கர்நாடக கல்வி வளாகங்களில் ஹிஜாப் தடைசெய்யப்பட்டுள்ள விவகாரம் நாடு முழுக்க சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்துத்துவ பாஜக அரசால் முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் இக்கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிரான வழக்கு கர்நாடக உயர்நீதிமனத்தில் நாள்தோறும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அரசின் முன்னெடுப்பை பாஜக ஆளும் பிற மாநிலங்களும் பின்பற்ற விரும்புகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது மதுரை மேலூரில் உள்ள பாஜக தேர்தல் முகவர் ஒருவர் முஸ்லிம் பெண்களை ஹிஜாபை நீக்கிவிட்டு வாக்களிக்குமாறு கலகம் செய்திருப்பது தமிழகத்திலும் சங்பரிவாரங்கள் கர்நாடக முன்மாதிரியை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்க முயலுவதாக புரிந்துக் கொள்ளலாம். இவ்விவகாரத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அதிகார தரப்புகள் அனைத்து. பாஜகவை விட்டு விலகி நின்றிருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.
இப்பின்னணியில், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்புப் போராட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரும் ஹிஜாப் தடை உள்ளிட்ட விவகாரங்களில் முஸ்லிம்களுக்கு எதிர்தரப்பில் தீவிரமாக அரசை ஆதரிக்கும் தரப்பாக பார்ப்பனர்கள் செயல்பட்டு வருவதால், முஸ்லிம்களின் உரிமை பாதுகாப்புப் போராட்டமாக இந்த பூணூல் அறுப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இப்போராட்டம் குறித்து பேசும் முன் பார்ப்பனிய பூணூல் அரசியலை கொஞ்சம் மனதில் கொள்ள வேண்டும். பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்து, தமது உயர்வை பறைசாற்றும் விதமாக பார்ப்பனர்கள் பூணூலை அணிகின்றனர். அதேசமயம் இந்து மதத்தவர்களாக அழைக்கப்படும் மற்ற எந்த சமூகத்தினரும் இதை அணிய முடியாது. பூணூல் அதனளவிலேயே சாதிய மேலாதிக்க குறியீடு. இந்திய அரசியலமைப்பு பிரிவு 17 தீண்டாமை ஒழிக்கப்படுவதாகவும் தீண்டாமை பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குற்றம் என கூறுகிறது. பொது குளத்தில் தண்ணீர் எடுக்கத்தடை செய்யப்படுவதும் பொது இடங்களில் நுழைவதற்கு சாதியின் பெயரால் தடை விதிக்கப்படுவதும் தீண்டாமை எனில், மதவிவகாரத்தில் சாதியின் பெயரால் மக்களை ஒரு விடயத்தில் ஈடுபட விடாமல் தடுப்பதும், அதே நேரத்தை அதனை செய்வதன் மூலம் தமது மேட்டிமையை வெளிப்படுத்துவதும் தீண்டாமையே.! ஆலய நுழைவு போராட்டங்கள் பலவும் இம்மண்ணில் நடைப்பெற்று இருக்கின்றன. கோயில் போன்ற இடங்களுக்கு சாதிய பாகுபாடின்றி அனைவரும் செல்ல உரிமை அளிக்கும் அரசியலமைப்பு பூணூல் விவகாரத்தை கண்டுக்கொள்ளவில்லை.
அரசியலமைப்பின் படி ஆட்சி செலுத்தும் எந்த ஒரு அரசும் தீண்டாமையின் வடிவமான பூணூல் அணிதலை தடுக்க முனையவில்லை. இதிலுள்ள நுட்பமான அரசியலையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. கோயில் உள்நுழையும் போராட்டங்களுக்கு ஆதரவளித்ததன் வாயிலாக தலித்கள் இந்துகளாக நம்பவைக்கப்பட்டனர். பெரும்பான்மைவாதத்தை கட்டியெழுப்ப தலித்களை அணிதிரட்டுவதற்கான வாய்ப்பை இது கொடுத்தது. அதே நேரம் பார்ப்பனிய சாதி மேலாண்மையை தக்கவைக்கும் வகையில் விளங்கும் பூணூலுக்கு எவ்விலக்கும் இல்லாமல் இருக்கிறது. பூணூல் விஷயத்தில் சமரசம் செய்வது பார்ப்பனிய ஆதிக்க குறியீட்டை சமூகவெளியிலிருந்து நீக்கிவிடும். அரசியலமைப்பு சட்டமும் அதன்வழி நடக்கும் அரசு இயந்திரமும் தான் செய்வதாக கூறும் “சமூக சீர்திருத்தங்களை” பெரும்பான்மைவாதத்திற்கு தீனி போடுவதாகவும் சாதிய சமூக அமைப்பை வலுப்படுத்துவதாகவுமே இருக்கிறது. பூணூல் என்ற சாதிய மேலாதிக்க குறியீட்டை சமூகவெளியிலிருந்து நீக்குவது சமத்துவ சமூகம் நோக்கிய பயணத்தில் முக்கியமான அம்சம்.
இந்து மத சீர்த்திருத்த வரிசையில் பார்ப்பனர்கள் மட்டும் அணியும் பூணூலும் தடை செய்யப்பட வேண்டும். சாதிய இழிவிலிருந்து மீண்டு சுயமரியாதையை தேடும் தோழர்கள் பார்ப்பனிய இந்துமதத்திலிருந்து வெளியேற வேண்டும்.
இலக்கு மட்டுமல்ல இலக்கை நோக்கிய பாதையும் அறவழியிலேயே இருக்க வேண்டும். ஒருபோதும் நாம் கொண்டிருக்கும் இலக்கு மட்டுமே நாம் தேர்வு செய்யும் வழிகளை நியாயப்படுத்தி விடாது. பூணூல் அறுப்புப் போராட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு புதிய ஒன்றல்ல. பல ஆண்டுகளுக்கும் முன்னதாகவே திராவிட இயக்கங்கள் முன்னெடுத்தவை தான். அப்போராட்டங்களை நாம் முழுமையாக ஏற்கவில்லை என்றாலும் அவை கருத்தியல் ரீதியிலானதாகவும் ஒடுக்கும் தரப்பின் சுயமரியாதையை மீட்டெடுப்பதாக நியாயம் சொல்லக்கூடியதாக இருந்தது. ஆனால் தடா அப்துர் ரஹீம் அறிவித்துள்ள இப்போராட்டம் கருத்தியல் ரீதியிலான எதிர்ப்பாக இல்லை. அது ஹிஜாப் தடைக்கு பதிலடி என்ற வகையில் வெற்று ஹீரோஹிசமாகவே இருக்கிறது. சனாதனத்திலிருந்து விலகி சுயமரியாதையோடு வாழும் முஸ்லிம்கள் சுயமரியாதைக்கான போராட்டமாகவும் இதனை கூற இயலாது.
பூணூல் பார்ப்பனிய மதத்தின் அடையாளம். அதை அம்மதத்தை சாராத முஸ்லிம் தரப்பு பலவந்தமாக அகற்ற முனைவது வன்முறையும், இஸ்லாம் காட்டி தந்த வழிமுறைக்கு மாற்றமானதாகும். இது சமூகத்தில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்துவதோடு பார்ப்பனியம் இந்து ஒற்றுமை என்ற பெயரில் பெரும்பான்மை மக்களை மூலைச்சலவை செய்யவே பயன்படும். முஸ்லிம்களின் உரிமைக்காக போராடுவதாக கூறிய போதிலும் முஸ்லிம்கள் இதில் அப்துர் ரஹீமுக்கு ஆதரவளிக்கவில்லை என்பது முக்கியமானது. முஸ்லிம்களிடமிருந்து அப்துர்ரஹீம் இன்று அந்நியப்பட்டு நிற்கிறார். அவரது இலக்கு சரியானதாக இருந்தாலும் அதன் வழிமுறையில் அறம் இல்லை.