உயர்கல்வியை ஒழித்துக் கட்டுவது எனச் செயல்படும் பா.ஜ.க அரசு ஆய்வுப் படிப்புகளுக்கான உதவித் தொகைகளை நிறுத்துவதாக அறிவித்துப் பின் எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளதை அறிவோம். அது மட்டும் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தலையீடுகளால் நிறுத்தப்படாது இருந்திருந்தால் நாடெங்கிலும் சுமார் 25,000 ஆய்வு மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பர்.
இன்னொரு பக்கம் ஆய்வுப் படிப்புகளில் ஒரு உதவிப் பேராசிரியர் 3 M.Phil, 4 Ph.D மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்ட முடியும் எனும் இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத விதியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு பல்கலைக் கழகங்களில் பெரிய அளவில் ஆய்வு மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்டுள்ளது.
JNU வில் ஒரு ஆய்வு வழிகாட்டி சராசரியாக 8.4 மாணவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்தப் புதிய நடைமுறையிபடி JNU வில் மட்டும் 2017- 2018 ஆண்டில் வழக்கமான 1408 ஆய்வு மாணவர் சேர்க்கை என்பது வெறும் 242 ஆகக் குறைகிறது. Centre for Historical Studies ல் இந்த ஆண்டு ஆய்வு மாணவர் சேர்க்கை ஒன்றுகூட இல்லை. School of Social Science ல் 458 இடங்கள் வெறும் 31 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 93.23 சதச் சேர்க்கைகள் காலி. School of International Studies ல் 283 இடடங்கள் 11 ஆகக் குறைகின்றன. School of Languages ல் 272 இடங்கள் 37 ஆகக் குறைக்கப்படுகிறது.
JNU பேராசிரியை ஆயிஷா கித்வாய், “நாம் மாதம் 1,40,000 ரூ ஊதியம் வாங்கிக் கொண்டு இங்கென்ன ஈ ஓட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமா?” எனக் கேட்டது பத்திரிகைகளில் வந்தது.
UGC என்பது பல்கலைக் கழகங்களுக்கான நிதி நல்கைக்காகத் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம். இன்று அது எல்லா அதிகாரங்களும் குறைக்கப்பட்ட பல்பிடுங்கப்பட்ட பாம்பாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு பெரிய அளவில் இப்போது குறைக்கப்பட்டுள்ளது. மோடி அரசு ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆட்சியில் இருந்ததைக் காட்டிலும் 3900 கோடி ரூபாய்கள் குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
UGC க்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதன் விளைவாக இன்று பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கப்படும் அரசு நிதி பெரிய அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக பல்கலைக் கழகங்கள் பெரிய அளவில் மாணவர்களின் கல்விக் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. Tata Institute of Social Sciences ((TISS) உட்பட இன்று உயராய்வு நிறுவனங்கள் நிதி இல்லாமையால் மூடப் படுகின்றன.
ஹைதராபாத் மத்திய பலல்கலைக்கழகத்தில் (HCU) Political Science துறையில் பணியாற்றும் ஒருவர் தங்கள் துறையில் இந்தக் கல்வி ஆண்டில் வழக்கமாக 24 மாணவர்கள் ஆய்வுக்காகச் சேர்க்கப்படுவது என்பது வெறும் 4 மாணவர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என அங்கு பணியாற்றும் ஒரு நண்பர் கூறுகிறார்.
அந்தத் துறையில் வீரபாகு என்பவர் இந்த ஆண்டு பேராசிரியர் ஆக (Faculty Member) தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக தேர்வுக் குழுவில் துறைத்தலைவர் மற்றும் இரண்டு மூத்த ஆசிரியர்கள் இருப்பர். அவர்கள் இந்த வீரபாகு நேர்முகத் தேர்வில் பத்துக்கு வெறும் 1 மார்க் மட்டுமே எடுத்ததால் அவரைத் தேர்வு செய்யவில்லை. உடனே துணைவேந்தர் வழமைகளை மீறி இன்னொரு தேர்வுக்குழுவை நியமித்து அதில் தானும் தனக்கு வேண்டிய இரு ஆசிரியர்களையும் நியமித்துக் கொண்டார். ஏற்கனவே இருந்த துறைத் தலைவர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களும் அந்தக் குழுவில் விதிப்படி இருந்தாலும் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை என அறிவித்து அந்த வீரபாகுவிற்கு 9 மதிப்பெண் கொடுத்து அவரைத் தேர்வு செய்துள்ளனர்.
வீரபாகுவை அப்படி ஏன் தேர்வு செய்தனர்?
அவர் தகுதியற்ற ஒரு நபராயினும் ஆர்.எஸ்.எஸ் காரர். அதுதான் ஒரே காரணம்.
என்னிடம் தகவல் சொல்லிய அந்தப் பேராசிரியர் சொன்னார், “வீரபாகு 2053 ல் தான் ஓய்வு பெறுவார். தற்போது பணியில் உள்ள தகுதிமிக்க பேராசிரியர்கள் இன்னும் பத்தாண்டுகளில் ஓய்வு பெறுவர். அதற்குள் உயர்கல்வித் துறை முழுவதும் இப்படித் தரமற்ற பா.ஜக ஆட்களால் நிரப்பப்படும். எதிர்கால உயர்கல்வி எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள் என்றார்.
இன்னும் பல்வேறு வழிகளில் உயர்கல்வி இன்று குறிவைத்துத் தாக்கப்படுகிறது.
அ. மார்க்ஸ்
சமூக ஆர்வலர்