நடப்பு இரண்டாண்டுகளுக்கான இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்! அதே சமயம் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருக்கிறீர்கள். உங்கள் பணியும் பயணமும் எப்படிச் செல்கிறது?
வாழ்த்துகளுக்கு நன்றி. SIOவின் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், மாநிலத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏறத்தாழ 9 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த இரண்டுமே என் மீது சுமத்தப்பட்டிருக்கும் மிகப் பெரும் பொறுப்புகள். எல்லாம் வல்ல இறைவன் இதனைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு அருள்புரிய வேண்டும். தொடக்கத்தில் இந்தப் பொறுப்புகளை ஏற்று அதற்கு என்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதே மிக முக்கியமானதாக இருந்தது.
SIOவில் இரண்டு ஆண்டுகள் பொறுப்புக் காலம். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொள்கை செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு அதனடிப்படையிலான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கல்விவளாகச் செயல்பாடுகளை முடுக்கிவிடுதல், கல்வி சார்ந்த பிரச்னைகளில் தொடர்ச்சியாகத் தலையிடுதல், SIOவின் குரலை பொதுமன்றங்களில் ஒலிக்கச் செய்தல், மாணவர்களை அரசியல்படுத்துதல் எனச் சில அம்சங்களில் தனிக் கவனமெடுத்து சுட்டிக்காட்டத் தகுந்த முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறோம். அண்மையில் அகில இந்திய அளவில் SoulSpark: Illuminate Ethics எனும் கல்வி வளாகப் பரப்புரையை நடத்தினோம்.
இதைத் தொடர்ந்து மீலாது நபியை முன்னிட்டு ‘முஹம்மது(ஸல்): மானுட விடுதலையின் நாயகர்’ என்ற பரப்புரை இயக்கத்தை நடத்தி வருகின்றோம்.
அகில இந்திய அமைப்பான SIO 40 ஆண்டுகளைக் கடந்த வரலாற்றுப் பயணத்தைக் கொண்ட அமைப்பு. இது சமுதாய மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திய மாற்றங்கள், தாக்கங்கள் என்ன?
சமூகத்தை இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் கட்டமைக்கும் பணிக்கு மாணவர்களையும் இளைஞர்களையும் தயார்படுத்துவதை இலக்காகக் கொண்ட அமைப்பு SIO. இஸ்லாத்தின் செய்தியை அதற்குரிய முழுமைத்தன்மையுடன் மாணவ இளைஞர் சமூகத்திடம் கொண்டு செல்வது, சமூகப் பொறுப்புள்ளவர்களாக அவர்களை வார்த்தெடுப்பது, அவர்களிடையே நல்லொழுக்கத்தை வளர்த்தெடுப்பது போன்ற செயல்பாடுகளில் அது ஈடுபட்டு வருகிறது. ஆற்றல்மிக்க இளம் தலைமுறையினர் ஏராளமானோரை இந்த அமைப்பு சமூகத்துக்குக் கொடுத்திருக்கிறது.
அவர்கள் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கல்விப்புலத்தில் SIO ஏற்படுத்தியுள்ள தாக்கம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. கல்வி வளாகங்களில் நிலவும் இஸ்லாத்தின் மீதான தப்பெண்ணங்களைக் களைவதிலும், முஸ்லிம் இளைஞர்களின் ஈமானைப் பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும் அது ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வந்திருக்கிறது.
பல்வேறு துறைசார் ஆய்வாளர்களை உருவாக்குவது, கருத்தரங்கங்கள் நடத்துவது, ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிடுவது முதலான அறிவுசார் செயல்பாடுகளில் SIOவுக்கு நிகரான ஓர் அமைப்பு நம்மிடையே இல்லை எனலாம். அரசியல் செயல்பாட்டைப் பொறுத்தமட்டில் நஜீப், ரோஹித் வெமுலா இயக்கம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் கருத்துருவாக்கம் செய்ததில் SIOவின் பங்கு அளப்பரியது.
