மற்ற நாட்டவர்கள் விளையாடுவதை கைதட்டி , இரவு முழுவதும் உறங்காமல் நம் தேசத்து மக்கள் ரசித்துவருகிற வேளையில்தான், நமக்கென ஒரு அங்கீகாரத்தை வாங்கி தந்துள்ளார் அஸ்ஸாம் மாநிலம் திங் கிராமத்தை சார்ந்த 18 வயதான ஹிமா தாஸ்.
பின்லாந்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த ஹீமாதாஸ். அவர் பெற்ற தங்கமானது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செயதுள்ளது.
இந்த சாதனையை ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் செய்துள்ளார். இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த, ஓட்டப் பந்தய வீராங்கனைகளான, ரோமானிய நாட்டின் ஆண்ட்ரியா நிகோலஸ் (52.07) மற்றும் அமெரிக்காவின் டைலர் மான்சனை (52.28) இறுதி நிமிடங்களில் வேகத்தை அதிகரித்த ஹிமா தாஸ் வெற்றி கொண்டுள்ளார்.
2016ல் தன்னுடைய ஓட்டப்பந்தய வாழ்க்கையை ஆரம்பித்த ஹிமா தாஸ், முன்னாள் கால்பந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கடந்த வருடங்களில் இந்திய போட்டிகளில் வெற்றி பெற்ற ஹிமா தாஸ் தற்பொழுது உலக அளவில் தங்க கனியைப் பெற்று இந்தியர்களின் தங்க மங்கையாக இடம் பெற்றுள்ளார்.
ஹிமா தாஸ் ஒரு புறம் இருக்க, வெறுமனே நமது விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை பெறும் வேளைகளில் அவர்களை கொண்டாடி மகிழ்வதுடன் நமது கடமை முடிந்துவிட்டது என அரசு அதிகாரிகள் மீண்டும் அலட்சியப் போக்கை தொடரக்கூடாது . வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எத்தனையோ பள்ளிகளில் இன்றும் கூட சரியான விளையாட்டு மைதானங்களும் , விளையாட்டு ஆசிரியர்களும், உபகரணங்களும் கூட இல்லாத நிலையே காணப்படுகிறது, இங்கிருந்து கோளாறுகள் தொடங்குகின்றன. இது போன்ற குளறுபடிகளை கண்டறிந்து அதனை அடியோடு நீக்குதலில் தொடங்கி தேசிய அளவில் விளையாடும் வீரர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதுவரை அரசின் கடமை நீள்கிறது. இதுவே ஹிமாதாஸ் போன்றோருக்கு நாம் செய்யக் கூடிய மரியாதையாகவும் இருக்கும். இன்னும் பல ஹிமா தாஸ்களை உருவாக்கவும் அப்போதுதான் முடியும்.
மேலும் உலக கோப்பை கால்பந்து இறுதி நாளில் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் பல்வேறு இந்திய இளைஞர்கள், உடல் வருத்தி உள்ளம் நிறுத்தி, ஆரோக்கியம் வேண்டியவர்களாக , மைதானங்களை நோக்கி வர வேண்டும். அதற்கான தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்க கடமைப்பட்டுள்ளது.
கணினியிலும், தொலைபேசியிலும் விளையாடி மகிழ்வில் இருக்கும் நம் குழந்தைகளையும் திறந்த வெளி மைதானங்களை நோக்கி கொண்டு வர வேண்டும். காற்றோட்டம் இல்லா அறைக்குள் இருந்து எப்போது தூய காற்றும் உயிர்வாயுவும் உள்ள வெட்ட வெளியில் நம் மாணவர்கள் வருகிறார்களோ அப்போதுதான்,
ஆரோக்கியம் மிக்க இந்தியாவைக் காண முடியும்.
மருத்துவமனைகளின் பகல் கொள்ளையைத் தீர்க்க முடியும்.
பெயர் சொல்ல முடியா வியாதிகளைப் பொசுக்க முடியும்.
நாளை நம் பெயரை மேலோர் பட்டியலில் திமிராய் சொல்ல முடியும்.
– பேராசிரியர். சலாஹுதீன்,