தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு போராட்டமும் அகில இந்திய அளவில் கவனம் பெறும்.அதற்கு முக்கிய காரணம் இங்கு நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் உரிமைக்காக, உணர்வுரீதியாக நடப்பதால் தான்.அந்த வகையில் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டமும் அகில இந்திய அளவில் மட்டுமல்ல உலகத்தின் கவனத்தையும் பெற்றது. மக்கள் போராட்டத்தில் அரசு கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறையும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுமே உலகின் கவனத்தை தூத்துக்குடியின் பக்கம் திருப்பியது. மக்கள் போராட்டத்தில் நடைபெற்ற அரசின் வன்முறையில் 13 உயிர்கள் பறிக்கப்பட்டன, ஏராளமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரே போனாலும் அவர்கள் அனைவரின் நோக்கம் ஆலையை மூட வேண்டும் என்பதாகவே இருந்தது. உயிரை பறித்தாலும் நோக்கத்தில் உறுதியாக இருந்த அம்மக்களின் எண்ணத்தைப் பார்த்து அதற்கு அடிபணிந்த அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. மக்களின் கோரிக்கையை மதித்து இந்த ஆலைக்கு சீல் வைத்துள்ளோம் என தமிழக அரசு கூறினாலும் இந்த ஆலையை மூடியதன் வெற்றி மக்களின் வலிமை மிகு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தான். ஆலை சீல் வைக்கப்பட்டு அங்கு அமைதி திரும்பிய நிலையில் வரும் சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். அங்கு போராட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறையினரின் லத்திகளுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். அப்போது இளைஞர் ஒருவர் ரஜினிகாந்தை பார்த்து யார் நீங்க? என்கிற கேள்வியை எழுப்பியது ரஜினியை மட்டுமல்லாமல் அங்கு நின்று கொண்டிருந்த அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அவர் அதிர்ச்சிக்கு காரணம் அரசியல் தெளிவுள்ள அந்த இளைஞரின் கேள்வி தான்.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் ரஜினி.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சமூக விரோதிகளினால் தான் தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது என யாரோ அவரிடம் சொன்னதை பத்திரிகையாளர்களிடம் கூறி விட்டு சென்றார். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்துந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கும் செய்தியாளர்களை சந்தித்த அவர் தூத்துக்குடியில் தான் கூறியதை அழுத்தம் திருத்தமாக போராட்டத்தை நேரில் இருந்து பார்த்தது போல் மீண்டும் ஒருமுறை கூறி விட்டு போகிற போக்கில் எதற்கு எடுத்தாலும் போராடினால் தமிழகம் சுடுகாடாகி விடும் என எச்சரித்து விட்டு சென்றார்.
தமிழகத்தின் வரலாறை அறியாதவரின் நாவிலிருந்து இது போன்ற வார்த்தையை தான் நாம் எதிர்பார்க்க முடியும் என்றாலும் பல்வேறு போராட்டங்களின் பலனாக மற்ற மாநிலங்களை விட எல்லா விதத்திலும் சிறந்து விளங்கும் தமிழகத்தைப் பற்றிய இந்த கருத்தை எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டார். காரணம் தமிழகத்தில் இந்தி திணிப்பை தடுத்தது,இட ஒதுக்கீட்டை பெற்றது, சமூக நீதியை காத்தது என வரிசைப்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை முடியது வரை எல்லாமே போராட்டங்களால் தான் மட்டுமே சாத்தியமாயிற்று.
தமிழகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்கள் வெற்றியும் சில போராட்டங்கள் எந்த தீர்வையும் எட்டாமல் முடிந்துள்ளன என்றாலும் எந்த போராட்டங்களும் தோல்வி என கூறி விட முடியாது. தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் உணர்வுரீதியாக இருந்ததே காரணமாக சொல்லலாம். ஒருவேளை அந்த போராட்டங்கள் எல்லாம் நடைபெறாமல் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்ய வேண்டுமா என மக்கள் சிந்தித்து இருந்தால் இன்று தமிழகத்தில் பாசிசம் பரவியிருக்கும், சமூக நீதி புதைந்து இருக்கும், விவசாயம் பாழாய் போய் இ ருக்கும் மொத்தத்தில் தமிழகம் சுடுகாடாய் போய் இருக்கும். ஆம் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறாமல் போய் இருந்தால் நிச்சயம் தமிழகம் சுடுகாடாய் மாறிப் போய் இருக்கும்.தமிழகத்தின் வரலாற்றை துளியும் அறியாமல் பேசும் இவர் தான் தமிழகத்தின் சிஸ்டத்தை குறை கூறிக் கொண்டு இருக்கிறார்.அவர் பழைய போராட்ட வரலாறுகள் படிக்காவிட்டாலும் பரவாயில்லை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடந்ததும், ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதும் , காவிரியை மீட்க வழி வகை செய்யப்பட்டது இவை எல்லாமே போராட்டங்களின் மூலமாகவே சாத்தியமாயிற்று என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளாரா அல்லது அதை குறித்து சிந்திப்பதில்லையா என்பது தெரியாது. ஆனால் ஒன்று மக்களை பற்றி அவர் சிந்திப்பதில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
ரஜினியை திரைப்படங்களில் இயக்கியவர்களால் அவர் சூப்பர் ஸ்டார் என்கிற நிலைக்கு உயர்ந்தார். ஆனால் அவரை நிஜ வாழ்வில் தற்போது இயக்கி கொண்டு இருப்பவர்களால் ரஜினிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்க்கே ஆபத்து என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் சொல்கிறோம் போராட்டங்கள் மட்டும் இல்லாவிட்டால் தமிழகம் என்றோ சுடுகாடாய் மாற்றப்பட்டிருக்கும் ரஜினி சார்
எழுதியவர் : முஜாஹிதுல் இஸ்லாம், ஊடகவியலாளர்