மாணவர்கள் எதிர்கொள்ளும் கல்விசார் சவால்களையும், இன்னபிற சிக்கல்களையும் அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான பல முயற்சிகளில் SIO தொடர்ச்சியாக ஈடுபடுகிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். என்றாலும் ஓர் அண்மைக்கால உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். தமிழகத்திலுள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புச் சான்றிதழ் வழங்காமல் ஆளுநர் காலந்தாழ்த்துவதால் இலட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லவா? இந்த விவகாரம் ஜூன் மாதம்தான் இங்கே பிரச்னையானது. ஆனால் சென்ற மார்ச் மாதமே இதைக் கையிலெடுத்து இதற்குத் தொடக்கப்புள்ளி வைத்ததும், இதை ஊடக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததும் SIOதான்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாணவ அமைப்பு SIO. ஜமாஅத்தின் கீழ் இயங்குவதால் அதனால் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா? ஜமாஅத்திற்கும் SIOவிற்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது?
ஜமாஅத்தின் கீழ் இயங்கும் மாணவ அமைப்பான SIO இருந்தாலும், SIOவுக்கென்று சுதந்திரமாக இயங்குவதற்கான வெளி இருக்கிறது. ஜமாஅத்தின் அகில இந்தியத் தலைவர் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அண்மையில் அளித்த நேர்காணலில்கூட இந்த அம்சத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கொண்டும் கொடுத்தும்தான் ஒரு பண்பாடு செழிப்படையும் என்பார்கள். அதே மாதிரியான உறவுநிலைதான் ஜமாஅத்துக்கும் SIOக்கும் மத்தியில் இருக்கிறது. SIOவின் வளர்ச்சிக்கு தார்மிக ஆதரவையும் ஊக்கத்தையும் ஜமாஅத் வழங்குகிறது. SIO தன் அமைப்பு உறுப்பினர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் மெருகேற்றி, அவர்களை இஸ்லாமிய இயக்கத்துக்குப் பயனுள்ளவர்களாக உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த அடிப்படையில் பல தலைவர்களை ஜமாஅத்துக்கு SIOஉருவாக்கித் தந்திருக்கிறது. புதிய யோசனைகளும் கருத்துகளும் SIOவிலிருந்து ஜமாஅத்துக்குச் செல்கின்றன. இப்படியான பரஸ்பர பரிமாற்றம் எங்களுக்கிடையே இருக்கிறது.
மாணவ அமைப்பின் களம் கல்வி வளாகங்கள். இப்போது கல்வி வளாகங்களில் அதன் செயல்பாடுகள் எப்படி உள்ளன? அங்குள்ள மாணவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர்?
SIO அகில இந்திய அளவில் செயல்படும் ஓர் அமைப்பு. புகழ்பெற்ற பல மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் அதன் கிளைகள் உள்ளன. கல்வி வளாகங்களில் இயங்கும் ஒரே இஸ்லாமிய மாணவ அமைப்பாக SIO உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கல்வி வளாகங்களில் அமைப்பின் இருப்பைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில், கல்வி வளாகப் பரப்புரையை முன்னிட்டு புதிய கிளைகளை வளாகங்களில் நிறுவுவது, பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது முதலானவை நடந்தன.
பொதுவாக மாணவர்கள் பல சவால்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்கிறார்கள். பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்டவர்கள் கல்வி வளாகத்தில் இருப்பார்கள். அடித்தள சாதிப் பின்புலத்தில் இருந்து வருபவர்கள், சிறுபான்மைச் சமூகத்தினர் பாகுபாடுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அடித்தள வர்க்க மாணவர்கள் தங்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் திணறுகின்றனர். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சிக்கல் இருக்கும். எனவே, கல்வி உதவித்தொகை வழங்குதல், சாதி மதப் பாகுபாடுகளுக்கு எதிர்க்குரல் எழுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம்.
போதைப் பொருள், வீடியோ கேம் உள்ளிட்டவற்றுக்கு மாணவர்கள் அடிமையாவது ஒரு முக்கியப் பிரச்னை. அதைக் களைய அரசும், சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை SIO தொடக்கத்திலிருந்தே விமர்சித்து, கடுமையாக எதிர்த்து வருகின்றது. அதற்கான அவசியம் என்ன? அதனுடன் SIO எங்கு முரண்படுகிறது?
