“நாங்கள் ஜெருசேலமைக் கைப்பற்றி விட்டோம். காலத்தால் கிழித்தெறியப்பட்ட இஸ்ரேலின் தலைநகரத்தை ஒழுங்காற்றி விட்டோம். இப்புனித தலத்திற்கு நாங்கள் திரும்பிவிட்டோம். இனி எக்காலத்திலும் இதை பிரியக்கூடாது என்ற உறுதியுடன்”
இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மோஷே தயான் 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஆறுநாள் போருக்கிடையில் சொன்ன வார்த்தைகள் இவை. இந்த எண்ணம் யூத ஆக்கிரமிப்பாளர்களுக்கு – சொல்லப் போனால் எல்லா ஊடுருவல்காரருக்கும் பொதுவானதுதான். இஸ்ரேலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் தியோடர் ஹெர்சில் 1895ல் தனது நாட்குறிப்பில் இப்படி எழுதினார்: “ஃபாலஸ்தீன ஏழைகளின் உடமைகளைப் பறிப்பதும் வெளியேற்றுவதும் ஒரே சமயத்தில் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் நடத்தப் படவேண்டும்”. இதை மறைக்கத்தான் எத்தனை யெத்தனை முகமூடிகள்.. எத்தனை கண்துடைப்பு நாடகங்கள்.. எத்தர்களும் தோற்றுப் போகும் மோசடி திட்டங்கள். அதே காலகட்டத்தில் (1964-73) நடந்த வியட்நாம் போரில் அமெரிக்கா லாவோஸ் மீது வீசிய குண்டுகளின் எடை 20 லட்சம் டன்கள். அதிகமான குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்ட நகரமாக லாவோஸ் வரலாற்றில் இடம்பெற்றிருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி விளைவல்லவா? வியட்நாமிய மக்களுக்கெதிராக இராசாயன ஆயுதங்களை சகட்டுமேனிக்கு உபயோகித்த வெள்ளை நல்லவர்களின். விஷவாயு உபயோகம் பல கிராமங்களை புல்பூண்டு வளர்வதற்குக் கூட பயனற்ற பகுதிகளாக ஆக்கிவிட்டது. அமெரிக்கப் போர் வர்த்தகத் தந்திரத்தின் ஒரு பகுதி மரங்களை மொட்டையாக்குவது. ஏழைகளின் வாழ்வாதராங்களோடு விளையாடி அவர்களை வெளியேற்றுவது என்பவையே இவர்கள் வண்ணமயமாக காட்டும் நாகரீக சமூகத்தின் அடாவடித் திட்டம்; கவனமாக காரியமாற்றச் சொல்லும் ஹெர்சலின் அதே திட்டம்.
மேலும் இத்தகைய அட்டூழியங்களின்பால் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் உயர் விழுமியங்களை உபதேசிக்கும் தடித்தத் தோல் ஏகாதிபத்திய கொள்ளையர்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. பூர்வீக மக்கள் மீது கட்டற்ற வன்முறையை பிரயோகித்து இனப்படுகொலை, அடிமை வர்த்தகம் உள்ளிட்ட வழிமுறைகளில் தேசங்களை அபகரித்துக் கொண்டு ஒன்றுமே நடக்காத மாதிரி நடந்து கொள்வது சனநாயக பேரரசுகளின் தார்மீக நீதி. அதையே வரலாற்று அம்னீசியாவாக கட்டமைப்பதையும் அவர்கள் லாவகமாக கையாள்வார்கள். தொல்குடிகளின் மீது தொடுக்கப்பட்ட போரின் மூலம் திருடப்பட்ட நிலமான அமெரிக்காவை ஏதோ தங்களின் பாட்டன்களுக்கு பட்டயமான கன்னி நிலமாக நம்பவைப்பதுதான் நவீன சிந்தனையாளர்களின் சாதனை. ”இந்த தேசம் மற்ற பல தேசங்களைப் போல் இராணுவ வெற்றியால் எழுந்ததல்ல. மாறாக ஒரு நீர்த்த சமூகம் ஒரு பணக்கார, வெற்றுக் கண்டத்தின் மீது மேலெழுந்து தனது பெருமையை வளர்த்திருக்கிறது” என்று அமெரிக்கப் பிறப்பை நியாயப்படுத்தியவர் (1948) ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தலைவர். இதில் ஆங்கிலேய குடியேற்றத்திற்கு முன்பான அமெரிக்காவை “வெற்றுக் கண்டமாக” வரையறுப்பதன் வாயிலாக அங்கே மனிதர்களே வாழவில்லையென்பது போல் சாதிக்கிறார். இது சீயோனிச அறைகூவலாக காலமெல்லாம் முன்னெடுக்கப்படும் “மக்கள் யாருமில்லாத தேசம் (யூதர்கள் இல்லாத ஃபாலஸ்தீன்), தேசமற்ற மக்களுக்காக (அகதிகளாக அலையும் யூதர்கள்) எனும் ஊக்கொலியோடு எத்தனை கச்சிதமாக பொருந்திப் போகிறது என்று பாருங்கள்.
