1991 மே 21 அன்று தமிழக மண்ணில் ஏற்பட்ட ஒரு தீராக் களங்கம் திரு ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை சம்பவம். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்பூதூர் வந்திருந்த போது அவரை விடுதலைப் புலிகளை சார்ந்த சிலர் படுகொலை செய்தார்கள். இந்த படுகொலைக்கு பின்னால் பல்வேறு சர்வதேச, அரசியல் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு இந்த கொலைக்கு விடுதலை புலிகள் மட்டுமே காரணம் என்ற பிம்பம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அதனோடு தொடர்புடையவர்கள் என்று பலரும் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையில் இருக்கிறார்கள். நீண்ட நெடும் காலமாக கிட்டத்தட்ட 27 வருடங்களாக இந்த கொலையோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படக்கூடிய பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழு நபர்கள் இன்றும் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் பேரறிவாளன் போன்றோர் எந்த தவறும் செய்யவில்லை, இதனுடனான தொடர்பு மிக மிக குறைவு என விசாரணை அதிகாரிகளால் சொல்லப்பட்டும்கூட இன்றைக்கும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள்.
ஒரு நல்ல வார்த்தையாக அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான ஒரு நல்ல சூழல் ஏற்பட்டிருக்கிறது. நீண்ட நெடும் காலமாக சிறைவாசத்தை அனுபவித்து தங்களின் வாழ்கையை சிறையிலேயே இழந்த அவர்களின் விடுதலையை தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் காந்தியின் வாரிசுகளான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், அவரது மனைவியான சோனியா காந்தியும் அந்த ஏழு நபர்களை மன்னித்துவிட்ட சூழலில் அவர்களை விடுதலை செய்வதுதான் சாலச் சிறந்ததாக இருக்கும். ஆகவே மதிப்பிற்குரிய ஆளுநர் அவர்கள் அந்த ஏழு நபர்களையும் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மிக விரைவாக செய்வார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதேவேளையில் இதை போன்று தண்டனை குற்றவாளிகளாக தங்களுடைய வாழ்நாளை சிறையிலேயே கழித்துக் கொண்டிருக்கும் முஸ்லீம் சிறைவாசிகளையும் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தண்டனை என்பது ஒரு மனிதனை திருத்துவதற்கான வழிமுறையாக இருக்க வேண்டுமே ஒழிய அவர்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அளிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. ஒரு குற்ற வழக்கிலே கைது செய்யப்பட்டு நீண்ட நெடும் காலமாக அவர்களை சிறையிலேயே அடைப்பது நிச்சயம் அவர்கள் மீது இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன .
வெறுமனே புகாரின் அடிப்படையிலேயே எந்த வித குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யாமல் நாசர் மதனி உட்பட ஏராளமான பல்வேறு முஸ்லீம் இளைஞர்களும், முதியவர்களும் இன்றைக்கும் சிறையிலேயே வாடிக்கொண்டிருக்கின்றனர் என்பதே யதார்த்தமான உண்மை. இவர்கள் அனைவரும் மிக விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும். இவர்களுக்கான போராட்டங்களை வெறும் உணர்வு சார்ந்து போராட்டங்களாகவும், ஆர்பாட்டங்களாகவும் மட்டுமே முன்னெடுக்காமல் எப்படி இந்த ஏழு பேரை விடுதலை செய்வதற்காக தமிழ் தேசிய அமைப்புகளும், திராவிட இயக்கங்களும் சட்டப்பூர்வமான வழிமுறைகளை மேற்கொண்டார்களோ அதே போன்று குற்றசெயல்களில் ஈடுபடாமலும், குற்றம் செய்து நீண்ட நெடும் காலமாக சிறையில் இருப்பவர்களையும் விடுவிப்பதற்கான சட்டப்பூர்வமான மிகசரியான வழிமுறைகளை இஸ்லாமிய இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும். வெறுமனே போராட்டங்களாகவும், ஆர்பாட்டங்களாகவும் அடையாள அடிப்படையில் செய்துவிட்டு கலைந்து செல்வது என்பது நிச்சயமாக நாம் அந்த முஸ்லீம் சிறைவாசிகளின் மீது இழைக்கும் மிகப்பெரிய அநீதியாகவும், துரோகமாகவும்தான் இருக்கும்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்ற முஸ்லீம் சிறைவாசிகள் மீதான வழக்கு விசாரணை இன்னும் உச்ச நீதி மன்றத்தில் தொடங்கப்படவே இல்லை என்பதே யதார்த்தம்.
ஆகவே அவர்களை விடுதலை செய்யப்படுவதற்கான மிகச்சரியான நியாயமான வழிமுறைகளை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்க வேண்டும் அதேவேளையில் அந்த ஏழு நபர்களின் விடுதலைக்காக போராடிய மனித உரிமை காவலர்களும், சமூக போராளிகளும் சிறையில் வாடிக்கொண்டிருக்குக்கும் முஸ்லீம் சிறைவாசிகளும் மனித உரிமைக்கு அருகதைப்பட்டவர்கள்தான், உரிமைப்பட்டவர்கள்தான் என்பதை கருத்தில் கொண்டு முஸ்லீம் சிறைவாசிகளின் விடுதலைக்கான மிகச்சரியான போராட்டங்களை சமூக போராளிகள் முன்னெடுக்க வேண்டியது நிச்சயம் காலத்தின் கட்டாயமாகும்.
– கே.ஸ் அப்துர் ரஹ்மான்
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா