அரங்கில் இந்தியாவின் பன்மைத்துவ முகத்தை அழித்து மதவாத முகத்தையே உருவாக்கும். எனவே, இதை அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் சேர்ந்து மாநிலங்களவையில் முறியடிக்க வேண்டும்.
நிர்வாகத் திறனற்ற பாஜக அரசு தொடர்ச்சியாக மக்களைப் பிளவுபடுத்தி பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ முயல்வது நாட்டினுடைய வளர்ச்சியை கடுமையாக பாதித்து வருவதோடு, இன, மத ரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது.
பார்ப்பனிய தலைமை பீடமான RSSன் கொடுங்கனவான இந்து ராஷ்டிராவை அமைப்பதற்கான மிக முக்கியமான முன்னெடுப்பாகவே குடியுரிமை மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை அமைந்துள்ளன. முஸ்லிம்களை இரண்டாம் தரக்குடிமக்களாக்கும் அவர்களின் திட்டத்திற்கும் இவை வழியமைத்துக் கொடுத்துள்ளன.
இப்படியான சூழலில், பெரும்பான்மையினரின் பெயரால் இந்திய அரசியலமைப்பைத் தகர்க்கும் விதமாக RSS, பாஜக நடத்தும் அநீதிகளை எதிர்த்து களம் காணுமாறு பன்மைத்துவத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) அழைப்பு விடுக்கின்றது.
இப்படிக்கு,
B.முஹம்மது நாசர் புகாரி,
மாநில தலைவர்,
SIO, தமிழ்நாடு