வைக்கோல் போரில் படுத்த நாய்
யூதர்கள் என்றைக்கு ஃபாலஸ்தீன் ஊடுருவினார்களோ அன்றைய தினத்திலிருந்து ஃபாலஸ்தீனர்களை மனிதர்களாகவே கருதியதில்லை. இந்த மனோபாவத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசிடம் தான் உலகம் காருண்யம் பேசிக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் ஒப்பந்த உரிம பிரதேசமாக (Mandate) இருந்த ஃபாலஸ்தீனத்தில் 1936 ஆம் ஆண்டு வெடித்த கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட பீல் கமிஷனுக்கு முன்பாக ஆஜரான பிரதமர் சர்ச்சில் 1937ல் கொடுத்த வாக்குமூலம் பிரசித்திப் பெற்றது.. “வைக்கோல் போரில் படுத்திருக்கும் ஒரு நாய்க்கு அதன் மேல் இறுதி உரிமையுண்டு என்பதை நான் ஏற்கமாட்டேன். இவர்களைப் போன்றவர்களின் உரிமைகளை நான் ஆதரிக்க மாட்டேன். உதாரணமாக அமெரிக்காவின் செவ்விந்தியர்களுக்கோ, ஆஸ்திரேலியாவின் கறுப்பர்களுக்கோ பெரிய தீங்கு ஏதும் நடந்துவிட்டதாக நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு வலிமையான இனம், ஓர் உயர்ந்த மதிப்புள்ள இனம், உலகின் அதிக அறிவுள்ள இனம் அவர்களுடைய இடத்தை எடுத்துக் கொண்டது உண்மையானால் நான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்ளவில்லை” என்றே கூறினார். ஃபாலஸ்தீனர்களின் இருப்பை நிராகரிக்கும் (Negation) இந்த மொழி தான் இஸ்ரேலிய – சீயோனிஸ அரசியலின் ஆபத்தான போக்காக தொடர்ந்து இருந்து வருகிறது. 1988 ஆம் ஆண்டு நியூயார்க் யூதர்களுக்கு மத்தியில் உரையாற்றிய இத்ஸக் ஷமீர், “ஃபாலஸ்தீனியர்கள் வெட்டுக் கிளிகளைப் போல் அழித்தொழிக்கப் படுவார்கள். சுவர்களிலும் பாறைகளிலும் அடித்து அவர்கள் தலைகள் நொறுக்கப்படும்” என்றார். இதற்கு அவர்கள் பைபிளில் இருந்து மேற்கோள் காட்டவும் தயங்கவில்லை. அன்றைக்கு இஸ்ரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த ஏரியல் ஷரோன், “ஃபாலஸ்தீனர்களுக்கு ஓஸ்லோ ஒப்பந்தம் மிக முக்கியமான ஆவணம். ஏனெனில் அவர்கள் வசமிருக்கும் ஒரே அதிகாரப்பூர்வ அவணம் அது ஒன்றுமட்டுமே. ஆனால் நம்மிடம் அதைவிட முக்கியமான ஆவணமாக பைபிள் இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.
அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள். – எண்ணாகமம் 13:33
எனும் திருவசனத்தைத் துணைக்கழைத்துக் கொண்டனர்.ஃபாலஸ்தீனர்கள் என்ற ஒரு இனமே கிடையாது. அவர்கள் எப்போதும் வாழ்ந்ததே இல்லை” – இது மற்றொரு இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேர் (1969). ”ஃபாலஸ்தீனர்கள் முதலைகள். அவர்களுக்கு அதிகமான மாமிசத்தை நாம் கொடுக்க கொடுக்க அவர்கள் இன்னும் அதிகமாக கேட்பார்கள்” என்று திருவாய் மலர்ந்த பிரதமர் யஹூத் பராக் (28 ஆகஸ்ட் 2000). இப்படி வெறுப்பின் வைரஸ்களை காலமெல்லாம் பரப்பியவர்கள் சாதாரண மனிதர்களல்ல; நாகரீக மேற்பூச்சுக்காவது பரஸ்பர மரியாதை, நல்லெண்ணம், சகிப்புத்தன்மை, மனித நேயம் ஆகியவற்றை வளர்த்தெடுக்க போலி வேடமாவது தரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தலைவர்கள். ஆனால் அப்படி எந்த பாசாங்கும் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் சர்வதேச அரங்கில் கொஞ்சமும் கவலையின்றி எப்படி – யாருடைய தைரியத்தில் இவர்கள் வெறுப்பு அமிலத்தைக் கொப்பளித்து, அரச பயங்கரவாத நெருப்பைக் கக்குகிறார்கள்? அதற்கும் ஏரியல் ஷரோனே தெளிவாக பதில் தந்துவிடுகிறார் (3 அக்டோபர் 2001). “நாம் எதாவது செய்யப் போகும் ஒவ்வொரு தருணத்திலும் ‘அமெரிக்கா அப்படி செய்துவிடும். இப்படி செய்துவிடும்’ என்று பயமுறுத்துகிறீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இஸ்ரேல் மீது அமெரிக்கா தரப்போகும் அழுத்தம் குறித்து அநாவசியமாக கவலைப் படாதீர்கள். யூதர்களாகிய நாமே அமெரிக்காவை கட்டுப் படுத்துகிறோம். அமெரிக்கர்களுக்கும் அது நன்றாகவே தெரியும்” என்று குட்டை – கள்ளக் கூட்டை உடைத்திருக்கிறார். இதற்கிடையில் தான் சர்வதேச ஒப்பந்தம், மனித உரிமை பிரகடனம், எல்லைக் கோடுகள் என்று அமைதி பஞ்சாயத்து படம் காட்டப்படுகிறது. இந்த மசாலா படத்தை சர்வதேச அமைவனங்களும் தொடர்ந்து அலுப்பில்லாமல் ஓட்டுகிறார்கள்.
யூதர் அல்லாதோரின் உரிமையும் தீண்டாமைச் சுவரும்
முதலாம் உலகப் போர் உக்கிரமடைந்த கட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி வாழ் யூதர்களின் ஆதரவைப் பெறவும், சூயஸ் கால்வாயின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை உறுதிபடுத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு உடன்பாடான ஒரு யூத குடியிருப்பைப் ஃபாலஸ்தீனத்தில் ஏற்படுத்தவும் கணக்குப் போட்ட இங்கிலாந்து, தனது வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபர் வாயிலாக வெளியிட்ட