இன்றைய காலத்தில் இணையம் என்பது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அதற்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை ஏதும் கிடையாது எனும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இது நமது உலகத்தையே ஒரு மிகச்சிறிய கிராமமாக மாற்றியுள்ளது என்றும் சொல்வார்கள். இணையத்தில் நன்மைகள் எந்த அளவு இருக்கின்றதோ அதற்குச் சற்றும் குறையாமல் தீமைகளும் உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இணையதளத்தின் ஆரம்பம் தொட்டே ஆபாச படத்துறை என்பது பெரும் லாபம் ஈட்டப்படும் தொழிலாகப் பார்க்கப்பட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலமும் தனி நபர்களின் மூலமும் நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆரம்பக் காலத்திலிருந்த இணையம் தற்போது படிப்படியாக வளர்ந்து இன்று எவ்வளவு பெரியதாக இருக்கின்றதோ அதேபோலவே இந்த ஆபாச படத்துறை என்பதும் மிகப்பெரும் அளவில் வளர்ந்து இன்று உலகையே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
இந்தப் பிரச்சினை தற்போது பேசப்படுவதற்கான அவசியம்
முன்பெல்லாம் இந்த ஆபாச படங்கள் பார்ப்பது, தயாரிப்பது அது சார்ந்த வேலைகளில் ஈடுபடுவது போன்றவை ஒரு சமூக விரோத செயலாகவும் குற்றமாகவும் கருதப்பட்டது. ஆனால் தற்போதைய காலத்தில் பின்நவீனத்துவம் என்கிற போர்வையில் ஆபாச படங்களைப் பார்ப்பது, தயாரிப்பது, அதில் நடிப்பது போன்றவற்றில் தவறுகள் இல்லை. இது தனிப்பட்ட நபரின் சுதந்திரம் இதனால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை, இது சாதாரண பொழுதுபோக்கு செயல்பாடு தான் என இது நியாயப்படுத்தப்பட்டும் விளம்பரப்படுத்தப்பட்டும் வருகின்றது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்தப் போலியான கூற்றை மறுதலித்து இந்தப் பிரச்சினை குறித்தான முழுமையான பார்வையை முன்வைப்பதுமே ஆகும். ஆபாச படத்துறை சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் மட்டுமின்றி அரசியல், ஆன்மீகத் தலைவர்களையும் அடிமைப் படுத்தியுள்ளது.
உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கின்றது என்றால் நீங்களும் இணையத்தின் ஆபாச படத்துறையின் உள்ளடக்கத்திற்கு இலக்காக நேரிடும் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். இணையத்தின் உள்ளடக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆபாசம் மனித மனங்களைச் சிதைக்கின்றன. தனிப்பட்ட, சமூக ரீதியில் பல்வேறு தீமைகளை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவது மட்டுமன்றி அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் நாம் பேசவேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
இது கட்டவிழ்த்து விடும் தீமைகள்
ஆபாச பட உலகானது பெண்களை ஆண்களின் போகப் பொருளாகச் சித்தரித்து அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்ப்பதைக் கிளர்ச்சியூட்டப்படக்கூடிய, மகிழ்ச்சியான விஷயமாக சித்தரிக்கின்றது. ஆபாச உள்ளடக்கங்களில் பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் வலியைப் பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் இது சேடோமாசகிசம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய தவறான கிளர்ச்சி பார்ப்பவரின் மனதில் நீண்டகால எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இவை வன்புணர்வை அப்பட்டமாக ஊக்குவிக்கிறன. பெண்களின் ‘சம்மதம்’ என்பது பரபரப்பான தலைப்பாக மாறியுள்ள இந்த நவீன உலகில், ஆபாச படங்கள் சம்மதத்தை வலுக்கட்டாயமாக மீறச் செய்கிறது. இவற்றை நுகர்வோர் பெண்களின் சம்மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் மிருகங்களாக உருவாக்குகின்றனர். இவற்றின் தாக்கத்தால் மக்கள் தங்கள் சொந்த உறவினர்களையும் நண்பர்களையும் கூட வன்புணர்வு செய்த நிகழ்வுகள் கூட ஏற்பட்டுள்ளன.
