இஸ்ரேலை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கி உலகம் முழுவதிலும் பரப்பி விட்டு உள்ள ஒரு ஒரு ஸ்பைவேர் அதாவது உளவு வைரஸ் தான் பெகாசஸ். இந்த வைரஸ் உட்புகுந்த அலைபேசிகள் முழுவதுமாக உளவாளிகளின் ஆளுகைக்கு கீழ் சென்றுவிடும்.
வாட்ஸ்அப் கால் மூலமாக இந்த வைரஸ் செல்போன்களில் பரவுகிறது. இந்த வைரசை உருவாக்கிய நிறுவனம் அரசாங்கங்களுக்கு மட்டுமே இந்த வைரசை விற்றிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
ஒருமுறை இந்த வைரஸ் உட்புகுந்தால் அந்த அலைபேசி முழுவதுமாக உளவாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவதால் அதனை மீட்பதற்கு வேறு வழியே இல்லை என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். அந்த செல்போனை தூக்கி கடாசிவிட்டு வேறு புதிய செல்போன் வாங்கி அதில் முழுவதுமாக அப்டேட் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது ஒன்றே வழி.
உலகம் முழுவதிலும் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன்களை தாக்கிய இந்த வைரஸ் இந்தியாவிலும் 12 க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன்களை (தன)தாக்கியுள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட செல்போன்களுக்கு இந்தத் தாக்குதலை பற்றிய விவரத்தை மெசேஜில் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தலித் போராளிகளாகவும், பத்திரிக்கையாளர்களும் இருக்கின்றார்கள். குறிப்பாக பீமா கோரேகான் வழக்கில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ஒருவரின் செல்போன் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விமானத் துறை அமைச்சரும் சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியவருமான பிரபுல் பட்டேலின் அலைபேசியும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த வைரஸை அரசுகளுக்கு மட்டுமே விற்று இருப்பதாக அதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்திருந்ததையும் தற்போது இந்தியாவில் அரசுக்கு எதிராக, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது மட்டுமே இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளதையும் பொருத்திப் பார்த்தால் நமக்கு என்ன விளங்குகிறது?
தனது அரசை விமர்சிப்பவர்களையும், நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுபவர்களையும் எந்த எல்லைக்கும் சென்று பழிவாங்கும் பணிகளை செய்கிறது மோடி அரசு. வருமான வரித் தாக்குதல், பொய் வழக்கு கைதுகள், சிறைக் கொட்டடிகளைத் தொடர்ந்து தற்போது சைபர் தாக்குதலை மேற்கொண்டடிருக்கிறார்கள்.
தனது ஆட்சிக்கு கீழ் உள்ள கூடங்குளம் அணுமின் உலையில் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத ஒரு அரசு அதே வழிமுறையை தனது குடிமக்களின் மீது செலுத்துவது எத்தகைய முரண்?
மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கை இது. ஆனால் நமது ஊடகங்கள் வழக்கம் போல இதைப் பற்றி விவாதிக்காமல் வேறு ஏதாவது உப்பு சப்பில்லாத பிரச்சனைகளை புதிதாக கிளப்பி அதனைப் பற்றி விவாதித்து இந்த பிரச்சினையை மடை மாற்றி விடுவார்கள்.
அபுல் ஹசன்