பால்ஃபர் பிரகடனத்தில் “ஃபாலஸ்தீனில் யூதர்களுக்கான தேசிய வசிப்பிடத்தை உருவாக்க” பிரிட்டனின் ஆதரவை வழங்கிய அதே நேரத்தில் யூதர்கள் அல்லாதோரின் குடிமை மற்றும் மத உரிமைகளுக்கு எந்த பங்கமும் வராது என்று அறிவித்தது. “நாங்க பேச வேண்டிய வசனத்தையெல்லாம் அவன் பேசிட்டுப் போறானே” என்று பரிதாபமாய் கையைப் பிசைந்து நிற்க வேண்டிய நிலையில் ஃபாலஸ்தீன மக்களை வைத்தனர். ஏழு லட்சம் பேர் ஒரே நாளில் தங்கள் வசிப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டதில் தொடங்கி இன்றைக்கு 51 லட்சம் ஃபாலஸ்தீன மக்கள் அகதிகளாக இருத்தப்பட்டுள்ளனர் (ஐநா கணக்கின்படி). வரலாற்றால், கலாச்சாரத்தால், பூர்வீக குடியுரிமையால் அந்த மண்ணோடு பின்னிப் பிணைக்கப்பட்ட ஃபாலஸ்தீனர்கள் தங்கள் அடையாளங்கள் பறிக்கப்பட்டு, ஏதோ சம்பந்தமே இல்லாத மூன்றாம் மனிதர்களைப் போல் (யூதர்கள் அல்லாதவர்களாக) சொந்த பூமியில் முற்றிலும் துடைத்தெறியப்பட்ட ஒரு கூட்டமாக மாறினர், வருங்கால யூத தேசத்திற்கு ஆதரவாக “அரபு” “முஸலிம்” என்ற வார்த்தைகளே இடம்பெறாமல் கச்சிதமாக செய்துமுடித்த இந்த “ஆதி பாவச்செயலை” வரலாற்றாளர்கள் “மாபெரும் அயோக்கியத்தனம்” என்றே வர்ணிக்கிறார்கள். நாடி, நரம்புகளில் ஊடுருவிவிட்ட வர்க்க தற்பெருமை, ஆங்கிலேயரின் இந்த மேலாதிக்க குணத்தை – உலகை ஆளப் பிறந்தவர்கள் என்ற அவர்களின் மனோபாவத்தை வெளியேற்றுவது மிகவும் கடினம். இந்த அணுகுமுறையே மண்ணின் மைந்தர்களான 90% அரேபியர்களை ஆட்டிப் படைக்கும் உரிமையை 10% யூதர்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இது குறித்து 2010ல் கருத்துரைத்த புகழ்பெற்ற வரலாற்றாளர் ஜோனாதன் ஷ்கீனீர், “ஃபாலஸ்தீனத்தில் பிண அறுவடையைத் தொடங்கி வைத்து. இன்றளவும் அது தொடர்வதற்கான கொள்ளி வாய் பிசாசின் பற்களாக இந்த பிரகடனத்தின் வாசகங்கள் மாறிப் போனது” என்றார். இதற்கிடையில் யூத தேச அரசு தன்னை பலவந்தமாக நிறுவி தனது ஆதிக்கத்தை உலக அரங்கில் உறுதிபடுத்திக் கொண்டு ஃபாலஸ்தீனர்களை உள்ளும் புறமுமாக ஒடுக்கி வைத்திருக்கும் அவலங்களெல்லாம் சரித்திரத்தின் சான்றுகளாகி நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு 2017 ஏப்ரல் மாதத்தில் “ஃபாலஸ்தீன் மக்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கத் தவறியதை” பிரிட்டிஷ் அரசு, அவர்கள் பெரிதும் பீற்றிக் கொள்ளும் சனநாயகத் தன்மைக்கிணங்க, பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டு செத்தவன் கையில் வெற்றிலைப் பாக்கு வைத்து சாவகாசமாய் சம்பந்தம் பேசுகிறது.