அருவருப்பான வினோதங்களுக்கான ஊக்குவிப்பு
ஆபாசத் துறையின் உள்ளடக்கங்கள் பல்வேறு வகைகளில் உருவாக்கப்படுகின்றன. அவையனைத்தும் சமூகத்தின் தார்மிகக் கட்டமைப்பிற்குத் தீங்கு விளைவிப்பவை. ஆனால் இவை மிகவும் சாமர்த்தியமாக இயல்பாக்கம் செய்யப்படுகின்றன. பிரபல ஆங்கில தொடரான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ இத்தகைய முறையிலேயே பாலியல் உறவுகளைச் சாதாரண முறையில் சித்திரிக்கிறது. இதனைப் பார்க்கும் இளையோர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் இத்தகைய ஆபாச உள்ளடக்கங்களை தங்களை வைத்தே கற்பனை செய்து பாலியல் கிளர்ச்சி அடைகின்றனர். இது சமூகத்தின் அடிப்படைகளில் ஒன்றான குடும்ப அமைப்பு முறையே சீரழிய வழிவகுக்கிறது.
ஆக்ரோஷ மனப்பான்மையை (Aggressiveness) ஆதரிக்கும் ஆபாச உள்ளடக்கங்கள் ஏராளமாக உள்ளன. இதுபோன்ற பாலியல் மிருகத்தனமானது பலருக்கு ஆண்குறி புற்றுநோய் போன்ற பல நோய்கள் வர வழிவகுத்துள்ளது. விலங்குகளின் ஆபாச உள்ளடக்கங்களைத் தயாரிப்பதற்காகப் பல விலங்குகள் கொடூரமான சுரண்டப்படுகின்றன அதுமட்டுமின்றி இதனால் பல பால்வினை நோய்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற கேவலமான செயல்களானது நமது வாழ்க்கை முறையில் மீள முடியாத பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
இவற்றைப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
இந்த ஆபாச படங்கள் அதனைப் பார்ப்பவர்களின் மூளையை மாற்றியமைத்துவிடுகிறது. இதனால் அவர்கள் தம் வாழ்வில் தெளிவான முடிவெடுக்கும் திறனை இழக்கின்றனர். அதன் நீட்சியாக தம்முடைய குடும்ப, தனிப்பட்ட வாழ்வு போன்ற வாழ்க்கையின் முக்கியமான பகுதிகளைப் புறக்கணித்து விடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏற்படுகின்ற தனிமை, மனச்சோர்வு, பதட்டம் ஆகியவற்றால் ஆபத்தான நடத்தைகளில் ஈடுபட உந்தப்பட்டு கடுமையான மனநோய்களுக்கு ஆளாகின்றனர். பல மருத்துவர்களும் இது போன்ற ஆபாசங்களுக்கு அடிமையானவர்களை மீட்பது மிகவும் கடினம் எனச் சொல்கின்றனர்.
நடிகர்களின் நிலை
ஆபாசத்தை ஆதரிப்பவர்கள் ‘இதுவெறும் பாலுணர்வின் வெளிப்பாடு இத்தகைய படங்கள் ஆபாசக் கலைஞர்களின் சம்மதத்துடன் தானே உருவாக்கப்படுகிறது’ என்று கூறுகின்றனர். ஆனால் உண்மைநிலை என்னவென்றால் பெரும்பாலும் இதுபோன்ற படங்களில் நடிப்பவர்கள் பொருளாதார நெருக்கடியால் இத்துறையில் பணியாற்ற கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். ஒருமுறை இந்த நரகத்திற்குள் நுழைந்துவிட்ட பிறகு வெளியே வரமுடியாத அளவிலான பொதுச் சொத்துக்களாக மாற்றப்பட்டு விடுகின்றனர். இந்த ஆபாச படத்துறை, விபச்சாரம் ஆகியவை மக்கள் கடத்தப்படுவதை சட்டப்பூர்வமாக்கிய இரண்டு தொழில்கள்.
இத்தகைய அபாயகரமான சிலந்திவலையில் சிக்கியவர்கள் தங்களின் உடல், மனநலப் பிரச்சினைகளைச் சமாளிக்கப் போதைப் பொருட்களை நாடுகிறார்கள். இவற்றில் நடிப்பவர்கள் பலரின் மரணங்களுக்கு பெரும்பாலும் போதைப் பொருள்களே காரணமாகின்றன. சில வேளைகளில் குறிப்பிட்ட காட்சியை நிகழ்த்துவதற்காகக் கலைஞர்களுக்கு அளவுக்கு அதிகமாக மருந்துகள் கொடுக்கப்படுகின்றன பலர் இதனாலும் உயிரிழக்கின்றனர். மேலும் ஆபாசப் பட நடிகர்கள் பெருமளவில் இக்சுரண்டலைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். (இதனைப் பற்றி மேலும் அறியச் சர்வதேச அடல்ட் ஃபிலிம் டேட்டாபேஸைப் பார்க்கவும்.)
