தியாகத்தின், சகோதர வாஞ்சையின், நீதியின் அடையாளமாக இந்துத்துவ சக்திகளால் கொண்டாடப்படும் இதிகாச நாயகன் ராமனின் பிறந்தநாள் கொண்டாட்டம்தான் ராமநவமி. வட இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ராம நவமியின் போது கலவரங்களும் அக்கிரமங்களும் தாக்குதல்களும் சமீப காலமாக நடைபெற்றதாக பதிவுகள் ஏதுமில்லை. ஆனால் இவ்வருடம் ராமனின் பெயரால் கொண்டாடப்படும் ராம நவமி கொண்டாட்டங்கள் வன்முறை நிகழ்வுகளாக மாற்றியமைக்கப்பட்ட செய்திகள்தான் வெளிவந்துள்ளது.
மத்திய பிரதேசம் குர்கானில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்து தகர்த்து விட்டார்கள். கலவரத்திற்கு முஸ்லிம்கள்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டித்தான் இந்த அழிவு நடவடிக்கையை அவர்கள் கைமேற்கொண்டுள்ளார்கள். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடுதான் இந்த நடவடிக்கை நடைபெற்றுள்ளது. மும்பையில் மாங்குர்தில் இனவெறி தாக்குதலால் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் தகர்க்கப்பட்டது. இரவு நேர தொழுகையின்போது ஒரு பள்ளிக்கு முன்பாக சங்பரிவார் கும்பலைச் சேர்ந்த சிலர் ஜெய் ஸ்ரீராம் என்று கூச்சலிட்டனர். அதைத் தொடர்ந்து தான் இந்த கலவரம் உருவானது.
ஜார்க்கண்டில் நடைபெற்ற கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 நபர்கள் காயமடைந்துள்ளனர். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்திலுள்ள கம்தால் நகரத்தில் நடைபெற்ற கலவரத்திலும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹவுரா சிக்பூர் பகுதியிலும் இனவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் உருவான மோதலில் 2 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராமநவமியின் போது அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று சொல்லி காவேரி விடுதியில் உள்ள மாணவர்களின் மீது சங் கும்பலின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்கள் நடத்திய தாக்குதலில் மாணவி உள்பட 16 பேர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் போது சில இடங்களில் காவல்துறை வாளாவிருந்தது எனில் பல இடங்களில் ஒருதலைபட்சமாக பாதிப்புகளுக்கு ஆளான முஸ்லிம்களை கைது செய்துள்ளனர். சங் பரிவார்க் கும்பல் திட்டமிட்டு நடத்தும் தாக்குதல்களுக்கு அதிகார வர்க்கத்தின் முழுமையான ஆதரவும் ஊக்கமும் பாஜக ஆளும் மாநிலங்களில் கிடைத்துக் கொண்டு இருப்பதில் புதுமை ஒன்றுமில்லை.
நரேந்திர மோடியின் இரண்டாம் வருகையுடன் நாடு முழுவதும் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன வெறுப்பும் இனவெறி தாக்குதல்களும் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றி இருக்கிறது என்ற அபாயத்தை முதிர்ந்த அரசியல் தலைவர்களும் கலாச்சார அறிஞர்களும் சுட்டிக் காட்டி வருகின்றனர். ‘ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறை நிகழ்வுகள், இனப்படுகொலையை உருவாக்கும் உள்நாட்டு கலவரத்தை நோக்கி நாம் தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றோம் என்பதன் இறுதி முன்னறிவிப்புகள்தான்’ என ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் கே தடா தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, வெறுப்பும் வன்முறையும் ஒதுக்குதலும் நம்முடைய நேசத்துக்குரிய நாட்டை பலவீனப்படுத்தி கொண்டிருக்கிறது என்று புலம்புகிறார். இந்த நிலைமை தொடருமானால் நாடு மிகப் பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா எச்சரித்துள்ளார். வெறுப்பையும் அக்கிரமங்களையும் தங்களுடைய அஜண்டாவாக கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் சங்பரிவார்க் கும்பல், அவற்றை நாட்டின் மீது திணித்துக் கொண்டிருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுக்கு நாட்டில் இப்போது உள்ள நிலைமைகளைக் குறித்து பெரும் கவலை உள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நடைபெற்ற உரைகளும் இறுதியாக அதன் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி வெளியிட்ட அறிக்கைகளும் எல்லாம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெரும்பான்மை வகுப்பு வாதத்தின் தீவிரப் போக்கைக் குறித்து கவலையைக் வெளிப்படுத்துகின்றன. இவற்றை தோற்கடிக்க வேண்டும் என்றால் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளும் அரசியல் சார்பற்ற அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் தேவையை குறித்தும் எச்சூரி நினைவு படுத்தி உள்ளார்.
ஆனால் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவுடன் இரண்டாம் முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ள சங்பரிவாரை மாற்றி சிந்திக்க வைக்கும் அளவிற்கு அந்தக் குரல்கள் பலமானதாக இல்லை. வி.டி. சாவர்க்கரும் எம்.எஸ். கோல்வால்கரும் வரைந்து வைத்துள்ள இந்து ராஷ்டிராவை நிஜப்படுத்துவதற்கான வேலைகளில் அவர்கள் உறுதியாக உள்ளனர் என்பதைத்தான் அவர்களுடைய ஒவ்வொரு அசைவும் காட்டுகிறது. நாட்டின் மிக முக்கிய எதிரி முஸ்லிம் சிறுபான்மை சமூகம்தான் என கட்டமைத்து அதன் பக்கம் இந்திய பெரும்பான்மை சமூகத்தை கொண்டு செல்வதில் அவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். அதன் மறைவில் இந்திய மக்களை மூச்சு திணற வைத்துக் கொண்டிருக்கும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வளர்ச்சி குறைவு போன்றவற்றையெல்லாம் மறைத்துவிடலாம் எனவும் நம்புகின்றனர். இந்த படையொருக்கத்திற்கு சுய இலாப நோக்கம் மட்டுமே கொண்ட பெரு முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளும் ‘பொருளாதார வித்தகர்களும்’ அளிக்கும் ஆதரவு அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. எதிர்க்குரல்களை நசுக்க முனையும் ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் தேசிய ஊடகங்களின் ஆதரவும் கிடைக்கிறது.
அமைதியும் ஒருமைப்பாடும் மனிதநேயமும் நீதி உணர்வும் நிறைந்த ஒரு இந்தியாவிற்காக ஏங்கும், பிரார்த்திக்கும், களமாடும், நாட்டை உள்ளபடியே உண்மையாக நேசிக்கும் இந்தியர்களின் ஒரு கூட்டமைப்பு உடனடியாக உருவானால் மட்டுமே நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் உள்நாட்டு கலவரத்தை, இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முடியும்.
K,S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்