ரோமானியர்களால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் விரட்டியடிக்கப்பட்ட யூதர்களின் ஆசிர்வதிக்கப்பட்ட இஸ்ரேலிய பூமியின் மீதான தேசபிமானத்தை கரிசனத்தோடு பார்க்கத் தெரிந்த நவீன தாராளவாத வல்லரசுகளுக்கு, ரத்தமும் சதையுமாக கண்முன்பாகவே வசித்து வாழ்வுரிமை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட ஃபாலஸ்தீன மக்களின் ஓலம் கேட்கவில்லை. உலகத்தில் எந்த பகுதியிலும் சக மனிதனை சந்தேகித்து அவனை இழிவாக கருதி அவனுடனான புழக்கத்தை தடுக்கும் வகையில் தீண்டாமைச் சுவர் எழுப்புவது சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் படி குற்றமாகும். அந்த சட்டங்கள் இஸ்ரேலுக்குப் பொருந்தாது. ஃபாலஸ்தீன் நிலத்தில் இஸ்ரேல் அமைத்துள்ள 708 கி.மீ நீளமுள்ள 3 மீட்டர் அகல தடுப்புதான் உலகின் ஆகப் பெரிய தீண்டாமைச் சுவர். இதில் 85% கட்டுமானம் மேற்குக் கரை நிலப்பகுதியில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வருகிறது. அதன்மூலம் இஸ்ரேல் ஃபாலஸ்தீனத்தின் 9% நிலத்தை முழுங்கி ஏப்பமிட்டு விட்டது. சுருங்கச் சொன்னால் என் வீட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி அடுத்தவன் நிலத்தில் சுற்றுச் சுவர் எழுப்பிக் கொள்ளும் தடித்தனம்தான் இது.
தீவிர இயக்கங்களும் அரசியல் இஸ்லாமும்
இந்த தடித்தனத்தின் துவக்கப் புள்ளி 1967ன் இஸ்ரேல் வெற்றி ஆகும். அதுகாறும் பெரிதாகப் பேசப்பட்டுவந்த அரபு தேசியவாதத்தின் மீது சம்மட்டியாக இறங்கியதோடு, தீவிர இஸ்லாமியம் அரசியல் சக்தியாக உருப்பெறவும் வழிவகுத்தது. எதிரெழுச்சியாக பழமைவாதத்தில் ஊறிய, புரட்சிகர இயக்கங்களின் தோற்றம் அரசியல் இஸ்லாம் எனும் புதிய பாதைக்கு உரமூட்டியது. எதிரெழுச்சியாக, ”இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைவிட்டு ஃபாலஸ்தீன் விடுதலை” என்ற முழக்கத்தோடு அரசியல் வெளிக்கு வந்த ஹமாஸ் அமைப்பு தனது கொள்கை பிரகடனத்தை 1988 ஆகஸ்ட் 18ல் பகிரங்கமாக வெளியிட்டது. அதிலிருந்த முக்கிய அம்சம்: “ஃபாலஸ்தீன மண் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. ஃபாலஸ்தீனத்தையோ, அதன் ஒரு பகுதியையோ முஸ்லிம்கள் இழக்கவோ, விட்டுக் கொடுக்கவோ முடியாது. அப்படிப்பட்ட உரிமை எந்தவொரு அரபு தேசத்திற்கோ, கூட்டமைப்பிற்கோ, அரசருக்கோ, விடுதலை இயக்கங்களுக்கோ, அல்லது அதன் தலைவர்களுக்கோ கொஞ்சமும் கிடையாது. எனவே முஸ்லிம்களின் மண்ணை ஆக்கிமிப்பவர்களுக்கு எதிராகப் புனிதப் போர்த் தொடுப்பது தேசியக் கடமை என்ற அறைகூவலுடன் இஸ்ரேலுக்கு எதிரான போரை அறிவித்தது ஹமாஸ். புகழ்பெற்ற தத்துவயியலாளர் எட்வர்ட் சயீது அவர்களால் “ஃபாலஸ்தீனின் வெர்சல்ஸ்” என்று வர்ணிக்கப்பட்ட ஒஸ்லோ ஒப்பந்தம் 1993ல் கையெழுத்தானது. இதன் வாயிலாக இஸ்ரேலை தங்கள் மண்ணின் சக தேசமாக முதன்முதலாக அங்கீகரித்துக் கொண்ட யாசிர் அரபாத்தை “கோழை” என்று சாடிய ஹமாஸ் வெகு வேகமாக வளர்ச்சிக் கண்டது.
