நான் இங்கு இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். 1) நாம் குடியுரிமையை எப்படிப் புரிந்துகொள்வது?
2) குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றைக் குறித்துப் பேசும்போது எந்த மொழியைக் கையாள்வது..?
நவீன தேசிய அரசுகள் தோற்றம் பெற்றபோது தான் குடியுரிமை எனும் கருத்தாக்கம் உருவாகியது என்பதை நாம் அறிவோம். இதனை, “திடீரென தேசிய அரசுகள் உருவெடுத்தன. அதன் விளைவாக, மக்கள் ஏதோ ஒரு தேசத்தின் அல்லது நாட்டின் குடிமக்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். இதற்குப் பிறகு எந்த நாட்டுடனும் அடையாளப்படாதவர்கள் நாடற்றவர்கள் ஆகிவிட்டார்கள்” என ஹன்னா அரென்ட்ட் குறிப்பிடுகிறார்.
இந்த நாடற்றவர்களின் நிலை என்ன?
குடியுரிமை தான் மனிதர்களின் அடையாளம். ஆனால், அது மறுக்கப்பட்டவர்கள் எந்த உரிமையும், அடையாளமும், அடிப்படைகளையும் இழந்த மனிதர்களாகிறார்கள். இவர்களுக்கு வாக்குரிமை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை என எதுவும் இருக்காது. இவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்?
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் கேரளாவிலிருந்து ஒரு சில முஸ்லிம்கள் வேலை வாய்ப்புக்காக கராச்சி சென்றிருந்தார்கள். அவர்கள் நாடு திரும்பும் முன்னே இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகள் ஆகிவிட்டன.அவர்களுக்குச் சொந்த ஊருக்குத் திரும்புவதற்குப் பாகிஸ்தானின் பதிவு சீட்டும், இந்தியாவிலிருந்து விசாவும் தேவைப் பட்டது. ஆனால், இந்தியக் குடியுரிமைக்காக இன்றும் போராடுகிறார்கள். இது போன்று வேலைக்காக கராச்சி சென்று இந்தியக் குடிமக்கள் அல்லாமலான அறுநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கேரளாவில் மட்டுமே இன்றும் உள்ளார்கள். அவர்களின் முன்னோர்கள் இங்குதான் இருந்தார்கள், அவர்களின் உறவினர்கள் இங்குதான் இருக்கிறார்கள், அவர்களின் வீடும் இங்குதான் உள்ளது.ஆனால் அவர்களுக்கு மட்டும் குடியுரிமை இல்லை. இந்த ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு எந்த உரிமையும் இங்கு கிடையாது.
ஹன்னா அரெண்ட் சொல்வது போல, “ஒருவன் உரிமை பெறுவதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை” என்ற நிலை தான் இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகிறது.
இவ்வாறு ‘உரிமை கொண்டாடுவதில் கூட உரிமை மறுக்கப்படும்’ சூழ்நிலையில் எப்படி நாம் NRC பற்றிப் பேச முடியும். “யாரும் உங்களைப் பாதுகாக்க வரப் போவதில்லை , உங்களுக்குத் தேவை என்றால் , நீங்கள்தான் எழுந்து குரல் கொடுக்க வேண்டும் . உங்கள் உரிமைக்காக நீங்கள் குரல் கொடுங்கள். இந்த நாட்டின் குடிமகனாக , இந்த நாட்டில் நீங்கள் உங்கள் உரிமையைச் சொல்லக் குரல் எழுப்புங்கள்’ என்று இஸ்லாமிய இயக்கங்களுக்குக் கூற விரும்புகிறேன். ஏனெனில், உங்களை காப்பாற்ற யாரும் வரப் போவதில்லை. இதை சொல்வதற்காக மற்ற அமைப்புகள் என்னை மன்னிக்க வேண்டும்.
தலித், பகுஜன் , அம்பேத்கர் இயக்கங்களுக்கு அமித் ஷாவை பற்றிச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அமித்ஷா ஒரு குரூரமான புத்திசாலி. அவருடைய உரையை கூர்ந்து கவனித்தால், தலித் – பகுஜன் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதை அவர் தொடர்ந்து செய்வதைப் பார்க்க முடியும். அதற்கு , ஓரிரு எடுத்துக்காட்டை என்னால் கூற முடியும்.
ஷரத்து 370 யை அகற்றும்பொழுது , “வால்மீகி சமுதாயமும் , தலித் சமுதாயமும் , காஷீமீரில் இட ஒதுக்கீடு பெற இயலவில்லை என்பது மனவேதனை அளிக்கிறது. அதனால் தான் , இந்த மசோதாவை நான் தாக்கல் செய்கிறேன்” என்று கூறினார். இது போன்ற சொல்லாடலையே அவர்கள் கையாள்கிறார்கள். இது போன்று தான் குடியுரிமை மசோதா குறித்து நாடாளுமன்ற உரையில் அவர் பேசினார்.
நாம் இவர்களைக் கையாள்வதற்கு புது விதமாகத் தான் பேசியாக வேண்டும். கிறிஸ்தவர்கள் , பார்சிகள் , புத்த மதத்தவர்கள் , சீக்கியர்கள் , மற்றும் ஜெயின் சமுதாயத்தினரும் இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காண்கிறோம். இதன் மூலம் புதியதொரு இந்துத்துவா கொள்கை ஆதிக்கம் பெறும் வேளையில், இதற்கு எதிராகப் போராட நம்மை முழுவதுமாக தயார்ப்படுத்தவேண்டும்.
அடுத்து இடதுசாரிகளிடம்…அவர்களில் சிலர்
உண்மையான பிரச்சனையாகிய விலையேற்றம் , வேலையின்மை போன்றவற்றை திசைதிருப்ப தான் பாபரி மஸ்ஜித் , காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சனைகள் எழுப்பப்படுகின்றன என்கிறார்கள். இவ்வாறு நீங்கள் சிந்திப்பீர்களானால் இந்தியாவில் வாழும் இரண்டு பில்லியன் முஸ்லிம்களின் பிரச்சனை உங்களுக்கு உண்மையான பிரச்சனையாக தெரியவில்லையென்று அர்த்தம்.தேசத்தை பிளவுபடுத்தி முஸ்லிம்களளைத் தனிமைப்படுத்துவதே நாட்டின் தற்போதைய பிரச்சனை என துணிச்சலுடன் பேசிய தலித் அமைப்புகள் , பகுஜன் அமைப்புகள் , அம்பேத்கரிய அமைப்புகள் , இடதுசாரி அமைப்புகளுக்கும் என்னுடைய நன்றிகள். முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவது என்பது இங்கு புதிதல்ல. UAPA , TADA ,POTA உட்பட பல்வேறு சட்டங்கள் அதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இந்த சட்டங்கள் எதுவும் மதம் சார்ந்தது கிடையாது. ஆனால், இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டு சிறைக்குச் சென்றவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாகவும், தலித்களாகவும்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில், அனைவரையும் உள்ளடக்கியதாக தான் CAB மற்றும் NRC இருக்கும் என்று அவர்கள் கூறினாலும் நாம் அதை நிராகரிக்கவேண்டும். ஏனெனில் அது நடைமுறைப்படுத்தப்பட்டால் அதனால் பாதிக்கப்படுவது ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தான்.
இறுதியாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஏளனப்படுத்துபவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். வரலாற்றை மறவாதீர்கள். தாவூத் (அலை) அவர்களால் வீழ்த்தப்பட்ட கோலியாதை , மூஸா (அலை) அவர்களாால்
வீழ்த்தப்பட்ட ஃபிர்அவுனை, கோழையாக தற்கொலை செய்துகொண்ட ஹிட்லரை. மேலும் அதிகாரத்தை விட்டும் , மக்களுக்கு அஞ்சியும் ஓடிய சர்வாதிகாரிகளின் வரலாறுகளை நினைவில் கொள்ளுங்கள். இது இந்த நாட்டில் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்போது உங்களுடைய ஹிந்து ராஷ்டிராவை உங்களால் எழுப்ப முடியும். , ஒரு நாள் விடியும்…அன்று நீங்கள் இந்த நாட்டை விட்டுத் தூக்கி எறியப்படுவீர்கள். அதற்காக நாங்கள் பிரார்த்திப்போம். அக்கனவை நனவாக்குவதற்காக நாங்கள் உழைப்போம். இன்ஷா அல்லாஹ்…
டிசம்பர் 10 – மனித உரிமை தினம். இத்தினத்தையொட்டி பல சமூகங்கள் பல்வேறு வகையான கூற்றுகளை கடந்த காலத்தில் முன்வைத்துள்ளனர்.
கறுப்பின இயக்கங்கள், கறுப்பர்கள் உரிமையே மனித உரிமை என்று வாதிட்டார்கள். பெண்ணியவாதிகள் பெண்ணுரிமை தான் மனித உரிமை என்றார்கள். தலித் இயக்கங்கள் தலித்களின் உரிமையே மனித உரிமை என்றார்கள். முஸ்லிம்களின் உரிமையே மனித உரிமை என்று உரத்து முழங்கவேண்டிய காலகட்டம் இது.
அனைவருக்கும் நன்றி ,
ஜெய் பீம்…
அஸ்ஸலாமு அலைக்கும்…
(ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேராசிரியர். தாஹிர் ஜமால் பேசியது)