அக்டோபர் 19, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) இம்மண்ணில் விதையாக தூவப்பட்டு 36வது ஆண்டை நிறைவு செய்து 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த 36 ஆண்டுகளில் அந்த விதை வேர்விட்டு, செடியாகி, கிளை பரப்பி, விருட்சமாக பரிணமித்துள்ளது. இந்தியாவின் 27 மாநிலங்களில் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு, ஒழுக்கத்திலும், கல்வியறிவிலும் சிறந்து விளங்கக் கூடிய, தலைமைக்கு கீழ்படியும் கட்டுக்கோப்பான ஊழியர்களை வார்த்தெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மாணவ இயக்கமாகவும், ஆசியாவின் இஸ்லாமிய மாணவர் அமைப்புகளின் இந்தியப் பிரதிநிதியாகவும், மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் UNESCO சிறந்த மாணவர் அமைப்பாகவும் பல்வேறு அங்கீகாரங்களை தனக்கு உரித்தாக்கிக் கொண்டு தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
SIO ஊழியர்களில் ஆயிரக் கணக்கானோர் முனைவர்களாகவும், பல்துறை நிபுணர்களாகவும், இஸ்லாமிய இயக்கத்தின் தளகர்த்தர்களாகவும் திறம்பட பணியாற்றி வருகின்றார்கள்.
Creative Campus, Lead the change, Redefining education- Regaining struggle-Renovating society போன்ற முக்கியத்துவம் வாய்ந்த முழக்கங்களை SIO உருவாக்கி முன்னெடுத்துள்ளது.
கல்வித்துறையில் வணிகமயமாக்கும் GATTS ஓப்பந்தம், வர்ணாசிரம கொள்கையை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை, கல்வியில் கலவியைத் திணிக்க முற்பட்ட பாலியல் கல்வி, நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பு, கல்வியில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கிளைகளை இந்தியாவில் நிறுவும் முயற்சி, ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்கும் முயற்சி போன்ற மிக முக்கியமான ப்ரச்னைகளை எதிர்த்து களமாடியதில் SIOவின் பங்கு வரலாற்றின் பக்கங்களை நிரப்பும்.
NET தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தும் UGCன் முடிவை எதிர்த்து SIO மேற்கொண்ட நடவடிக்கைகளால் அந்த முடிவை கைவிட்டு ஆண்டுக்கு இருமுறை நடத்தும் முறை தொடர்கிறது.
நீட் தேர்வில் உருது மொழியைப் புறக்கணித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் முயற்சிக்கு எதிராக SIO நடத்திய சட்டப்போராட்டத்தின் மூலம் உருது மொழியிலும் தேர்வு நடத்த உறுதி செய்யப்பட்டது.
நுழைவுத் தேர்வுகளில் முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்து தேர்வு எழுதுவதை அனுமதிக்காத CBSEஐ எதிர்த்து நீதிமன்றத்தில் SIO முறையிட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், கேரளாவில் SIO மனுதாரராக இருந்த வழக்கில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது. பிறகு CBSE தனது முடிவில் இருந்து பின்வாங்கி பாரம்பரிய, மத சம்பிரதாய உடைகள் அணிய அனுமதி அளித்தது.
பாலியல் கல்வியை எதிர்த்து தேசிய அளவில் SIO முன்னெடுத்த பிரச்சார இயக்கம் மூலம் கல்வித்துறையில் ஆபாசம் தவிர்க்கப்பட்டது. மகாராஷ்டிராவில் SIO பொறுப்பாளர்களை அழைத்து மாநில அமைச்சர் பாலியல் கல்வி கைவிடப்படும் முடிவை தெரிவித்தார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மேற்கு வங்காளத்தின் முர்சிதாபாத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி SIO மேற்கொண்ட தொடர் முயற்சிகள், பிரச்சார இயக்கங்களால் கடந்த நிதிநிலை அறிக்கையில் முர்சிதாபாத்தில் பல்கலைக்கழகம் நிறுவும் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது.
கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ச்சியான உரையாடல்களை கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்டு முன்னெடுத்து ஒரு மாதிரி கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான முன்னெடுப்புகளை SIO நிகழ்த்தி வருகிறது.
தேசம் எங்கும் கல்வி வளாகங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் அதிகார அடக்குமுறைகள், பிரிவினைவாதம், நிறுவனப் படுகொலைகள் இவற்றை எதிர்த்து SIO கல்வி வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தீவிரமாக களமாடி வருகிறது. எங்கெல்லாம் வளாக தேர்தல்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் பாசிசத்துக்கு எதிரான மதச்சார்பற்ற மாணவர் அமைப்புகளின் கூட்டணியை உருவாக்கியோ அல்லது அத்தகைய கூட்டணிகளில் இடம்பெற்றோ மதவாத மாணவ அமைப்புகள் வேரூன்றுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்கிறது.
இரண்டு வருடங்களாக JNU மாணவர் நஜீப் அகமதுவின் தாயாருக்கு உறுதுணையாக இருந்து சட்டப் போராட்டங்களிலும், சமூக போராட்டாங்களிலும் அவரோடு தோளோடு தோள் நிற்கிறது SIO. தேசிய அளவிலான கையெழுத்து இயக்கம் நடத்தி 30 இலட்சம் நபர்களிடம் நஜீப் பற்றிய செய்தியை கொண்டு சேர்த்தது SIO.
கல்வித் துறை அல்லாமல் சமூகத்தில் நிலவும் அநீதிகளை எதிர்த்தும் SIO தனது பாரிய பங்களிப்பை அளித்து வருகின்றது. பசுத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பெஹ்லுகானின் குடும்பத்திற்கு தேவையான பொருளாதார உதவிகளை SIO வழங்கியுள்ளது. குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் மகளது உயர்கல்வி வரையிலான கல்வி செலவை SIO ஏற்றுக் கொண்டுள்ளது. கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, ஹாபிழ் ஜூனைத் படுகொலை இவற்றை எதிர்த்து அகில இந்திய அளவில் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரமாக SIO முன்னெடுத்தது.
வரலாறு திரிக்கப்பட்டு வரும் சூழலில் ஒவ்வொரு வருடமும் அகில இந்திய அளவில் வரலாற்று மாநாட்டை SIO நடத்தி வருகிறது. இஸ்லாமிய புரிதலை சரியான முறையில் மாணவ, இளைஞர்களிடம் சென்று சேர்க்க சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களை ஒன்றிணைத்து சர்வதேச இஸ்லாமிய மாநாட்டினை நிகழ்த்துகிறது. இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இணைந்து மிகப்பெரிய சமூக நல்லிணக்க கருத்தரங்கை SIO நிகழ்த்தியது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பத்திரிகைகளையும், இணைய இதழ்களையும் நடத்தி வருகிறது. சிறப்பு பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளது.
SIO ஊழியர்களை மையமாக வைத்து செயல்படும் மாணவர் அமைப்பு. ஊழியரின் தனிப்பட்ட வெற்றியில் அமைப்பின் வெற்றி அடங்கியுள்ளதாக SIO ஆழமாக நம்புகிறது. இறை நம்பிக்கையில் சிறந்த, ஒழுக்கத்தில் மிகைத்த, கல்வித் துறையில் புரிந்து, ஆராய்ச்சி உணர்வுடன் செயல்படும், தனிவாழ்விலும், கூட்டு வாழ்விலும் பிறரால் போற்றுதலுக்குரிய இளைய சமுதாயத்தை உருவாக்கி இஸ்லாமிய இயக்கத்திற்கு அளிக்கும் அரும்பணியை SIO உணர்வுப்பூர்வமாக செய்து வருகிறது.
இன்னும் இன்னும் கல்வி, சமூக களங்களில் பல்வேறு அரும்பணிகளை செய்து SIO வின் வேர்கள் எங்கும் பரவ இறைவனை மனமுருகி பிரார்த்திக்கின்றேன்.
வாழ்க வாழ்கவே..
SIO வாழ்க வாழ்கவே..
Long Live SIO
#Oct19
#SioFoundationDay
#SioOfIndia