விடுபடுவதற்கான வழிகள்
ஆபாசப் படங்கள் இளைஞர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்துள்ளது. இத்தகைய தீங்கு தரும் பழக்கத்தையும் அதன் விளைவுகளையும் அகற்றுவது கடினம்தான் ஆனால் அது சாத்தியமற்ற செயல் அல்ல. யாராவது ஆபாசத்தின் அடிமைத்தளையிலிருந்து வெளியேற விரும்பினால் அவர்கள் கீழுள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றுதல் அவசியம்.
- நீங்கள் ஆபாசத்தை விட்டுவிட்டால், உங்கள் வாழ்க்கை எவ்வளவு பயனுள்ளதாகவும் அழகானதாகவும் மாறும் என்பதையும் மனதளவில் அடையும் திருப்தியையும் கற்பனை செய்து பாருங்கள்.
- ஆபாசப் படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அவர்களது சூழ்நிலையும் ஒரு காரணம். விளம்பரங்கள், திரைப்படங்கள், இணைய தொடர்களில் வரும் சிற்றின்ப காட்சிகள் போன்றவை அதனைப் பார்ப்பதற்கான தூண்டுகோலாக இருக்கலாம். எனவே இது போன்ற காரணிகளைத் தவிர்த்தல் வேண்டும். தூண்டுதல்களைத் தவிர்ப்பதே இத்தீய பழக்கத்தைக் கைவிடுவதற்கான முதல் படியாகும்.
- இது போன்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கும், செய்யத் தூண்டும் நபர்களின் நட்பைத் துண்டித்து விட்டு நன்மையை நோக்கி அழைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளுங்கள்.
- இசை, திரைப்படங்கள், இணையத் தொடர்கள் போன்றவற்றில் அதிகமாகக் கவனம் செலுத்தாமல் புத்தகம் வாசிப்பது, சிறு சிறு வணிகத்தைத் தொடங்குவது போன்று உங்களுக்குப் பிடித்தமான அதேநேரம் பயனுள்ள செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்; தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக நலப்பணிகளில் ஈடுபடுங்கள்.
- தீய பழக்கங்களிலிருந்து விலகுவதற்கு நிறையக் காலம் எடுக்கும்; தடங்கல்கள் இருக்கும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள்.
- அதிகமான நேரங்களில் கூட்டமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தனிமையையாக இருப்பதை தவிர்த்து விடுங்கள்.
- துரித உணவு, சாக்லேட், காபி போன்ற டோபமைன் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும்.
- படைத்தவனோடு உறவைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மாவுக்கான உணவைப் பெறத் தொடங்கியவுடன் நீங்களே ஆபாசத்தை அவமதிப்பீர்கள். ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் கிளர்ச்சிக்குப் பின்னால் மனதில் நிச்சயமாய் இது தவறுதான் என்று உணர்வார்கள் அதனைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். பாவத்தைச் சாதாரணமாக்காதீர்கள். அதனை எண்ணி வருந்துங்கள்; அழுகுங்கள்; இறைவனிடத்தில் இதிலிருந்து வெளியேறப் பாதுகாப்புத் தேடுங்கள்.
நண்பர்களுக்கு உதவுங்கள்
ஆபாசத்திற்கு அடிமையான யாரையாவது நீங்கள் அறிந்தால் அவருக்கு உதவுவது உங்கள் கடமை. மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலைச் செய்யுங்கள். உங்களது நட்பு வட்டாரத்திற்குள் அவர்களை அழையுங்கள். சமூக நல நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள்.
ஆபாசப் படங்கள் என்பது குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு தொற்றுநோய். இது பல்வேறு சமூகத் தீமைகளுக்கு மூலகாரணமாக உள்ளது. இது பிரதானமாக சமூகக் கட்டமைப்பை பலவீனப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு குடும்ப, திருமண உறவுகளை சிதைக்கின்றது.
உண்மையில் இத்தகைய தீய பழக்கத்திலிருந்து விலகுவது கடினம் என்றாலும் சாத்தியப்படாத ஒன்றல்ல. மேற்சொன்ன வழிமுறைகளைக் கவனத்தில் கொண்டால் இலகுவாகச் சாத்தியப்படுத்த முடியும்.
(இந்தக் கட்டுரை The Companion இணையதளத்தில் ஆபாசப் படங்கள் குறித்து வெளியான அப்துல் ஹன்னான் காஸியின் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது)