பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக அங்கே படிக்கும் மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படாதது, வளாகத்தின் மதச்சார்பற்றத் தன்மையைக் குலைப்பது, மாணவர்களின் ஜனநாயக வெளியைக் குறுக்குவது முதலான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழகத்தின் மீது மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
அந்தப் பல்கலையின் வளாகத்தில் இயங்கிவரும் ஏழு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து “மாணவர் நடவடிக்கைக் குழு” ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. ASA, SIO, AISF, SFI உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்ட அந்தக் குழு கடந்த ஞாயிறு மாலை ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக திங்கள்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாகக் கருத்துரைத்த இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) பொதுச் செயலாளர் ஹிபா சமது, “பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு தரச்சான்று வழங்குவதற்கு செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை NAAC உறுப்பினர்கள் வருகைத்தரவுள்ளனர். அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவே கடந்த இரண்டு வாரங்களாக வளாகச் சுவர்களில் வண்ணம் பூசுவது, தார்ச்சாலையை சரிசெய்வது, விடுதிக்குப் பெயர்ப்பலகை வைப்பது போன்றவற்றில் அவசரகதியில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் செய்துத்தரவேண்டி பல்லாண்டுகளாக மாணவர்கள் கோரிவருகிறோம். 24/7 நூலக வசதி, மாணவர் விடுதியில் சுத்தமான குடிநீர், உணவு, மாணவியர் விடுதியில் சானிட்டரி நேப்கினுக்கான இயந்திரம் மற்றும் அதற்கான எரிதொட்டி, இணையவசதி என பல்வேறு அத்தியாவசியத் தேவைகளையே பல்கலைக்கழக நிர்வாகம் பூர்த்திசெய்யவில்லை. அதற்கு நிதிப் பற்றாக்குறையைச் காரணமாகச் சொல்லி வருகிறது. இந்நிலையில் இப்போது NAAC உறுப்பினர்களை தாஜா செய்வதற்கு மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகளுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது?
பல்கலையின் துணைவேந்தர் இப்போதுவரை எங்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. இன்னும் எங்களைச் சந்திக்கவும் முன்வரவில்லை”.
அம்பேத்கர் மாணவர் பேரவை (ASA) பொதுச் செயலாளர் ஸ்ருதீஷ் கன்னடி, “வளாகத்தை அரசியல் நீக்கம் பண்ணும் முயற்சியில் புதுவைப் பல்கலைக்கழகம் முனைப்புக் காட்டுவது கண்டிக்கத்தக்க ஒன்று. சமீபத்தில்கூட மாலை 6 மணிக்கு மேல் மாணவர்கள் கூட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, புதுவைப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் இந்துத்துவர்களை ஊவிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஸ்ரீ அரபிந்தோ மாணவியர் விடுதியின் பெயர்ப் பலகையில் இந்து மதப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் அரபிந்தோவின் வாசகத்தை இடம்பெறச் செய்துள்ளனர். அதை மாணவ அமைப்பினர்களே ஒன்றிணைந்து நீக்கினோம். பிறகு திரும்பவும் அதேபோன்ற வேறொரு பலகையை நிர்வாகம் வைத்துள்ளது.
அரசு நிதிகளில் மட்டுமே பராமரிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் இப்படியான செயல்கள் கூடாது என்கிறது அரசியலமைப்புச் சட்டம். ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக பல்கலைக்கழக நிர்வாகம் நடந்துகொள்கிறது. வளாகத்தினுள் பல்வேறு இந்துப் பண்டிகைகளுக்கு அனுமதியளிக்கவும், அவற்றை ஊக்குவிக்கவும் செய்கிறது. இது வளாகத்தின் மதச்சார்பற்றத் தன்மையைச் சிதைக்கக்கூடியதாகும்.” என்றார்.
மாணவர்களின் குற்றச்சாட்டுகளை புதுவைப் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது. துணைவேந்தர் பல்கலையை ஒழுங்குபடுத்த அயராது உழைப்பதாக பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்புச் செயலாளர் கே.மகேஷ் ஓர் ஆங்கில ஊடகத்துக்குக் கருத்துரைத்துள்ளார். மேலும், வலதுசாரி செயல்திட்டங்களுடன் நிர்வாகம் இயங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.