‘இட ஒதுக்கீடு என்பது தனிநபர் சார்ந்ததல்ல.அது சமூகம் சார்ந்தது.கல்வியிலும் சமூக நிலையிலும் காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு இருக்கும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டுவது’. பொருளாதார இட ஒதுக்கீடு என்பதற்கான அம்பேத்கரின் பதில் இது.
பொருளாதாரம் தனிநபர் சார்ந்தது,நிலையற்றது.எனவே,அதைச் சார்ந்த செயல்பாட்டின் மூலம் அவர்கள் அதனை வெற்றிபெறலாம்.அரசியல் சட்டத்தின் 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளின்படி “சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு”என்று தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.ஆதலால், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பிற்கும், அடிப்படை சமூக நீதிக்கும் முற்றிலும் முரணானது.
மண்டல் கமிஷன் :
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் ஆண்டு அமல்படுத்தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர் மற்றும் மலைவாழ் மக்கள் பட்டியல் அரசிடம் இருந்தது. ஆனால், யாரெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பட்டியல் அரசிடம் இல்லை. அதற்காக, அம்பேத்கர் ஆலோசனையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை அடையாளம் காண ஒரு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 340-ல் தெளிவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978-ல் மண்டல் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்திப் பல தரப்பினரையும், மாநில அரசுகளையும் விசாரித்து டிசம்பர் 31,1980-ல் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. பல ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் இருந்த அந்த அறிக்கையை, நாடு முழுவதும் நடந்த மாபெரும் போராட்டங்களுக்குப் பின், 1989-ல் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வி.பி. சிங் 1990-ல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுப் பணியில் 27% இடஒதிக்கீட்டுக்கு ஆணைப் பிறப்பித்தார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சஹானி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக தேசிய அளவில் ஒரு ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவில் ஆணையங்களும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது.இதனால் மண்டல் ஆணையத்தை அமல்படுத்திய விபி சிங் பிற்படுத்தபட்டோருக்குக்கும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார்.எனவே தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர்,பிற்படுத்தட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 % போக மீதம் 50 % பொதுப்பட்டியலாக பின்பற்றப்பட்டது.
மண்டல் கமிஷனின் பொருளாதார பார்வையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் :
மண்டல் கமிஷன் ‘பொருளாதார அடிப்படையிலான’ என்ற ஓர் சாரத்தையும் இணைத்தே வழங்கியிருந்தது.இதைக் குறிப்பிட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தையும் அதன் நோக்கத்தையும் மீறுவதாக அமைந்துவிடும் என்ற உச்ச நீதிமன்றம், அதனை நிராகரித்தது.மேலும் இட ஒதுக்கீடு 50% க்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும் என்ற ஆணையையும் பிறப்பித்தது.இதனால், அனைத்து மாநில அளவிலான இட ஒதுக்கீடுகள் 50%க்குள் கட்டாயமாக்கப்பட்டது. (தமிழ்நாடு தனது 69% இட ஒதுக்கீட்டினை 9வது அட்டவணையில் வைத்துள்ளதால் அவை நீடித்தது).மேலும் சிறுபான்மையினர் சமூக அளவுகோலுக்காக உருவாக்கப்பட்ட சர்ச்சார் கமிட்டி முதல் அனைத்து ஆணையங்களும் சமூக அந்தஸ்தைக் குறிப்பிட்டும், 50% வரைமுறையை மீராமலுமே வரையறை தாக்கல் செய்துள்ளனர்.
ஜாதிய ஆதிக்கத்தை முன்னிறுத்துதல் :
அரசியலமைப்பையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி பொதுப்பிரிவிலிருந்து 10% இட ஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் வழங்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.இதில் 50% இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத உயர் வகுப்பு பிரிவினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பயன் பெறுவார்கள் என்று அரசு கூறியுள்ளது.இதற்கான தகுதியாக வருடத்திற்கு 8 லட்சத்திற்குள் வருமானம்,1000 சதுர அடிக்குள் வீடு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்குக் கிராமத்தில் 32 ரூ.,நகரத்தில் 47 ரூ. வருமானம் இருந்தால் அவர் ஏழையில்லை என்று வறுமைக் கோட்டை அளவிட்டுள்ள அரசு கிட்டத்தட்ட மாதம் 66,000 வருமானம் பெறுபவர்களை ஏழை என்று குறிப்பிடுவது ஆளும் அரசின் சமூகநீதிக்கெதிரான ஜாதிய பார்வையையே வெளிப்படுத்துகிறது.
ஜாதி சார்ந்து பாகுபாடு அதிகமில்லாத உலக நாடுகள் எதிலும் கூட பொருளாதாரத்தை முன்னிறுத்தி இடஒதுக்கீடு வழங்கியதில்லை.ஓர் உயர்ந்த வகுப்பினர் ஏழையாக இருந்தாலும், அவர் முன்னேற்றத்திற்கான திட்டங்களை உருவாக்காமல் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதென்பது ஜாதிய ரீதியான ஆதிக்கத்தை முன்னிறுத்தவும், வரப்போகும் தேர்தலுக்கான வாக்கரசியல் போன்ற நோக்கங்களையே பாஜக கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.
கட்டுரையாளர் : அப்துல்லா