அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் தத்துவப்பாடம் என்கிற பெயரில் பகவத் கீதை மற்றும் சில உபநிடதங்கள் மாணவர்களுக்கு பாடங்களாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாக கண்டிக்கிறது. தொழில்நுட்ப பாடத்தில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கருத்துக்களை புகுத்துவது என்பதை மத்திய பார்ப்பனிய பா.ஜ.க அரசின் ஒரே மொழி,ஒரே மதம்,ஒரே கலாச்சாரம் என்கிற கொள்கையை திணிக்கும் முயற்சியாகவே எஸ்.ஐ.ஒ பார்க்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் பொறியாளர்களாக உருவாகின்றனர். தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணத்தில் 20% சலுகை போன்ற உதவிகளை செய்து மாணவர்களை பொறியியல் கற்க ஊக்குவித்தனர்.அதன் விளைவாக ஏராளமான பொறியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களிலிருந்தும் உருவாகி இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தங்களின் திறமையின் மூலம் பணிக்கு சேர்ந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது பொறியியல் பாடத்திட்டத்தில் உள்ள சில குறைபாடுகளால் பொறியியல் படித்து முடித்த பல இளைஞர்கள் இன்னும் வேலையில்லா பட்டதாரிகளாக இருந்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் பொறியியல் கல்வியில் சேரும் ஆர்வமும் குறைந்துள்ளதை காண்கிறோம். இந்நிலைமையை கருத்தில் கொண்டு அரசும், உயர்கல்வி துறையும் பாடத்திட்டத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்தி பொறியியல் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கேட்டு கொண்டிருக்கும் நிலையில் இருக்கின்ற படிப்பை மேலும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் பகவத் கீதை பாடத்தை பொறியியல் படிப்பில் சேர்த்துள்ளார்கள். இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுடன், ஒரே மதம் சார்ந்த சிந்தனையை கல்வித்திட்டத்தில் புகுத்துவதென்பது நம் நாடு ஏற்றுக்கொண்டிருக்கும் மதச்சார்பற்ற கொள்கைக்கு நேர்முரணாகும். தத்துவப்பாடத்தை மாணவர்கள் கற்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் ஒரு குறிப்பிட்ட ஒரு மதக்கருத்துக்களை தத்துவவியல் என்கிற பெயரில் திணிப்பது பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் படிக்கும் இடத்தில் அவர்கள் மனதை புண்படுத்தும் என்பதோடு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மாணவர்களின் கல்வியையே இது பாதிக்கும் என எஸ்.ஐ.ஒ ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. பல தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக இந்த பாடத்தை விருப்ப பாடமாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார். கடந்த கால அனுபங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இன்று விருப்பப் பாடமாக இருப்பது எப்பொழுது வேண்டுமானாலும் கட்டாயப்பாடமாக மாற்றப்படலாம் என்ற ஐயம் தவிர்க்க இயலாதது. பார்ப்பனிய சித்தாந்த ஆதிக்கத்தை கல்வி வளாகங்களில் நிறுவத்துடிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை கண்டிப்பதுடன், பொறியியல் படிப்பிற்கு துளியும் சம்மந்தமில்லாத இந்த பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கேட்டு கொள்வதோடு, நடப்பதை எல்லாம் மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாநில அரசை SIO வன்மையாக கண்டிக்கிறது.
இப்படிக்கு,
முஹம்மது ஆஷிக்
கல்வி வளாக செயலாளர்
SIO தமிழ்நாடு