புதிய கல்விக் கொள்கை என்பது மாநில உரிமையில் தலையிடும் ஒரு விஷயம். ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமானது. கல்வித் திட்டமும் அந்தந்த பகுதியின் சூழலுக்கு ஏற்றவாறே உருவாக்கப்பட வேண்டும். அதுவே மாணவர்களின் அறிவுசார் நலனுக்கு உகந்தது. இல்லையெனில் பல பாதகமான விளைவுகளுக்கு அது வழி வகுக்கும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி நீண்ட காலமாகக் கோரிக்கை இருந்துவரும் நிலையில், புதிய கல்விக் கொள்கை ஒன்றிய அரசின் முழு அதிகாரத்தில் கல்வியைக் கொண்டு சேர்க்கிறது.
மட்டுமின்றி, சாதிய, சனாதானக் கருத்துகளைத் திணிப்பது, வரலாற்றைத் திரிப்பது போன்ற சிக்கல்களும அதில் இருக்கும். தொழில் கல்வி என்ற பெயரில் குலக்கல்வி முறையை, வருணாசிரமத்தை ஊக்குவிக்கிறது என்று கல்வியாளர்கள் கண்டிப்பதை நாம் பார்க்கிறோம்.
புதிய கல்விக் கொள்கை கல்வியை முழுமையாக வணிகமயப்படுத்துகிறது. அதை நுகர்பொருளாக ஆக்குகிறது. இட ஒதுக்கீட்டைக் காலி செய்து சமூகநீதிக்கு உலை வைக்கிறது. மேலும், மும்மொழிக் கொள்கையின் மூலம் அது இந்தித் திணிப்பை மேற்கொள்கிறது. இப்படியான முன்னெடுப்புகள் மாணவச் சமூகத்தை மிகப்பெரும் அளவில் பாதிக்கும் என்பதால்தான் நாங்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.
அண்மையில் நீட் தேர்வால் ஜெகதீசன் எனும் மாணவர் தற்கொலை செய்துள்ள நிகழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மாணவன் ஜெகதீசன் உயிரிழந்ததற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாட்டு மக்கள் பலமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசுகூட நீட்டிற்கு எதிராக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதை நாம் அறிவோம். இன்னும்கூட இது ஒன்றிய அரசின் கையில்தானே உள்ளது. அரசு நீட்டிற்கு விலக்கு அளித்திருந்தால் மாணவன் ஜெகதீசன் இன்று உயிருடன் இருந்திருப்பான். ராஜஸ்தானிலிருந்தும் இப்படியான நீட் உயிரிழப்புகள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் ஆளும் அரசு அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதாக இல்லை; மாணவர்களின் உயிர்களை அது துச்சமாகவே கருதுகிறது.
சில வாரங்களுக்கு முன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ஒரு மாணவியின் தந்தை நீட் மசோதாவிற்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் எனக் கேட்டார். ஒருபோதும் அதற்கு விலக்கு அளிக்கப்படாது என்று ஆளுநர் மிகவும் ஆணவத்துடன் பதிலளித்ததை நாம் பார்த்தோம். இப்படி தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மாணவர்களின் மீதும் துளியும் அக்கறையே இல்லாத ஓர் ஆளுநர் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே SIOவின் கோரிக்கையாக உள்ளது.
அநீதிகளுக்கு எதிராக நிற்பவர்கள் மாணவர்கள்தான். அவர்கள் மெரினா போராட்டம் உட்பட பல போராட்டங்களிலும் களத்தில் நின்று குரல் கொடுத்தனர். SIO போராட்டக் களங்களில் இறங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
கொள்கை ரீதியான தெளிவை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்துவது, கல்வியில் அவர்களைச் சிறந்து விளங்கச் செய்வது, துறைசார் வல்லுநர்களை உருவாக்குவது, இளைஞர்களிடையே ஒழுக்கவியல் பிரச்னைகளைக் களைவது முதலான ஆக்கப்பூர்வமான பணிகளில் இத்தனை ஆண்டு காலம் SIO பிரத்யேகக் கவனம் செலுத்தி வந்திருக்கிறது. கடந்த காலங்களில் தன்பாலினச் சேர்க்கை, காதலர் தினம் உள்ளிட்டவற்றைக் கடுமையாக எதிர்த்து பொதுவெளியில் ஓர் அதிர்வை SIO ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் போராட்டங்களைப் பொறுத்தவரை, இன்றைய காலத்தில் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்களும், மாணவ சமூகத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளும் பன்மடங்கு பெருகியிருக்கின்றன. அண்மையில் ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நிகழ்த்தப்பட்டபோது சென்னை, திருச்சி, கும்பகோணம் போன்ற பகுதிகளில் நாங்கள் போராட்டம் நடத்தி, மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தோம்.
