அமெரிக்க-இந்தியர் முஸ்லீம் கவுசின்சில், தன்னார்வ சமுதாய அமைப்பு மற்றும் மனித உரிமை இந்து அமைப்புகள் இணைந்து இந்தியாவில் தற்போதைய நிலையைப் பற்றிய ஆய்வு வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அறிஞர்கள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் உட்படப் பலர் தங்கள் ஆய்வுகளை சமர்ப்பித்தனர்.
சர்வாதிகாரம், இனப்படுகொலை பற்றிய ஆய்வில் உலகளவில் கவனம் பெற்றவர் டாக்டர். கிரிகோரி. ஹெச். ஸ்டாடண்ட். காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமின் தற்போதைய நிலையைப் பற்றி ஆராய்ந்து அதிகாரிகள் மற்றும் மக்களின் முன் சமர்ப்பித்தார். அதாவது, ‘தற்போது அரசு இனப்படுகொலைகளுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமின் இன்றைய நிலையில் தீவிர கண்காணிப்புள்ளக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த நிலை கூட்டுத் தாக்குதல். அதாவது இனப்படுகொலை’ என எச்சரிக்கிறார் ஸ்டாடண்ட்.
1996ம் ஆண்டு அமெரிக்க மாகாண துறையில் பணியாற்றிய ஸ்டாடண்ட் இனப்படுகொலைக்கான 10 படிநிலைகளை வரையறுத்தார். முதல்நிலை ‘நீங்கள்/நாங்கள் என வகுப்பு துவேஷம் பேசுவது,’ இரண்டாவது நிலை ‘அவர்கள் வெளிநாட்டவர்கள் என அந்நியமாக்குவது’, மூன்றாம் நிலை குறிப்பிட்ட நபர்களுக்குக் குடியுரிமையில் பாகுபாடு காட்டி அனைத்து உரிமைகளையும் பறிப்பது,’ நான்காவது மனிதமற்ற நிலை, இதில் ‘குறிப்பிட்ட குழுவைத் தீவிரவாதிகள், நோயாளிகள் என்று அச்சுறுத்தலாகச் சித்தரிப்பது’.ஐந்தாவது ஒடுக்குவதற்கான எதிர் அமைப்பைத் திரட்டுவது. ‘காஷ்மீரில் இந்திய ராணுவமும் அசாமில் பதிவேட்டு அதிகாரிகளும் எதிர் அமைப்பாக உள்ளார்கள்.’ ஆறாவது ‘வெறுப்பு பிரச்சாரம்,’ ஏழாவது ‘தயார்ப்படுத்துதல்’, எட்டாவது ‘குறிப்பிட்ட பிரிவினரைக் கொடூரமாக ஒடுக்குவது'(காஷ்மீர் மற்றும் அசாமின் இன்றைய நிலை), ஒன்பதாவது மற்றும் பத்தாவது நிலையே கூட்டுத்தாக்குதல் (இனப்படுகொலை) மற்றும் அதை மறுத்தல்.
இதுபோல் கம்போடியா,ருவாண்டா, ரோஹிங்கியாவில் நடந்த இனப்படுகொலைகளை ஐநாவிற்குக் கொண்டு சென்று உலகளவில் கவனம் பெற வைத்தவர் ஸ்டாடண்ட்.
இதே நிகழ்வில் வீடியோ நேரலையில் பேசிய மனித உரிமை ஆர்வலர் டீஸ்ட்டா செடல்வாட் கூறும்போது,
‘அசாமின் குடிமக்கள் பதிவேடு எந்த வழிமுறையும் அல்லாமல் மக்களின் உரிமையைப் பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இயற்றப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே விரோதமானது. தேசிய குடியுரிமை சட்டத்திருத்தம் மக்களைத் துன்புறுத்தும் நோக்கிலும், இந்தியக் குடியரசின் அடிப்படையையே கேள்வி கேட்கக்கூடிய விதத்திலும்’ உள்ளது என்று குறிப்பிட்டார்.
‘காஷ்மீர் மீதான சிறப்புச் சட்டத்தை நீக்கிய பிறகு அரசு மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அங்கு அடிப்படை வாழ்வே மறுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களிடத்தில் வக்கிரமாக நடந்துகொள்கிறது ராணுவம். பலர் கூட்டமாகப் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவர் வீட்டிலும் அத்துமீறி நுழைந்து உணவில் மண்ணெண்ணெய்யை ஊற்றி, அனைத்தையும் சிதைக்கிறது’ என அரசின் கொடூரங்களைக் கடிந்தார் ஆய்வு மாணவர் அஞ்சனா சட்டர்ஜி.
காஷ்மீர் பத்திரிக்கையாளர் ஹமீத் நாயக் கூறும்போது, ‘இந்நாட்டில் இதுவரை காணாத கொடுமைகளைக் காண்கிறோம். தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. சிறப்புரிமையை நீக்கிய பிறகு யாரும் இதுவரை அரசால் கொல்லப்படவில்லை என அரசு கூறுகிறது. ஆனால், அது சுத்தப்பொய். நாங்கள் வைத்திருக்கும் ஆவணத்தின்படி ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து தொடர்புகளையும் துண்டித்த சிக்கலால் இந்த எண்ணிக்கை மிகச் சொற்பம். பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் படுகொலைகள் நிகழ்ந்துள்ளது. எதுமரியா சிறுவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள்’ என்றார்.