ஒரு சித்தாந்தம் வெற்றி பெற்று மற்றொன்று திட்டமிட்டு தகர்க்கப் படும்போது, விவாதிப்பதற்கான வெளியும் மாற்றுக் கருத்தும் வெகுவாக குறைந்து போகிறது. இஸ்ரேலிய – சீயோனிய வல்லாதிக்கத்திற்கு எதிராக ரத்தமும் யுத்தமும் தான் பேசும் என்று ஹமாஸ் முடிவு செய்தது. ஏனெனில் இஸ்ரேலின் எல்லா சமாதான கண்துடைப்பு நடவடிக்கைகளுக்கு பின்னணியிலும் ஃபாலஸ்தீனர்களை அந்த மண்ணைவிட்டு முற்றிலுமாகத் துடைத்தெறியும் யூத சதியே இருந்திருக்கிறது. ”மலைக்குன்றுகள் ஒவ்வொன்றையும் கைப்பற்றி, இடம்பெயர்வதில் நாம் சுணக்கம் காட்டவே கூடாது. அப்படி வளைத்துக் கொள்ளும் ஒவ்வொரு இடமும் நம்முடையதாக மாறிவிடும். தவறும் நிலங்கள் அவர்களுக்கு சொந்தமானதாக இருக்கும்” என்று 1998ல் ஏரியல் ஷரோன் சொன்னதுதான் எப்போதும் வெளிப்பட்டிருக்கிறது. விளைவு இப்போது இஸ்ரேல் என்ற நாட்டின் பராக்கிரமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அதன் நியாயங்களைப் பட்டியலிடுகிறோம். ஆனால் அதற்கு முன்பு அங்கிருந்த ஃபாலஸ்தீன் என்ற நாடு எங்கே? அதன் மக்கள் உரிமைகளற்றுப் போய்விட்டார்களா? ஒவ்வொரு கட்டத்திலும் உலகின் சுயநல வல்லாதிக்க அரசுகளால் இந்த உரிமை சிறிது சிறிதாக உறிஞ்சப்பட்டுவிட்டது. இஸ்ரேல் என்ற தேசத்தில் யூதர்கள்தான் எல்லாமே என்பதை கொஞ்சமும் மனசாட்சியின்றி ஐரோப்ப – அமெரிக்க மையவாத அரசுகள் தொடர்ந்து சூசகமாக அறிவித்து வந்துள்ளன. ஐநா சபை எனும் மரியாதைக்குரிய நியாய அமைப்பு யூத கைக்கூலிகளின் வழிகாட்டுதலோடு ஃபாலஸ்தீனைப் பிரித்துப் போட்டதுடன், இஸ்ரேல் எனும் ஒற்றை தேசத்துக்கான குரலாக ஓலிக்கத் தொடங்கி இருந்தது. அனைவராலும் கைவிட்ட அந்த மக்கள் என்ன செய்வார்கள்? அவர்களை விடுவிக்க ஹமாஸ் ஆயுதமேந்த தொடங்கியது. இதிலும் ஹமாஸ் யூதர்களில் குடிமக்கள், ராணுவத்தினர் என்று தாங்கள் பேதம் பார்க்க முடியாது என்பதையும் தெளிவாகவே அறிவித்தது. இஸ்ரேலிய அரசும் ராணுவமும் ஃபாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையில் பொதுமக்களுக்கும் கணிசமான பங்குள்ளது. மேலும் ஒவ்வொரு யூதனும் ஒரு வருடம் கட்டாயம் ராணுவ சேவை செய்ய வேண்டும் எனும் நிலையில் எங்கள் போராட்டம் அவர்களையும் இணைத்தது தான் என்றது. உடனே ஹமாஸ் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத்தின் இரட்டை முகம்
ஹமாஸின் தலைவர்கள் தங்கள் நாட்டில் தங்குவதற்கும் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதற்கும் சிரியா, ஈரான், லெபனான், சவுதி ஆகியவை அனுமதி அளித்து, உதவிகள் புரிந்தால் அது தீவிரவாதத்திற்கு துணைபோனதாக கருதப்பட்டது. அவ்வாறெனில் ஒரு தேசத்தை அத்துமீறி ஆக்கிரமித்து தொடர்ந்து பல்வேறு சட்ட மீறல்கள் மூலமாக பிராந்திய அமைதிக்கே உலைவைக்கும் இஸ்ரேலின் வெற்றி வரலாற்றை ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் ராணுவ கூட்டுப்படை பலத்தின் ஊடாக நெருக்கமாக நெய்து கொடுத்திருக்கும் தேசங்கள் செய்யும் ஈனத்தனமான செயல்கள் அரச பயங்கரவாதம் ஆகாதா? இங்கே பயங்கரவாதத்திற்கான வரையறைகளை பயங்கரவாதிகளே வகுக்கிறார்கள். ஃபாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் 1989ல் இங்கிலாந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகளுடன் பேசுவதா என்று இஸ்ரேல் அரசு ஆட்சேபித்தது. அதற்கு பதிலளித்த மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான அமைச்சர் வில்லியம் வால்ட்கிரேவ், “இஸ்ரேலின் நிறுவன பிதாமகர்களில் பெரும்பான்மையானவர்கள், இன்றைய பிரதமர் உட்பட தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தாம். எனவே துப்பாக்கியைத் தூக்கியெறிந்துவிட்டு அமைதி வழிக்கு திரும்பும் துணிச்சல் ஃபாலஸ்தீன் தரப்புக்கும் உண்டு என்பதை இஸ்ரேல் உணரவேண்டும்” என்று சொன்னார். தீவிரவாதச் செயல்களின் ஊடாகவே மண்ணை ஆக்கிரமித்து அதனை அரச பயங்கரவாதத்தின் மூலம் தக்க வைத்துக் கொள்பவர்கள், இழந்த உரிமைக்காக பேராடுபவர்களை தீவிரவாதிகள் என்கின்றனர்.
அவ்வாறெனில், இவர்களின் வெறிச் செயல்களுக்கு முகங்காட்ட முடியாமல் உயிர்வாதைக்கு ஆளாகி விதியை நொந்துக் கொள்ளும் ரோஹிங்கிய முஸ்லிம்கள், உய்குர் முஸ்லிம்கள் போல் குற்றுயிரும் குலையுயிருமாக காலவெளியில் செத்துவிழுந்தால் தான் இந்த உலகம் உச்சுக் கொட்டுமா? ஃபாலஸ்தீனர் படுந்துயரத்திற்கு வெறும் பச்சாதாபம் மட்டும் எதையும் மாற்றிவிடாது என்பதை 1099லேயே இஸ்லாமிய பேரரசின் காஜி அபூஸாத் அல்ஹாராவி உணர்த்தியிருந்தார். “குத்துவாள்கள் போர்க்களத்தின் சாம்பல்களைக் கிளறும்போது நம்மிடமுள்ள கஞ்சத்தனமான ஆயுதம் கண்ணீர் துளிகளாக மட்டும்தானா” என்று கேட்டார் அவர். ஃபாலஸ்தீனர்களின் அவல சரிதைக்கு வெற்று சாட்சிகளாக இருக்க முடியாது என்பதால் தான் முதலாம் இன்டிபதாவின் போது சமூக அரசியல் இயக்கமாக தோன்றிய ஹமாஸ், அடுத்த சில ஆண்டுகளுக்குள் ஆயுதம் தரித்த மீட்சிப்படையாக மாறியது. ஒஸ்லோ ஒப்பந்தம் மூலம் காஸா உள்ளிட்ட பகுதிகளுக்காக இஸ்ரேல் வழங்கிய கட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தால் புதியதாக உருவான ஃபாலஸ்தீன அத்தாரிட்டி என்ற ஃபாலஸ்தீன ஆட்சிமன்றத்தையோ, அதனூடாக அதிகாரத்திற்கு வந்த யாசிர் அரபாத்தையோ ஹமாஸ் ஏற்றுக் கொள்ளவேயில்லை. மேலும் ஃபாலஸ்தீன அதிபர் தேர்தலைத் தொடர்ந்து புறக்கணித்தும் வந்தது. இஸ்ரேலிய அடக்குமுறையை எதிர்தாக்குதலால் மட்டுமே சமாளிக்க முடியும் என்பதே ஹமாஸின் தெளிவான வழிமுறையாக இருந்தது. 1948 முதல் தொடர் ஒடுக்குமுறையின் மூலம் இந்த மண்ணில் வேரூன்றிவிட்ட யூதர்கள் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்பதில் ஹமாஸ் உறுதியாக இருந்தது.