தமிழ்நாட்டில் SIO பிரதானமாகக் கவனம் செலுத்தவுள்ள பகுதிகள் என்னென்ன?
மௌலானா மௌதூதி(ரஹ்) தான் வாழ்ந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்களில் முதன்மையானவை என இரண்டு விஷயங்களைக் குறிப்பிடலாம். ஒன்று, மேற்கத்திய சித்தாந்தம்; மற்றொன்று இந்து தேசியவாதம். இன்றைக்கும் வலுவாக வேரூன்றி இருக்கும் இவ்விரு சவால்களுக்கும் நாம் உரிய வகையில் முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தற்காலத்தில் நவீனத்துவ, முற்போக்குக் கருத்துகள் பொதுக் கருத்தாக ஏற்கப்படுவதுடன், இஸ்லாம் பொதுவெளியில் எதிர்மறையாகச் சித்திரிக்கப்படுகிறது. தன்பாலினச் சேர்க்கை, பெண்ணியவாதம் போன்றவற்றுக்கு மிகப்பெரும் அளவில் பொது ஏற்பு கிடைக்கிறது.
மறுபக்கம், இந்து தேசியவாதம் சர்வ பலத்துடன் அதிகாரத்தில் கோலோச்சுகிறது. முஸ்லிம்களின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ள தற்காலச் சூழலில், தேர்தலைத் தாண்டி சித்தாந்த ரீதியாக இந்துத்துவத்தை முறியடிப்பதற்கு எந்தத் தரப்பிடமும் முறையான திட்டமில்லை. சொல்லப்போனால் சாதி, இந்து மதம், தேச அரசு பற்றியான போதிய புரிதல்கூட நம்மிடம் இருப்பதில்லை. இந்நிலையில், கொள்கை சார்ந்தும், சமகால சவால்கள் சார்ந்தும் மாணவ இளைஞர்களிடம் தெளிவை ஏற்படுத்துவதே மேற்கூறிய இரண்டு சவால்களையும் சரியான விதத்தில் எதிர்கொள்வதற்கான ஆரம்பப்புள்ளி. நவீனத்துவம் தொடர்பாக ஓர் அறிவார்ந்த உரையாடலை தமிழ்ச் சூழலில் தொடங்கி வைப்பதற்கான ஒரு சிறு முயற்சியாகவே சில மாதங்களுக்கு முன் உலகப் புகழ்பெற்ற அறிஞர் ஜாஸிர் அவ்தாவை வைத்து மதச்சார்பற்ற கல்விமுறை குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டத்தை விளக்கும் இணையவழிக் கருத்தரங்கை தமிழக SIO நடத்தியது.
இதுபோக, அமைப்புக்குள் பிரதானமாக கவனம் செலுத்த வேண்டிய பகுதி என்றால் அது ஆளுமை உருவாக்கப் பணிதான். ஆற்றல்மிக்க நபர்களை இனம் கண்டு வளர்த்தெடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் பங்களிப்பு எப்படி இருக்கும்?
2024இல் தேர்தல் வருவதால் இந்துத்துவம் குறித்த பேச்சு நம்மிடையே அதிகரித்துள்ளது. SIO ஒரு மாணவர் அமைப்பு என்ற அடிப்படையில் அது நேரடியாகத் தேர்தலில் பங்கேற்பதில்லை. அமைப்புக்கே உரிய எல்லையில் நின்று அரசியல் செயல்பாட்டில் நாங்கள் ஈடுபடுகிறோம். கருத்துத் தளத்தில் இயங்கி, இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துருவாக்கத்தைச் செய்யவுள்ளோம். பொதுவாக, தேர்தலின்போது மாணவர் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். இந்த ஆண்டும் வெளியிடவுள்ளோம். அதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்றைய உலகம் ஊடகமயமாகிவிட்டது. ஆனால் அதில் SIOவின் பங்கு பலவீனமாக உள்ளதாகவே கருதுகிறேன். இப்படிப்பட்ட முக்கியமான தளத்தைப் புறந்தள்ளிவிட்டு உங்களுடைய இலக்கை எட்டிவிட முடியும் என நினைக்கிறீர்களா?
சமூக ஊடகத்தை காத்திரமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியமே. அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. SIOவுக்குப் பல்வேறு விவகாரங்கள், சமூகப் பிரச்னைகள் சார்ந்து தனித்துவமான கண்ணோட்டம் இருக்கிறது. உதாரணத்திற்கு Pride Monthக்கு எதிராக நாங்கள் வெளியிட்ட ஆங்கில துண்டறிக்கை மிகவும் முதிர்ச்சியாக விவகாரத்தை அணுகியதாக சில இதரமதச் சகோதரர்கள் கூடச் சொன்னார்கள். இப்படியான அமைப்பின் தனித்துவமான கருத்துகளை பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வது முக்கியமானது. ஆனால், அது அவ்வளவு சுலபம் இல்லை.
இவ்விஷயத்தைக் கருத்தில் கொண்டே தற்போது மையநீரோட்ட ஊடகங்களில் SIOவின் செய்திகள், கருத்துகள், நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால்தான் தி இந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினத்தந்தி உள்ளிட்ட செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் SIO குறித்த செய்திகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. நாங்கள் நடத்தும் sagodharan.in தளத்தையும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பித்து அதை மேம்படுத்தி வருகிறோம். SIOவின் குரல் பொதுவெளியில் பலமாக ஒலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நீங்கள் ஓர் எழுத்தாளர். குறிப்பாக இஸ்லாமோஃபோபியா எனும் புத்தகத்தை எழுதியிருக்கின்றீர்கள். இஸ்லாமோஃபோபியாவை முறியடிப்பது எப்படி?
எனது முதல் கட்டுரைத் தொகுப்பு இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகளை விமர்சனத்துக்கு உட்படுத்தக்கூடிய ஒன்று. இஸ்லாமோஃபோபியா விஷயத்தில் பொதுமக்களின் விமர்சன நோக்கை கூர்தீட்டவும், புதிய பார்வையை வழங்கவும் அது முயல்கிறது. சமூகத்தில் சாதியைப் போல இஸ்லாமோஃபோபியா நிறுவனமயப்பட்டிருக்கிறது. அதை முறியடிப்பதும் எதிர்கொள்வதும் அவ்வளவு இலகுவானது அல்ல. அது சமூகத்தில் மிகப் பலமாக வேரூன்றியுள்ளது. அதைத் தகர்க்க நாம் அறிவு சார்ந்த தயாரிப்புகளில், அறிவு உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். சென்ற மார்ச் மாதம்கூட நாகூரில் ‘பாட நூல்களில் வெறுப்பு அரசியல்’ என்ற கருத்தரங்கை SIO சார்பாக நடத்தினோம். அங்கு ஆற்றப்பட்ட உரையைத் தொகுத்து தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.
இஸ்லாமோஃபோபியாவை முறியடிக்க கலை இலக்கியத்தை நாம் திறம்பட பயன்படுத்த வேண்டும். சட்ட ரீதியான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்களைத் தாண்டி அனைத்து தரப்பினரையும் பெருமளவில் இந்தப் பணியில் ஈடுபடுத்த முயற்சிப்பது அத்தியாவசியம். ஜமாஅத்தே இஸ்லாமியின் நான்காண்டுச் செயல்திட்டத்தின் மையக் கருத்தான ‘மக்கள் கருத்தை இஸ்லாத்திற்குச் சாதகமாக மாற்ற வேண்டும்’ என்பதை நோக்கி நாம் சரியாகவும், தீவிரமாகவும் செயல்பட்டாலே இறைவனின் துணை கொண்டு இஸ்லாமோஃபோபியாவை முறியடித்துவிடலாம்.
நன்றி – சமரசம்